கட்டுரை, அரசியல், சட்டம் 10 நிமிட வாசிப்பு

இருக்கை அல்ல பிரச்சினை, இதயம்தான்

கே.சந்துரு
10 Sep 2021, 12:00 am
3

கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தைத் திருத்தி அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இருக்கைகள் கட்டாயம் அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தச் செய்தி பரவலான கவனத்தைப் பெற்றதுடன், மக்களிடம் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘அங்காடித் தெரு’ திரைப்படம் வந்த பிறகே பலரும் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் படும் கஷ்டத்தை உணர ஆரம்பித்தனர். கால்பந்து மைதானம் அளவுக்கு உள்ள அங்காடிகளில் ஆயிரக்கணக்கில் வலம்வரும் மக்கள், குளிர்ச்சாதனம் பொருத்திய பெரிய கடைகளில் பணிபுரியும் ஊழியர்களைப் பார்த்துப் பொறாமைதான் படுவார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்படும் அன்றாட இன்னல்கள் பற்றி அறிய மாட்டார்கள். நின்றுகொண்டே அவர்கள் வாடிக்கையாளர்களை நாள் முழுவதும் கவனிப்பது என்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான்.

அவர்கள் உட்கார்ந்துகொண்டு தங்களது கால்வலிகளைப் போக்கிக்கொள்வது இருக்கைகள் அளிப்பதன் மூலம் ஓரளவுக்குத் தீர்க்கப்படலாம். ஆனால், தீவிரமான விற்பனை நடக்கக்கூடிய கடைகளில் குறைந்த அளவுக்கு விற்பனையாளர்கள் நியமிக்கப்படும் நிலையில் அவர்களால் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க முடியும் என்று தெரியாது. அந்த வசதியை நிர்வாகங்கள் எந்த அளவுக்கு ஏற்படுத்தித் தருவார்கள் என்றும் கூற முடியாது.

தொழிலாளர் நலச் சட்ட வரலாறு

இந்தியா அடிமை நாடாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோதே சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் உறுப்பினராக பிரிட்டிஷ் இந்தியாவும் சேர்க்கப்பட்டது. ஜெனீவாவிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு பல்வேறு தொழிலாளர்கள் பிரச்சினை பற்றித் தீர்மானங்களையும் சாசனங்களையும் உருவாக்கியுள்ளன. உறுப்பு நாடுகள் அவற்றைத் தமது நாடுகளில் சட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டியது அவற்றின் கடமை.

இருப்பினும், இந்தியா சுதந்திரம் அடையும் வரை தொழிலாளர் நலன் கருதிய சட்டங்கள் எவற்றையும் பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு அளிக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகுதான் காங்கிரஸ் ஆட்சி கொடுத்த உறுதிமொழியின் பேரில் பல தொழிலாளர் சட்டங்கள் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றிலும் கடை மற்றும் வணிக ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பு, நலன் பற்றிச் சட்டங்கள் எதுவும் இயற்றப்படவில்லை. முதன்முறையாக, 1947-ல் பாரிஸ்டர் வி.ஜி.ராவ் முயற்சியில் தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே வணிக நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்ததால் அவர்களுடைய பிரச்சினையை நன்கே அறிந்து வைத்திருந்தார். அந்தச் சட்டத்தில் வணிக நிறுவன ஊழியர்களின் வேலை நேரம், விடுமுறை, ஊதியம் பற்றிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்தச் சட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கியதுடன், பல மாநில அரசுகளும் அந்தச் சட்டத்தைத் தங்களது மாநிலங்களிலும் இயற்றினர். ஊழியர்களுக்கான கட்டாய இருக்கை என்ற அறிவிப்பைத் தமிழ்நாடு வெளியிட்டதில் மீண்டும் ஒரு முறை முன்னோடி மாநிலமாகிவிட்டது. 

1964-லேயே சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (17.6.1964) வணிக நிறுவனங்களிலும் இதர அலுவலகங்களிலும் பேண வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றி 120-வது பரிந்துரையை வெளியிட்டது. அதில் ஒரு அலுவலகத்தில் எவ்விதமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியதுடன், 11-வது பிரிவில் இருக்கையைப் பற்றியும் கூறியுள்ளது. ஒவ்வொரு அலுவலகத்திலும் போதுமான மற்றும் பொருத்தமான இருக்கைகள் வழங்குவதுடன், அவற்றை ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளும் நியாயமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். அதேபோல், ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரியாமல் கூடுமான வரை உட்கார்ந்து பணிபுரிவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான இருக்கைகள் வசதியுடன் இருப்பதுடன், கால் வைத்துக்கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகளை இன்று வரை பல அரசு அலுவலகங்கள்கூட அளிப்பதில்லை.

அலுவலகங்களில் போதுமான அளவு ஊழியர்களுக்கு இருக்கைகள் மற்றும் இடவசதி செய்து தருவது, நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துவதாகும். உண்மையில், பல அலுவலங்களில் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், இதயம் இல்லாதவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்!

சமீபத்தில் பதிவுத் துறை அலுவலகங்களைப் பார்வையிட்ட துறை அமைச்சர், அங்கு உயர்த்திக் கட்டப்பட்ட மேடையொன்றில் துணைப் பதிவாளர்கள் அமர்ந்து பணிபுரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், பதிவாளர் அலுவலகங்களில் அவர்களும் இதர ஊழியர்கள்போல் சமதளத்தில் தங்களது மேசை நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு வேலை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார். இது அலுவலகங்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சியில் மேலும் ஒரு மைல்கல்.

நீதிமன்றச் சூழல்

நீதிமன்றங்களுக்குச் செல்பவர்களுக்கு அங்குள்ள இடநெருக்கடி தெரிந்திருக்கும். ஒரு நீதிமன்ற அறையில் பெரும்பான்மையான இடத்தை நீதிபதி மட்டும் பயன்படுத்தும்படி அவ்வறைகள் அமைக்கப்பட்டிருக்கும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பல நீதிமன்ற அறைகள் டென்னிஸ் (அ) கூடைப்பந்து மைதான அளவுக்கு இடவசதியுண்டு. ஆனால், அதில் நீதிபதிக்கான மேடையும் இருக்கைகளும் மூன்றில் ஒரு பங்கை அபகரித்திருக்கும். இருப்பினும், அவர்களது உத்தரவைச் சுருக்கெழுத்தில் பதிவுசெய்துகொண்டிருக்கும் தனிச்செயலர்கள் நின்றுகொண்டுதான் குறிப்பெடுக்க வேண்டியிருக்கும். ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு தனிச்செயலர் நீதிமன்றத்துக்குள் வந்தாலும், சில சமயம் தொடர்ந்து கொடுக்கப்படும் தீர்ப்புகளால் காலை மூன்று மணிநேரமும், மதியம் இரண்டே முக்கால் மணிநேரமும் ஒருவரே நின்றுகொண்டு குறிப்பெடுப்பதுண்டு. 

இதைத் தவிர நீதிமன்ற அலுவலர் ஒவ்வொரு முறையும் வழக்கு கட்டை எடுத்து அந்தச் சிறிய படிகளில் ஏறி நீதிபதிகளிடம் கொடுக்க வேண்டும். அவர் கேட்கக்கூடிய புத்தகங்களை வரவழைத்து அவற்றையும் அவர்களது மேசையில் வைக்க வேண்டும். ஒரு நாளில் 100 முதல் 150 பிணை வழக்குகளை விசாரிக்கும் ஒரு நீதிமன்றத்தில் இருக்கும் அலுவலர் அத்தனை முறை ஏறி இறங்க வேண்டியிருக்கும். அவரது உடல் வலியை நீங்கள் கற்பனை செய்துபார்ப்பது கடினமானதல்ல. உச்ச நீதிமன்றத்தில் தனிச்செயலரும் நீதிமன்ற அலுவலரும் உட்கார்ந்துதான் தங்களது வேலையைக் கவனிப்பார்கள்.

ஒருநாள் பாட்னாவிலிருந்து மாற்றலில் வந்த நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா தனது தனிச்செயலரிடம் மூன்று மணிநேரம் தீர்ப்பை வாய்மொழியாகக் கூற, சுருக்கெழுத்தரும் ஒரு கால் வலித்தால் மற்றொரு காலில் நின்றுகொண்டு குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். நான் நீதிபதியிடம், விலங்குகளுக்கு ஏற்படும் சித்தரவதைகளைத் தடுப்பதற்குக்கூட தடைச் சட்டம் இங்குண்டு; ஆனால், நீங்கள் உங்கள் தனிச்செயலருக்குக் கடந்த மூன்று மணிநேரமாக அளிக்கும் சித்தரவதையைத் தடுப்பதற்குச் சட்டம் இல்லையே என்று சொன்னேன்.

வழக்கமாக நீதிபதிகளை இப்படிக் கேள்வி கேட்டால் அவர்களுக்குக் கோபம்தான் வரும். மாறாக, சுருக்கெழுத்தர் உட்கார்ந்துகொண்டே குறிப்பெடுப்பதற்கு என்ன ஏற்பாடு இருக்கிறது என்று நீதிபதி மிஸ்ரா என்னைக் கேட்டார். நான் கீழமை நீதிமன்றங்களில் சாட்சிப் பதிவுசெய்யும்போது நீதிபதி பக்கத்திலேயே தட்டச்சர்கள் உட்கார்ந்துகொண்டு தட்டச்சு செய்கிறார்கள். அதற்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காவிட்டால் அசல் வழக்குகளை விசாரிக்கும் பகுதியில் சாட்சிகளுக்கும், சாட்சியத்தை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் சேர்ந்து உட்காருவதற்கு உயர்ந்த மேடையுடன் கூடிய நாற்காலியும் மேசையும் உண்டு. அவற்றை உங்கள் நீதிமன்றத்தில் நீங்கள் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன்.

அந்த உயர்த்தப்பட்ட மேடையுடன் கூடிய ஜோடி நாற்காலியை வரவழைத்து அவர் நீதிமன்றத்தில் மதியமே வைக்கும்படிப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். அடுத்த நாளிலிருந்து இரண்டாவது நீதிமன்ற அறையில் தனிச்செயலர்கள் உட்கார்ந்த இருக்கையிலிருந்து சுருக்கெழுத்தில் தீர்ப்புகளை எழுதிக்கொள்ள ஆரம்பித்தனர். இது குறித்து இதர நீதிபதிகள் அறிந்திருந்தும் அத்தகைய ஏற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை. நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா ஓய்வு பெற்ற தேதியன்று மாலையிலேயே அந்த நீதிமன்ற அறையிலிருந்து ஜோடி நாற்காலிகள் அகற்றப்பட்டன. 

ஒரு பொதுநல வழக்கு

ஒருநாள் பெண் தனிச்செயலரொருவர் நின்றுகொண்டு சுருக்கெழுத்து நோட்டில் தீர்ப்பை எழுதிக்கொண்டிருக்கும்போது மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துசாமி என்ற வழக்கறிஞர், 2002-ல் தன் பெயரில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். அவ்வழக்கில் எல்லா நீதிமன்றங்களிலும் போதுமான நாற்காலிகளும் மேசைகளும் வரவழைப்பதுடன், தனிச்செயலர்கள் உட்கார்ந்துகொண்டே சுருக்கெழுத்தில் தீர்ப்புகளைப் பதிவுசெய்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். தன்னுடைய மனுவில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான சீர்திருத்தங்கள் கொண்டுவருவதையும், எல்லாத் துறைகளிலும் உச்சத்தை அடைவதை நோக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். 

பொதுநலன் கோரிய அவரது மனுவானது தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் படித்த தலைமை நீதிபதி கோபம்கொண்டதுடன், மனுதாரரான வழக்கறிஞரைப் பார்த்து “இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?” என்று கேட்டார். உடனடியாகத் தலைமைப் பதிவாளரை வரவழைத்த அவர், “இந்தப் பிரச்சினைகள் குறித்து ஊழியர்களிடமிருந்து புகார் ஏதேனும் எழுத்து மூலம் வந்திருக்கிறதா?” என்று கேட்டார். அவர் இல்லை என்று சொன்னார். உடனே, “ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எனக்குத் தெரியும், அதில் யாரையும் தலையிட விட மாட்டேன்” என்று தலைமை நீதிபதி கூறியதுடன், “வழக்கை வாபஸ் பெறாவிட்டால் அதை ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்வேன்” என்று கூறினார். உடனே வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், பிரச்சினை தீரவில்லை.

வடிவமைப்பில் ஜனநாயகம் வேண்டும்

நான் நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு என்னுடைய நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர்களை உட்கார வைத்துத் தீர்ப்புகளைக் குறிப்பெடுத்துக்கொள்ளச் சொன்னேன். அது மட்டுமின்றி அசல் வழக்குப் பிரிவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும்போது, சாட்சிகளுக்கும் வழக்காடிகளுக்கும் உட்காருவதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், இந்த ஏற்பாடுகள் தனிநபர்களின் நல்ல எண்ணத்தில் மட்டும் நடந்தால் போதாது. இயற்கையிலேயே இதற்கான எண்ண ஓட்டம் இருப்பதுடன், நிறுவனங்களை வடிவமைப்பதிலும் ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும்.

அறைகளுக்கு யாரேனும் பார்வையாளர்கள் வந்தால் அவர்கள் தகுதியைப் பொறுத்துதான் இருக்கைகள் வழங்கக்கூடிய மனப்பான்மை இன்றும் பல அதிகாரிகளிடம் இருக்கிறது. படிநிலைச் சமூகத்தில் இன்னும் இந்த ஜமீன் பண்பாடுகள் மறையவில்லை.

2015-ல் குற்றவியல் நீதிமன்றங்கள் பற்றி ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்றை அமைத்து அதில் என்னைத் தலைவராக உயர் நீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழுவின் சார்பாக எனது பரிந்துரைகளை 2016 நவம்பர் மாதம் வழங்கினேன். அந்தப் பரிந்துரைகளில் ஒன்றாக நீதிமன்ற அறைகளின் வடிவமைப்பையே மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன். அதன் மூலம் வழக்காடிகள், சாட்சிகள், அலுவலர்கள், பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், அவர்களது உதவியாளர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் இருக்கைகள் மட்டுமின்றித் தனித்தனியான நுழைவு வாயில்கள், அறைக்கு வெளியே ஓய்வெடுப்பதற்கு முன் அறை ஒன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன். அதன் மீது இதுவரை எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. புதிதாகக் கட்டப்படும் நீதிமன்றங்களில், மூன்றில் ஒரு பங்கு நீதிபதிக்கும், குதிரை லாட வடிவிலான மேஜை பொருத்துவதற்கு மூன்றில் ஒரு பங்கும் போக, மீதி இருக்கும் பகுதியில்தான் மற்றவர்கள் பழைய பாணியிலேயே புழங்க வேண்டும் என்ற நிலைதான் தொடர்கிறது.

அலுவலக இருக்கை வசதிகளை ஜனநாயகப்படுத்துவது மட்டுமின்றி, அதில் அமர்ந்து பரிபாலனம் செய்பவர்களின் மனத்தையும் மாற்ற வேண்டியதுதான் தற்போதைய தேவை. இருக்கைகள் அல்ல பிரச்சினை, இதயங்கள்தான்.

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

ICF Chandroo   3 years ago

1. பிறர் வதை செய்தால் இராமனிடம் முறையிடலாம். அந்த ராமனே கஷ்டம் கொடுப்பாராயின் எவரிடத்தில் முறையிடுவது? 2. இருக்கை வழங்கும் முடிவு மனிதாபினமிக்க ஒன்று. ஏட்டளவில் நிற்காமல் முழுதாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். காலக்கெடு நிர்யணித்து, அதனை தாண்டி வசதி செய்து தர தவறும்பட்சத்தில் நிறுவனங்கள் தண்டிக்கப்படும்வகையில் சட்டம் வடிவெடுக்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

சமீபத்தில் கடலூரில் நான்கு மாடிகளில் அமைந்துள்ள பெரிய துணிக்கடையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு உத்தரவுபடி ஏன் இன்னும் இருக்கை வசதி செய்து தரவில்லை என்று வினவினேன். சரியான பதில் இல்லை. புகார் புத்தகம் கேட்டதற்குத் தனி காகிதத்தை வழங்கினர். அதிலும் எனது யோசனையை எழுதி இ-மெயில் முகவரியைத் தந்தேன். இன்று வரை பதில் இல்லை. நீதியரசரின் கட்டுரையைப் படித்த பிறகுதான் நீதிமன்றங்களிலேயே இதுதான் நிலை என்பதைப் புரிந்து கொண்டேன். இதில் வைத்ததே சட்டம் எனச் செயல்படும் தனியார் நிறுவனங்களில் இவையெல்லாம் என்று அமலுக்கு வரும்? ஆனாலும் நுகர்வோர்கள் தொடர்ந்து விற்பனையாளர்கள் சார்பாக இப்பிரச்சனையை வலியுறுத்தத்தான் வேண்டும். அரசு சட்டம் மட்டுமே இயற்றும். செயல்படுத்துவதில் சமூகத் தணிக்கை, சமூகப் பொறுப்பு தேவை.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Tamilselvan   3 years ago

நீதியரசர் கே. சந்துரு அவர்களை தற்போதய திமுக அரசு பயன்படுத்த வேண்டும். வெறும் வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல்,கலைஞரை போல் உரிமை சார்ந்த பிரச்சனை விசயங்களில் அரசுக்கு இவர் பெரும் பலமாக இருப்பார்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சர்ச்சைஜாதிய சமூகம்பால்யம் முழுவதும் படுகொலைகள்ஆரென்டெட் மைக்கேல் கட்டுரைமத்திய பிரதேசம்: காங்கிரஸுக்குச் சாதகம்மூடுமந்திரமான தேர்வு முறைராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்ராகுல் காந்திபத்ம விருதுகள் அரசியல்ஒடிஷா அடையாள அரசியல்உடற்பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?மூதாதைமைஅமித்ஷாவெரியர் எல்வின்திருவாவடுதுறை மடம்மருத்துவர் கு.கணேசன்பக்கிரி பிள்ளையும்எதிர்வினைகள்விரிவாக்கம்ஆக்ஸ்ஃபோம் இந்தியா – நியுஸ் லாண்டரிஉருவக்கேலிநியூட்ரினோஅகதிரத்னகிரிபொன்னியின் செல்வன்அந்தரங்கச் சுத்தம்சிவில் சமூக நிறுவனங்கள்பாக்டீரியாஜெயலலிதாவின் அணுகுமுறைதேவேந்திர பட்நவீஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!