கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

சுகுமாரன் கவிதைகள்: காலி அறையில் மாட்டிய கடிகாரம்

பெருமாள்முருகன்
29 Jul 2023, 5:00 am
0

ப்போது (2023 ஜூலை) நடைபெற்றுவரும் கோவைப் புத்தகக் கண்காட்சியில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகப் பொருத்தமான தேர்வு. தம் பதினாறாம் வயதில் கோவையிலிருந்து படைப்புப் பயணத்தைத் தொடங்கிய அவர், பணியின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் பல்லாண்டுகள் வசித்துவிட்டுத் தம் சொந்த ஊராகிய கோயம்புத்தூருக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கும் இந்தச் சூழலில் இவ்விருது முக்கியமான அங்கீகாரமாக விளங்கும். 

சுகுமாரன் (1957) கவிதையில் தொடங்கிச் சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாவல் உள்ளிட்ட அனைத்து வகைமைகளிலும் எழுதிவருகிறார். இசையிலும் திரைப்படத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொகுப்பு, பதிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டவர். பத்திரிகைத் துறையிலும் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். தற்போது ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார். அவரது இலக்கிய வாழ்வின் வயது ஐம்பது ஆண்டுகள்.

இதில் 1984ஆம் ஆண்டு வெளியான ‘கோடைகாலக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம் ஆகிய தொகுப்புகள் வெளியாயின. அவற்றில் இடம்பெற்ற மொத்தக் கவிதைகளின் தொகுப்பு ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ (2006) வெளியானது. பின்னர் 2019 வரை எழுதிய கவிதைகளையும் சேர்த்த மொத்தத் தொகுப்பு ‘சுகுமாரன் கவிதைகள்’ (2020) என்னும் தலைப்பில் வந்துள்ளது. எனினும் இத்தனை ஆண்டுகளில் அவர் எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இருநூறுதான் என்பது வியப்பூட்டும் செய்தி. 

சுகுமாரனின் புதிய போக்கு

தமிழ்க் கவிதை மொழியிலும் சொல்முறையிலும் புதிய போக்கை உருவாக்கியவர் சுகுமாரன். அவர் கவிதைகள் வாசகர்களை மருட்டுவதில்லை. ‘தெளிவு தர மொழிதல்’ அவர் கவிதையின் அடிப்படை இயல்பு. இந்நோக்கில் அவரது கவிதையாக்க நெறிமுறைகள் விரிவாகப் பேச வேண்டியவை. ஒவ்வொரு கவிதையையும் நிதானத்துடன் சிற்பம் போல உருவாக்கும் முறைப்பாடு கொண்டவர். சொற்களை மனம் போனபடி உடைத்து மேலும் கீழுமாகப் போடுவதில்லை.

மரபுக் கவிதையில் ‘அடி’ என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீர்களைக் கொண்டது; சில தளைக் கட்டுப்பாடுகளும் அதற்குண்டு. நவீன கவிதையில் சீர் அல்லது சொற்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. ஆனால், வாசிப்புக்கு இயன்ற வகையில் பிரித்தமைத்தால் ஒருவகைச் சந்தம் அமையும். கவிதைக்குப் பொருள் கொள்வதும் எளிதாகும். 

சந்தமும் பொருள் எளிமையும் கிடைக்கும் வகையில் அடி பிரிப்பு சுகுமாரன் கவிதைகளின் தனித்தன்மை. தொடக்கம் முதல் கடைசி வரை இடைவெளியே இன்றி வரிகளை அவர் அமைப்பதில்லை. பொருள் தொடர்புக்கு ஏற்பவும் பொருள் முடிபை உணரவும் உதவும் வகையில் வரிகளுக்கு இடையே உரிய இடைவெளி தருவதும் அவர் கவிதைகளின் சிறப்புக் கூறு. ஈரம் மிக்க செறிவான சொற்களும் ஈர்க்கும் பொருத்தமான சொற்சேர்க்கைகளும் குழப்பமற்ற தொடர்களும் கொண்டவை அவை.

எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
மரணத்தால் விறைத்திருக்கிறது எனது வீடு    (ப.38) 

இதில் ஒரு தொடர் முழுவதும் ஒரே அடியாக அமைந்திருக்கிறது. இரண்டு தொடர்கள்; இரண்டு அடிகள். இதை நான்கடிகளாக இப்படிக் கொடுக்கலாம்.

எனது கதவைத் தட்டிக்
கேட்காதே எதுவும்
மரணத்தால் விறைத்திருக்கிறது
எனது வீடு 

இரண்டு அடிகளாக இருக்கும்போது கிடைக்கும் சந்தமும் உணர்வுநிலையும் நான்கடி அமைப்பில் இல்லை. கவிதையின் முடிவில் தொடக்க அடியே மீண்டும் வருகிறது. முடிவு இது:

எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று 
மனிதனாக இருப்பதே குற்றம்    

‘இன்று மனிதனாக இருப்பதே குற்றம்’ என்று ஒரே அடியாக இதையும் அமைத்திருக்கலாம். ஆனால் ‘இன்று’ என்பதைத் தனித்துக் காட்டுகையில் நிறுத்தம் கிடைத்து அதன் அழுத்தம் கூடுகிறது. நிறுத்தற் குறிகளையும் அவற்றின் தேவையுணர்ந்து அவசியமான இடத்தில் கையாள்பவர் சுகுமாரன். சிறுகோடு (-), காற்புள்ளி (,), ஒற்றை மேற்கோள் குறி (‘ ’), கேள்விக்குறி (?), தொடர்புள்ளி (…) ஆகியவற்றை மட்டும் ஆங்காங்கே காணலாம். அதேபோலத் தேவையான அடிக்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவையெல்லாம் ‘தெளிவு தர மொழிதல்’ என்பவற்றின் கூறுகளாகிக் கவிதையை உள்வாங்குவதில் வாசகருக்கு உதவுகின்றன.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சங்க இலக்கிய இசைக் கச்சேரி

பெருமாள்முருகன் 22 Jul 2023

நவீன வாழ்வின் காட்சியும் உவமையும்!

எழுவாய்ச் சொல்லையோ செயப்படுபொருளையோ தொடரின் இறுதியில் வைப்பதையும் அவர் கவிதைகளில் மிகுதியாகக் காணலாம். ‘கண்டேன் சீதையை’ என்பது போல. ‘எனது வீடு மரணத்தால் விறைத்திருக்கிறது’ எனவும் எழுதலாம். ஆனால், ‘மரணத்தால் விறைத்திருகிறது எனது வீடு’ என்றுதான் எழுதுவார். ஒரு தொடரைக் கவிதையாக்குவதில் இந்த முன்பின் சொல் மாற்றமும் முக்கியமானது. இந்தக் கவிதையின் உணர்வுநிலைக்குச் சொல்மாற்றம் அவசியம்.  ‘கடவுளை இழந்தது என் காலம்’, ‘நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விடப் பற்றி எரிவது மேல் ஒருகணம் எனினும்’, ‘மனிதர்களைத் தவிர மற்ற பிராணிகளுடன் பழக்கமில்லை எனக்கு’ என்பன போலப் பல சான்றுகளைக் காட்டலாம். 

காக்கிநிறப் பேய்கள், கான்கிரீட் காடுகள், தாமிரச் சூரியன் என வியப்பூட்டும் சொற்சேர்க்கைகள் பலவற்றை அவர் கவிதைகள் கொண்டுள்ளன. சுகுமாரன் கவிதைகளுக்குச் சொல்லடைவு உருவாக்கினால் உள்ளத்தை உருக்கும் உணர்வுகளுக்கான சொற்களே அதில் மிகுதியாக இருக்கும் என்பது என் அனுமானம். ‘காலியறையில் மாட்டிய கடிகாரம் போல’ ஒலிக்கும் அத்தகைய சொற்களைக் கொண்டு துயரம், துரோகம், வன்மம் முதலிய எதிர் உணர்வுகளை உருவாக்குவதுதான் கவிதையின் விசித்திரம் அல்லது சுகுமாரனின் தனித்துவம். 

அவர் கவிதைகளில் நவீன வாழ்வுக்குரிய காட்சி உவமைகள் இடம்பெற்றுள்ளன. சம்பவங்களையும் கவிதையாக்கும் திறன் பெற்றவர் அவர். சில கவிதைகள் முழுமையாகச் சிறுகதைக் கூறுகளைக் கொண்டிருப்பவை. சிறுகதை எழுதிப் பார்த்து ஏனோ அதைக் கைவிட்டவர் சுகுமாரன். கவிதையிலேயே கதைகளை எழுதிவிடும் ஆற்றலின் காரணமாகச் சிறுகதையை ஒதுக்கியிருக்கலாம்.

சம்பவங்கள் கவிதைகளாவது போலவே காட்சிகள் உவமையாகின்றன. ‘எறும்புகள் சுமந்து போகும் பாம்புச் சட்டை போல நகர்கிறது வாழ்க்கை’ என்று உவமை வரும்போது நூற்றுக்கணக்கான எறும்புகள் கூடிப் பாம்புச்சட்டையை ஊர்ந்து இழுத்துச் செல்லும் காட்சி மனதில் வருவதைத் தவிர்க்க இயலாது. ‘காட்சி முடிந்த அரங்கில் நாற்காலி மீது விடுபட்டுப் போன புத்தகம் போல’, ‘டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச் சாக்கு போல’ என்றெல்லாம் வரும் உவமைகள் காட்சி ரூபமாக மனதில் விரிபவை. மரபான உவமைகளுக்குப் பழகிய மனம் இத்தகைய உவமைக் காட்சிகளில் நின்று பொருளை மறந்து தத்தளிக்கவும் செய்யும்.

காதல் – காமம் - உடைவு

நவீன கவிதையின் பாடுபொருளை விரிவாக்கியதிலும் சுகுமாரனுக்குப் பங்குண்டு. நகர வாழ்வின் அலைக்கழிதல்கள், பாடுகள் ஆகியவற்றை நெக்குருகும் வகையில் அவர் கவிதைகள் பேசுகின்றன. அவை மட்டுமல்ல, பெருங்குரல் எடுக்காமல் அழுத்தமான தொனியில் அரசியல் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். நவீன கவிதையில் காதலையும் காமத்தையும் மையப்படுத்தலாம் என்பதை நிலைநிறுத்தியவர் சுகுமாரன்தான். 

நவீன கவிதையின் முன்னோடியாக விளங்கும் கு.ப.ரா. கவிதைகளில் காதலும் காமமும் ஒருவகைப்பட்ட தத்துவார்த்தச் சாயலுடன் பேசப்பட்டுள்ளன. ஆனால், அவை தொடர்ந்து கவிதையில் இடம்பெறவில்லை. ந.பிச்சமூர்த்தியும் அடுத்து வந்த  ‘எழுத்து’ காலக் கவிஞர்களும் காதலுக்கும் காமத்திற்கும் இடம் கொடுத்தவர்கள் அல்ல. மரபுக்கும் வெகுஜனத் தளத்திற்கும் உரியவை என்னும் மனப்பதிவின் காரணமாகவோ என்னவோ நவீன கவிதை அவற்றைச் சீண்டவில்லை.

மரபிலிருந்து உருவான வானம்பாடிக் கவிஞர்கள் காதலையும் காமத்தையும் உரக்கப் பாடி வெகுஜன மயப்படுத்தினர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தொடங்கிய சுகுமாரன் 1980களில் எழுதிய சில கவிதைகள் காதலையும் காமத்தையும் பாடுபொருள்களாகக் கொண்டிருந்தன. தமிழ்ச் சூழலில் பெரிதும் கவனம் பெற்ற அவை நவீன கவிதையிலும் இவற்றை எழுதலாம், எழுத முடியும் என்னும் நம்பிக்கையை கொடுத்தன. ‘முடிச்சு’ என்னும் கவிதையில் வரும் 

இப்படுக்கை மீது
நெகிழும் பாறைக் கூட்டம் உன் உடல்
உன்னை அரித்தோடிய வெந்நீர் நதி நான்

போன்ற வரிகள் சிலிர்ப்பை ஏற்படுத்தியவை. ‘இன்று உன்னுடன் முயங்கியபோது / சவக் கிடங்கானது படுக்கையறை / சடலங்களாய் விறைத்தன நம்முடல்கள்’ என்றெல்லாம் எழுதியவர் அவர். 1990களுக்குப் பிறகு வந்த கவிஞர்களுக்கு இயல்பான பாடுபொருளாகக் காதலும் காமமும் அமைந்தமைக்குச் சுகுமாரன் முன்கை எடுத்தது முக்கியமான காரணம். அவர் கவிதைகளில் கவனம் குவிக்கும் விழுமியப் பிரச்சினைகள் இன்று பெருமளவு தகர்ந்துவிட்டன. எனினும், நவீன கவிதைப் பாடுபொருளில் காதலையும் காமத்தையும் கொண்டுவந்து ஓர் உடைவை ஏற்படுத்தியவர் சுகுமாரன் என்பது மறுக்கவியலா உண்மை.

உடலுக்கு மதமுண்டா?

அவர் எழுதிய அனைத்தையும் அரசியல் கவிதைகள் என்று சொல்லிவிடலாம். அரசியல் பார்வை இல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் அவர் கையாள்வதில்லை. எனினும், இது முழுக்க அரசியல் கவிதை என்று தேர்ந்தெடுக்க முடிபவை கணிசம். ‘அனுபவம் இல்லாமல் இலக்கியம் இல்லை’ என்னும் கருத்தை வலுவாகப் பற்றியவர் என்பதால் தம் அனுபவத்தோடு இயைத்தே அரசியல் கவிதைகளையும் எழுதியுள்ளார். 2001 டிசம்பர் மாதம் எழுதிய ‘அன்றிரவு’ என்னும் கவிதை இன்றைய சூழலுக்கும் பெரிதும் பொருந்தும். அக்கவிதை ‘உடலுக்கு மதமுண்டா?’ என்னும் கேள்வியுடன் தொடங்குகிறது. பதிலும் கேள்விதான்; அல்ல, கேள்விகள். 

எனில்
ஆண்டவன், ஆண்டவனாகும் முன்பு
அருளாளன், அருளாளனாகும் முன்பு
எந்த மதத்தில் இருந்தது உறுப்பு?
எந்த மதத்தில் கிடந்தது உடம்பு?  

என்னும் கேள்விகளோடு அக்கவிதை முடிகிறது. இக்கவிதையில் காற்புள்ளி, கேள்விக்குறி ஆகியவற்றின் பயன்பாட்டையும் கவனித்துப் பார்க்கலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறுநகரமான பர்பனியில் ஓர் இரவில் கவிதைசொல்லிக்கு நடந்த சம்பவ விவரிப்பு கவிதையின் பெரும்பகுதி. இரவுகள் வெடவெடத்து மரங்கள் நடுங்கி நிற்கும் பனிக்காலம் அது. வெளிச்சம் தோற்றொதுங்கும் இரவு. யாருமற்ற தெரு. அது இயல்பாக ஊர் உறங்கியதால் ஏற்பட்ட சூழல் அல்ல. டயரும் மயிரும் பொசுங்கும் வாடையைச் சொல்வதன் மூலம் அங்கே கலவரம் நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவிதை உணர்த்துகிறது. 

சொந்த நிழலையும் சந்தேகித்தபடி கவிதைசொல்லி தெருவில் நடக்கிறார். ஒரு கூட்டம் வந்து அவரை விசாரிக்கிறது. ‘யார் நீ?’ என்பது கேள்வி. யார் என்றால் பெயரா? ஊரா? இனமா? மொழியா? எதுவுமில்லை. அக்கேள்வி எதிர்பார்க்கும் பதில் ‘மதம்.’ எந்த மதத்தைச் சேர்ந்தவன் நீ?  கேள்வி கேட்கும் கும்பலின் அடையாளம் என்ன? அவை ‘குங்கும முகங்கள்’ என்று அடையாளப்படுத்துகிறார் கவிதைசொல்லி. ‘யார் நீ?’ என்னும் கேள்விக்கு என்ன பதிலை எதிர்பார்க்கிறார்கள்? நீயும் ‘குங்குமமா’, வேறா? 

அச்சத்தில் நாவொட்டி உதடசையவில்லை. அதுவரை அவர்களுக்குப் பொறுமையில்லை. மத அடையாளத்தை அறிவதற்கு அவர்கள் கொண்டிருக்கும் ஒரு வழிமுறை ‘உறுப்புச் சோதனை.’ இடுப்புக்குக் கீழ் நிர்வாணமாக்கி உறுப்பைச் சோதிக்கிறார்கள்.  ‘தீப்பந்த ஒளியில் மொச்சைக்காய் போலப் பிதுக்கிப் பரிசோதித்த பின் நகர்ந்தன பந்தங்கள்.’ அவர்கள் சொல்கிறார்கள், ‘இவன் மதம் அதுவல்ல.’ வெறிநிழல்கள் விலகித் தொலைந்தன. கவிதைசொல்லி தப்பித்தார். அதற்கும் முன்பும் அப்படிச் சிக்கித் தவித்த ஓர் இரவு அவரது நினைவுக்கு வருகிறது. இந்த இரவுகள் எழுப்பும் கேள்விகள் கவிதையின் பின்பகுதியாய் அமைகின்றன. 

உறுப்பின் பயன் எவை? கழிவொதுக்குதல், கலந்து களித்தல், இனம் பெருக்குதல். ஆனால் உறுப்பின் கடமைகள் இன்று அவை மட்டுமல்ல. உடல் இப்போது கடவுள் மத முத்திரை இட்டு வைத்திருக்கும் பாத்திரமாகிவிட்டது. உறுப்பு அதில் மதச் சின்னம். உறுப்பே மதம் என்றாகிவிட்டது. அப்படியானால் ஆண்டவன் என்னும் கருத்து உருவாகும் முன், அருளாளன் என்னும் கருத்து உதிக்கும் முன் எந்த மதத்தில் இருந்தது உறுப்பு? எந்த மதத்தில் கிடந்தது உடம்பு? 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நாராயண குரு: இன்னொரு முகம்

சுகுமாரன் 10 Oct 2021

கவிதை

அரசியலதிகாரத்தை அனுபவிக்க வெறுப்பையும் பிளவையும் பிரிவினையையும் உருவாக்கிப் பரப்பும் மதவெறிச் சூழல் நிலவும் சமூகத்தில் காத்திரமான கேள்விகளை எழுப்பும் இக்கவிதையின் முழுவடிவம் இது: 

அன்றிரவு

‘உடலுக்கு மதமுண்டா?’ 

உயிர்
தங்கி இயங்கும் ரசாயனக் கூடு
எனவே
உடல் வெறும் விஞ்ஞானப் பாண்டம்

அதுவல்ல நிஜமென்று
அந்தப் பர்பனி இரவுக்குப் பின்பு
அறிந்தேன்

σ

இலைகள் வெடவெடத்து
மரங்கள் நடுங்கி நிற்கும் பனிக்காலம்
இருளுடன் வாதாடி
வெளிச்சம் தோற்றொதுங்கும் இரவு
நரகத்தின் கழிவுக் கிடங்காய்
மூச்சுவிடத் திணறும் ஊர்
நாய்க்குரைப்பால் அதிர்ந்து
வெறிச்சோடிய யாருமற்ற தெரு

σ 

சொந்த நிழலையும் சந்தேகித்தபடி
நடந்தேன் தெருவில்

வழிதவறி
வந்து சேர்ந்த வீதி முனையில்
தரையிலிருந்து ஏவிய
எரிகற்களாய்ப் பந்தங்கள்
டயரும் மயிரும் பொசுங்கும் வாடை
விஷப் பற்களாய்
அடிவயிற்றில் கொத்தும் குரல்கள்
நெருங்கி விசாரித்தன குங்கும முகங்கள்:
“யார் நீ?’

உள்நாக்கில் ஒட்டிய பயம்
உதடசையும் முன்பு
இடுப்புக்குக் கீழே நிர்வாணமாக்கப்பட்டேன்
பனிக்குளிரில் விறைத்தது உறுப்பு
தீப்பந்த ஒளியில்
மொச்சைக்காய் போலப் பிதுக்கி
பரிசோதித்த பின் நகர்ந்தன பந்தங்கள்
‘இவன் மதம் அதுவல்ல’

வலி திரண்டு வழிந்த கண்முன்
விலகித் தொலைந்தன வெறிநிழல்கள்

σ 

முன்பும் இதுபோல் நிழல்கள் மிரட்டிய
வேறொரு ஊரின் வேறொரு இரவு
நினைவில் ஊர்ந்தது

குரோதக் கற்கள் மழையாய்ப் பொழிய
பயணம் நின்று
வாகனம் நொறுங்கி
உயிர்கள் அதிர்ந்து
உடல்கள் ஒடுங்கி
உதிரம் தெறிக்க
‘கடவுளின் திருநாமத்தால்’ நிழல்கள் வெறியாட
எவரிலோ மிஞ்சிய கருணை காப்பாற்ற
தப்பிப் பிழைத்த 
முன்னொரு இரவு

σ

இருளின் அடைக்கலமாய்க்
கூசி இருந்தேன்
பின்பு
உடல் சுமந்து நடந்தேன்

திரும்பிய தெருவில்
யாரோ கண்ட கோரக் கனவாய்
டயர்ப் பந்தம் புகையும் தீ
அறுந்த காலணிகள்
உரித்தெறிந்த உடைகள்
ரத்தம் படியாத வாள் பகுதிகளில்
விசும்பும் மங்கிய நிலவொளி

σ

இடுப்புக் கீழே
உறுப்பின் விரயகனம்

கழிவொதுக்க
கலந்து களிக்க
இனம் பெருக்க…

உறுப்பின் கடமைகள்
அவை மட்டுமல்ல

உடல் 
கடவுளின் முத்திரைப் பாத்திரம்
உறுப்பு – ஒரு மதம்

எனில் 
ஆண்டவன், ஆண்டவனாகும் முன்பு
அருளாளன், அருளாளனாகும் முன்பு
எந்த மதத்தில் இருந்தது உறுப்பு?
எந்த மதத்தில் கிடந்தது உடம்பு?

 

பயன்பட்ட நூல்: 

சுகுமாரன் கவிதைகள் (1974 – 2019), 2020, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

சங்க இலக்கிய இசைக் கச்சேரி
தமிழ்க் கல்வியில் மனனம்
கருத்துரிமை தினம்!
தமிழாசிரியர் வரலாறு
கு.அழகிரிசாமியும் பெரியாரும்
நாராயண குரு: இன்னொரு முகம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1


ஆர்ச்சி பிரௌன் கட்டுரைஸ்டாலினின் காமராஜர் தருணம்சந்தோஷ் சரவணன் கட்டுரைவலிமிகல்சமமற்ற பிரதிநிதித்துவம்இந்திய தொல்லியல்எக்காளம் கூடாதுஅணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?வெஸ்ட்மின்ஸ்டர் ஆபிமொழிபெயர்ப்புக் கவிதைபிரேன் சிங்நாளிதழ்அடர் மஞ்சள்தகுதி நீக்கம்கால்சியம்பழங்குடிகள்முகமது பின் பக்தியார் கில்ஜிபலாமாவோயிஸ்ட்மனுஸ்மிருதிமுரளி மனோகர் ஜோஷிகாமம்குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்விஸ்வ ஹிந்து பரிஷத்காஷ்மீர் பள்ளத்தாக்குதிராவிட இயக்கங்கள்பாஜகவின் உள்முரண்கரண் பாஷின் கட்டுரைகாவிரிபல்கலைக்கழகங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!