கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

பாரதிய கிராமபோன் நிறுவனம்

ப.சிதம்பரம்
13 Jun 2022, 5:00 am
3

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பராட் என்பவருக்கு மார்க் என்று ஒரு  சகோதரர் இருந்தார். மார்க் காலமாகிவிட்டார். மார்க் விட்டுச்சென்ற ஒரு கிராமபோன் ரெகார்டர் சாதனம், மார்க்கின் குரல் பதிவுசெய்யப்பட்ட ரிகார்டுகள், மார்க் வளர்த்த நிப்பர் என்று பெயரிடப்பட்ட நரி வேட்டை நாய் ஆகியவை சகோதரரான பிரான்சிஸுக்குக் கிடைத்தன.

மார்க்கின் குரல் பதிவுசெய்யப்பட்ட ரிகார்டுகளை அந்த ரெகார்டரில் பிரான்சிஸ் போடும்போது நிப்பர் என்ற அந்த நாய் அதன் அருகே ஓடிச் சென்று, தன்னுடைய எஜமானரின் குரல் மட்டும் கேட்கிறது, அவரைக் காணவில்லையே, அவர் எங்கே என்ற குழப்பத்துடன் அந்தச் சாதனத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும். 

இதையே ஒரு காட்சியாக வரைந்த பிரான்சிஸ் அதன் கீழே ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்று தலைப்பிட்டிருந்தார். ‘அதனுடைய எஜமானரின் குரல்’ என அதற்குப் பொருள். கிராமபோன் கம்பெனி அந்த ஓவியத்தை 1899இல் 100 பவுன்கள் கொடுத்து வாங்கியது. அதையே தன் இலச்சினையாக்கியது. அதன் பிறகு அந்தப் படமும் அதன் வாசகமும் உலக அளவில் பிரபலமானது.

எட்டு ஆண்டுகள் கழித்து அந்த கிராமபோன் நிறுவனம் அதையே தன்னுடைய நிறுவனப் பெயராக்கி, ‘எச்எம்வி’ என்று சுருக்கியது. நிப்பர் எனும் அந்த நாயும் லண்டனில் 2014இல் கல்லில் ஒரு சித்திரமாகப் பதிக்கப்பட்டு இறவாப் புகழ் பெற்று நிலைத்துவிட்டது. 

பரிவார தேவதைகள் அல்ல

மிகப் பெரிய சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தமைக்காக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, ஊடகப் பிரிவு நிர்வாகி நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டும் நீக்கப்பட்டும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டனர் என்று கடந்த வாரம் படித்தேன். இதைப் படித்ததும் எனக்கு எச்எம்வி நிறுவனக் கதையுடன் தொடர்புள்ள நிப்பர் நாயின் நினைவுதான் வந்தது. அவர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்குச் சிறிதளவும் இல்லை. அந்த இரட்டையரை நாம் நூபுர் - நவீன் என்றே குறிப்பிடலாம்.

ஜூன் 5ஆம் நாள் நூபுருக்கு கட்சி மேலிடத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “வெவ்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைக்கு மாறாக நீங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகிறீர்கள்” என்று அந்தக் கடித வாசகம் தொடங்குகிறது. அதைப் படித்ததும் இந்தியக் குடிமக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து பாரதிய ஜனதாவின் நிலைதான் என்ன என்கிற வியப்பு எனக்கு ஏற்பட்டது!

நூபுரும் நவீனும் பாஜகவின் விசுவாசமிக்க அடிமட்டத் தொண்டர்கள். அவர்கள், அவர்களுடைய தலைவர்கள் பேசியதைத்தான் ஆர்வமுடன் கேட்டுவந்துள்ளனர். உங்களில் பலரைப் போலவே - நூபுரும் நவீனும் கட்சித் தலைவர்களைப் பார்த்தும், அவர்கள் எழுதியதைப் படித்தும், அவர்கள் பேசுவதைக் கேட்டும் பின்பற்றிவந்துள்ளனர்.

உதாரணத்துக்கு, 2012 குஜராத் பொதுத் தேர்தலின்போது நரேந்திர மோடி பேசினார், “நாம் ஐந்து கோடி குஜராத்தியர்களின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் வளர்த்தோம் என்றால் அலிகள், மாலிகள், ஜமாலிகளின் சூழ்ச்சிகரமான திட்டங்களால் நமக்கு தீங்கு ஏதும் ஏற்பட்டுவிடாது.” அலிகள், மாலிகள், ஜமாலிகள் யார், ‘நாம்’ என்று யாரைச் சொல்கிறார் மோடி? அலிகளும் மாலிகளும் ஜமாலிகளும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் சூழ்ச்சிகளை ஏன் தீட்ட வேண்டும் என நூபுரும் நவீனும் வியப்படைந்திருக்க வேண்டும்.

நினைவைவிட்டு நீங்காத வார்த்தைகள்

உத்தர பிரதேசத்தில் 2017 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘அனைவருடனும் இணைந்து – அனைவர் மீதும் நம்பிக்கை வைத்து’ என்கிற தன்னுடைய கண்ணோட்டத்தைப் பின்வருமாறு தொகுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. “கிராமத்தில் முஸ்லிம்களுக்கு நல்லடக்கத்தலம் ஏற்படுத்தினால் அங்கே இந்துக்களுக்கும் மயான பூமியை ஏற்படுத்த வேண்டும், இதில் பாகுபாடே கூடாது.” இந்த வார்த்தைகள் நூபுர், நவீன் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

அமித் ஷா 2019 ஏப்ரல் 11இல் பேசியதையும் அவர்கள் கேட்டிருக்க வேண்டும். “தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமலாக்கப்படுவதை உறுதி செய்வோம். ஊடுருவிய ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவோம். பவுத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மட்டும் விதிவிலக்கு. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியே ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்பதுதான். சட்ட விரோதமாக இந்த நாட்டுக்குள் குடியேறியவர்கள் அனைவருமே கரையான்களைப் போலத்தான். ஏழைகளுக்குப் போக வேண்டிய உணவு தானியங்களை இந்த ஊடுருவல் கரையான்கள் பறித்துத் தின்றுவிடுகின்றன, வேலைவாய்ப்புகளைத் தட்டிப்பறித்துக்கொள்கின்றன."

சரியான இடத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட, சரியான மனிதரின், சரியான வார்த்தைகள் இவை என்று நூபுரும் நவீனும் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019 டிசம்பர் 15இல் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி  அறிவித்தார், “நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மக்களை அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளிலிருந்தே அடையாளம் காணலாம்.” நூபுரும் நவீனும் அந்தப் பேச்சைக் கேட்டவர்களாக இருக்க வேண்டும், எனவே அணியும் ஆடைகளிலிருந்து மக்களை இனம் பிரித்துக் காண்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்குக் கடைசியாக நடந்த பொதுத் தேர்தலின்போது முதல்வர் யோகி அடிக்கடி வலியுறுத்திப் பேசினார். “இந்தப் போட்டி இப்போது மேலும் முன்னேறிவிட்டது. இப்போது போட்டியெல்லாம் 80%க்கும் 20%க்கும் இடையில்தான்!” நூபுரும் நவீனும் இந்தப் பிரச்சாரத்தைக் கேட்டவுடன் அதன் வார்த்தைகள் அப்படியே அவர்களுடைய நெஞ்சங்களைக் கனலாக சுட்டிருக்க வேண்டும். அந்த 20%தான் நமக்கு ‘எதிரிகள்’ என அவர்கள் அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தொடர்பாக பாஜகவின் நிலை என்ன என்பதில் யாருக்கும் ஐயமே இல்லை. அதை எம்.எஸ்.கோல்வால்கர் (ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் குருஜி என்று அழைக்கப்படுபவர்) கருத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இந்தியாவிலோ, இந்திய நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ விரும்பப்படாதவர்கள் முஸ்லிம்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக சார்பில் இடம்பெற்றிருக்கும் 375 உறுப்பினர்களில் ஒருவர்கூட இந்த மாத இறுதிக்குப் பிறகு முஸ்லிமாக இருக்கப்போவதில்லை. உத்தர பிரதேசத்தின் 403 உறுப்பினர்களைக் கொண்ட பேரவைக்கு ஒரு முஸ்லிமைக்கூட தனது வேட்பாளராக பாஜக நிறுத்தவில்லை.

குஜராத்திலும் 182 உறுப்பினர்கள் கொண்ட பேரவைக்கு ஒரு முஸ்லிம்கூட பாஜக வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. பாஜக ஆளும் 11 மாநிலங்களில் ஒன்றில் மட்டும்தான் அமைச்சராக ஒரு முஸ்லிம் பதவி வகிக்கிறார். 2012 ஜூனில் எஸ்.ஒய்.குரேஷி ஓய்வுபெற்ற பிறகு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு முஸ்லிம்கூட ஆணையராக நியமிக்கப்படவில்லை. இந்தப் பட்டியல் மிகவும் பெரியது.

என்னுடைய கண்ணோட்டப்படி, நூபுர் சர்மாவும் நவீன் குமாரும் வெவ்வேறு விஷயங்களில் பாஜகவின் நிலையைத்தான் சரியாக எதிரொலித்திருக்கிறார்கள். தங்களுடைய எஜமானர்களின் குரல்களைக் கேட்டு அதை அப்படியே தங்களுடைய குரலில் மாற்றிப் பேசி வந்துள்ளனர். பாஜகதான் நவீன இந்தியாவின் கிராமபோன் கம்பெனி.

கேளாக் காதில் எதுவும் விழாது

சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளையும் அவர்களை வெறுக்கும் போக்கையும் சுட்டிக்காட்டி, ‘இது கூடாது – இது தவறு’ என காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே பாஜகவைத் தொடர்ந்து எச்சரித்துவருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் ரோமியோக்களுக்கு எதிரான காவல் துறை சிறப்புக் குழுக்கள், லவ் ஜிகாதுக்கு எதிரான பிரச்சாரம், குடியுரிமை திருத்த மசோதா, தேசியக் குடிமக்கள் பதிவேடு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் காரணமாக இருந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து, பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்களை இயற்றுவது போன்றவை கூடாது என்றும் எச்சரித்தன; இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைத் தூண்டுவதைத் தவிர வேறெதற்கும் பயன்படாத ஹிஜாபுக்குத் தடை, ஹலால் உணவுக்கு எதிரான நிலைப்பாடு, தொழுகைக்கு வருமாறு ஒலிபெருக்கிகள் மூலம் விடுக்கும் ஆசான் அழைப்புகளுக்கு எதிர்ப்பு, அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்கிற பிரச்சாரம், இன்னும் பல விஷயங்களிலும் பாஜகவின் கொள்கைகளும் அந்த அரசுகளின் நடவடிக்கைகளும் தவறானவை என்றே சுட்டிக்காட்டி வருகின்றன.

இந்த எதையுமே காதில் வாங்காமல் கேளாக் காதாக இருந்தது ஒன்றிய அரசு. ஐக்கிய அரபு சிற்றரசு நாடும் வேறு 15 நாடுகளும் இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிராகத் தொடரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்தவுடன் அரசு அவசரகதியில் செயல்பட்டு தன்னுடைய கட்சியின் செய்தித் தொடர்பாளர், ஊடக நிர்வாகி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சகத்தின் கன ரக (பிரச்சார) பீரங்கி அகற்றப்பட்டு அந்த இடத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலர் என்கிற நளினமான ராஜதந்திர அமைப்பு செயல்பட முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

இதில் சோகமான உண்மை என்னவென்றால், பிரதமர் இவற்றைக் கண்டித்து இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்தப் புயலையும் எதிர்கொண்டு மீண்டுவிட முடியும் - காலம் கடந்துவிடும் என்று நினைக்கிறார். உண்மை என்னவென்றால் 20.2 கோடி முஸ்லிம்களை விலக்கிவைத்துவிட்டு அரசியல் வாழ்க்கையைத் தொடர முடியாது. இந்த முறை இந்திய எதிர்க்கட்சிகள் அல்ல – உலகமே மோடியை எச்சரித்துள்ளது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

தமிழ்வேள்   2 years ago

கட்ந்த 800 ஆண்டுகால முஸ்லீம் ஆக்கிரமிப்பு, அத்துமீறல்கள் , பாரதீயர்களை இப்படித்தான் பேசவைக்கும்....ரொம்ப நாளைக்கு அடக்கி வைக்க இயலாது...இந்த மண்ணின் கடவுள், வழிபாடு ,பண்பாட்டை பற்றி கேவலமாக பேசும் ஆப்ரஹாமியர்கள் மீது எந்த விதமான பயம் காரணமாக காங்கிரஸ் அடக்கி வாசிக்கிறது....சிவபெருமானைப்பற்றி ஒரு இஸ்லாமியன் தவறாக பேசினால் ,எந்த நடவடிக்கையும் இல்லை ..ஆனால் எதிர்வினையாற்றும் ஹிந்து மீது கடும் நடவடிக்கை என்பது இகழ்ச்சிக்கு உரியது.....ஆப்ரஹாமியர்களுக்கு ஹிந்து தர்மத்தை பற்றி, கடவுள் கோவில்கள் , பெண்கள் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் செய்ய எந்த அதிகாரமும் இல்லை ....அவர்கள் மதம் இங்கு திணிக்கப்படவேண்டும் என்ற அவசியமும் இல்லை.... ஆப்ரஹாமிய அடக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது மிக நல்லது.....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

Ultimately what Mr. Chidambaram said is that the outbursts of Nupul Sharma and Navin Jindal are the continuation of speeches and actions of the leaders of BJP all through the years against minorities, especially Muslims. Therefore, action against the two are nothing but an eyewash to hood-wink the Muslim Nations.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   2 years ago

இந்தியாவின் யதார்த்த சூழலை திரு.சிதம்பரம் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காக வாழ்த்துகள்!இன்றைய பிரதமரின் குரல் RSS ன் குரல் என்பதில் சந்தேகமில்லை.RSS ஐ பிரதிபலிக்கும் இன்றைய பா.ஜ.க.நேற்றைய ஜனசங்க் என எழுத ஆயிரமாயிரம் உண்டு.இதன் நீட்சியில் தியாசபிகல் சொஸைட்டி ஆஃப் மதராஸும் அடங்கும்.ஆரிய சமாஜ் பிரம்ம சமாஜ் என நீண்ட வால் இதில் அடக்கம்.இந்த அடக்கத்தில் காங்கிரஸும் உண்டு. காங்கிரஸிற்குரிய பங்கை மறந்தோ மறைத்தோ இந்தியாவின் நேற்றைய வருடங்களை வர்லாறாக பதிவாகி விட்ட செய்தியை இன்றைய நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது.1948 ஆம் ஆண்டு பிரிவினைக்கால கலவரங்கள் சற்று அடங்கிய காலசூழலில் அலிகார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அன்றைய பிரதமர் மறைந்த ஸ்ரீமான் ஜவஹர்லால் நேரு உரை நிகழ்த்தினார்கள்:முஸ்லிம் மாணவர்கள் முன் நிகழ்த்தப்பட்ட உரை.அந்த உரையில் திரு.நேரு கூறினார்கள்: பிரிவினையின் போது கலவரம் நடக்கும் என எதிர்பார்த்தோம்.ஆயினும் இவ்வளவு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார்.இதே குரலை 1989 ஷிலையான் கலவரங்களின் பொழுது அன்றைய வி.எச்.பி. தலைவர் ஒலித்தார்.இதே குரல் 2002 ல் ராஜதர்ம் அல்ல என ஒலித்தது.இந்த அத்தனை குரலிலும் மனித உயிர் பற்றிய கவலையில்லை. எண்ணிக்கை பற்றிய கவலை தான் உப்பலாக உள்ளது.இந்த குரல் நீதிமன்றத்தில் மனசாட்சிக்காக தூக்கு என தீர்ப்பு சொல்லிய போதும் ஒலித்தது.ஆக இதில் மாற்றம் வர சிலர் திருந்தி பயனில்லை.இந்தியா தன் உண்மையை உரைக்க வேண்டும்.நீண்ட பாரம்பரியம் எனும் பொய்யை துறக்க வேண்டும்.இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்கத்தை அட்டிப்பிசகாமல் சொல்ல பழக வேண்டும்.அது இன்றையா நாம் பார்க்கும் வாழும் இந்தியாவை நமக்கு கற்பிக்கும். நம்மை பற்றிய உண்மையை போதிக்கும். இல்லையேல் இந்தியாவில் யார் ஆண்டாலும் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் மானத்திற்கும் கண்ணியத்திற்ம் ஒரு மதிப்பிருக்காது.ஆதலால் வாசித்த கட்டுரை சுவராஸ்யத்தை தரவில்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இந்திய கிரிக்கெட் அணிஅரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17மிகச் சிறிய மாவட்டங்கள் தேவையா?இசைஎம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்அதிகரிக்கும் மன அழுத்தம்இராம.சீனுவாசன் கட்டுரைவிநாயக் தாமோதர் சதுர்வேதிலாமங்கைய்னாமயிர்தான் பிரச்சனையா?மணிப்பூரிஷூட்டிங்டி.வி.பரத்வாஜ் பேட்டிசிம் இடமாற்றம்சமூகப் பிரதிநித்துவம்தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைஅழகியலும் மேலாதிக்க சுயமும்இடதுசாரிகள்உஜ்ஜையினிஐந்து மாநிலங்கள்நவீனத் தொழில்நுட்பம்யாருடைய ஆணை?ஆயிரம் நடன மங்கைகள்குலாம் நபி ஆசாத்பெருமாள் முருகன் கம்ப ராமாயணம் கட்டுரைகம்பாரகேதனியார்மயம்நான்கு சாதிகள்யோகியை வீழ்த்துவாரா அகிலேஷ்?அருஞ்சொல் புத்தகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!