கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 8 நிமிட வாசிப்பு

இந்தியத்தன்மை என்பது குடியுரிமை; சாதி அல்ல

ப.சிதம்பரம்
02 May 2022, 5:00 am
1

சில நாள்களுக்கு முன் பல செய்தித்தாள்களில் வெளியான தலைப்புச் செய்தியைப் பார்த்து திடுக்கிட்டேன்: ‘இந்தியத் தன்மைதான் ஒரே சாதி’. இதுதான் அந்தத் தலைப்பு.

கேரளத்தில் (1856-1928) வாழ்ந்த துறவியும் மெய்யியல் சிந்தனையாளருமான ஸ்ரீ நாராயண குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘சிவகிரி யாத்திரை’ நிகழ்ச்சியின் 90வது ஆண்டு தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைக்குப் பத்திரிகைகள் அளித்த தலைப்புதான் அது. 

ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளைப் படித்த வகையிலும், அவர் நிறுவிய சிவகிரி மடாலயத்துக்கே சென்று அவருடைய சேவைகளை நேரில் அறிந்த வகையிலும் - அவர் சாதி அடையாளத்தைக் கடுமையாக எதிர்த்தவர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடியவர் என்று என்னால் உறுதியாகக் கூறிட முடியும். சிவகிரியில் அவர் நிறுவியுள்ள ஆசிரமத்தின் குறிக்கோளே, ‘ஓம் சகோதர்யம் சர்வத்ர’ என்பதுதான். கடவுளின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதே அந்த மகா வாக்கியத்தின் பொருள். 

தவறான வார்த்தைத் தேர்வு

நமக்கென்று எழுதப்பட்ட விரிவான அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சி செய்யப்படும் இந்தியக் குடியரசின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அரசமைப்புச் சட்டத்தின் தொடக்க வாசகமே, “இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் – எங்களுக்கு இந்த அரசமைப்புச் சட்டத்தை நாங்களே வழங்கிக்கொள்கிறோம்…” என்று அமைந்திருக்கிறது. இந்திய அரசமைப்புச்  சட்டமானது மாநிலங்கள், மதங்கள், மத அமைப்புகள், மொழிகள், சாதிகள், தீண்டாமை (வெறுக்கத்தக்க அந்த நடைமுறையை ஒழிப்பதற்கு எடுத்துள்ள உறுதி) ஆகியவற்றையும் குறிப்பிட்டு அங்கீகரிக்கிறது.

குடியுரிமையைப் பெறக்கூடிய பல்வேறு வழிகளையும் நமது அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. பிறப்பால், வம்சாவளியால் மட்டும் அல்லாது பதிவுசெய்தல் வாயிலாக, இயல்பான வகைகளில், சில பிரதேசங்கள் சேர்க்கப்பட்டால் அதில் வசிப்பவர்களுக்கு, வேறிடத்திலிருந்து குடியேறியவர்கள் என்றால் (சில தருணங்களில் மட்டும்) - குடியுரிமை வழங்கப்பட அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் தருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு கூறுகளில் ‘இந்தியா’ என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஆங்கிலோ - இந்தியர்கள், இந்திய அரசு, இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஆகிய பின்னணிகளில் ‘இந்தியர்’ என்கிற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியத்தன்மை (Indianness) எனும் வார்த்தையை எந்த இடத்திலும் நான் கண்டதில்லை.

சாதி என்பதற்கு ஆங்கிலத்திலும் சரி; எந்த இந்திய மொழியிலும் சரி; ஒரே பொருள்தான் உண்டு. அதை ‘ஜாதி’ என்பார்கள். ஜாதி என்றாலே அத்துடன் இணைந்த கணக்கற்ற தீமைகள்தான் நினைவுக்கு வருகின்றன. இப்போதும்கூட சாதி அமைப்புகளுடன் பல்வேறு தீமைகள் இணைந்தே இருக்கின்றன. அந்த வார்த்தையைப் பிரதமர் எந்த உணர்வில் பேசியிருப்பார் என்பதை உணர்கிறேன்; ஆனாலும் அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்தது துரதிருஷ்டவசமானது; தவறானது. அதிலும் இந்தியத்தன்மையைச் சாதியுடன் பிரதமர் அடையாளப்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

ஒற்றை அடையாளங்களை நிராகரியுங்கள்   

சாதி என்ற அமைப்பானது மிகவும் இறுக்கமானது, பிற்போக்கான விதிகளைப் பின்பற்றுவது. அந்த விதிகளின்படி அந்தந்தச் சாதிகளுக்குள்ளேயேதான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற அகமண முறை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. இந்த விதியை மீறுவதால் ஏராளமான இளம் உயிர்கள் பலி வாங்கப்படுகின்றன. ஒரு பிரிவினரைத் தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டுகிறது சாதி. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டு குழுக்களான மனிதர்களிடையே பிளவையே ஏற்படுத்துகிறது.

மத விசுவாசத்தைவிட சாதி விசுவாசம் வலுவானது, மதம் சார்ந்த விருப்பு – வெறுப்புகளைப் போலவே சாதி அடிப்படையிலான விருப்பு – வெறுப்புகளும் தீவிரமானவை. சமீப காலம் வரையில் சாதி மத அடையாளங்கள் அடக்கியே வாசிக்கப்பட்டன. மோடி தலைமையிலான அரசு ஏற்பட்ட பிறகு ஏராளமானோர் தங்களுடைய சாதி, மத அடையாளங்களையும் விசுவாசங்களையும் வெகு வெளிப்படையாகக் காட்டிவருகின்றனர்.

சாதி என்பது ஒரே அடையாளத்தை உருவாக்க முயல்கிறது. இனி, இந்தியன் என்கிற தன்மையும் ஒற்றை அடையாளத்தையே உருவாக்கும் நோக்கமுள்ளதாக மாறும் என்றால், வெவ்வேறான தன்மைகளைக் கொண்ட  பன்மைத்துவம் எனும் இப்போதைய நிலைக்கு நேர் எதிரான துருவமாகவே அது உருவாகக் கூடியதாக இருக்கும். பாரதிய ஜனதா கட்சி உருவாக்க விரும்பும் இந்த ஒற்றை அடையாளத்தை - கோடிக்கணக்கான என்னுடைய சக இந்தியர்களைப் போலவே - நானும் நிராகரிக்கிறேன்.

அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

பிரதமரின் பேச்சானது, பாபா சாஹேப் அம்பேத்கரால் தயாரிக்கப்பட்டு ஆனால் நிகழ்த்தப்படாத ‘சாதி ஒழிப்பு’ எனும் உரையை மீண்டும் வாசிக்குமாறு என்னைத் தூண்டியது. அதில் உணர்ச்சியூட்டக்கூடிய சில வாக்கியங்களைப் பார்ப்போம்:

“இந்துக்களின் தார்மிக நெறிகளின் மீது சாதி ஏற்படுத்திய விளைவுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. சாதி என்கிற அமைப்பு பொதுவான சகோதர உணர்வைக் கொன்றுவிட்டது. சாதி என்பது பொது அற உணர்வை அழித்துவிட்டது. சாதி காரணமாக, அனைவரும் கலந்து பேசி உருவாக்கக்கூடிய பொதுக் கருத்துகளுக்கு வாய்ப்பே இல்லாமல் அடைத்துவிட்டது.

“சாதி அமைப்பு என்ற சமூகப் பாகுபாட்டைவிட மிகவும் கேவலமான அமைப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த அமைப்புதான் உயிரைச் சிதைக்கிறது, இயங்க முடியாமல் செயலறச் செய்கிறது, மக்களை சக மக்களிடம் அன்பு பாராட்டாமல் முடக்குகிறது, பிறர்க்கு உதவும் செயல்களை மேற்கொள்ள முடியாமல் தடுகிறது.

“இந்தச் சமூக அமைப்பை நீங்கள் மாற்றாதவரையில் முன்னேற்றப் பாதையில் நடை போடவே முடியாது என்பதில் எனக்குச் சிறிதளவும் ஐயமே கிடையாது. எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், எதிரிகளை எதிர்த்துப் போராடவும் அனைத்து மக்களையும் உங்களால் திரட்டவே முடியாது. சாதி எனும் அமைப்பை அடித்தளமாகக்கொண்டு உங்களால் எதையுமே உருவாக்க முடியாது. 

“சாதி அமைப்புகள்தான் மக்களிடையே சமூக – பொருளாதாரரீதியிலான ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து நிலைபெறச் செய்கின்றன. கிராமங்களில் ஒருவரின் சாதியும், அவருடைய சாதியினரின் எண்ணிக்கையும்தான் அவருக்கான சமூக, அரசியல் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, சமூக செல்வாக்கையும் அரசியல் அதிகாரத்தையும் தருகிறது. பெரும்பாலும் அரசியல் அதிகாரமே, பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளையும் அளிக்கிறது!”

குடியரசின் அணுகுமுறை

ஆக, சாதியை இந்தியத்தன்மையுடன் ஒப்பிட்டால், மிகவும் ஆபத்தான சரிவை நோக்கி நாம் பயணிப்போம். சாதி உணர்வும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும் சமூகத்திலிருந்து வெகு விரைவில் மறைந்துவிடும் என்ற மயக்கம் எனக்கு இல்லை என்றாலும், சாதி அமைப்பிலிருந்து சமூகம் விடுபடும் என்பதற்கான நம்பிக்கையளிக்கக் கூடிய போக்குகள் தெரிகின்றன.

நகரமயமாதல், தொழில்மயமாதல், தொலைக்காட்சி – திரைப்படத் துறைகளின் தாக்கம், அனைவருக்கும் பொதுவான பொருளாதார வாய்ப்புகள், தகவல் தொடர்பு வசதிகளின் பெருக்கம், ஒரே ஊரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக புற இடங்களுக்கு விரும்பி குடிபெயர்தல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பிற நாடுகளுக்கும்  மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் ஆகியவை சாதி சார்ந்த தளைகளையும் உரிமைகளையும் நொறுக்கிவருகின்றன. இந்தியத்தன்மையை சாதியுடன் ஒப்பிடுவது கடந்த பல பத்தாண்டுகளாக நாம் அடைந்துவரும் முன்னேற்றத்தைத் தடுத்து, பின்னோக்கிப் பயணிக்க வைத்துவிடும்.

ஒவ்வொரு இந்தியரிடத்திலும் இந்தியத்தன்மை என்று அடையாளம் காணும் வகையில் தரமான நல்ல அம்சங்கள் இருப்பது வெளிப்படை. இது என்ன என்று நான் விளக்கவும் மாட்டேன், வரையறுக்கவும் மாட்டேன். இந்தியன் என்ற உணர்வு, விவரிக்க முடியாத – இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன் என்ற உரிமையுள்ள உணர்வு.

இந்தியத்தன்மையை எதனுடாவது ஒப்பிட வேண்டுமென்றால் அரசமைப்புச் சட்டப்படியான குடியரசுத்தன்மையுடன்  ஒப்பிடலாம் என்பேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் நம்பிக்கை கொண்ட இந்தியன், அதன் அடிப்படையான விதிகளுக்கு விசுவாசமாக இருக்கும் இந்தியன் என்ற தன்மையே என்னளவில் இந்தியத்தன்மை ஆகும்.

சாதி விசுவாசங்களிலிருந்து இந்தியர்களை மீட்டு வெளியே கொண்டுவர வேண்டும். விடுதலை, சுதந்திர உணர்வு, சமத்துவம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய போற்றிப்பாதுகாக்க வேண்டிய விழுமியங்களை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப குடியுரிமைதான் உண்மையான அடித்தளமாக இருக்க முடியும். விழுமியங்களைப் பகிரவும் உரிமைகளையும் கடமைகளையும் பங்கிடவும், சமரசத்தையும் வளத்தையும் சாதிக்கவும் குடியுரிமையே நல்ல அடிப்படை. அதுவே உண்மையான குடியரசுத்துவமாகவும் திகழும்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 months ago

உங்களுடைய bench mark மிகவும் பெரியது. மோடி போன்ற last bench மாணவர்களுக்கு எட்டாத உயரம். ஆசைப்படுவது சரி. ஆனால் பேராசை தவறு.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அனல் மின் நிலையம்samasஉரத் தடையால் தோல்விஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமைஇளைஞர்கள்ராஜாஜி அண்ணாதேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5புதுக்கோட்டை சுவாமிநாதன்ராகுல்அண்ணா ஹசாரேஆஸாதிஎரிபொருள் வரிபாரதியார்ராமசந்திர குஹா கட்டுரைஇஸ்லாமியக் குடியரசுதேசியவாதம்கழுத்து வலிஅருஞ்சொல்‘முத்துலிங்கம் சிறுகதைகள்அருஞ்சொல் ப.சிதம்பரம் பேட்டிதெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்பௌத்தம்மனம்பொதுத் துறைப் பொன்னுலகின் சிற்பிநேரு தொடர் கட்டுரைகள்யோகாபண்டிட்டுகள் படுகொலைஅலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுபொதுத் துறை வங்கிகள்மத்திய பல்கலைக்கழகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!