கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

பொருளாதாரம்: முதலாவது முன் எச்சரிக்கை

ப.சிதம்பரம்
18 Jan 2023, 5:00 am
0

முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டுத் தரவுகளை (எஃப்ஏஇ), நிதியாண்டு முடிவதற்கு முன்னால் வெளியிடும் பயன்தரும் வழக்கத்தை ‘தேசியப் புள்ளியியல் அலுவலகம்’ (என்எஸ்ஓ) 2016-17இல் தொடங்கியது. இந்தத் தரவுகள் அடுத்த நிதியாண்டுக்கான வரவு - செலவு அறிக்கையைத் தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கின்றன. நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் கிடைத்த தரவுகளைத்தான் இந்த அறிக்கைத் தெரிவிக்கிறது என்றாலும், கிடைத்துள்ள தரவுகளிலிருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு இனத்திலும் போக்கு எப்படியாக இருக்கும் என்று ஓரளவுக்கு சரியாகவே கணித்துவிடலாம்.

இந்த மதிப்பீடுகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குக் காரணம் இவை உத்தேசமோ, எதிர்பார்ப்போ, மதிப்பீடோ அல்ல - உண்மையானவை. நிதியாண்டின் நவம்பர் வரையில் கிடைத்த வருமானம் எவ்வளவு, செய்த செலவுகள் எவ்வளவு என்ற விவரங்களைப் ‘பொதுக் கணக்கு நெறியாளர்’ தொகுத்துத் தரும் தகவல்களும் நிதிநிலை அறிக்கை தயாரிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியும். நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளையும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளையும் நிதியமைச்சர் இறுதி செய்ய இந்தத் தரவுகள் மிகவும் உதவுகின்றன.

நன்மையும் தீமையும் கலந்தது

நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் எதிர்பார்த்ததைப் போல உண்மையில் நடவாமல், நிலைமாறிவிடுவதும் உண்டு. பொருளாதார உலகத்தில், நான்கு மாதங்கள் என்பது மிக நீண்ட காலமாகும்; 2020 மார்ச் மாத இறுதிக்குள் ‘கோவிட்-19’ பெருந்தொற்று மிக வேகமாகப் பரவி உலகையே முடக்கிவிடும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. 2020-21 நிதியாண்டில், எது எப்படி இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளுமே தலைகீழாக மாறிவிட்டன.

உலக அளவில் 2008 செப்டம்பரில் ஏற்பட்டதைப் போன்ற ‘எதிர்பாராத சர்வதேச நிதி நெருக்கடிகள்’ நம்முடைய நிதித் துறை எதிர்பார்ப்புகளை ல்லாம் துடைத்தெறிந்துவிடும்; இந்தியா உள்பட எல்லா நாடுகளும் அவரவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பு தொடர்பாக வகுத்திருந்த திட்டங்கள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டன.

நம்முடைய பொருளாதாரம் தொடர்பாக ஜனவரி 6இல் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களிலிருந்து சில பாடங்களையும் சில குறிப்புகளையும் நாம் படித்துக்கொள்ள முடியும். அதைச் செய்வதற்கு முன்னால், 2023 ஜனவரி முதல் வாரத்தில் நான் ஏற்கெனவே எழுதியிருந்த கட்டுரையின் சாரம்சத்தை நினைவுகூர விரும்புகிறேன். அதிகாரப்பூர்வமாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்தும் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே 2023-34ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று என்னுடைய கணிப்பைத் தெரிவித்திருந்தேன். இப்போது வெளியாகியுள்ள, ‘முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையை’ வாசித்துவிட்டு, கணித்தவைகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுமா என்று சரிபார்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கிறேன்.

திருப்தி அளிக்கும் வகையில் சில அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன: பெயரளவிலான ஜிடிபி (ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம்) 15.4%, இது நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) இடம்பெற்ற மதிப்பீட்டு அளவான 11.1% என்பதைவிட அதிகம். அரசுக்கு வருவாய் வரும் இனங்கள் உற்சாகம் தருகின்றன. அரசுக்கு பண வருவாய் மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் நிதிப் பற்றாக்குறையை 6.4% என்ற கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற லட்சியத்தை எட்டுவது எளிதாகக்கூட அமையலாம்.

நுகர்வால் ஏற்பட்ட வளர்ச்சி

இருப்பினும், கவலை அளிக்கும் சில அம்சங்களும் இதில் உள்ளன. பணவீக்க விகிதம் – வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டையும் நிர்வகிப்பதில் உலக அளவில் நெருக்கடிகள் நிச்சயம் ஏற்படும், வளரும் நாடுகளின் சந்தைகள், வீழ்ச்சியை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற என்னுடைய கணிப்பை மாற்றும் எதுவும் முன்கூட்டிய மதிப்பீட்டுத் தரவுகளில் இல்லை. நிதியாண்டு 2022-23இல் வளர்ச்சியைத் தூண்டியது தனிநபர்களின் நுகர்வுத் தேவைகள்தான் (ஜிடிபியில் 57.2%). பணவீக்க விகிதமும் (விலைவாசி உயர்வு), வேலையில்லாத் திண்டாட்ட அளவும் அதிகரித்தால் தனிநபர் நுகர்வும் வெகுவாகக் குறைந்துவிடும்.

வளர்ச்சியைத் தூண்டக்கூடிய பிற காரணிகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசு செய்யும் செலவுகள் மூலம் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்றார்கள்; ஆனால் அது ஜிடிபியில் 10.3%ஆகத்தான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததைவிடவும் குறைவு; ஏற்றுமதியும் ஜிடிபியில் 22.7%ஆக இருந்தது மேலும் சரியத்தான் வாய்ப்புகள் அதிகம் என்று உலக வர்த்தக அமைப்பு, உலகளாவிய வர்த்தகம் குறித்து கணித்திருக்கிறது.

கவலைதரும் மற்றொரு அம்சம் நம்முடைய இறக்குமதி மதிப்பு ஜிடிபியில் 27.4% ஆகும். 2020-21இல் 19.1%ஆகவும் 2021-22இல் 23.9%ஆகவும் இது இருந்தது. ஏற்றுமதி அதிகரிக்காமல் இறக்குமதி மட்டும் அதிகரிப்பதிலிருந்து நாம் நுகர்வுக்காகத்தான் இறக்குமதி செய்கிறோம் என்பது தெளிவாகிறது. இது நம்முடைய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பைக் குறைத்து, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்தி, நம் நாட்டிலிருந்து மூலதனம் வெளிநாடுகளுக்குப் பறக்க வழிசெய்துவிடும்.

பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது, கவலையளிக்கும் இரண்டு தரவுகள் – ‘சுரங்கம்-குவாரிகள்’ மூலமான வளர்ச்சி (கடந்த ஆண்டைவிட 2.4% அதிகம்), பொருள் உற்பத்தி (1.6%) ஆகியவை. இவ்விரண்டுமே 2021-22ஆம் ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சி வீதத்தைவிட மிகவும் குறைவு. கட்டுமானத் துறையில் 9.1% வளர்ச்சி 2022-23இல் ஏற்படும், ஆனால் இதுவுமே 2021-22இல் ஏற்பட்ட 11.5% வளர்ச்சி அளவைவிடக் குறைவு. முன்கூட்டிய மதிப்பீட்டுத் தரவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் நிதியமைச்சரோ வேறு துறைகளின் அமைச்சர்களோ, பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் ஏன் இப்படி உற்சாகமற்ற வளர்ச்சி நிலவுகிறது என்று விளக்கம் தரவில்லை.

உற்பத்தி குறைவு, வேலையின்மை அதிகரிப்பு

வேலையின்மை தொடர்பான கண்ணோட்டமும் உற்சாகம் தருவதாக இல்லை. வேலைவாய்ப்புகளை அதிகம் அளிக்கக்கூடிய துறைகள் வேளாண்மை, கனிம அகழ்வு- வெட்டி எடுத்தல், கைத்தொழில் – கைவினை உள்ளிட்ட அனைத்து வகையான உற்பத்தி, கட்டிட கட்டுமானத் துறை, வியாபாரம், தங்கும் வசதியுள்ள அறைகளுடன் கூடிய ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல்தொடர்பு உள்ளிட்டவை.

தகவல்தொடர்புத் துறையில் மட்டும் வளர்ச்சி 13.7%, பிற துறைகளில் வளர்ச்சி கிடைமட்டமாகவோ, மேலும் சரியும் விதத்திலோதான் இருக்கின்றன. அனைத்திந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் 8.3%ஆக இருக்கும் என்று சிஎம்ஐஇ, இந்த ஆண்டு ஜனவரி 13இல் மதிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஏன் பெருகவில்லை என்று ஆராய்ந்து, அதைப் பெருக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல், அதைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் மீது அவதூறைப் பரப்புவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது.

உற்பத்தித் தரப்பில் 2022-23க்கு, முன்கூட்டிய மதிப்பீட்டுத் தரவுகள் சுட்டும் எண்கள் மிகவும் சோர்வைத் தருவனவாக இருக்கின்றன. பெருந்தொற்று முடக்க காலமான 2020-21 என்பதுடன் ஒப்பிடுகையில், 2021-22இல் ஏற்பட்ட வளர்ச்சி ஒப்பிடக்கூடியதல்ல என்பதை ஏற்றாலும் 2022-23 நிதியாண்டுக்கான எல்லா தரவுகளும் அடையாளங்களும் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருப்பதையே உணர்த்துகின்றன; உதாரணத்துக்கு அரிசி, கச்சா பெட்ரோலிய எண்ணெய், சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துவிட்டது. நாட்டின் பெரிய கடல் துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் கையாண்ட சரக்குகளின் அளவும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு.

ரயில்வே துறையிலும், கிலோமீட்டர் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றின் நிகர வளர்ச்சி குறைவுதான். தொழில் துறை உற்பத்தி குறியீட்டெண் (ஐஐபி) ஒற்றை இலக்கமாகவே சில துறைகளில் காணப்படுகின்றன. சுரங்கத்தொழில் 4.0%, பொருள் உற்பத்தி 5.0%, மின்னுற்பத்தி 9.4%, உலோக கனிமங்கள் –6.5% (எதிர்மறை வளர்ச்சி).

விலைவாசி உயர்வு (பணவீக்க விகிதம்) பொருளாதாரத் துயரங்களை மேலும் அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. மொத்த விலைக் குறியீட்டெண் 9.6%, உற்பத்தியாகும் பொருள்களின் விலையுயர்வு 7.6%, அனைத்து சரக்குகளின் விலையும் சராசரியாக மொத்தம் 12.3% என்று உயர்ந்துள்ளன.

இவற்றையெல்லாம் நிதியமைச்சர் 2023-24 நிதிநிலை அறிக்கையில் எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வழக்கமாக கையாளப்படும் நிலையான இயக்க முறைமைகளோ, வாய்ஜாலமோ - விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், உலக அளவிலான பொருளாதார சரிவு ஆகியவற்றால் ஏற்பட்டுவரும் துயரங்களைப் போக்கிவிடாது. தெளிவான கொள்கைகளும் உறுதியான நடவடிக்கைகளும் அவசியம். 2023 பிப்ரவரி முதல் நாளுக்காக (நிதிநிலை அறிக்கை தாக்கல் நாள்) காத்திருப்போம்.

 

தொடர்புடைய கட்டுரை

புத்தாண்டில் எப்படி இருக்கும் நம் பொருளாதாரம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


போரும் உளவியலும்க்ரூடாயில்ரயில்வே அமைச்சர்தமிழகம்இந்துவியம்சந்தைபட்டத்து யானைகள்புரிந்துணர்வு ஒப்பந்தம்ஒரு தேசம் ஈராட்சி முறைபிரம்புசுடுகாடுநினைவேற்றல்ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்கூடாரவல்லிசிறுபான்மையினர்ஒட்டகம்முஸ்லிம் பெண்கள்ஒரே நாடு – ஒரே தேர்தல்மாலி அல்மெய்டாபோலி அறிவியல்தமிழாசிரியர்கள்மொழிச் சிக்கல்உயிர்கள்திராவிட நிலம்காலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனைநீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டிஹேக்கர்தனிச் சட்டங்களை சீர்திருத்துங்கள்மகா.இராஜராஜசோழன் கட்டுரைஅப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!