அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

செல்வக் குவிப்பு மட்டுமே இலக்கா?

ப.சிதம்பரம்
07 Feb 2022, 5:00 am
0

மத்துவம் (சோஷலிசம்) என்ற பொன்னுலக மாயையிலிருந்து விடுபட்ட பிறகு - முற்போக்கான, வளர்ச்சிமிக்க, பன்முகத்தன்மையுள்ள நாட்டை உருவாக்க - உழைப்பு, சமூகநலம், செல்வம் ஆகியவை முக்கியவை என்பதில் நம்பிக்கை கொள்ளலானேன். இந்த மூன்றிலும் எதுவும் மற்ற இரண்டைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் உள்ளவையோ, குறைந்த முக்கியத்துவம் கொண்டவையோ அல்ல.

கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட பொருளாதாரச் சூழல்களை நாம் சந்தித்துவருகிறோம். 1991 (கிட்டத்தட்ட இயல்பான நடைமுறைகள்), 1997 (உலகமயமாக்கல்), 2002-03 (வறட்சி), 2005-08 (உலகளாவிய ஏற்றம்), 2008 (பன்னாட்டு பொருளாதார நெருக்கடி), 2012-13 (அமெரிக்க அரசுப் பத்திரங்களில் பெருகிய முதலீட்டால் நிதிச் சந்தையில் நெருக்கடி), 2016-17 (பணமதிப்பிழப்பு-வறட்சி), 2020-22 (பெருந்தொற்று-பொருளாதார மந்தநிலை)... இப்படி ஒவ்வொரு சூழலுமே அரசிடமிருந்து நுட்பமான செயல்பாடுகளையே எதிர்பார்ப்பவை, நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது அதில் நிச்சயம் இடம்பெற வேண்டியவை. வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மக்களுடைய சமூக நலனைக் காப்பது, நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்குவது ஆகிய இலக்குகளில் எந்தச் சூழலிலும் மாற்றமோ, தொய்வோ இருக்க முடியாது.

வேலைவாய்ப்பு ஏன் அவசியம்?

அறிவார்ந்த மனித குலம் தன்னுடைய உணவுக்காகக் காடுகளில் வேட்டையாடியும், பழுத்து உதிர்ந்த கனிகளையும், பூமிக்கடியிலிருக்கும் கிழங்குகளையும் சேகரித்து உண்ணும் வழக்கமுள்ளதாக இப்போது இல்லை. அவர்களுடைய தேவைகளும் விருப்பங்களும் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான வளத்தைப் பெற வேலைவாய்ப்புகளைத் தேடுகின்றனர்.

நவீன காலத்தில், வேலைக்குச் செல்வது என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். வளரும் நாடுகளில், பதினைந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்கள் ‘வேலை செய்யக்கூடியவர்கள்’ என்ற முக்கியத்துவத்தைப் பெறுகிறார்கள். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் போக, மேலும் எத்தனை பேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் ‘தொழிலாளர் பங்கேற்பு விகிதம்’ (எல்.எஃப்.பி.ஆர்.) முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் இப்போது வேலைக்குச் செல்வோர் 94 கோடி, எல்.எஃப்.பி.ஆர். 37.5% – அதாவது 52 கோடி. (ஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை, பின்னிணைப்பு).

நாட்டு மக்களின் சராசரி வயது 28.43 ஆக இருப்பதால் நாடு எதிர்கொள்ளும் மிகவும் கடினமான பொருளாதாரச் சவால் வேலைவாய்ப்பின்மை. இது அதிகமாக இருப்பதை பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட தொடக்கக் காலத்தில் நரேந்திர மோடி நன்கு உணர்ந்திருந்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல அவருடைய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் தந்த வாக்குறுதி இளைஞர்களை வீறுகொள்ளச் செய்தது. பகோடாக்களை விற்பதுகூட வேலைவாய்ப்புதான் என்று பிறகு அவரே சொல்லிவிட்டார்! கடந்த ஏழாண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டேவருகிறது.

பெருந்தொற்றும், பொது முடக்கமும் வேலையிழப்பை மேலும் பல மடங்காக உயர்த்திவிட்டன. குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் 60 லட்சம் மூடப்பட்டுவிட்டன. மாதச் சம்பளக்காரர்கள் முதல், நிரந்தரப் பணியாளர்கள் அல்லாதவர்கள் வரையில் கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். சுயமாகத் தொழில் செய்துவந்தோர் (உதாரணத்துக்கு - டெய்லர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர்) வேலையிழந்தனர். அப்படி வேலையிழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைத்துவிடவில்லை.

இப்போது நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8% ஆகவும் கிராமப்புறங்களில் 6% ஆகவும் இருக்கின்றன. இதுபோக, மீண்டும் வேலை கிடைத்துத் திரும்பியவர்களுக்கு முன்பு கிடைத்த ஊதியத்தைவிடக் குறைவாகவே தரப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 84% குடும்பங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, ‘அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்கிறது.

அரசு உருவாக்கப்போவதாகக் கூறும் ஆண்டுக்கு 12 லட்சம் வேலைவாய்ப்புகளுக்குப் போட்டி போட, 47.5 லட்சம் தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள் (ஆதாரம்: தொழிலாளர் துறை அறிக்கை). இதிலிருந்து நான் அறிவது: வேலைவாய்ப்பின்மை மேலும் மேலும் அதிகரிக்கும் - அதிலும் குறிப்பாகப் படிப்பு குறைவாக உள்ள இளைஞர்களிடையே.

சமூக நலம் ஏன் முக்கியம்?

சமூக நலம் என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்ட விரிவான கருத்தாக்கம். வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, உணவு, சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு என்று பல அம்சங்களை உள்ளடக்கியது. இவை எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள்தான் சமூக நலம் என்று அழைக்கப்படுகிறது. மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகத்தான் ‘மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம்’ (MGNREGA) இயற்றப்பட்டது. அனைவருக்கும் இலவச பொது சுகாதார வசதிகள், சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகியவை மக்களுடைய சுகாதார நலனுக்கானவை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அனைவரும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை யாரும் மறுக்காமல் இருப்பதற்காக இயற்றப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை இவற்றுக்கு என்ன செய்திருக்கிறது? நிதி ஒதுக்கீட்டைப் பாருங்கள்:

மானியம் அல்லது ஒதுக்கீடு (ரூபாய் கோடியில்)

இனம்

2022-23  2021-22

பெட்ரோலியம்

6.517 5,813

உரம்     

1,40,000 1,05,000
உணவு தானியம் 2,86,219 2,06,481
மதிய உணவு திட்டம் 11,500 10,233
பயிர்க் காப்பீடு          15,989 15,500
வேலைவாய்ப்பு உறுதி 98,000 73,300
சுகாதாரம் 85,915 86,606 

ஒட்டுமொத்தமாக, மானிய உதவியில் மிகப் பெரிய அளவாக 27% வெட்டப்பட்டிருக்கிறது! 

பட்ஜெட் சொல்லும் சேதி என்னவென்றால், ஏழைகளின் வங்கிக் கணக்குக்கு இனி ரொக்கப் பரிமாற்றம் இல்லை, வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை கிடையாது, சமூக நலப் பாதுகாப்பு அளிக்கும் ஓய்வூதிய அளவில் உயர்வு இருக்காது, கடந்த இரண்டு ஆண்டுகளாக வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கேற்ற எடையில்லாமல் வாடும் குழந்தைகளின் நலன் காக்க அரசு மானிய உதவி இல்லை. நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரி நிவாரணம் எதுவும் தரப்பட மாட்டாது. பொதுச் சரக்கு சேவை வரி விகிதங்களைக் குறைத்துச் சுமையை நீக்குகம் உத்தேசமும் அரசுக்கு இல்லை. என்னுடைய முடிவு: மக்களுடைய சமூகநலன் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

ஏன் செல்வம் முக்கியம்?

நாட்டின் செல்வ வளத்தை அதிகரிப்பதை வரவேற்கிறேன். செல்வ வளம்தான் புதிய முதலீடுகளுக்கு ஆதாரம். புதிய முதலீடு, வரி செலுத்திய பிறகு வருவாய் அதிகரிப்பு ஆகியவை செல்வம் சேர்வதால் மட்டுமே சாத்தியம். வருவாயும் செல்வமும் முதலீட்டை ஊக்குவிக்கும். இடர்களைப் பொருள்படுத்தாமல் முதலீடு செய்யத் தூண்டும். புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி-வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பாக அமையும். அறக்கட்டளைகள் மூலம் தேவைப்படுவோருக்கு உதவிகளைச் செய்யவும் பயிற்சி-வளர்ச்சிக்கு செலவிடவும் உதவும்.

செல்வம் சேருவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், சமூகத்தில் ஏழை-பணக்காரர்கள் வேற்றுமை அதிகரிப்பதற்குக் காரணமாகும் செல்வக்குவிப்புதான் கூடாது என்கிறேன். உலகிலேயே வருவாய், செல்வம் ஆகிய இரண்டிலும் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று உலக அளவிலான ஆய்வு கூறுகிறது. மூலதனச் செலவுகள் மூலமான முதலீட்டுக்கு முக்கியத்துவம் நவீன அறிவியல்-தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை, நிதிப் பரிமாற்றங்களில் டிஜிட்டல்மயம், மிகவும் நவீனத்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு முறைக்கு ஆதரவு என்ற அறிவிப்புகள் -  கோடிக்கணக்கான ஏழை மக்களுடைய வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை விலக்கிவிட்டு மேற்கொள்ளப்படுவது, இந்த நாட்டு ஏழைகளையே கேலிப்பொருளாக்குவதாகும்.

ஏழைகளுக்கு உதவ மேலும் நிதியாதாரம் தேவையென்றால் அதைப் பெறுவதற்கான சரியான அணுகுமுறை, பெரும் பணக்காரர்களின் சொத்து – வருமானங்கள் மீது கூடுதல் வரி விதிப்பதுதான். நாட்டில் உள்ள 142 பெரும் பணக்காரர்களுக்கு மொத்தமாக ரூ.53,00,000 கோடி சொத்து இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சொத்துகள் மீதான வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க முடியும்.

என்னுடைய முடிவு: இந்த நிதிநிலை அறிக்கையானது, முதலாளித்துவச் சார்பு அறிக்கை ஆகும்; இது ஏழைகளைப் புறக்கணிக்கிறது.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழர் வரலாறுநோர்டிக் நாடுகள்இல்லம் தேடிசமஸ் உரைசமஸ் - நல்லகண்ணுஇந்துத்துவாசெயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?சச்சிதானந்த சின்ஹாஉழவர்கள்டி.எம்.கிருஷ்ணாராமச்சந்திர குஹா அருஞ்சொல்பக்வந்த் சிங் மான்இந்தி ஆதிக்கவுணர்வுசவுக்கு சங்கர்முன்னெப்போதும் இல்லாத தலையீடுடி.எஸ்.பட்டாபிராமன்உண்மையைச் சொல்வதற்கான நேரம்'ஜாப் ஷாப்பிங்' (Job Shopping)காதல் திருமணங்கள்அட்மிஷன்உரத் தடையால் தோல்விஎஸ்.பாலசுப்ரமணியன்ஜெயங்கொண்டம்ஆசிரியர் பயிற்சிகளின் அடிப்படைடு டூ லிஸ்ட்வரிப் பணம்ஆரிய வர்த்தம்அயோத்திகுளோபலியன்_ட்ரஸ்ட்கனவு விமானம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!