கட்டுரை, சாவர்க்கர் வாழ்வும், நூல்களும் 15 நிமிட வாசிப்பு

சாவர்க்கர்: காந்தி கொலையோடு வந்த அஸ்தமனம்

பி.ஏ.கிருஷ்ணன்
05 Nov 2021, 5:00 am
3

டிப்படியாக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பரசியலின் உச்சத்துக்குச் சென்றார் சாவர்க்கர். 

“இஸ்லாமியப் படையெடுப்புகள் முதன்முதலாக நடந்த காலகட்டத்திலேயே, இந்துக்கள் தாங்கள் போர்க்களங்களில் வென்ற தருணங்களில் எல்லாம் இஸ்லாமியப் பெண்களை இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை நடத்தியதுபோலவே நடத்தியிருந்தால், அல்லது அவர்களை மதம் மாற்றி தங்கள் குலங்களுக்குள் இழுத்துக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இஸ்லாமியர் மனங்களில் அச்சம் பிறந்திருக்கும்.”

“இஸ்லாமிய மத மேலாண்மையை அழித்தொழிக்க இந்துக்கள் எடுத்துக்கொண்டிருக்கக் கூடிய வழி, மிக எளிதான வழி ஒன்றே ஒன்றுதான். இஸ்லாமியர்கள் தங்கள் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளில் இந்துக்களுக்கு எதிராக எவ்வாறு நடந்துகொண்டார்களோ, அதே மாதிரி இந்துக்களும் நடந்துகொண்டிருக்க வேண்டும். இந்துக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றார்கள் இஸ்லாமியர்கள். அதேபோல இந்துக்கள் கை ஓங்கியிருக்கும்போது இந்துக்களும் இஸ்லாமியர்களை முற்றிலும் அழித்தொழித்து நிலப்பரப்பையே முஸ்லிம்கள் இல்லாத நிலப்பரப்பாக மாற்றியிருக்க முடியும்.” 

சாவர்க்கருடைய வெறுப்பின் உச்சம் என்று இதைச் சொல்லலாம்:

“மாட்டு மந்தையில் பசுக்களைவிட எருதுகள் அதிகமிருந்தால் அது வேகமாக பல்கிப் பெருகாது. ஆனால், பசுக்கள் அதிகமிருந்தால் வேகமாகப் பெருகும். மனிதர்களுக்கும் இது பொருந்தும். மனிதனும் அடிப்படையில் மிருகம்தானே. காட்டில் வாழும் மனிதர்கள் இந்த விதியை நன்கு அறிந்திருந்தார்கள். இன்றும் ஆப்பிரிக்க பழங்குடிகளில் சில, போர்களில் வெற்றி பெற்றால் எதிரி ஆண்களை மட்டுமே கொல்கிறார்கள். பெண்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பெண்களால் தங்கள் வம்சங்களைப் பெருக்கிக்கொள்வது ஒரு புனிதமான கடமையாக அவர்களால் கருதப்படுகிறது!”

ஆதிகாலத்தில் நரகாசுரன் ஆரியப் பெண்களைக் கடத்திக்கொண்டு போனான். கிருஷ்ணன் அவனைக் வென்று பெண்களை மீட்டு மணம் புரிந்துகொண்டார்; குப்தர்கள் காலம் வரை நமது அரசர்களும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தனர்; எதிரிப் பெண்களைத் தங்களவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்கள் குழுக்களையும் உள்வாங்கிக்கொண்டு எதிரியின் அடையாளத்தையே அவர்கள் அழித்தனர் என்ற சாவர்க்கர் கூற்றைப் படிக்கும்போது இன்றைக்கு வீதிகளில் இந்துத்துவ வெறியர்கள் பேசும் பேச்சுக்கான அடித்தளம் எங்கெல்லாம் இருக்கிறது என்பது வெளிப்படை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காந்தி மீதான வெறுப்பு

காந்தி மீதான இந்து மகாசபையின் வெறுப்புக்கான வேர்களையும் நாம் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும். மேற்படி மனோநிலை கொண்ட சாவர்க்கரைத் தலைவராகக் கொண்ட இயக்கமானது, இந்துக்களின் மிகப் பெரிய எதிரியாக காந்தியைப் பார்த்ததில் என்ன வியப்பு இருக்க முடியும்!

காந்தி கொலையில்  சாவர்க்கருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் அவருடைய எழுத்துகள் இந்து மகாசபாவைச் சேர்ந்தவர்களில், குறிப்பாக மராத்தி படிக்கத் தெரிந்தவர்களில் பலரை வெறியடைய வைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஏதோ புத்தகங்களில் இப்படி வெறி கொண்டு எழுதியதோடு சாவர்க்கர் நிறுத்திக்கொள்ளவில்லை. பஞ்சாப் பகுதியில் பிரிவினைப் படுகொலைகள் நடந்தபோது,  ‘இதேபோல இந்தியப் பகுதியிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள்!’ என்று அரசும் காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விட வேண்டும் என்று கூச்சநாச்சமின்றி வலியுறுத்தினார் சாவர்க்கர்.

ஆக, இந்த வெறுப்புக் கும்பலுக்கு காந்தி மிகப் பெரிய தடையாக இருந்தார்.

காந்தி கொலையும் சாவர்க்கரும்  

1948 ஜனவரி 30 மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் காந்தி. 

கோட்சே கைதுசெய்யப்பட்டதும் பல உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன.  ‘தைனிக் இந்து ராஷ்ட்ரா’ என்ற பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தான் கோட்சே. அதன் முகப்பில் சாவர்க்கர் படம். 19 வயதில் சாவர்க்கரைப் பார்த்ததிலிருந்து அவருடைய முழுப் பக்தனாக மாறிவிட்டிருந்தான் அவன். இதேபோன்றே குற்றஞ்சாட்டப்பட்ட ஆப்தே மற்றும் கர்கரேவுக்கும் சாவர்க்கர்!

மூவருக்கும் நாயகன் சாவர்க்கர். சாவர்க்கரைப் போலவே மூவரும் சித்பவன் பிராமணர்கள். 1944இல் ‘அக்ரானி’ என்ற பத்திரிகையை நடத்துவதற்காக சாவர்க்கர் 15,000 ரூபாயை கோட்சேவுக்குக் கொடுத்திருந்தார். பின்னால் அரசு ஈட்டுத்தொகையாக 6000 ரூபாய் கேட்டபோதும் சாவர்க்கர்தான் உதவிசெய்தார். சாவர்க்கருக்கும் அவர்களுக்கும் கடிதப் போக்குவரத்துகள் இருந்தன.

காந்தி கொலையுண்ட ஐந்து நாட்களுக்குப் பின் சாவர்க்கர் கைதுசெய்யப்பட்டார்.

நேரு அரசின் நடவடிக்கைகள் 

சாவர்க்கர் வேண்டும் என்றே வழக்கினுள் இழுக்கப்படுகிறார் என்று படேலிடம் புகார் செய்தார் பின்னாளில் பாஜக முன்னோடியான ஷியாம் பிரசாத் முகர்ஜி. “சாவர்க்கர் அரசியல் காரணங்களுக்காகப் பழி வாங்கப்படுகிறார் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க வகையில்லாதபடி நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயம் இல்லை. உங்கள் முன்னால் வழக்கின் எல்லா ஆவணங்களும் வைக்கப்படும் என்று நம்புகிறேன். அவருடைய தியாகங்களும் அவர் அனுபவித்த துன்பங்களும் கணக்கற்றவை. அதனால் அவர் மீது உறுதியான ஆதாரங்கள் இருந்தால் ஒழிய அவருடைய வயதைக் கருதி அவர் மீது கொலைச் சதியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டக் கூடாது!”

படேல் இதற்கு பதில் அளித்தார்: “சாவர்க்கரை வழக்கில் சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்பதைச் சட்டப்பூர்வமாகவும் நீதிபூர்வமாகவும் அணுக வேண்டுமே தவிர, அணுகுமுறையில் அரசியல் காரணங்களை இறக்குமதிசெய்யக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். சாவர்க்கரைச் சேர்க்க வேண்டும் என்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்தால், அதுகுறித்த ஆவணங்கள் அனைத்தையும் என்னிடம் காட்ட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறேன்!”

கூடவே படேல் இதையும் சொன்னார்:  “இந்த அணுகுமுறை அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்பதைச் சட்டம் மற்றும் நீதி சார்ந்த கோணங்களிலிருந்து மட்டும் பார்ப்பது. அறவுணர்வோடு பார்த்தால் ஒருவர் சாவர்க்கரை அணுகுவது நேர்மாறாக இருக்கலாம்!”

அறவுணர்வோடு பார்த்தால் சாவர்க்கர் குற்றவாளிதான்  என்பதைத் துல்லியமாகச் சொன்னார் படேல்.

காந்தி கொலைக்கான சாட்சியங்கள் 

வழக்கு தில்லி செங்கோட்டையில் நடந்தது. சாவர்க்கருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட வழக்கின் அச்சாணி பட்கே என்பவனின் சாட்சியத்தில் இருந்தது. அவனும் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னால் அப்ரூவராக மாறியவன். அவன் கூற்றுப்படி ஜனவரி 14ஆம் தேதி  கோட்சேவும் ஆப்தேவும் சாவர்க்கர் வீட்டிற்குச் சென்றனர். அவனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு ஒரு பையை எடுத்துச் சென்றனர். பைக்குள் ஏதோ வைத்துக்கொண்டு வந்தனர். திரும்ப ஜனவரி 17ஆம் தேதி இருவரும் சாவர்க்கர் வீட்டிற்குச் சென்றனர். திரும்பி வரும்போது படிகளில் இறங்கி வந்த சாவர்க்கர் ‘யஷஸ்வி ஹூன் யா!’ (வெற்றியோடு திரும்பி வாருங்கள்) என்று சொன்னது காதில் விழுந்தது. காரில் திரும்பச் செல்லும்போது பட்கேயிடம், ‘காந்தி நூறு ஆண்டுகள் எல்லாம் இருக்க மாட்டார் என்று சாவர்க்கர் சொல்லிவிட்டார். நாம் நம் திட்டத்தை முடித்துக்கொண்டு வெற்றியோடு திரும்ப வருவோம்!’ என்று ஆப்தே சொன்னான்.

சாவர்க்கருக்கு எதிராக இன்னும் இரண்டு சாட்சிகள் இருந்தன. பிம்பா என்ற நடிகை கோட்சேவையும் ஆப்தேவையும் சாவர்க்கர் வீட்டருகில் ஜனவரி 14 அன்று ரயில்வே நிலையத்திலிருந்து இறக்கிவிட்டதாகச் சாட்சி சொன்னார். ரயில் பழக்கம். அவர் செல்லும் திசையில் இவர்களும் சென்றதால் அவ்வாறு செய்ததாகச் சொன்னார். 

அதேபோல, ஜனவரி 17 அன்று அவர்கள் வாடகைக்கு எடுத்த டாக்ஸியை ஓட்டியவரும் சாவர்க்கர் வீட்டிற்கு இருவரும் சென்றனர். நான் வெளியில் காத்திருந்தேன் என்று சொன்னார். சாவர்க்கரின் காரியதரிசி தாம்லே கோட்சேவும் ஆப்தேவும் சாவர்க்கரை ஜனவரியின் மத்தியில் சந்தித்ததாகச் சொன்னார். சாவர்க்கரின் காப்பாளர் கஸரும் சந்திப்பை உறுதிப்படுத்தினர். 23, 24 தேதிகளில் ஒன்றில் திரும்பவும் வந்து சந்தித்ததாகச் சொன்னார். விஷ்ணு கர்கரேயும் மதன்லால் பஹ்வாவும் அதற்கு முன் வந்து சந்தித்ததாகச் சொன்னார். 

ஆனால், இந்தச் சாட்சியங்கள் சாவர்க்கருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருந்தது என்பதை நிறுவுவதற்கு உதவவில்லை. கொன்றவர்கள் யாரும் சாவர்க்கரின் தூண்டுதலில் செய்தோம் என்று சொல்லவில்லை. சாவர்க்கரால் இவர்கள் சாட்சியங்களில் எந்த வலுவும் இல்லை என்பதை மிக எளிதாக நிறுவ முடிந்தது.

சாவர்க்கர் நீதிமன்றத்தில் சொன்னதை விரிவாகப் பதிவுசெய்யும் விக்ரம் சம்பத் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: “சாவர்க்கர் கோட்சேவைக் கண்டுகொள்ளாதது, முன்பின் தெரியாதவனைப் போல நடந்துகொண்டது, மற்றும் திட்டமிட்டு, எல்லோரும் அறியும்படி அவனிடமிருந்து விலகியிருந்தது போன்ற செயற்பாடுகள் அவனை மிகவும் புண்படுத்தின. சாவர்க்கரின் கை தன் மீது பட வேண்டும் என்று அவன் விரும்பினான், அனுதாபத்தோடு ஒரு வார்த்தை அல்லது இரக்கம் ததும்பும் ஓர் பார்வையை எதிர்பார்த்தான்.” 

சாவர்க்கர் தனக்கும் கோட்சேவுக்கும் அதிகத் தொடர்பு கிடையாது என்று சொன்னதைக் குறித்து விக்ரம் சம்பத் சொல்வது இது: “அவருக்கும் கோட்சேவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை மறுத்து சாவர்க்கர் சொன்னவை உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை. அவரும் கோட்சேவும் 1929இல் ரத்னகிரியிலிருந்தே நெருக்கமானவர்கள். கோட்சே அவருடைய காரியதரிசியாக இருந்தான். பின்னால் மிக நம்பிக்கையுள்ள உதவியாளனாக இந்து மகாசபையில் உருவெடுத்தான். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது, கோட்சே அவருக்கு அணுக்கமில்லாதவன் போலவும், எல்லாத் தொண்டர்களைப் போல ஒரு சாதாரணத் தொண்டன் போலவும் அவனைத் தொலைவில் நிறுத்த சாவர்க்கர் முயற்சித்தது உண்மையை வரம்பிற்கு அதிகமாக வளைக்கும் செயல்.”

நிச்சயமான குற்றவாளி

காந்தி கொலையில் சாவர்க்கருக்கான பங்கு என்ன என்பது தொடர்பில் இன்று வரை சட்டரீதியிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், படேல் சொன்னதுபோல, சட்டம், நீதி போன்றவை அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தை நிறுவாமல் போனாலும், அறவுணர்வு இருக்கும் எவரும் காந்தி கொலைக்கு சாவர்க்கரும் ஒரு காரணம் என்பதை மறுக்க மாட்டார்கள்! 

சாவர்க்கர் விடுதலைசெய்யப்பட்டார் என்றாலும், அவருடைய அரசியல் வாழ்க்கை காந்தி கொலையோடு அஸ்தமனம் அடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் கசப்போடு அடுத்த 18 ஆண்டுகளை நடத்தினார். தன் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் நலம் விசாரிக்கக்கூடச் செல்லவில்லை. அவர் இறந்தவுடன் மருத்துவமனையிலிருந்தே எரியூட்டும் இடத்திற்கு உடலை எடுத்துச் செல்லட்டும், வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொன்னார். எரியூட்டும் இடத்திற்கும் செல்லவில்லை.

பலர் அவரைச் சந்திக்க விரும்பினார்கள் - கரியப்பா போன்றவர்கள்கூட. ஆனால் சந்திக்க மறுத்துவிட்டார். 

சாவர்க்கரின் கடைசி நேர்காணல்

சாவர்க்கர் அளித்த கடைசி நேர்காணல் 1965இல், ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையின் தீபாவளி இதழில் வந்தது: அது அவர் மன ஓட்டம் எவ்வாறு இருந்தது என்பதைக் காட்டுகிறது. சில கேள்விகளும் பதில்களும் (சுருக்கமாக).

இந்தியப் புரட்சி வீரர்களையும் ரஷ்ய, சீன புரட்சி வீரர்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

ரஷ்ய, சீன புரட்சி வீரர்கள் உள்நாட்டு எதிரிகளுடன் மோதினார்கள். நாம் வெளிநாட்டவர்களுடன் மோதினோம். வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம், தத்துவம் போன்றவற்றில் நம்மிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களுடன் நாம் - இந்துக்கள் - மோதினோம். நம்முடைய போர் அவர்களுடையதைவிட மிகக் கடினமானது.

நாம் விடுதலை பெற்றதன் காரணங்கள் என்ன?

முதலாவது, நம் ராணுவத்திற்கு அரசியல் விழிப்புணர்வு பிறந்துவிட்டது. அவர்களைத்தான் பிரிட்டிஷார் நம்பியிருந்தனர்.

இரண்டாவது, நம் கடற்படையின் எழுச்சி. விமானப் படையும் நாங்கள் கையைக் கட்டிக்கொண்டு இருக்க மாட்டோம் என்ற எச்சரிக்கை விடுத்தது.

மூன்றாவது, சுபாஷ் போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் பங்கு.

நான்காவது, 1857 நடந்த முதல் இந்திய விடுதலைப் போர்.

ஐந்தாவது, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேச பக்தர்களின் தியாகம். 

நீங்கள் ஏன் காங்கிரஸில் சேரவில்லை?

எனக்கு காந்தியின் அகிம்சை கொள்கை பிடிக்கவில்லை. முழுமையான அகிம்சை அறமற்றது, பாவத்தை விளைவிப்பது என்று நான் கருதுகிறேன். புரட்சியை அது மழுங்கடிக்கிறது. இந்த அடிப்படை வேறுபாட்டினால்தான் நான் காங்கிரஸில் சேரவில்லை. 

காங்கிரஸில் சேர்ந்திருந்தால் நாட்டிற்கு இன்னும் சேவை செய்திருக்கலாம் அல்லவா?

இல்லை. நானும் சுபாஷ் போஸைப் போல விரட்டி அடிக்கப்பட்டிருப்பேன்.

உங்கள் கனவு இந்தியா எவ்வாறு இருக்கும்?

எல்லோரும் மத, இன, சாதி வேறுபாடின்றி சமமாக நடத்தப்படுவர். இந்துக்களிடையே சாதி இருக்காது. அறிவியலும் தொழில்நுட்பமும் ஊக்குவிக்கப்படும். நிலவுடைமை முற்றிலும் ஒழிக்கப்படும். எல்லா நிலங்களும் இறுதியாக அரசிற்குச் சார்ந்ததாக ஆகும். எல்லா முக்கியத் தொழில்களும் அரசுடைமைப்படுத்தப்படும். உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியா தன்னிறைவு பெறும். என்னுடைய கனவு இந்தியா, எதிர்கால இந்தியா உலக காமன்வெல்தில் (பொதுநல அமைப்பு) முழு நம்பிக்கை கொண்டிருக்கும். நம் எல்லோருக்கும் தாய்நாடு உலகம்தான். ஆனால் இந்தியா என்ற அடையாளம் மாறாமல் இருக்கும். அமைதியை விரும்பும் வலுவான மத்திய அரசைக் கொண்ட அந்நாடு உலக அமைதிக்கும் வளத்திற்கும் வலுச் சேர்க்கும்.

இந்து ராஷ்டிரம் என்று சொல்வதால் நீங்கள் மதவாதியா?

இந்து என்றால் இந்தியாவைத் தாய்நாடாகக் கருதுபவன். அதைப் புண்ணிய பூமி என்று கருதுபவன். இந்த வரையறையில் ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்றவர்கள் வருவார்கள். பார்சிகள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் போன்றவர்களையும் எளிதாக அரவணைத்துச் செல்ல முடியும். ஒரே பிரச்சினை முஸ்லிம்கள். என்னை மதவாதியாகக் கருதுகிறவர்கள் போதைப் பொருள் எடுத்துக்கொண்டு பேய்க் கனவு காண்பவர்கள். நான் மதவாதி அல்ல. வெறியன் அல்ல. ஆனால், அப்படி நினைப்பவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கழுதைகளைக் குதிரைகளாக ஆக்க முடியாது. 

காங்கிரஸ் கரைந்துபோகும் பட்சத்தில், அரசியல் அதிகாரத்திற்கான நாளைய போர், இந்து பாசிஸத்திற்கும் கம்யூனிஸத்திற்கும் இடையே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

என் உள்ளத்தில் இருப்பவன் இந்து பாசிஸவாதி அல்ல. அவன் மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டவன். ஒருவகையில் பார்க்கப்போனால் அவன் ஒரு கம்யூனிஸ்ட். எனவே எல்லா இந்துக்களும் ஒன்றுபட்டால் அரசியல் அதிகாரத்திற்கான போர் ஏதும் நிகழும் என்று நான் நினைக்கவில்லை.

கனவா? பகல் கனவா?

சாவர்க்கர் 1966இல் உடல்நலம் முழுவதும் குன்றியபோது, இறக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 1966 பிப்ரவரி 3 முதல் உணவு உண்பதையே நிறுத்திவிட்டார். 23 நாட்கள் பட்டினி கிடந்தார். 26 அன்று மரணம் அடைந்தார். மரணமடைந்தபோது எந்தச் சடங்குகளும் இல்லாமல் அவர் எரிக்கப்பட்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, “வீரத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் இலக்கணம்!” என்று சாவர்க்கருக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.

இந்துத்துவக் கனவு இன்றில்லாவிட்டால் நாளை நிறைவேறும் என்ற நம்பிக்கை சாவர்க்கருக்கு இருந்தது.

சாவர்க்கர் சொல்கிறார்: “ஓ இந்துக்களே, நீங்கள் இந்தியா புகழ்மிக்க, ஒளிமயமான இந்து நாடாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது இந்துக் கொடியின் கீழ் பறக்க வேண்டும் என்ற எண்ணதோடு உழைக்க வேண்டும். இது நிச்சயம் நடக்கும். இன்றில்லாவிட்டால் நாளைக்கு. இது என் கனவு. நிறைவேறாத வரை நான் பகல்கனவு கண்டுகொண்டிருப்பவனாக மதிக்கப்படுவேன். நிறைவேறும்போது நான் தீர்க்கதரிசியாக மதிக்கப்படுவேன்!”

இந்தியா என்பது அதன் பன்மைத்துவத்தால் உருவானது. இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டென்றால், அது அதன் பன்மைத்துவத்தாலேயே சாத்தியம். ஆக, சாவர்க்கர் என்றும் நிச்சயம் பகல் கனவு கண்டவராகத்தான் வரலாற்றில் நிலைத்திருப்பார் என்பது என்னுடைய எண்ணம். நான் மட்டும் இல்லை; பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் காக்க நினைக்கும் எவரும் இப்படியே கருதுவார்கள்!

(நிறைந்தது)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Abdul Kareem   3 years ago

அடுத்து கோட்ஸே எனும் மாமனிதரை பற்றி எழுதுங்கள். ஏனென்றால் சாவர்க்கருக்கு பிறகு புனித படுத்த வேண்டியவர் அவர்தான்! இதனை அருஞ்சொல் செய்யும் என நான் எதிர்பார்க்கவில்லை. கிருஷ்ணன் யார் என்று தெரியும். இப்போ சமசும் யார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

S.Neelakantan   3 years ago

நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கும் அருமையான பதிவு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

pattabiraman   3 years ago

5 நாட்கள் தொடராக 6000 வார்த்தைகளில் எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் அவர்கள் சாவர்க்கர் குறித்த பிழிவை தந்துள்ளார். விக்ரம் சம்பத்தின் புத்தகங்களே 1200 பக்கங்கள் கொண்டவை. அதிலிருந்து இவ்வளவு சுருக்கமான extract பெரும் உழைப்பை கோரியிருக்கும். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் படித்து உள்வாங்கவேண்டிய- எதிர்வினையும் தரவேண்டிய தூண்டலை அருஞ்சொல்லும் கிருஷ்ணன் அவர்களும் செய்துள்ளனர்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தனிச் சுடுகாடுநினைவுச் சின்னங்கள்மூச்சுத்திணறல்பிரபாகரன்ஒன்றியப் பட்டியல்நியாயப் பத்திராகா.ராஜன்தொழிற்கல்விதேசிய மக்கள்தொகைப் பதிவேடு ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடபிள்ளைகளைச் சிதைக்கும் வன்முறை ஒழியட்டும்ஏற்றுமதிசாவர்க்கர் அந்தமான் சிறைரோமப் பேரரசுமங்கோலிய இனத்தவர்மனப்பான்மைவன்முறைகோடைப் பருவம்குஹா கட்டுரை மொழிபெயர்ப்புமேற்குத் தமிழகம்கம்பராமாயணம்எம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டுபிரெஞ்சுமதுரைதாங்கினிக்கா ஏரிகேசிஆர்சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ்பெண் அடிமைத்தனம்ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமைபண்பாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!