கட்டுரை, அரசியல், ஆளுமைகள், புத்தகங்கள் 3 நிமிட வாசிப்பு
உம்மன் சாண்டி: சில சுவாரஸ்ய கதைகள்
கேரளத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி சமீபத்தில் மறைந்தார். எளிமைக்குப் பேர் போன உம்மன் சாண்டியைப் பற்றி ஏராளமான சுவாரஸ்யக் கதைகள் கேரளத்தில் உண்டு. அப்படி ஒரு சிறு நூலின் மொழிபெயர்ப்புதான் ‘ஓ.சி. என்ற சி.எம்.’ மலையாளத்தில் ‘குஞ்சுஞ்சு கதைகள்’ என்ற தலைப்பில் பி.டி.சாக்கோ எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு இது; ஜி.வி.ரமேஷ் குமார் மொழிபெயர்த்திருக்கிறார். 80 பக்கங்களைக் கொண்ட இந்நூலில், உம்மன் சாண்டியின் வாழ்வில் நடந்த 26 சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன. நூலிலிருந்து இரண்டு கதைகளை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.
ஜனாதிபதிக்கு ஒரு போன்
உம்மன் சாண்டி சொந்தமாக அலைபேசி வைத்திருக்க மாட்டார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான்.
உம்மன் சாண்டியை யாராவது தொடர்புகொள்ள வேண்டும் என்றால், அவரது அலுவலகம் அல்லது வீட்டு தொலைபேசிக்குத்தான் அழைக்க வேண்டும்; அழைத்தால் அவரே எடுத்துப் பேசுவார். உள்ளூர் சாக்கடைப் பிரச்சினை முதல், உலக அரசியல் வரை பொதுமக்கள் முதல்வரிடம் கூறுவார்கள்.
இதனால் அவர் பல அபத்தங்களையும் சந்தித்து தர்மசங்கடத்தால் தவித்தது தனிக்கதை. சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் என்பவர், 'நான் முதல்வர் வீட்டு தொலைபேசியில், முதல்வரிடம் பேசியுள்ளேன்' என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
உம்மன் சாண்டி வெளியூர் சுற்றுப்பயணம் செல்லும்போது, அதிகாரிகளும், அமைச்சர்களும் அவரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் அவரது காரில், யார் உடன் செல்கிறார்கள் என்று விசாரிப்பார்கள். முதல்வர் காரில், அவர் மட்டும்தான் இருப்பார் என நினைக்க வேண்டாம். முன் சீட்டில் பாதுகாப்பு போலீஸ்காரர். பின் சீட்டில் முதல்வர், அருகில் அமைச்சர் அல்லது அதிகாரி, பின்னால் உதவியாளர்கள் என கார் நிறைந்து செல்லும். சமயத்தில் உம்மன் சாண்டிக்குத் தொலைபேச விழைபவர்கள் இப்படி அவர் அருகில் இருப்பவர்களுடைய செல்பேசிக்குத் தொடர்புகொண்டும் அவரிடம் பேசுவது உண்டு.
ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்தபோது கேரளாவிற்கு வந்திருந்தார். அவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து, கோட்டயத்திற்கு ஹெலிகாப்டரில் முதல்வர் உம்மன் சாண்டியும் சென்றிருந்தார்.
இந்தச் சூழலில் அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் இருந்து, முதல்வரின் தனிச் செயலருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஒரு பொதுஜனம்.
'குஞ்சுஞ்சு இருக்காரா?' (உம்மன்சாண்டியின் வீட்டில் அவரது செல்லப்பெயர் குஞ்சூஞ்சு. எனவே, சொந்த ஊர்க்காரர்கள் இப்படித்தான் அழைப்பர்).
“இல்லையே. முதல்வர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்!”
“அடடே... கூட யார் இருக்கிறார்?”
“ஜனாதிபதி!”
“அவர் மட்டும்தானா?”
“ஆமாம்...”
“அப்படி என்றால் ஜனாதிபதியின் அலைபேசி எண் தாருங்களேன்; நான் அவசரமாக குஞ்சூஞ்சுவிடம் பேச வேண்டும்”
வாயடைத்து போனார் முதல்வரின் தனிச் செயலர்.

¶
நான் அவன் அல்ல
உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது அவரது அலுவலக அறையானது இணையதளத்தில் பார்க்கும் சூழலில் இருந்தது. அப்படித்தான் ஒரு காலைப்பொழுதில் முதல்வர் நாற்காலியில், யாரோ ஒருவர் அமர்ந்து இருந்தார். இதைக் கவனித்து அறைக்குள் சென்றார்கள் அலுவலர்கள்.
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ‘இன்டர்காமில்’ அமைச்சர் பாபுவை அழைக்க, பாதுகாவலர்கள் வேகமாக ஓடிவந்து திடீர் முதல்வரைப் பிடித்துவிட்டனர். அந்த சமயம் பக்கத்து அறையில் இருந்த முதல்வர் உம்மன் சாண்டியும் வந்துவிட்டார்.
“யார் நீங்கள்?” - முதல்வர் கேட்டார்.
“நான் பிரதமர்!” - இப்படிச் சொன்னார் அவர் கூலாக!
பதற்றமும், கோபமும் அடையாத முதல்வர் உம்மன் சாண்டி கிண்டலாக “ஓ பிரதமரா..? பிரதமர் முன் முதல்வர் சாதாரணம்தான்” என்று சிரித்தபடி கூறியதோடு, அந்த நபர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்ய வேண்டாம் என போலீஸிற்கு உத்தரவிட்டார்.
‘பிரதமர்’ அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் தமாஷாக கூறி, பாதுகாப்புக் குளறுபடி பிரச்சினையை சாதாரண பிரச்சினை ஆக்கினார் சாண்டி. ஆனால், பாதுகாப்பு ஏற்பாட்டில் பெரும் குளறுபடி என்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் விமர்சித்தார்.
சில நாட்களுக்கு பிறகு, திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் போராட்டம் நடத்தியது. அதில் அச்சுதானந்தன் பேச அழைக்கப்பட்டார். அவர் எழுந்து வருவதற்குள் இன்னொருவர் ‘நான்தான் அச்சுதானந்தன்’ என்று மைக் பிடித்தார்.
எல்லோரும் ஆச்சரியமாக பார்க்க, அவர் வேறு யாருமல்ல... நமது ‘பிரதமர்’தான். அன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர். எங்கு எல்லாமோ சுற்றிக்கொண்டு இங்கும் வந்துவிட்டார்.
இப்போ அச்சுதானந்தன் என்ன செய்வார் எனக் கேட்டனர் சாண்டி ஆதரவாளர்கள்!
நூல் விவரம்
ஓ.சி. என்ற சி.எம்.
குஞ்சூச்சூ கதைகள் - பிடி. சாக்கோ
தமிழில்: ஜி.வி.ரமேஷ் குமார்
விலை ரூ.50
தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
நூலை வாங்க வாட்ஸப் எண்: 75500 09565
தமிழில்: ஜி.வி.ரமேஷ் குமார்

4






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.


வ.ரங்காசாரி
ஆசிரியர்
கௌதம் பாட்டியா
பி.ஆர்.அம்பேத்கர்
சி.என்.அண்ணாதுரை
ஞான. அலாய்சியஸ்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சமஸ் | Samas
			
							
Be the first person to add a comment.