கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்

மனுராஜ் சண்முகசுந்தரம்
04 Aug 2022, 5:00 am
2

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்படிக் குறுக்கீடு செய்வது வழக்கமாகிவிட்டிருக்கும் சூழலில் ஆர்.என்.ரவி முன்வைத்திருக்கும் கருத்துகளின் நிறைகுறைகளையும் உண்மைத்தன்மையையும் கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில், இந்தக் கூற்றுகள் இந்தியா குறித்து நன்கு நிறுவப்பட்ட கருத்தாக்கத்தையே மாற்றியமைக்கக் கூடியவை. 

மொழி அடிப்படையும் இன அடிப்படையும் வேலூர் சிப்பாய் எழுச்சி நாள் விழாவிலும் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழா ஒன்றிலும் ஆளுநர் முன்வைத்த இந்தக் கருத்துகளை வரலாறு மறுப்புவாதம் என்றுதான் கூற வேண்டும். ஆரியர்கள் குடியேற்றம் என்ற கோட்பாட்டைக் கடந்த காலத்தில் பல்வேறு தலைவர்கள் கடுமையாக மறுத்திருக்கிறார்கள்; ஆரிய - திராவிடப் பிரிவினை என்பதற்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டினார்கள். கடுமையாகச் சர்ச்சிக்கப்படும் இந்த சித்தாந்தக் களத்தில் காலடி எடுத்து வைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் விவாதங்களை ஆளுநர் உசுப்பிவிட முயன்றிருக்கிறார்.     

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது போன்ற கூற்றுகளை முன்வைத்த முதல் நபர் ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல. ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது இடம் சார்ந்த வரையறை என்று 'சிந்தனைக் கொத்து' என்ற தனது புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிடுவதன் மூலம், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகள் என்று நிறுவ கோல்வால்கர் முயன்றார். இதற்கு, ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பாடு’ (Out of India theory) என்று பெயர். இந்தக் கோட்பாட்டைப் பெரும்பாலான அறிஞர்கள் புறந்தள்ளிவிட்டனர்.

ஆயினும், அப்போது கோல்வால்கரும் தற்போது ஆர்.என்.ரவியும் முன்வைத்த கருத்துகளை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் அந்தக் கருத்துகளுக்கு வலுவான அறிவுலக ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம் அல்ல; அவை இந்தியா என்ற கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கக் கூடியவை என்பதால்தான் அவற்றை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு பூர்வகுடிகளின் செழுமையான, பன்மையான வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. இந்த வரலாறானது மொழியியல், தொன்மவியல், நாட்டாரியல், மானுடவியல், தொல்லியல், மண்ணியல், பிரபஞ்ச வரலாறு, மரபணுவியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளால் நிறுவப்பட்டிருக்கிறது. மேற்கண்ட கல்வித் துறை ஆய்வுகளின் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்டவை) தனித்தன்மையை மொழியியல் ஆய்வுகள் நிறுவியிருக்கின்றன.        

ராபர்ட் கால்டுவெல், ‘திராவிட ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பம்’  (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages - 1856) என்ற தனது மிக முக்கியமான நூலில் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல என்பதற்கு ஆதாரங்களை வழங்கியிருக்கிறார். மொழியியல் தொடர்பான இந்தக் கண்டறிதல் ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. இதன் தொடர்ச்சியாக தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பிறந்தது. அது, சமூகநீதியால் உந்தப்பட்ட பகுத்தறிவுவாதத்தின் அடிப்படையிலான அரசியல் விழிப்புணர்வுக் கலாச்சாரத்துக்கு வழிவகுத்தது.

அயோத்திதாச பண்டிதர், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை போன்றவர்களும் பிற்காலத்தில் ‘நீதிக் கட்சி’ தலைவர்களான டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் போன்றவர்களும் பிராமணர் அல்லாதோருக்கான விடுதலைக்காக சமூக-அரசியல் அறைகூவலை விடுத்தனர். ஒட்டுமொத்தமாக இந்தச் சூழல்தான் பிற்பாடு, 1916 நவம்பர் 20 அன்று மெட்ராஸ் நகரத்தின் விக்டோரியா அரங்கில் நடந்த கூட்டத்தில் முறைப்படி உருவெடுத்த திராவிட இயக்கத்துக்கான விதைகளை விதைத்தது.  ‘ஆரியர்களுக்கு முந்தைய தமிழ் கலாச்சாரம்’ (Pre-Aryan Tamil Culture - 1985) என்ற தனது புத்தகத்தில் பி.டி.சீனிவாச ஐயங்கர் சங்க இலக்கியத்தைக் கொண்டு திராவிடக் கலாச்சாரத்தின் இருப்பை தெளிவாக நிறுவுகிறார்.      

தொல்லியல் சான்றுகள்

ஆரியர்களுக்கு முன்பே தங்களுக்கென்றொரு பண்பாட்டு மரபையும் தனித்தன்மை கொண்ட செம்மையான இலக்கிய மரபையும் கொண்டிருந்த தனித்த இனம் இருந்தது என்பது 1920களின் தொடக்கத்தில் ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளால் வலுவாக நிறுவப்பட்டிருக்கிறது. இதைத் தமிழ்நாட்டில், கீழடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அகழாய்வுகளில் கிடைக்கும் உயிர்மப்பொருட்கள் பலவும் எளிதில் அழிந்துபடக் கூடியவை. அவற்றைக் கையாள்வதில் நவீன வழிமுறைகள் பெரிதும் முன்னேறியிருக்கின்றன. கூடவே, அதிக அளவிலான மரபணு வரிசைப்படுத்தல் தொழில்நுட்பம். இந்தியத் துணைக் கண்டத்தில் அலையலையான குடியேற்றங்கள் எப்படி ஏற்பட்டன என்பதை இவற்றைக் கொண்டு நாம் தற்போது புரிந்துகொள்கிறோம்.     

நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றின் போக்கில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களை மேற்கண்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 2018இல் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 92 அறிவியலர்கள் சேர்ந்து எழுதிய ‘தெற்காசியாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் மரபணுத் தொகுப்பமைப்பு’ (The Genomic Formation of South and Central Asia) என்ற ஆய்வுக் கட்டுரை வெளியானது.

இந்தியத் துணைக் கண்டத்தில் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதை மேற்கண்ட கட்டுரையும் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளும் சிந்து வெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று உறுதிப்படுத்தியதோடு ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தில் என்று கால அளவையும் குறுக்கின.  

பொய்யென்று நிரூபிக்கப்பட்ட கோட்பாடு

திராவிடர்களும் ஆரியர்களும் ஒரே இனத்தவர்கள்தான், ஆனால் புவியியல்ரீதியில் வேறுபட்டவர்கள் என்று கூறுமொரு பரந்த கதையாடலின் ஒரு பகுதியாக இருக்கும் ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பா’ட்டை சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் பொய்யென்று தூக்கியெறிந்திருக்கின்றன. ஹரப்பா மக்களின் மொழி திராவிட மொழியாகவோ / பூர்வ-திராவிட மொழியாகவோ இருந்திருக்கக்கூடும் என்று கூறும் ஆய்வுகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சிந்து வெளி நாகரிகத்துக்கு ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பெயரிடுதல், புராணங்களில் வரும் சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க முயலுதல் போன்ற காரியங்களில் சமீபத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கும் கோல்வால்கரின் தொண்டர்களுக்கு மேற்கண்ட ஆய்வு முடிவுகள் தீவிர சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆகவேதான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான அண்ணா இதுபோன்ற அடிப்படையற்ற கருத்துகள் குறித்து தனது ‘ஆரிய மாயை’ என்ற புத்தகத்தில் அப்போதே எழுதியிருப்பார்.     

மூடநம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் போலி வரலாறுகளுக்கும் எதிரான ஒரு சமூக - அரசியல் சொல்லாடலைப்  பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றி அண்ணா கட்டமைத்தார். கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களின் சமூகக் கோட்பாடுகளுடன் அறிவுப் புலத்துக்கே உரிய தீவிரம், அறிவியல் மனப்போக்கு, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றைச் சேர்த்து வலுப்படுத்தினார்கள்.

இவையெல்லாம்தான் திராவிட இயக்க அரசியலின் அளவுகோல்களாயின. திமுகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையில் அரசியல்ரீதியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்போதுகூட அவற்றின் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் அடிப்படை விழுமியங்கள் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையிலிருந்தும் சாதியச் சமூகத்தின் மீதான எதிர்ப்பிலிருந்தும் விலகிவிடவில்லை.

திராவிட மாதிரி

ஆகவேதான், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வேரோடு களைவதிலும் எல்லோரும் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற வகையிலான நியாயமான சூழலை உருவாக்குவதிலும் மாநில அரசின் பங்களிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்; அதற்கு ‘திராவிட மாதிரி’ என்று பெயரிட்டிருக்கிறார். ‘டிரவிடியன் மாடல்’ (Dravidian Model) என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆளுநருக்குத் தமிழ்நாடு முதல்வர் பரிசளித்தார் என்பதும் உண்மையே. பொருளியலர்கள் ஏ.கலையரசனும் எம்.விஜயபாஸ்கரும் இணைந்து எழுதிய அந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் நவீன அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான, கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையிலான விளக்கத்தைத் தருகிறது.   

மேலே குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களைப் போல இன்னும் இந்தியாவின் மொழிகள் அலையலையான குடியேற்றங்களால் எப்படி மாற்றமடைந்திருக்கின்றன என்பதைப் பற்றியும், இந்தியாவைப் பல்வேறு தோற்றுவாய்களைக் கொண்ட நாகரிகச் சமுதாயமாக மாற்றும் வகையில் பல்வேறு சமூக இயக்கங்கள் தோன்றி, வெவ்வேறு மொழிகளில் சமூக விடுதலை சித்தாந்தங்களை எப்படிப் பேசின என்பதைப் பற்றியும் துல்லியமான ஆதாரங்களுடன் பதிவுசெய்யும் வெவ்வேறு புத்தகங்களை தமிழ்நாட்டில் தன் பதவிக்காலத்தின் மிச்சமுள்ள நாட்களில் ஆர்.என்.ரவி எதிர்கொள்ள நேரலாம்.

இவற்றைத் தவிர ஆளுநர் எதிர்கொள்ள நேரிடும் எந்தக் கோட்பாடும் சந்தேகத்துடனே பார்க்கப்பட வேண்டும். அதற்கு, ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார்கள் என்பதற்காகக் கிடைக்கும் ஏராளமான சான்றுகள் துணை நிற்கும்.

 

 

மனுராஜ் சண்முகசுந்தரம்

மனுராஜ் சண்முகசுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். திமுகவின் செய்தித் தொடர்பாளர். தொடர்புக்கு: manu.sundaram@gmail.com

தமிழில்: வி.பி.சோமசுந்தரம்

2


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saaliyan   10 months ago

ஆரிய மாயைகள் மாதிரி திராவிட மாயைகளும் உண்டு. 1871 இல் சென்னை மாகாணத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பில், தமிழ் மொழி பேசுவோர் வெறும் ஒரு கோடியே 47 லட்சம் பேர். அப்படியே பின்னோக்கி போனால் சங்க காலத்தில், தென்னிந்தியாவில், தமிழ் பேசுவோர் பத்து லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் தான் இருந்திருக்க முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது சங்க காலத்தில், மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்த சில லட்சம் தமிழ் மக்களின் மூதாதையர்கள் யார், எங்கெங்கிருந்து வந்திருப்பார்கள், அந்த காலகட்டத்தில் இவர்களுக்கு என்னவெல்லாம் சாத்தியப்பட்டிருக்கும் அல்லது சாத்தியப்பட்டிருக்காது என்பதை நேர்மையாக யோசிக்க வேண்டும். இதை எந்த திராவிட வாதியும் இப்போது புதிதாக முளைத்திருக்கும் தமிழ்வாதிகளும் செய்தது கிடையாது. பிலிப் ஸ்க்லேட்டர் என்னும் பறவையியல் அறிஞரால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக சொல்லப்பட்டு பின்னர் வந்த அறிஞர்களால் மறுக்கப்பட்ட லெமூரியா கண்டம் என்னும் hypothesis ஐ இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் இவர்கள் எந்த அளவுக்கு அறிவியல் ஆராய்ச்சி உலகத்தில் இருந்து அன்னியப்பட்டும் பின்தங்கியும் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதை தேவநேயப் பாவாணர் என்னும் அரைகுறை தமிழ் அறிஞர் குமரிக்கண்டம் என சொல்லி தொங்கிக் கொண்டிருந்தார். இன்று ஒரிசா பாலு, மன்னர் மன்னன், பாரிசாலன் தொடங்கி சீமான் வரையான இவர்களும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தெலுங்கு, கன்னடம், துளு ஆகியன தமிழுக்கு சேய் மொழிகள் இல்லை. மாறாக அவையும் தமிழ் போல தொல் திராவிட மொழியில் இருந்து பிறந்த சகோதர மொழிகள் என்னும் உண்மையை பாடப்புத்தகத்தில் காணும் போது இவர்களுக்கும் இவர்கள் முன்வைக்கும் அரசியலுக்கும் கசப்பாக கசக்கிறது. சமஸ்கிருத மொழியின் ஆதி வடிவம் மத்திய ஆசியாவில் இருந்து வந்தது தான். சிந்து சமவெளி நாகரிக மக்கள் சமஸ்கிருதம் அல்லாத வேறொரு மொழியை பேசினார்கள் என்பதும் தீவிர ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் இன்னொரு உண்மை. ஆனால் சமஸ்கிருதம் அதன் ஆரம்ப வடிவத்தோடு இந்திய துணை கண்டத்துக்குள் நுழைந்தது 3500 ஆண்டுகளுக்கு முன்னர். அப்போது உலகில் வரையறுக்கப்பட்ட நாடுகள் இருந்திருக்குமா என்பதே ஐயம். நாகரீகங்கள் தான் இருந்தன. இந்த 3000 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமஸ்கிருதம் அதன் ஆதி வடிவத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய துணை கண்டத்தில் தான் கடந்த 3000 ஆண்டுகளில் கண்டது. மருத்துவம், பொறியியல் என துறை சார்ந்த கல்வி இப்போது ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது போல் அப்போது சமஸ்கிருதத்தில் துறை சார்ந்த நூல்கள் எழுதி வைக்கப்பட்டு உயர் வகுப்பினருக்கு கற்பிக்கப்பட்டன. நாளந்தா, தட்சசீலம், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு சமஸ்கிருத மொழியில் தான் சிற்ப சாஸ்திரம் கணிதம் ஆயுர்வேதம் தத்துவம் முதலிய துறை சார்ந்த கல்வி உலகம் பூராவும் இருந்து வந்த மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதை அந்நிய மொழி என சொல்வது மிகப்பெரிய நகைச்சுவையாக தான் தீவிர ஆய்வாளர்களால் பார்க்கப்படும். இந்த முட்டாள்தனத்தை தான் சாதியத்தை எதிர்ப்பதாகவும் வர்ணாசிரமத்தை கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் சொல்லிக் கொள்ளும் திராவிடவாதிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழ் மொழி கடந்த மூன்று ஆயிரம் ஆண்டு காலம் வட்டார மொழியாகவே இருந்து வந்திருக்கிறது. இதில் துறை சார்ந்த நூல்கள் எழுதி வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. சித்த மருத்துவம் முதலிய ஓரிரு துறைகள் விதிவிலக்கு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பெருமை உண்டு. தமிழுக்கு அதன் பழமை தான் பெருமை எனில் ஹிந்திக்கு நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவான நவீன மொழி என்னும் பெருமை. ஆனால் ஒரு மொழியின் சிறப்பு என்பது அதில் எவ்வளவு சாதனைகள், எத்தகைய சாதனைகள் பதிவாகியுள்ளன என்பதை பொறுத்து தான். அந்த வகையில், உலகின் சிறந்த மொழி ஆங்கிலம் என உறுதியாக கூறலாம்.

Reply 0 3

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   10 months ago

A good reply to the overtures of Shri R.N.Ravi, the Governor of Tamil Nadu on the issue of origin of Aryans.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசுப் பள்ளிகள்ராமச்சந்திர குஹா கட்டுரைகள்முதல்வர்கள்கருணாநிதி சண்முகநாதன்உள் மூலம்கார்போஹைட்ரேட்பின்லாந்து கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணிதகவல்கள்உள்ளாட்சி அமைப்புசி.பி.எம்.அருஞ்சொல் ஹிஜாப்மத்திய பட்ஜெட்திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைமாநில நிதிநிலை அறிக்கைமாலி அல்மெய்டாஅருஞ்சொல் ஆசிரியர் சமஸ் பேட்டிபெண் கைதிகள்இரட்டைக் காளை சின்னம்மகுடேசுவரன் கட்டுரைஅரசமைப்புச் சட்டத் திருத்தம்மிகைல் கொர்பசெவ்ஜக்கி வாசுதேவ்ஜனசக்திவேலைசைபர் வில்லன்கள்ஓணம்சமஸ் அருஞ்சொல் ஜெயமோகன்விமர்சனங்கள்அண்ணாமலை அதிரடிபனியாக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!