கட்டுரை, வரலாறு, மொழி 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடா - தமிழகமா?

மகுடேசுவரன்
24 Jan 2023, 5:00 am
2

வ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேர மன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச் சேரலம் என்ற சொல்லே பிற்காலத்தில் திரிபடைந்து ‘கேரளம்’ ஆயிற்று.

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு பெயரின் ஈற்று மெய்யையும் அகற்றி அவர்களுடையே மொழிக்கேற்ப வழங்கினார்கள். ராமன் (Raman) என்பதை ராமா (Rama) என்றதைப் போல கேரளத்தைக் ‘கேரளா’ என்று ஆக்கிவிட்டார்கள். அவர்களுடைய மொழி மலையாளம். ‘மலை ஆள்’ பயன்படுத்துகின்ற மொழி என்பதால் ‘மலையாளம்’. மலையாளம் பேசுபவன் மலையாளி.

கருநாடகம்

கருநாடகத்தின் பெயர்க்காரணம் என்ன?

முதலில் அது அகநாடு. அகம் என்றால் வாழ்விடம், நிலம், ஒன்றின் தனிச்செம்மை உயர்ந்து நிலைத்த இருப்பிடம். எதிர்ச்சொல்லைக் கொண்டு அதற்குரிய தெளிந்த பொருளை அடைய வேண்டும். புறம் என்றால் ஒட்டிக்கொண்டு வெளியிருப்பது. அகம் என்றால் நீங்காமல் உள்ளிருப்பது. அதனால் அகம் என்பதன் அழகிய பொருள் குறித்து நமக்குச் சிறிதும் ஐயம் வேண்டாம்.  

நாடு என்பது என்ன? நாடு என்பதும் இடம்தான். நிலம்தான். வாழ்வதற்கென்று, வணிகத்திற்கென்று மக்கள் நாடிவரும் சிறந்த பகுதி நாடு. நாட்டிற்கென்று தனித்தனியே அரண்கள் இருக்கும். கலை, பாட்டு, இசை, கூத்து, உணவு, விளைபொருள், பேச்சு என யாவும் தனித்த ஒன்றாகவும் இருக்கலாம். நாடு பேருறுப்பு. அதனில் ஊர் சிற்றுறுப்பு. நாடும் ஊருமாய் விளங்குபவை நம்முடைய பண்டைப் பெரும்பரப்பு. ஓரியல்பு பெருகிச் சிறக்குமிடம் நாடு. இதனையும் எதிர்ச்சொல் கொண்டு உணரப் புகுந்தால் நாடு - காடு. காட்டில் உள்ள எத்தகைய கடினங்களும் நாட்டில் இருப்பதில்லை. கொல்லுயிர்த் தொல்லை இல்லை. காவல் உண்டு. காவலன் உள்ளான். வாழ்வு சிறக்க வழியுண்டு. நாடு என்பது வாழ்விடச் செம்மை வளர்ந்தோங்கிய இடம்.

கருமை என்பதற்கு வளம் என்றும் ஒரு பொருளுண்டு. பயிர் நன்கு வளர்ந்திருப்பதை இன்றும் ஊர்ப்புறத்தில் எப்படிச் சொல்கிறார்கள்? ‘பயிரு நல்லாக் கருகருன்னு வளர்ந்திடுச்சு’ என்பார்கள். கருமையை அகத்தேகொண்ட நாடு. கருமை அகம் நாடு.

இலக்கணப்போலி என்று கேள்வியுற்றிருப்பீர்கள். ஒரு சொல் இலக்கணப்படி எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு மாறாகவும் அதே இலக்கணத்தன்மையோடு அமைந்திருப்பதுதான் அது. இல்முன் என்பது முன்றில் என்று மாறுவது. நகர்ப்புறம் என்பது புறநகர் என்றாவது. அகநாடு என்பது நாடு அகம் = நாடகம் என்று மாறுவது. இப்போது பாருங்கள் கரு அகநாடு, கருநாடகம். அச்சொல் தோன்றிய இலக்கண வழி முற்றிலும் தமிழுக்குரியது. கருநாடகம் என்பது தூய தமிழ்ச் சொல்லும்கூட.

ஆந்திரம்

ஆந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ஆந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தேடிய வகையில் எனக்கு இரண்டு பொருள்கள் கிடைத்தன. ஒன்று குடல். இன்னொன்று தெலுங்கு. தெலுங்கிற்கு இன்னொரு பெயர் ஆந்திரம். பிரதேசம் வடசொல். அதற்கும் நாடு என்றே பொருள் கொள்ளலாம். தேயம் என்பது தூய தமிழ்ச்சொல். அதுவே தேசம் ஆயிற்று. அச்சொல் இருமொழிகளிலும் பயில்கிறது. ஆந்திர பிரதேசம் = தெலுங்கு நாடு.

தமிழ்நாடு

இனித் தமிழ்நாட்டிற்கு வருவோம். பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையாகக் கரும்பெண்ணை (கிருட்டிணை) ஆறுவரைக்கும் விரிக்கலாம். தமிழ்நாடு, தமிழகம், தமிழ்கூறு நல்லுலகு என எல்லாம் தமிழ் நிலத்தைக் குறிப்பதாக ஆயின. இலக்கிய ஆட்சியுடையன.

மூவேந்தர்கள் எனப்படுவோர் தமக்கென்று நாடு உடையவர்கள். சேரர் ஆண்டதால் சேரநாடு. சோழர் ஆண்டதால் சோழநாடு. பாண்டியர் ஆண்டது பாண்டியநாடு. தொண்டைமான்கள் ஆண்டது தொண்டைநாடு. கொங்குவேளிர் ஆண்டது கொங்குநாடு. பல்லவர் ஆண்டது பல்லவ நாடு.

பழந்தமிழகத்தில் ஊரும் நாடும் முதல் அடையாளங்கள். ஒருவன் இன்ன ஊரன், இன்ன நாடன் என்பதே அவனுடைய சிறப்பைக் கூறும். குடிகளும் புலவர்களும் இன்ன ஊரன், இன்ன நாடன் என்று அறியப்படுவர். இதனால் மன்னனும் தன் தலைநகரத்தின் பெயரால், சிறந்து விளங்கும் நகரங்களின் பெயரால் இன்ன ஊரன் என்று புகழப்படுவான். இன்ன நாடன் என்று மன்னன் புகழப்படுதலும் உண்டு.

மலைகளால் ஆன நாட்டின் அரசன் என்பதால் மலைநாடன் எனப்பட்டான் சேரன். காவிரியால் வளங்கொழித்தமையால், வெள்ளம் பெருகியமையால் வளநாடன், புனல்நாடன் எனப்பட்டான் சோழன். அதனால்தான் சோழர்களின் பெயரில் வளவன் என்று இருக்கும். பாண்டியன் எத்தகைய நாடனாக அறியப்பட்டான் தெரியுமா? பாண்டியன் தென்னாடன். பாண்டியனைக் குறிக்கும் இன்னொரு பெயர் தமிழ்நாடன். ஏனென்றால், பாண்டிய மன்னனே தமிழுக்குச் சங்கம் வைத்து புலவர்களைப் புரந்து வாழ்ந்த மன்னன். பாண்டியனோடு மட்டுமே அப்புகழ்ச்சி நின்றுவிட்டதா என்று பார்த்தால் ‘மூவருலா’வில் சோழ மன்னனையும் ‘கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன்’ என்று புகழ்கின்றார் ஒட்டக்கூத்தர். அதனால் தமிழ்நாடன் என்ற பெயர் மூவேந்தர்க்கும் உரிய புகழ்ச்சிப் பெயராகிறது.

தமிழ்நாடா, தமிழகமா என்று பார்த்தால் பரிபாடல் திரட்டின் எட்டாம் பாடல் தெளிவான சான்றினைத் தருகிறது. ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகத்தின்’ என்று கூறுகிறது அப்பாடல். தமிழை வேலியாகக்கொண்ட இந்த நிலப்பரப்பு தமிழ்நாடுதான்.

கருநாடகத்தைப் போல ‘தமிழ் அகநாடு அதாவது தமிழக நாடு’ என்று சொல்ல முடியுமா? அதற்கான பொருள்தேவையோ புகழ்ச்சித் தேவையோ எழவில்லை. ஆனால், ‘தமிழ்நாட்டு அகம்’ என்று மேற்சொன்ன பாடலே சொல்கிறது. எனவே, ‘தமிழ்நாடு’ என்பதே வலிமையான முதலொட்டு. தமிழகம் என்ற சொல் தமிழ்விளங்கும் பாரளாவிய நிலங்கள் வரைக்கும் பாயட்டும். இங்கே தமிழ்நாடு என்பதே மாநிலப் பெயராய் விளங்கட்டும். இம்மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்பதனைவிடவும் சிறந்த பெயர் வேறில்லை. 

 

தொடர்புடைய கட்டுரை

தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மகுடேசுவரன்

மகுடேஸ்வரன், கவிஞர்.


2

3

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   1 year ago

Fascinating article 💯

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

தமிழ்நாடு பெயர் பிரச்சினை சார்ந்தெழும் உணர்வெழுச்சியில் சிறு பங்குகூட இன்னொரு முக்கியமான பிரச்சினையில் எழவில்லை. ஆயிரக்கணக்கான ஊர்களின் தமிழ்ப்பெயர்களை கூகிள் மேப்ஸ் சிதைத்து வைத்திருக்கிறது. மணிகட்ட வல்லார் யார்? அரசாங்க ரீதியான அழுத்தம் இருந்தால் இரண்டு நாட்களில் முடிந்துவிடவேண்டிய வேலையை ஏஐ, என்செம்பிள், இந்தியா முழுமைக்கான தீர்வு என்று ஏதாவது சொல்லி ஆண்டாண்டு காலமாக இழுத்தடிக்கிறார்கள். நம் ஊர்களின் பெயர்கள் தன்னியல்பாக அன்றி நமது அலட்சியம் காரணமாக என்றென்றைக்குமாக மாற்றப்படுகின்றன.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தான்சானியா: அரசியலும்அம்பானி ரிலையன்ஸ்அடுக்ககம்அ.குமரேசன்சாருசாம்பவா பழங்குடியினர்தேசிய புள்ளிவிவரம்ஜார்கண்ட் சட்டமன்றம்டேவிட்சன் தேவாசீர்வாதம்ஓப்பன்ஹைமர்பொருளாதார அமைப்புஉழவர்எழுத்துச் சீர்திருத்தம்மக்கள் மொழிசீமாறுஐரோப்பாashok vardhan shetty ias interviewதமிழ் முனைஅரசியல் மாற்றம்மொழியும் பிம்பங்களும்பாரத் நியாய் யாத்திரைஅக்கறையுள்ள கேள்விகள்அருவிமத்திய உள்துறைச் செயலர்ராமச்சந்திர குஹாஅருஞ்சொல் ப.சிதம்பரம் பேட்டிஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்வதந்திகளும் திவால்களும்கணினிவிவிடி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!