கட்டுரை, உற்றுநோக்க ஒரு செய்தி 5 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் நலன்: அரசின் நோக்கம் நிறைவேறுமா?

எல்.ஆர்.சங்கர்
10 Mar 2022, 5:00 am
0

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்த பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி. ஏனென்றால், பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஏனைய அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுவோர்போல, பொருளாதாரப் பாதுகாப்பற்ற சூழலிலேயே இருக்கின்றனர். சமூகத்தில் மக்களுக்கும் ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே ஒரு பாலம்போல செயல்படும் பத்திரிகையாளர் சமூகத்தின் நலவுரிமையானது, சமூகத்துக்கான கடப்பாடும்கூட.

இத்தகு ஓர் ஏற்பாட்டுக்காக நீண்ட காலமாகப் பத்திரிகையாளர் சங்கங்கள் குரல் கொடுத்துவந்தன. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் அதற்குக் காது கொடுத்திருக்கிறது. தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில், இந்தப் பத்திரிகையாளர் நல வாரியம் செயல்படும் என்றதோடு இந்த வாரியத்துக்கு என்று ஒரு குழுவையும் அறிவித்தது.

குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் / துணைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகைத் துறை சார்ந்து சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (அதிபர், தினத்தந்தி குழுமம்), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தலைமை ஆசிரியர், தினகரன் நாளிதழ்), பி.கோலப்பன் (துணை ஆசிரியர், தி இந்து), எஸ்.கவாஸ்கர் (செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்), எம்.ரமேஷ் (சிறப்பு நிருபர், புதிய தலைமுறை தொலைக்காட்சி), லெட்சுமி சுப்பிரமணியன் (முதன்மை சிறப்பு நிருபர், தி வீக் செய்தி வார இதழ்) ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய அரசாணையின்படி, பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே இனி பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும். உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் இது கவனிக்கும்.

நிறைவு பெறாத குழு

உள்ளபடி அரசின் நோக்கம் சிறப்பானது. ஏனென்றால், வெறுமனே உழைக்கும் பத்திரிகையாளர்களை மட்டுமே கொண்ட குழுவானது குரல் கொடுக்க முடியுமே தவிர, ஆக்கபூர்வமான காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதில் பத்திரிகை அதிபர்களுக்கும் முக்கியமான ஓர் இடம் இருப்பது முக்கியம். அரசுத் தரப்பினரும் குழுவில் இடம்பெறுவது இதற்கு மேலும் வலு சேர்க்கும். அந்த வகையில் அரசு திட்டமிட்டிருக்கும் மூன்று தரப்புகள் என்பது நல்ல முடிவு; இந்த மூன்று தரப்புகளிலிருந்தும் சேர்க்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களுமேகூட உரிய கவனம் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரே பிரச்சினை என்னவென்றால், இந்த வாரியத்தில் மேலும் ஒரு தரப்பு கட்டாயம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்; அது பத்திரிகையாளர் சங்கத் தரப்பு. அந்த இடத்தை அரசு கவனிக்க தவறிவிட்டது. இது முக்கியமான விடுபடல் மட்டும் அல்ல; அரசின் நோக்கம் நிறைவேறுவதில் சுணக்கத்தையும் உண்டாக்கிவிடும். ஏனென்றால், பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து, பத்திரிகாதிபர்களுடனோ அரசுடனோ கொஞ்சம் உரிமையாகப் பேச முடியும் என்றால், சங்கத்தின் பிரதிநிதிகளால்தான் அது முடியும். ஏனென்றால், பத்திரிகையின் ஊழியர்களாக இங்கே குழுவுக்குள் வருபவர்கள் அடிப்படையில் தனிநபர்கள் – நிறுவனத்துக்குள் ஊழியர்கள். இதைத் தாண்டிய பின்பலம் அவர்களுக்கு இல்லை. ஆகையால், ஒரு அளவிற்கு மேலே அவர்களால் எந்த விஷயத்தையும் வலியுறுத்த முடியாது. இது குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்கள் சார்ந்த விமர்சனம் அல்ல; எவராக இருந்தாலும் இதுவே நிலை. மாறாக, பத்திரிகையாளர் சங்கங்களிலிருந்து ஒரு பிரதிநிதிக்குக் குழுவில் இடம் கொடுக்கப்பட்டால் – அவரும் ஒரு பத்திரிகையின் ஊழியர்தான் என்றாலும்கூட – அவருக்குப் பின் சங்கம் என்ற பலம் இருக்கும். அவரால் கொஞ்சம் வலியுறுத்திப் பேச முடியும்.

வரலாறு என்ன சொல்கிறது?

தன்னுடைய ஊழியர் தாக்கப்பட்டாலும், மௌனமாகக் கடக்கும் பத்திரிகைகள் இங்கே உண்டு. பத்திரிகையாளர்களுக்கு என்று இதுவரை எந்தப் பிரச்சினை என்றாலும், உடனே குரல் கொடுப்பவையும் அவர்களுக்காக கரங்களை நீட்டுபவையும் சங்கங்களே என்பதே வரலாறு. இந்தக் கள யதார்த்ததுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டும். ஆகையால், பத்திரிகையாளர் சங்கங்களிலிருந்து எவரேனும் ஒருவருக்கு இந்தக் குழுவில் இடம் கொடுப்பது முக்கியம். இது விடுபடல் பூர்த்திசெய்யப்பட்டால் மட்டுமே அரசின் நோக்கம் பூர்த்தியடையும்.

உள்ளபடியே அரசின் இந்த அறிவிப்பும், முன்னெடுப்பும் தமிழகப் பத்திரிகையாளர்கள் சார்ந்து மிக முக்கியமானவை. இந்தக் குறை களையப்பட்டால் அரசின் முன்னகர்வு முழுமை பெறும்!

 

எல்.ஆர்.சங்கர், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையின் சென்னை பதிப்பில் புகைப்படப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்யுஜே) தலைவர். இங்கே அவரது கருத்து சங்கத்தின் கருத்தைப் பிரதிபலிக்கிறது.

 

எல்.ஆர்.சங்கர்

எல்.ஆர்.சங்கர், புகைப்படக் கலைஞர்.1

அதிகம் வாசிக்கப்பட்டவை

மறைந்தது சமத்துவம் ஏன்?பெண்களின் அட்ராசிட்டிஅமில வீச்சுஜனநாயகப் பண்புஜேம்ஸ் பால்ட்வின் பேட்டிஇந்துவாக இறக்க மாட்டேன்தமிழ்த்தன்மைஅசோக் கெலாட் அருஞ்சொல்யூட்யூபர்கள்விவாதம்ஜாங் வெய்கல்லூரிதமிழ்ப் புத்தாண்டு அண்ணாகும்மிருட்டின் தனிமனம்தென்யா சுப்ஆரோக்கியம்ஜனநாயக மையவாதம்புலனாய்வு இதழாளர்இயற்கை வளங்கள்போர்ஹேஸ்பயன்பாடு மொழியாத்திரைஉழவர்சாதிப் பாகுபாடுகள்சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகாவல் நிலையம்பிசியோதெரபிகொச்சிமோர்பி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!