கட்டுரை, சட்டம், மொழி 5 நிமிட வாசிப்பு

உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்க என்ன வழி?

கே.சந்துரு
03 May 2022, 5:00 am
3

தில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் ஒலித்த குரல் நம் கவனத்தை ஈர்க்கிறது. பிரதமரும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இந்த மாநாட்டில் வலியுறுத்திய ஒரு கருத்து பரவலான கவனத்தைப் பெற்றது. ‘நீதிமன்றங்களில் உள்ளுர் மொழியைப் பயன்படுத்த வேண்டும்!’ என்பதை இருவருமே வலியுறுத்திப் பேசினர். வரவேற்புக்குரிய குரல் இது. ஆனால், இதுகுறித்து ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் இதுவரை எந்தப் பாதையில் பயணித்திருக்கிறார்கள்; எத்தகைய பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை நாம் பரிசீலிப்பது அவசியம்.  

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வேதநாயகம் பிள்ளை உள்ளுர் மொழியில் நீதிமன்றங்களில் நடக்காததைப் பற்றி விசனம் தெரிவித்தார்: 

கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங்கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவதுபோல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்?”

நீதிமன்ற மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அரசமைப்புச் சட்ட அவையில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் அலுவல் மொழி ஆங்கிலமாக இருப்பதை 15 வருடக் காலத்தில் மாற்றிவிட்டு இந்தியை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட 343ஆவது பிரிவில் கூறப்பட்டது. அதேசமயத்தில், நீதிமன்றங்களில் அலுவல் மொழியாகத் தொடர்ந்து ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்றே முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் மாநில மொழிகளைப் படிப்படியாக பயனுக்குக் கொண்டுவரும் வகையில் பிரிவு 348(2) உருவாக்கப்பட்டது. இச்சட்டப்பிரிவின் நோக்கம், நிறைவேற்றப்பட வேண்டியதற்கான காரணம் என்ன? மாநில மொழிகளும் உயர் நீதிமன்றங்களில் கூடுதல் அலுவல் மொழியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை அந்தந்த மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்பதும்தான்.

அப்படி மாநில மொழிகள் கூடுதல் அலுவல் மொழிகளாக உயர் நீதிமன்றங்களில் பயன்பாட்டிற்கு வருவது ஒருபக்கத்தில் ஆட்சி அமைப்பை ஜனநாயகப்படுத்துவதோடு, வழக்கு மன்றங்களில் நுகர்வோர் அல்லது வழக்காடிகள் வழக்குகளைப்  புரிந்துகொள்வதற்கும் பயன்படும். இதனால் எவ்வகையிலும் நீதிமன்றங்களில் ஆங்கிலப் பயன்பாடு குறைந்துவிடாது. தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டால் அதன் மொழிபெயர்ப்பு மாநில மொழிகளிலும் கிடைக்கும். வக்கீல்களும் தாரளமாக தங்களுடைய மாநில மொழிகளில் வாதாட முடியும்.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2)-ன் கீழ் ஓர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அலுவல் மொழியாக அந்தந்த மாநிலத்தின் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அம்மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன்ஒப்புதல் பெற்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இவ்விரு மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்களில் வக்கீல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதாடுவதற்குத் தடை இல்லை. மேலும், அவர்களது மாநில மொழிகளிலேயே வழக்கு மனுக்களை தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் வசதி உண்டு. ஒருவேளை உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை ஆங்கிலத்தில் பகிர நேர்ந்தால் அதனுடைய மொழிபெயர்ப்பை அந்தந்த மாநில மொழியில் மொழிபெயர்த்து நகல் வழங்க வேண்டும் என்றே சட்டம் உள்ளது. 

முதல் முறையாக 2006ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலிருந்த அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழையும் கூடுதல் அலுவல் மொழியாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதற்காக ஆளுநரை அணுகும் முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை அவர் கோரினார். தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்னிலையில் கூடிய அனைத்து நீதிபதிகள் கூட்டம் ஒருமனதாக அதற்கு ஆதவு அளித்தது.

உயா் நீதிமன்றத்தில் உடனடியாகத் தமிழைப் பயன்படுத்த பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தங்களது இசைவு தருவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தனர். தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்த மொழிபெயா்ப்பாளா்கள் அதிவிரைவு தமிழ்ச் சுருக்கெழுத்தாளா்கள் பல சட்டங்களுக்கு உடனடியாகத் தமிழ் மொழிபெயா்ப்புகள் தீர்ப்புகளை வெளியிட தமிழில் சட்ட சஞ்சிகை, கணிணி மென்பொருட்கள் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகள் வழங்க நீதிபதிகள் கோரினர். ஆனால், இதுநாள் வரை அப்படிப்பட்ட கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மாநில அரசு முன்வரவில்லை. 

தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்த ஒன்றிய அரசு, நாடாளுமன்ற  நடைமுறை அலுவல் விதிகளின்படி இக்கோரிக்கையைப் பற்றி கருத்து கூறுமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். அன்றைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இக்கோரிக்கைக்கு அனுமதி தர மறுத்துவிட்டார். இதற்கான காரணம் தற்போதைய நடைமுறையில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வேறு மாநிலத்திலிருந்து வருவதும், மேலும் பல நீதிபதிகள் ஊர் மாற்றத்தில் வேறு மாநிலங்களில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதும் என்று சொல்லப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இம்முடிவால் மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் உத்தரவு வழங்க ஆலோசனை தர மறுத்துவிட்டது. இதேபோல் மேற்கு வங்க மாநிலம் விடுத்த கோரிக்கையும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. 

அரசமைப்புச் சட்டம் மாநில மொழிகளின் வளர்ச்சியைக் கருதியதோடு, உள்ளுர் மக்களின் நலன் கருதி இப்படிப்பட்ட பிரிவைக் கொண்டிருப்பினும் மத்திய ஆட்சியில் உள்ளவர்களும், உச்ச நீதிமன்றமும் மக்கள் நலனுக்கு நேர் விரோதமாக செயல்படுவது வருத்தத்துக்கு உரியது. தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் பதவி வகித்தபோது, ‘நான் இதுகுறித்து முயற்சி எடுப்பேன்’ என்று கூறினார். ஆனால், பலன் ஏதும் கிட்டவில்லை. 

இப்படித் தொடர்ச்சியாக ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த மாநிலங்களில் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அலுவல் மொழியாக அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியைச் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதி மறுத்துக்கொண்டு வந்துள்ள பின்னணியில் பிரதமரும், தலைமை நீதிபதியும் அக்கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது வரவேற்புக்குரியது என்றாலும், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அரசமைப்புச் சட்டத்தில் ஒரு மாநில அரசு கூடுதல் அலுவல் மொழியை நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பதற்கு இடம் இல்லை. ஆனால், இப்பிரச்சினையில் பல முறை உச்ச நீதிமன்றம் இக்கோரிக்கைக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோதும் சென்னையில் தலைமை நீதிபதிக்கு வரவேற்பு கொடுத்தபோதும் இப்பிரச்சினையை மீண்டும் நினைவூட்டியுள்ளார். ஒருவேளை மோடி அரசு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டால் அந்நீதிமன்றத்திலுள்ள அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் எத்தனை நீதிபதிகள் இக்கருத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

மேலும், இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெறவுள்ளார். ஒருவேளை ஓய்வுபெறும் சமயத்தில் பலரும் நல்ல கருத்துகளைக் கூறி விடைபெறுவதுபோல் இப்பிரச்சினை அமைந்துவிடக் கூடாது. 

பிரதமரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இப்பிரச்சினையில் கூறியுள்ள கருத்தை அவர்கள் உண்மையிலேயே ஆத்மார்த்தமாகக் கூறுகிறார்கள் என்றால், இது தொடர்பில் அரசமைப்புச் சட்டத்தின் 348(2)வது பிரிவில் திருத்தம் கொண்டுவந்து உடனடியாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களிலும் கூடுதல் மொழியாக அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியை நிறைவேற்றிக்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் அளிப்பதன் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அப்படிப்பட்ட சட்டப் பிரிவை இயற்றும் சூழ்நிலையில், அதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தைக் கேட்பதற்கு அவசியமே இல்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். 

மொழிவாரி மாநிலங்களை அமைத்த பிறகு அந்தந்த மாநில மொழிகளே அங்கு அலுவல் மொழிகளாக மாறிவிட்ட பிறகு நீதிமன்றங்கள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல. இத்தகைய முயற்சி மாநில மொழிகள் வளர்வதைத் தடுப்பதோடு, பல்வேறு சமூகங்களிலிருந்து வக்கீல்கள் உருவாகி வருவதையும் தடுத்து ஆங்கிலப் புலமை உள்ளவர்களே சட்ட நிபுணர்களாக ஆக முடியும் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து வளர்க்கும். மேலும் மாநிலங்களின் சுயாட்சியையும் பறிக்கும். இது கூட்டாட்சி மற்றும் சமூக நீதி இரண்டுக்குமே எதிரானது!

ஓர் உயர் நீதிமன்றத்தில் ஓர் ஆண்டில் 10,000 வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்றால், அதில் 1,000 வழக்குகள் மட்டுமே அந்நீதிமன்றத்திலேயே உள்மேல்முறையீடு செய்யப்படும். அவற்றிலும் 100 வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதாவது, பத்தாயிரத்தில் நூறு வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நுழைவாயிலைத் தொடும். அதிலும் விசேஷ அனுமதி பெற்று மேல்முறையீடுகளாக விசாரிக்கக் கூடிய வழக்குகள் 10 மட்டுமே இருக்கும். இப்படிப்பட்ட வழக்கீட்டு முறையில் உள்ளூர் மொழியைப் புறக்கணிப்பது எப்படி நியாயம் ஆகும்?

இந்தியாவின் மாநில மொழிகளைக் கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஆட்சிமொழியாக்குவதானது அடிப்படையில் இந்திய நீதித் துறையை ஜனநாயகப்படுத்தும் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


6

5





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

இந்தியாவின் சிறிய 'மா'நிலங்களே உலகத்தின் 50% நாடுகளை விட பெரிதாக இருக்கலாம். உள்ளூர் மொழிகளில் வாதாடும் வசதியை மறுப்பது அடிமைத்தனமா அல்லது திறமையின்மையா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   3 years ago

இதுபோன்ற கட்டுரைகளை நிறைய எழுதுங்கள்...‌‌வாசிப்பதற்கு நன்றாகவும் சிந்தனையை பர(ற)ந்து விரியவும் வைக்கிறது....

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   3 years ago

Excellent perception! Mr. Chandru could have mentioned what language U.P and Rajasthan are using in their courts!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைஜெய் கிசான் ஆந்தோலன்கீழ் முதுகு வலிஉலகமயமாக்கல்தென்னாப்பிரிக்காஇரவுத் தூக்கம்மனனம்பாகுபலிசென்னை மாநகராட்சிஅயோத்திதாச பண்டிதர்லட்சாதிபதி அக்காகென்யா: கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பொருளாதாரம்அருணா ராய்ஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்!தாளாண்மைவிடுதலைவைலிங் வால்சி.பி.சந்திரசேகர் கட்டுரைமிஸோநாட்டின் வளர்ச்சிசாகுபடிமுத்தவல்லிஅரவிந்தன் கண்ணையன் எதிர்வினைதகுதியிழப்புஇந்தியா டுடே கருத்தரங்கம்வளர்ச்சிப் பாதைலடாக்விடுப்புகல்யாணச் சாப்பாடுயுவதிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!