கட்டுரை, புதையல், அரசியல், கல்வி 7 நிமிட வாசிப்பு
மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிப்பதற்கானதுதான் கல்வி
அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். நமக்கிடையேயுள்ள இடைவெளி காலத்தால் உண்டானது மட்டுமல்ல, ஆன்மரீதியாகவும் பார்வைரீதியாகவும் உண்டானதும் ஆகும் அந்த இடைவெளி. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள், என்பது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்புகளையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்துவந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும், அப்படி எதிர்கொண்டு வரும்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றி திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் நான் ஏற்றுக்கொண்டேன். உங்களையெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள் மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை என்றால் குறைந்தபட்சம், மாறுபடுவதற்காவது ஒப்புக்கொள்ள வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம் எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உத்வேகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவித்தைருக்கும் முதியவர்களுக்கு பட்டதெல்லாம் போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களையும் பார்த்ததற்கும் பிறகு அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கொடுமை. நாமெல்லாம், சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருந்தால் அந்த வடுவை அகற்றுவதில் நாம் இப்போதே வெற்றிபெற முடியும்.
என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடுவதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடு நாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப் போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது அப்படியேதான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பேராற்றை உருவாக்கும்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்து, தூரதேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை அவற்றின் வழியாக வர விட்டுத் தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக்கூடிய அவளுடைய மாபெரும் திறனைக் குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய்; காலம்காலமாகச் செழித்தோங்கிய அவளிடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால் பிற இடங்களிலிருந்து திரட்டிக்கொண்டு அதன் மூலம் தன்னுடையதை அதிகரிக்கச் செய்யும் திறன் இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத அளவுக்குப் பலம் மிக்கவள் அவள்; அதேபோல் அந்த நீரோட்டங்களிலிருந்து தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள்; மேலும், இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; மேலும், பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்குள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது. நம் பாரம்பரியம் குறித்தும் அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை கொடுத்த நம் முன்னோர்கள் குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இந்த வரலாற்றைக் குறித்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? நீங்களும் இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்ந்து, அதனால் எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த ஒன்றைக் குறித்துப் பெருமை கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை முன்குறிப்பிட்ட காரணங்களைச் சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; நிகழ்காலமும் எதிர்காலமும் நமது உணர்வை ஏன் பிரிக்க வேண்டும்?
அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன; ஒரு நாட்டின் உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னை பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான் அதிக அளவுக்கு என்னை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட நாம் முயற்சித்ததுதான் நம்மை மூழ்கடித்த பேரழிவுக்குக் காரணம். பூகோளத்துடனோ வரலாற்றை உருவாக்கும் சக்திமிக்க போக்குகளுடனோ விளையாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் நாம் உருவாக்கினோமென்றால் அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும்.
ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற விதத்தில். இருந்தாலும், பெரும்தொகையிலான நபர்களின் உணர்வை அது அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நாம் நம்புகிறேன்; ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன். நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாகிஸ்தானின் கழுத்தை நெறித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப்பட்டிருக்கிறோம். மற்ற எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும் நமது இயல்பை நாம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறி. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை அடித்துக்கொள்ள நேரிடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்று ஒன்று கிடையவே கிடையாது; நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் நாம், பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை நெறிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது. பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் சம்மதிக்க வேண்டும்? எல்லாம் நடந்துமுடிந்த பிறகு இப்போது தடுக்க முயல்வதைவிட அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் அதனுடன் நெருக்கமான, நட்புறவு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால் தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன். பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான எந்த ஒரு ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது பல நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை அழித்துவிட்டு வரக் கூடாது.
நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் எல்லாருடைய மனதிலும் அதுதான் ஒடிக்கொண்டிருக்கும். மேலும், அது குறித்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம். உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக் கூடும், எந்த திசையில் பார்ப்பது என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அடிப்படையில் மதச்சார்பற்றதும் எல்லா மதங்களையும் எல்லாவிதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி ஆனால் அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலானதும் மற்ற மார்கத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் புறவினத்தாராகக் கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான ஒன்றுதான். இருந்தாலும் இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் தாவிச்செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் நவீனச் சிந்தனைகளுக்கு ஒத்துவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் பின்செல்வது சாத்தியமற்ற ஒன்று என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். சக்திவாய்ந்த போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் குழப்பங்களைக் கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாக மதிப்பதும், ஆனால் தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை கொண்டிருப்பதுமாக இருக்குமே தவிர, கிணற்றுத்தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் அறிவுத்திறனில் நம்பிக்கை கொண்டதும் சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்கதுமாக இருக்கும் தேசியமாக, சர்வதேசத் தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுப்பதாக இருக்கும். ஒரே உலகம் என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில் அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் உலக நல்லுறவுக்கு மாற்று என்பது பேரழிவுதான்.
இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால் இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும், கசப்பும், விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன், அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது; நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்களின் நெருக்குதல் வேண்டுமானால் குறிப்பிடத்தகுந்த அளவு உங்கள் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தலாம். நீங்களெல்லாம் உங்களை அ ந் நியர்களாகக் கருதாதீர்கள். எல்லாரையும் போலவே இரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே, இந்தியா வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும். உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உரிமைகள தமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் பங்களிப்பைச் செய்யவும் எல்லாரைப் போலவே நீங்களும் அதன் பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். துன்பங்களையும் துயரங்களையும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம், குறிப்பாக இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்.
தமிழில்: ஆசை
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.