கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 7 நிமிட வாசிப்பு

கேஒய்சி மோசடிகள்

ஹரிஹரசுதன் தங்கவேலு
23 Jul 2022, 5:00 am
0

மும்பையைச் சேர்ந்தவர் சங்கேத் குமார் வர்மா. தனது 11 வயது மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வங்கிக் கணக்கில் பணம் சேமித்துவந்துள்ளார். மகனின், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு இன்னும் இரு நாட்கள் இருந்த நிலையில் அவரது மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. திறந்து பார்த்தால், ‘உங்களது வங்கி கணக்கின் - கேஒய்சி (Know Your Customer - KYC) ஆவணங்கள் இன்னும் சமர்பிக்கப்படவில்லை. ஆகவே, உங்கள் வங்கிக் கணக்கை இன்றுடன் முடக்க இருக்கிறோம். இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட எங்களது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்புகொள்வீர்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரு நாட்களில் மகனுக்கு அறுவை சிகிச்சை நிகழப்போகும் சூழ்நிலையில் ‘இது என்னடா சோதனை’ என ஒருவித பயமும் பதற்றமுமாக கொடுக்கப்பட்ட எண்ணிற்கு விரைந்து அழைக்கிறார் குமார். 

எதிர்முனையில், தன்னை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டவர், “கேஒய்சி ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் உங்களது வங்கிக் கணக்கு இன்னும் சில மணி நேரத்தில் முடக்கப்படும்!” என விளக்குகிறார். “இந்த ஆவணங்களைக் கடந்த வருடமே நான் வங்கியில் சமர்ப்பித்துவிட்டேனே” என்று குமார் தெரிவித்தபோது, “எங்கள் சிஸ்டமில் எதுவும் அப்டேட் ஆகவில்லை, ஆகவே கணக்கு முடக்கம் நிச்சயம் நடந்தேறும்” என அதிர்ச்சியைக் கூடுகிறது எதிர்முனை.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? இப்படிக் கேட்டார் குமார். “கவலை வேண்டாம் எங்களது ஆன்லைன் செயலி மூலம் ஆவணங்களை அப்டேட் செய்துகொள்ளலாம்” என்று கூகுள் பிளேஸ்டோரில் ‘கேஒய்சி க்யூஎஸ்’ (KYC QS) என டைப் செய்துவரும் அந்தச் செயலியைத் தரவிறக்க சொல்கிறது எதிர்முனை. “கேஒய்சி சரி! ‘க்யூஎஸ்’ (QS) என்றால் என்னவென்று குமார் உஷாராகக் கேள்வி எழுப்பினார். அதற்கு,  ‘அது ‘கொஸ்டின்ஸ்’ (QUESTIONS) என்பதன் சுருக்கம்’ எனத் தெரிவிக்கிறது எதிர்முனை. 

அடுத்தது என்ன? செயலியை மொபைலில் உடனே தரவிறக்குகிறார் குமார். சோதனைக்காக குமாரின் கூகுள் பேயிலிருந்து 5 ரூபாய் அனுப்பச் சொல்கிறது எதிர்முனை. கேஒய்சி வெற்றிகரமாக முடிவடைந்ததும் இந்த ஐந்து ரூபாய் மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வந்துவிடும் எனத் தெரிவித்ததும், அவ்வாறே செய்கிறார் குமார். “நன்றி! உங்கள் கேஒய்சி வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது!” என எதிர்முனை அழைப்பைத் துண்டித்த சில மணிநேரங்களில் குமாருடைய வங்கிக் கணக்கில் இருந்த தொகை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கான சேமிப்பின் பெரும் பகுதியை ஒரே நாளில் பறிகொடுத்துவிட்டார் குமார். இதே மோசடி, கடந்த வாரம் வருமான வரித் துறையின் முன்னாள் இயக்குனர்  டி.எஸ்.சீனிவாசனுக்கும் (வயது 85) நடந்தது. அதில் அவரது சேமிப்புத் தொகை ரூ.10 இலட்சத்தை இழந்து தவித்தார்.

சரி! ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என சோதனைப் பரிவர்த்தனைக்கு அனுப்பச் சொல்லி, நமது சேமிப்புத் தொகை அனைத்தையும் கபளீகரம் செய்யும் இது என்ன மோசடி? ஆன்லைன் மோசடிகளில் கடந்த இருவருடங்களாக அதிக அளவில் பணம் பறிக்கப்படும் மோசடியான ‘கேஒய்சி மோசடி’ என்பது இதுதான்! 

இது எப்படி நடக்கிறது?

முறையான ஆவணங்கள் சமர்பிக்காததால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் / மொபைல் எண்ணின் சேவை முற்றிலும் துண்டிக்கப்படும் / உங்களுக்கு வர வேண்டிய கூரியர் தாமதம் ஆகும் என ஏதோ ஒரு அவசர காரணங்களைக் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு அழைக்கவும் என ஒரு எண்ணுடன் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவது இந்த மோசடியின் முதல் கட்டம். 

இதைப் பார்த்து, பதறி, அழைப்பவர்களிடத்தில் அவர்களது மொபைலில் பிளே ஸ்டோர் / ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளத்தில்  ‘கேஒய்சி க்யூஎஸ்’ (KYC QS) என டைப் செய்துவரும் அந்தச் செயலியைத் தரவிறக்கச் சொல்வது இரண்டாம் கட்டம்.

இதை நீங்கள் டைப் செய்ததும் வருக்கூடிய செயலியானது ‘டீம்வியூவர் க்யுக் சப்போர்ட்’ (Teamviewer Quick Support) என்பதாகும். இதை உங்கள் மொபைலில் அல்லது கணினியில் என எதில் நிறுவினாலும் அதில் நிகழும் அனைத்தையும் இன்னொரு மொபைல் அல்லது கணினியில் கண்ணாடிபோலப் பார்க்க முடியும். தேவையெனில் பார்க்கும் மொபைலில் இருந்து பிற மொபைல் / கணினியை இயக்கக்கூட முடியும்.

கோவிட் தொற்றுக்காலத்தில், வீட்டிலிருந்து பணிபுரிந்த ஐடி துறையினருக்கு பெரிதும் உதவியது இவ்வகை தொலை ஆதரவுச் (Remote Support) செயலிகள்தான். நமது கணினியில் ஏதேனும் சிக்கல் என்றால் நிறுவனத்தின் ஐடி உதவியாளரை அழைத்து இந்த செயலியின் மூலம் நமது கணினியை அவர்களது கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டு நாம் அமைதியாக அமர்ந்துகொள்ளலாம். மெய்நிகர் வாயிலாகவே நமது சிக்கலை அவர்கள் சரி செய்துவிடுவார்கள். சுருங்கச் சொன்னால் நம் கணினி அல்லது மொபைலை இன்னொருவருக்கு பயன்படுத்துவதற்காகத் தருவோமே, அதேதான்! 

ஆனால், அது அருகில் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்தச் செயலி இருந்தால் அவர் எங்கிருந்தாலும் நம் கணினி / மொபைலை மெய்நிகர் வாயிலாகப் பயன்படுத்த முடியும். அப்படியான ஓர் அற்புதத் தொழில்நுட்பத்தை வளர்த்த இத்தொலை ஆதரவுச் செயலிகளைத்தான் மோசடியாளர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். 

இதை மொபைலில் நிறுவியதும் நமது மொபைலின் திரையை அட்சரமாய் அவர்கள் இன்னொரு மொபைலில் பார்க்க முடியும். கூகுள் பே / போன் பே போன்ற செயலிகள் மூலம் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் சோதனைக்காக அனுப்ப சொல்வது எதற்காக என்றால் உங்களது பயனர் கணக்கு, கடவுச்சொல், ரகசிய பின் எண், ஒடிபி போன்ற அனைத்தையும் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்துகொள்வார்கள். பிறகு உங்கள் வங்கி கணக்கில் நுழைந்து, தேவைப்பட்ட வங்கி எண்ணை உங்கள் கணக்குகளுடன் இணைத்து மோசடிப் பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக நிகழ்த்துகிறார்கள்.

நமது மொபைல் / கணினி அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் நமக்கு வரும் பணப் பரிவர்த்தனை மற்றும் மீதத் தொகை பற்றிய குறிஞ்செய்திகளைக்கூட அவர்களால் அழித்துவிட முடியும்.

மோசடியிலிருந்து தப்புவது எப்படி?

சில விஷயங்களை நாம் அறிந்துகொள்வதன் மூலம் இவ்வகை மோசடிக்கு நாம் ஆளாகாமல் தவிர்க்க முடியும். ஒரு தனிநபர் மொபைல் எண்ணிலிருந்து, கேஒய்சி விபரங்களை அப்டேட் செய்யச் சொல்லி எந்த வங்கியும் செய்திகள் அனுப்புவதில்லை. பயனர் கணக்கு, கடவுச்சொல், ரகசிய பின் எண் போன்றவற்றை எந்த சூழ்நிலையிலும் வங்கியிடம்கூட நாம் பகிர தேவையில்லை, அப்படி யாரேனும் நம்மைக் கேட்கிறார் என்றால் அவர் மோசடியாளர் எனக் கண்டுகொள்ள வேண்டும். 

அதுபோலவே மோசடியாளன் கேஒய்எஸ் க்யூஎஸ் என்று தானே டைப் செய்யச் சொன்னான், அது எப்படி  ‘க்யுக் சப்போர்ட்’ (Quick Support)  செயலிக்கு என்னை இட்டுச் சென்றது என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ப்ளே ஸ்டோர் / ஆப் ஸ்டோர் செயலிகள் சந்தையைப் பொறுத்தவரை எதை டைப் செய்தாலும் அதில் இல்லாத வார்த்தைகளை விடுத்து, பொருந்திப்போவது ஓர் எழுத்து என்றாலும் அதற்கான முடிவை அழைத்துவந்து காட்டும். 

கேஒய்சி என்ற வார்த்தையில் எந்தச் செயலியும் இல்லாத காரணத்தால், அதன் அடுத்த க்யூஎஸ் என்பதை வைத்து ‘க்யுக் சப்போர்ட்’க்கு (Quick support) அதன் அல்காரிதம் நம்மை இட்டுச் செல்கிறது. இதையெல்லாம் நன்கு அறிந்துகொண்டே மோசடியாளர்கள் இதைச் செயல்படுத்துகிறார்கள். ‘டீம்வியூவர் க்யுக் சப்போர்ட்’  (TeamViewer Quick Support) போல பல்வேறு தொலை ஆதரவுச் செயலிகள் சந்தையில் இருக்கின்றன. ஆகவே, ஏதாவது ஒரு செயலியின் பெயரைச் சொல்லி, ‘உங்கள் மொபைலில் இதைப் பதிவிறக்கம் செய்யுங்கள் சார்’ என்றாலே அழைப்பைத் தயங்காமல் துண்டித்துவிடுங்கள். 

ஒரே நாளில் எந்த வங்கிக் கணக்கையும் / மொபைல் இணைப்பையும் முடக்கவோ துண்டிக்கவோ முடியாது. பயனருக்கான கால அவகாசம் என்பது அவரது உரிமை. ஆகவே, பதட்டமின்றி பொறுமை காத்திடுங்கள். நான் வங்கிக்கு நேரடியாக சென்று கேட்டுக்கொள்கிறேன், இல்லை கூகுளில் தேடி சேவை மையத்திற்கு அழைத்துக்கொள்கிறேன் என விலகிக்கொள்ளுங்கள். 

எங்கள் சேவை மைய அதிகாரியைத் தொடர்புகொள்ளுங்கள் என மெசேஜ் அனுப்புவது மோசடியின் ஒரு வகை மட்டுமே. முடக்குவோம் / துண்டிப்போம் என பயமுறுத்திவிட்டு, இந்த இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் வங்கி விபரங்களைத் தெரிவியுங்கள், இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுங்கள் என்பதெல்லாம் இதே வகை மோசடியின் இன்னபிற வழிகள். 

எளிமையாகச் சொன்னால் கேஒய்சி என யாரேனும் அழைத்து பயமுறுத்தினால் தயங்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு வேலையைப் பாருங்கள். உங்கள் சேமிப்பிற்கு நான் பொறுப்பு!

(பேசுவோம்) 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


3

2





சுவாமிநாத உடையார்: மக்கள் நேசர்அணைப் பாதுகாப்பு மசோதாகோணங்கிகள்ளச்சாராயம் Even 272 is a Far cryதேசிய பயண அட்டைநீராற்றுவெற்றிடங்கள்சந்திராயன் சரிமஜ்லிஸ் கட்சிகனிமொழிஅம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைபாமகதென்னகம்: உறுதியான போராட்டம்சேவைத் துறைவங்க அரசியல் எப்படி இருக்கிறது?மஞ்சள் நிற தலைப்பாகைமுறையீடுகலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வைதகவல் தொழில்நுட்பம்சுதந்திரப் போராட்ட இயக்கம்ச.கௌதமன்கவின்கேர்நடவுமுதல் தலையங்கம்மழைநீர் வெளியேற்றம்வைலிங் வால்சட்டக் கல்வித் துறைஇந்தியாவின் இரட்டை நிலைப்பாடுபசி மையம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!