கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 5 நிமிட வாசிப்பு

ஹிலாரியின் இருமலும், அமெரிக்கத் தேர்தல் தாக்குதலும்

ஹரிஹரசுதன் தங்கவேலு
06 Aug 2022, 5:00 am
2

தகவல் கசிவுக்கான முதன்மைக் காரணம் ஹேக்கிங் சைபர் தாக்குதல்கள். நமது பெயர்,  முகவரி, வயது, வங்கி விவரம், இன்னபிற ஆவணத் தகவல்கள் எப்படிக் கசிகின்றன என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், நமது விருப்பங்கள் என்ன?  நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம்?  நாம் எடுக்க இருக்கும் முடிவுகள் என்ன? இப்படியெல்லாம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் தாரை வார்ப்பதில் சமூக வலைதளங்கள் இரண்டாமிடம் வகிக்கின்றன. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் அதிர்ச்சி வெற்றிக்கு ஹிலாரியின் ரகசிய மின்னஞ்சல்கள் குறித்த தகவல் கசிவு எப்படி உதவியது எனப் பார்த்தோம். ஆனால், உண்மையில் அது மக்களின் கவனத்தை மட்டுமே ஈர்த்துக் கொடுத்தது. ட்ரம்பின் வெற்றிக்குப் பிரதான காரணம் ஒரு மிகப் பெரும் தகவல் திருட்டு. சமூக வலைதளங்களின் அசுர முகத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்வு அது. சுமார் 8.7 கோடி அமெரிக்க மக்களின் எண்ணத்தை அவர்களுக்கே தெரியாமல் தகவல்களாகத் திருடி, ஒரு வரலாற்றை மாற்றி எழுதிய நூதன தகவல் மோசடி.  

நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்தும் நிகழ்வான, உலகை அதிர வைத்த, ‘பேஸ்புக்-கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா’ தகவல் மோசடி குறித்து இந்த வாரம் காண்போம்.

2016 அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் தரப்பில் தேர்தல் பணிகளைக் கவனித்துக்கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ப்ராஜக்ட் அலமோ’ (Project Alamo). அவரது தேர்தல் பரப்புரைகள், பேட்டிகள், மக்கள் சந்திப்புகள், இன்னபிற என அவரது வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொண்டது ப்ராஜெக்ட் அலமோதான். இதை ட்ரம்பின் டிஜிட்டல் கை (Digital Arm) என்றே குறிப்பிடுவார்கள். அந்த அளவு நினைத்துப் பார்த்திரா பணத்தை டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவுசெய்தது இந்த அமைப்பு. 

பேஸ்புக் விளம்பரத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்திருக்கிறது ப்ராஜெக்ட் அலமோ.  அலமோவின் மூளையாகச் செயல்பட்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், ‘பிக் டேட்டா’ எனப்படும் அதிகப்படியான தகவல்களைச் சேகரித்து, பின்னர் அதைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தகவல்களாக மாற்றித் தருவது இந்நிறுவனத்தின் பணி. இப்போது அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பை வெல்ல வைப்போம் எனப் பெருந்தொகைக்கு வேலையை ஒப்புக்கொண்டாயிற்று. ஆனால், அமெரிக்க மக்களின் மனநிலையை எப்படிக் கணிப்பது? அதுகுறித்த தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் எப்படி எடுப்பது? 

இதற்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலெக்சாண்டர் கோகனை வைத்து 120 கேள்விகளை உருவாக்கியது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. நீங்கள் யார்? உங்கள் மனம் இப்போது எப்படி இருக்கிறது? மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படி 120 உளவியல் கேள்விகளை, ‘இது உங்கள் டிஜிட்டல் வாழ்வு, ஒரு கிளிக் ஆளுமைத் தேர்வு’ (This is your digital life, One Click personality Test) என ஒரு மதிப்பாய்வாக (Survey) பேஸ்புக்கில் பரப்பினார்கள்.

இப்படி 120 கேள்விகளைக் கொண்ட பெரிய மதிப்பாய்வுக்கு நேரம் ஒதுக்கி யாரும் பதில் தருவார்களா என்ன? அதனால், இந்த மதிப்பாய்வைப் பூர்த்திசெய்பவர்களுக்கு ஐந்து டாலர்கள் சன்மானம் தந்தார்கள். இதற்காக மக்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான்! பேஸ்புக்கில் லாகின் செய்து பதில்களை நிரப்பினால் போதும் என்றார்கள். ஆனால், அதேநேரம் பயனர்கள் பேஸ்புக்கில் இடும் நிலைத்தகவல், புகைப்படங்கள், அவர்களது விருப்பங்கள், அவர்கள் பயோ விபரங்கள் ஆகியவற்றை உபயோகித்துக்கொள்ள எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள் எனும் உள்ளடி வேலையை மக்களிடத்தில் அனலிடிக்கா சொல்லவில்லை. 

இந்த ஐந்து டாலர் வெகுமானத்திற்கு ஆசைப்பட்டு சுமார் 28,000 பேர் இந்த மதிப்பாய்வை பூர்த்திசெய்தார்கள். அதைக் கொண்டு 8.7 கோடி அமெரிக்க மக்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா வசம் வந்தது. நில்லுங்கள்! 28,000 பேர் மதிப்பாய்வைப்  பூர்த்திசெய்தால் அவர் குறித்த தகவல் மட்டும்தானே செல்ல வேண்டும். எப்படி அனைவர் தகவலும் சென்றது எனும் உங்களது கேள்வி நியாயமே! 

மதிப்பாய்வை நிரப்புபவரின் தகவல்களை மட்டும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா எடுக்கவில்லை, இவர்களது நட்பு வட்டத்திலிருந்த அனைவரது தகவல்களும் அவர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அந்த ஐந்து டாலர் பொன்முடிக்கான பின்னணி. சுருங்கச் சொன்னால் பேஸ்புக்கில் இருக்கும் ஒருவரை மதிப்பாய்வை நிரப்பவைத்து அவரது நட்பு வட்டத்திலிருக்கும் ஐந்தாயிரம் பேர் பேஸ்புக்கில் இடும் நிலைத்தகவல், புகைப்படங்கள், விருப்பங்கள், கணக்கு குறித்த தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுத்தது கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா. 

தகவல்களை என்ன செய்தனர்?

இப்படி எடுத்த தகவல்களை அமெரிக்க வாக்காளர் பட்டியலுடன் இணைத்து, ஒவ்வொருக்குமான தனித்தகவல்கள் எவ்வளவு எனப் பார்த்த அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஒருவர் குறித்த  ‘தரவுப் புள்ளிகள்’ (Data Points) மட்டுமே 4,200 கிடைத்திருந்தது, 

அதாவது, எதிர் வீட்டு ராமசாமி அண்ணன் இந்த நிறம், குணம், இந்த நேரம் காலை எழுவார், அதன் பிறகு இந்த வேலை செய்வார், அவர் பணிபுரியும் இடம் இது, அவர் விருப்பமான உணவு இது, உணவகம் இது, அவர் வீடு திரும்பும் நேரம் இது என ஒரு தனிமனிதன் குறித்த 4,200 தரவுப் புள்ளிகள்போல, 8.7 கோடி அமெரிக்கர்கள் ஒவ்வொருக்குமாக இத்தரவுப் புள்ளிகளைக் கைவசம் வைத்திருந்தது அனாலிட்டிக்கா. 

இந்த தரவுப் புள்ளிகளைக் கொண்டு மக்களை உணர்வுரீதியாக ஐந்து பிரிவுகளில் அடக்கி மதிப்பீடுகள் தந்து வகைப்படுத்தியது. அவை ‘ஓசன்’ (OCEAN) என அழைக்கப்பட்டது. அதாவது, ‘ஓப்பன்னஸ்’ (Openness - வெளிப்படைத்தன்மை), ‘கான்சைன்டியஸ்னஸ்’ (Conscientiousness - நேர்மையுணர்வு), ‘எக்ஸ்ட்ராவெர்ஸன்’ (Extraversion - வெளியுலக ஈடுபாடு), ‘அக்ரியபில்னஸ்’ (Agreeableness – ஏற்றுக்கொள்ளும் தன்மை), ‘நியூரோட்டிசிஸம்’ (Neuroticism - உணர்ச்சிமயம்) என ஐந்து ஆளுமைத்திறன்கள் மூலம் அமெரிக்கர்கள் அனைவரையும் வகைப்படுத்தி ஒருவர் ட்ரம்பின் ஆதரவாளரா, எதிர்ப்பாளரா அல்லது நடுநிலையாரா  என இறுதி வகைப்படுத்தியது. 

ஆதரவாளரையும், எதிர்ப்பாளரையும் விட்டுவிட்டு நடுநிலை எனப்படும் ‘தி பெர்சுவேடபிள்’ஸைக் (The Persuadables)  குறி வைத்தது. மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, நகரம் வாரியாக, வளாகம் வாரியாக இந்த நடுநிலைகளைக் கட்டம் கட்டி தனது டிஜிட்டல் தாக்குதலைத் துவங்கியது அனாலிட்டிக்கா நிறுவனம். 

பரவும் பொய்ச் செய்திகள்

‘ஹிலாரி நம்மை ஏமாற்றிவிட்டார்’ என ஒரு காணொளியைப் பரப்பிய சில நொடிகளில் டிரம்ப் நம்மைப் பாதுகாப்பார், இழந்த அமெரிக்காவை மீட்பார் என வேறொரு காணொளியை அனுப்புவார்கள். எல்லைகளில் தீவிரவாதிகள் நுழைகிறார்கள் என பயம் காட்டிய அதே நொடி, இதைத் தடுக்க சக்தி உள்ள ஒரே ஆள் என ட்ரம்பின் புகைப்படத்தை வைத்து மரியாதை செய்வார்கள். நம்மைக் காக்க வந்த அசகாய சூரன், தேவதூதன், அதிரடிக்காரன் என்றெல்லாம் ட்ரம்பின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட அதேவேளை, ஹிலாரியை, அவர் தனிப்பட்ட வாழ்வை, அவரது ஆதரவாளர்களைக் கடுமையாக சித்தரித்து தாக்கினார்கள். ஒரு கட்டத்தில், ஹிலாரியின் சிறிய இருமலைக்கூட அவர்கள் விடவில்லை. 

ஹிலாரி தனது நியூயார்க் பரப்புரையின்போது சில நொடிகள் தொடர்ந்து இருமினார், தண்ணீர் குடித்து தனது உரையை மீண்டும் துவக்கிய அவர், ‘எனக்கு ட்ரம்ப் என்றாலே அலர்ஜி’ என நகைச்சுவையாகப் பேசி நிலைமையை சமாளித்தார். ஆனால், அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களைக் கிளப்பியது அனாலிட்டிக்கா நிறுவனம். இப்படி பலவீனமாக இருப்பவர்தான் உங்கள் அதிபரா என மக்களைப் பேச வைத்துப் பரபரப்பைக் கிளப்பியது. 

இப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் உண்மை பொய் எல்லாம் பார்க்காமல் வலைப்பூக்கள், பத்திரிகைகள், கட்டுரைகள், காணொளிகள், புகைப்படங்கள் என அனைத்து வாயிலாகவும் இந்த நடுநிலைகளைத் தொடர்ந்து அணுகியது அனாலிடிக்கா. அவர்கள் மனதில் மெல்ல மெல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு நடுநிலையாக இருப்பவர் டிரம்ப் ஆதரவு பதிவுகளுக்கு லைக் போட்டு தன்னை அவரது ஆதரவாளர் என வெளிப்படுத்தும் வரை நடுநிலைகள் மீதான டிஜிட்டல் தாக்குதலை இரவு பகலாகத் தொடர்ந்தது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. 

விளைவு, தங்களை நோக்கி குறி வைத்துச் செலுத்தப்பட்ட அனைத்துப் போலிகளையும், சித்தரிக்கப்பட்டவற்றையும் உண்மை என நம்பி வாக்குகளை மாற்றிச் செலுத்தினார்கள் நடுநிலைகள். அவரே எதிர்பாராமல் அமெரிக்காவின் 45ஆவது அதிபரானார் ட்ரம்ப். அவர் அதிபரான சில நாட்களிலேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் முக்கிய பணியாளர் இந்த உள்ளடி விவரத்தை ‘கார்டியன்’ மற்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைகளுக்குத் தெரிவிக்க, மோசடி அம்பலமானது.

இந்தத் தகவல் திருட்டு நிகழக் காரணமான ஃபேஸ்புக் நிறுவனமோ, ‘ஒரு கடவுச்சொல் களவாடப்படவில்லை, எங்கள் சர்வர்கள் திறக்கப்படவில்லை, ஆகவே இது வெறும் ‘நம்பிக்கை மோசடி’யே (Breach of Trust) தவிர  எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என நழுவிக்கொண்டது. பிரச்சினை இன்னும் பெரிதாக வெடித்து அமெரிக்க நீதிமன்றம் வரை செல்ல கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூடப்பட்டது, மார்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், ட்ரம்ப் தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிபராகத்தான் தொடர்ந்தார். அதுதான் தகவல்களின் சக்தி.

ஆகவே நண்பர்களே! அமெரிக்கத் தேர்தலில் மட்டும் டிஜிட்டல் தாக்குதல்கள் நிகழவில்லை, இந்தியத் தேர்தலில்களிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவே நமக்கு வரும் அனைத்து டிஜிட்டல் தகவல்களையும் கண்மூடித்தனமாக நம்பாமல், சற்று நிதானித்து, ஒருமுறைக்கு இரு முறை சோதித்துவிட்டு உண்மை என்னவென்று அறிந்து பிறகு செயலாற்றுவோம். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


2

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Prabakaran R   2 years ago

நல்ல கட்டுரை. இந்தியாவில் இதையேதான் மோடி செய்து ஆட்சியை பிடித்தார்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   2 years ago

இது தகவல்களின் உலகம். கிளவுட் கம்ப்யூட்டிங் அதிவிரைவு தொலைதொடர்பு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்கள் அதன் வேகத்தினை முழுமையாக காண்பிக்கும் போது தனிமனித தகவல் பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும்.அதையும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் புதிய திறந்த மூல மென்பொருட்களின் உதவியுடன் சிறப்பாக கையாளுவார்கள்.......

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

திருக்குமரன் கணேசன் புத்தகம்அருமண் தனிமம்குஹாமைசூர் எம்பிமுதல்வரின் நிழல்வெளி மாநிலத்தவர்வேலைத் திறன் குறைபாடுபூனைகள்பேராளுமைசமஸ் - ஜெயமோகன்அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்ஐஏஎஸ் அதிகாரிஆதிக்கம்மாபெரும் தமிழ்க் கனவுநாத்திகர் நேருஇந்திய வம்சாவளிபசுமை கட்டிடங்கள்சங்க இலக்கியங்கள்நீடூழி வாழ்க குடியரசு!prerna singhஎன்னால் செய்யப்பட்டதுஎன்.கோபாலசுவாமி பேட்டிகுடிமக்கள் ‘எதிர்’ அரசு ‘எதிர்’ தனியுரிமைஅம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?போரிஸ் ஜான்சன்பாதுகாப்புத் துறைகூகுள் பேஉச்ச நீதிமன்ற நீதிபதிஉமேஷ் குமார் ராய் கட்டுரைபாண்டியன்: ஒடிஷா அணைக்கும் தமிழ் மருமகன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!