உலக நாடுகள் பலவற்றின் பத்திரிகையாளர்கள், அரசியல் - சமூக மாற்றத்துக்குக் குரல் கொடுப்பவர்கள், அரசுக்கு எதிராக கருத்து சொல்வோர் மற்றும் அரசியல் தலைவர்கள் ‘பெகசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்படுவதை, ‘ஊடக அமைப்புகளின் உலகளாவிய கூட்டணி’ இந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பலப்படுத்தியது. இஸ்ரேல் நாட்டின் ‘என்எஸ்ஓ’ என்ற குழுமம், இந்த உளவு பார்க்கும் தீமைமிகு மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதை ஒருவருடைய தொலைபேசியுடன் இணைத்துவிட்டால் - அவருக்குத் தெரியாமலே - அதன் மூலம் அவர் அனுப்பும் தகவல்கள், அவர் சேமிக்கும் தரவுகள், அவருடைய ஒட்டுமொத்தச் செயல்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். அத்துடன் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பெற முடியும். இணையத்தில் அவர் எந்தெந்தத் தகவல்களையெல்லாம் தொடர்ந்து பார்க்கிறார், அவர் தொடர்புகொள்ளும் இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவற்றையும் தொகுத்துவிட முடியும். இப்படியொரு உளவு வேலையை எதற்காகச் செய்கிறீர்கள் என்று ‘என்எஸ்ஓ’ நிறுவனத்திடம் கேட்டபோது, சட்டப்பூர்வமான அரசுகளுக்கு மட்டுமே தங்களுடைய மென்பொருளை விற்பதாகப் பதில் அளித்திருக்கிறது. ஆக, அரசு தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது இதிலிருந்து நிரூபணம் ஆகிறது.
மேலும் ஒரு அத்தியாயம்
உளவு மென்பொருளான ‘பெகசஸ்’, சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட செல்பேசிகளில் பொருத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் பல தொலைபேசிகள் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல் - சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியலர்களுடையவை. இப்படியொரு நிகழ்வு வெளியுலகுக்குத் தெரிவது இது முதல் முறையல்ல. ‘பெகசஸ்’ மென்பொருளைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது 2018 தொடக்கத்திலேயே தெரியும்.
பீமா கோரேகாவோன் சதி வழக்கில் அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலருடைய செல்பேசிகள் உள்பட பலருடைய செல்பேசிகள் இப்படி உளவு பார்க்கப்பட்டுள்ளன என்பது 2019-ல் தெரியவந்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில் 121 இந்தியர்களின் செல்பேசிகளை ‘பெகசஸ்’ உளவு பார்ப்பதை ‘வாட்ஸப்’ சுட்டிக்காட்டியது. எனவே 2021 ஜூலையில் வெளியான தகவல் புதிதல்ல; ஆனால், ராணுவ ரீதியிலான விரிவான உளவுபார்ப்பு சில இந்தியர்களிடம் நடந்திருக்கிறது என்பதுதான் இதில் முக்கியம்.
ஒத்துழைக்க தொடர் மறுப்புகள்
பெகசஸ் உளவு பார்ப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே பிரான்ஸ், மொராக்கோ நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டன. இந்தியாவிலோ உண்மைகளைத் தெரிந்துகொள்ளவிடாமல் அதிகாரபூர்வமாகவே தொடர்ந்து ஒத்துழைக்க மறுக்கும் போக்கே வலுப்படுகிறது. தகவல் அறியும் சட்ட உரிமைப்படி 2019 அக்டோபரில், ‘இந்திய அரசு பெகசஸ் மென்பொருளை வாங்கியதா?’ என்று கேட்கப்பட்டது. ‘எந்தத் தகவலும் இல்லை’ என்ற பதிலே அரசிடமிருந்து வந்தது.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் 2020, 2021 ஆண்டுகளில் அரசு இதே நிலையில்தான் பதில் அளித்தது. 2021-ல் மேலதிகத் தகவல்களுடன் இது மீண்டும் தெரியவந்தபோது, நாடாளுமன்றக் குழு விசாரிக்க முடியாமல், அந்தக் கூட்டத்துக்கு ஆளும் கட்சி சார்பில் உறுப்பினர்கள் செல்லாமல், கூட்டம் நடத்துவதற்கே குறைந்தபட்ச உறுப்பினர்கள் (கோரம்) வரவில்லை என்று கூறி தடுக்கப்பட்டது.
மக்களைக் கண்காணிக்கும் உரிமையை அரசு நிர்வாகம் தவறாகப் பயன்படுத்துவதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்பதை வெவ்வேறு சம்பவங்கள் உணர்த்துகின்றன. அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை அரசு நிர்வாகம் மதிக்காமல் மீறும்போது, கைவசம் உள்ள அரசாங்கக் கருவிகளால் அதைத் தடுக்கவோ, வெளிப்படுத்தவோ முடியாவிட்டால் அதைச் செய்வதற்கு மூன்றாவதாக ஓர் அமைப்பை அரசமைப்புச் சட்டம் உருவாக்கியிருக்கிறது - அதுதான் நீதித்துறை. இதன் விளைவாக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான சட்டப்பூர்வமான தொடர்புகள் இடைமறிக்கப்படுவது தொடர்பில் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த மனுக்கள் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டு இரண்டரை மாதங்களுக்குப் பிறகும் பயனுள்ள நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 13 வரையில் உச்ச நீதிமன்றம் இந்த மனுக்கள் மீது ஆறு முறை விசாரணை நடத்தியுள்ளது.
கேள்விகள் நேரானவை
ஊடகச் செய்திகளில் வெளியான இந்திய நபர்களின் செல்பேசிகளை இடைமறித்து உளவு பார்க்க ‘பெகசஸ்’ நிறுவனத்துக்கு, இந்திய அரசு அனுமதி வழங்கியதா, இல்லையா என்பதுதான் கேள்வி. அது உண்மையென்றால், இதுவரை எந்தக் குற்றமும் செய்யாதவர்களை அப்படி உளவுபார்க்கச் சொன்னதை அரசால் நியாயப்படுத்த முடியுமா? அப்படி இல்லையென்றால், யாரோ சில போக்கிரிகளால் ராணுவ ரகத்திலான உளவு பார்க்கப்படுவதிலிருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசமைப்புக் கடமையிலிருந்து அரசு தவறுவதாக ஆகிவிடாதா?
இந்த மனுக்கள், அற்பமான செயல்களைப் பற்றி விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்படவில்லை, மக்களை உளவு பார்க்க அரசு கையாளும் வழிமுறைகள், நடைமுறைகள் என்ன என்றுதான் கேட்கப்பட்டது. ‘பெகசஸ்’ நிறுவனத்தால் உளவு பார்க்கப்படுவதாக வெளியான பட்டியலில் இடம் பெற்றவர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்டனர். அரசு தன்னுடைய விருப்பப்படி எந்தவித முகாந்திரமும், நியாயமான காரணமும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் உளவு பார்த்தலுக்கு உள்படுத்த முடியுமா என்பதே முக்கிய கேள்வி. ஏதோ சிலர் பேசிக்கொண்டதைத்தான் அரசு ஒட்டுக்கேட்டது என்பதல்ல பிரச்சினை, எந்தவித தண்டனையுமில்லாமல் - சட்டவிரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டு, விளக்கம் கூட தெரிவிக்க வேண்டிய அவசியமின்றி எளிதில் தப்பித்துவிட முடியுமா அரசு?
இந்த விசாரணைகள் அனைத்தின்போதும், பதில் சொல்வதிலிருந்து தப்பிக்க ஒரே வழிமுறையைத்தான் அரசு கடைப்பிடித்தது. இந்த மனுக்களுக்கு தன்னுடைய மறுமொழி என்பதை பிரமாணப் பத்திரம் மூலம் சொல்லாமலேயே - நீதிமன்றம் விலாவில் இடித்தும்கூட - மறுத்தது. அது தாக்கல் செய்த இறுதி பிரமாணப் பத்திரம்கூட, நாடாளுமன்றத்தில் அது சொன்ன சமாதானங்களின் மறு தொகுப்புதான்.
அத்துடன் இல்லாமல், முக்கியமான கேள்விக்குப் பதில் சொன்னால், ‘தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்பட்டுவிடும்’ என்று கூறி தொடர்ந்து பதில் அளிக்க மறுத்தது. அரசமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், இப்படி ‘தேசப் பாதுகாப்புக்காக’ என்ற பதிலையே மந்திரத்தைப் போல அரசு திரும்பத் திரும்பச் சொல்கிறது. பதில் சொல்லாமல் தடுப்பதற்காக மட்டுமல்ல; இதைப் பற்றிக் கேள்வி கேட்பதே சட்டப்படியானதல்ல என்று சுட்டிக்காட்டுவதற்காக இந்த உத்தியை அரசு கடைப்பிடிக்கிறது.
நீதித் துறையின் செயல்பாடு
பெகசஸ் தொடர்பான வழக்கு விசாரணையைப் போல நீதித் துறையின் செயல்பாடு வேறெங்கும் இவ்வளவு வெளிப்படையாக அம்பலமாகவில்லை. ராணுவ ரக உளவு வேலைக்காக அரசுக்கு விற்கப்படும் உளவு மென்பொருள் ஒருவரின் செல்பேசியில் இணைக்கப்பட்டிருக்கிறது என்றால், தன்னை உளவு பார்ப்பது ஏன், யாருடைய உத்தரவின்பேரில் தான் உளவு பார்க்கப்படுகிறேன் என்று அறியும் உரிமையை அரசமைப்புச் சட்டம் அவருக்குத் தருகிறது.
அரசிடமிருந்து இதற்குரிய பதிலை வரவழைக்க நாடாளுமன்றத்தால் முடியவில்லை என்கிறபோது, தனது கேள்விக்கான பதிலைப் பெற தனி நபர் நாடக்கூடிய இடம் நீதிமன்றம்தான். தன்னை உளவு பார்ப்பது யார், ஏன் என்று ஒருவர் கேட்பதே தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடாது. சட்டப்படியான ஆட்சி நடக்கும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா - அந்த சட்டம் தனி நபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் இரண்டுக்கும் பொதுவானது என்றால், இதற்குப் பதில் என்ன என்பதுதான் கேள்வி. சட்டம் பொதுதான் ஆனால் அரசாங்கம் எந்தக் குற்றத்தையும் செய்யலாம், அதற்குத் தண்டனை கிடையாது என்ற ஆட்சியமைப்பில் நாம் வாழ்கிறோமா?
இதுவரை நடந்த விசாரணைகளின் பதிவுகளிலிருந்து நாம் அறிவது, இப்படி பதில் சொல்லாமல் தப்பிக்கும் அரசின் போக்கை நீதிமன்றமும் அனுமதித்துக்கொண்டேவருகிறது. இரண்டரை மாதங்கள் கடந்த பிறகும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. நாடாளுமன்றத்துக்குத் தர மறுத்த தகவல்களைத் தர வேண்டும் என்றோ அல்லது விளக்கம் கேட்கும் மனுதாரர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றோ உத்தரவிடவில்லை.
நீதிமன்றத்தின் நடவடிக்கை, செயல்படாமல் இருப்பதோடு முடியவில்லை. ‘பெகசஸ்’ தொடர்பில் விசாரிக்க வங்க மாநில அரசு குழு அமைத்தபோது, அதை ஆட்சேபிக்கும் மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன் - அப்படிச் செய்ய காரணம் ஏதுமில்லாவிட்டாலும் - அப்படி குழுவை மாநில அரசு நியமிப்பதை ஏற்க முடியாது என்று வாய்மொழியாகவே நிராகரித்துவிட்டது (அப்படி நிராகரிக்கவும் தெளிவான காரணம் ஏதுமில்லை).
இதன் மூலம் மாநில அரசு தன் நடவடிக்கையை நிறுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தப்பட்டது. வழக்கமற்ற அந்த ஆட்சேப மனுவை நீதிமன்றம் ஏற்க சட்டப்பூர்வமான காரணம் ஏதுமில்லை, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை வங்க அரசு விசாரிக்கக் கூடாது என்று தடுத்ததற்கும் சட்டப்பூர்வமான அவசியம் ஏதுமில்லை.
கட்டளையிடுவது அவசியம்
இந்த விவகாரம் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்று செப்டம்பர் 13-ல் நடந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பால் உணர்த்தியது. இது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவதைப் போல இருக்கிறது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விதத்தில் அரசு ஏன் உளவு பார்க்கிறது என்பது தொடர்பாக, இதுவரை கடுமையான நிலையை நீதிமன்றம் ஏன் எடுக்கவில்லை என்று புரியவில்லை.
அரசு செய்தது சட்டப்படி சரியல்ல என்ற நிலையை நீதிமன்றம் வெளிப்படுத்திவிட்டு, குழுவை நியமித்திருக்க வேண்டும். கடைசியாக நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு மேலும் கணிசமான காலம் ஓடிவிட்டது. உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் என்று மக்களும் மற்றவர்களும் கருதுவதை ஆறப்போட அல்லது அடக்கம் செய்துவிட குழுவை நியமிப்பது அரசின் வழக்கம் என்பதை அனுபவத்தில் பார்த்துவருகிறோம். இந்த விவகாரம் குறித்து மக்கள் மறக்கத் தொடங்கியதும் இது அப்படியே குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும்.
உளவு பார்த்தீர்களா, இல்லையா என்று அரசைப் பார்த்து நீதிமன்றம் நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். ஆம் என்று அரசு பதில் அளித்தால், அது ஏன் என்று கேட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அல்லது அப்படி உத்தரவிட்டதற்கு சட்டப்படி இன்னின்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் சிறப்பான தொடக்கம் ஏற்பட்டிருக்கும்!
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.