தலையங்கம், கலாச்சாரம், ஊடக அரசியல் 5 நிமிட வாசிப்பு

ஊடகங்களின் சாதியம் வெட்கக்கேடு

ஆசிரியர்
19 Oct 2022, 5:00 am
7

நெடுநாள் கதை இது. இப்போது ஆய்வுகளின் வழியே துல்லியமாக அம்பலப்படுகிறது. இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகளைக் கிட்டத்தட்ட முழுமையாக முற்பட்ட சாதியினரே ஆக்கிரமித்திருப்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ‘ஆக்ஸ்ஃபோம் இந்தியா – நியுஸ் லாண்டரி’ இணைந்து நடத்திய ஆய்வு.

இந்திய மக்கள்தொகையில் சுமார் 5% வகிக்கும் பிராமணர்கள், பனியாக்கள், ஜெயின்கள் மூன்று சமூகத்தினரும் இந்திய சமூக அதிகாரத்தில் வகிக்கும் பங்கு பிரமாண்டமானது. இதன் பின்னணியில் உள்ள பண்பாட்டு அதிகாரத்தில் ஊடகத் துறை மீதான கட்டுப்பாடு முக்கியமானது.

இந்தியாவின் கருத்துகளைத் தீர்மானிக்கும் முன்னணி ஊடகங்கள் பெரும்பாலும் இந்த மூன்று சமூகத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. குறிப்பாக, பனியாக்களின் அதிக்கம் அதிகம். உதாரணத்துக்கு, நாட்டிலேயே அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் ‘ஜீ தொலைக்காட்சி குழுமம்’ பனியாக்களால் நடத்தப்படுகிறது. இந்தியில் அதிகம் விற்கும் பத்திரிகைகளான ‘தைனிக் ஜாக்ரன்’, ‘தைனிக் பாஸ்கர்’ இரண்டுமே பனியாக்களால் நடத்தப்படுபவை. இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளான ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (ஜெயின்கள்), ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (பனியாக்கள்), ‘தி இந்து’ (பிராமணர்கள்), ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (பனியாக்கள்) நான்கும் முச்சமூகதினராலேயே நடத்தப்படுகின்றன. 

இப்படி இந்தச் சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்களிலும் சரி; இவர்கள் அல்லாத சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்களிலும் சரி; முடிவெடுக்கும் பதவிகளில் இந்தச் சமூகங்கள் உள்ளிட்ட இருபிறப்பாளர்கள் என்று குறிப்பிடப்படும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரின் ஆதிக்கம் அதிகம். அம்பேத்கர் சுட்டும், முற்பட்டோரைப் பார்த்தொழுகும் நோயே காரணம். சந்தையில் வலுவான ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதிலும் சமூகத்தின் கருத்துகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும் பத்தியாளார்கள், கட்டுரையாளர்கள், விவாதர்கள் இடத்தில் இவர்களுடைய இடம் மிக அரிது. அப்படியே இடம் பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய அரசியலைப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதைத்தான் இந்த ஆய்வும் சொல்கிறது.

இந்தியாவில் ஒருகாலத்தில் பல துறைகளிலும் இப்படியான சாதி ஆதிக்க நிலை இருந்தது. இன்று பல இடங்களில் சூழல் மாறுகிறது. ஊடகங்களிலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கிறது என்றாலும், மிகக் குறைவாகவே அந்தப் பிரதிபலிப்பு இருக்கிறது.

இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகளில் 88% முற்பட்ட சாதியினரே இருக்கின்றனர். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டும் அல்லாது புது யுக ஊடகங்கள் என்று வர்ணிக்கப்படும் இணைய ஊடகங்களிலும் இதுதான் நிலைமையாக இருக்கிறது. 2021-22 காலட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் ஊடகங்களில் உள்ள 218 உயர் பதவியாளர்களின் தகவல்களிலிருந்து இந்த ஆய்வு முடிவு பெறப்பட்டிருக்கிறது. எந்த பிரதான ஊடகத்திலும் தலித்துகள் – பழங்குடிகள் தலைமைப் பதவியில் இல்லை.

நாட்டின் கருத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றும் கட்டுரையாளர்கள் / கருத்தாளர்கள் சமூகப் பின்னணியிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கிறது. ஊடகங்களில் ‘செய்திக் கட்டுரைகளைத் தருவது யார் என்பதும் முக்கியம் – இந்திய ஊடகங்களில் விளிம்புநிலைச் சாதிகளின் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில் இந்த ஓராண்டு காலத்தில் வெளியான கட்டுரைகள், காணொளிகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன.

இதிலும் முற்பட்ட சாதியினரின் ஆதிக்கமே அதிகம். பிற்படுத்தப்பட்டோர் 10%; தலித்துகள் – பழங்குடிகள் சற்றேறத்தாழ 5% எனும் அளவுக்கே ஏனையோருக்கான பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. பழங்குடிகளுக்கான பிரதிநிதித்துவமும் சரி, அவர்களுடைய விவகாரங்களும் சரி; மிக மிகக் குறைவான அளவிலேயே ஊடகங்களில் இடம் பிடிக்கின்றன. முன்னணி ஆங்கிலத் தொலைக்காட்சி நெறியாளர்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் 11.1% ஆக இருக்கிறது. தலித்துகள், பழங்குடிகள் ஒருவர்கூட இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக் கூற அழைக்கப்படுவோரின் பின்னணியும் இதை ஒட்டியே இருக்கிறது. இன்னும்  மதரீதியாக நாம் ஆய்வுகளை மேற்கொண்டால் சிறுபான்மையினர் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் மீதான வன்மும் சிந்தனாரீதியான ஒடுக்குமுறையும் அந்த ஆய்வில் வெளிப்படும். எல்லாவற்றிலுமே பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மோசமான நிலையில் இருக்கும்.

இந்திய ஊடகங்கள் எவ்வளவு அக்கிரமமானவை என்பதை ஒரு பழங்குடியின் பார்வையிலிருந்து அணுகினால்தான் நாம் உணர முடியும். இந்த விஷயங்கள் எதுவும் தற்செயல் இல்லை. இந்தியாவின் சமூக அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும், ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும் ஒன்றாக இருப்பது தற்செயல் இல்லை. யாருக்குப் பேசவும், எழுதவும் இடம் கிடைக்கிறதோ அவர்கள் நலனே முன்னுரிமை ஆகிறது. அவர்கள் எண்ணங்களே ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துகளாக, முன்னுரிமைகளாக  வளர்த்தெடுக்கப்படுகின்றன.

சமத்துவத்துக்கு சமூக நீதி எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும், இந்தியப் பின்னணியில் எல்லா இடங்களிலும் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தை விழிப்புணர்வோடு பரமாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுத் துறைக்கு யாரும் வெளியிலிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. இது அவர்களுடைய தார்மிக அடிப்படைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அதிலும் ஊருக்கெல்லாம் உபதேசத்தை அள்ளி வழங்கும் ஊடகங்கள் தம் மீது ஆண்டுகளாகத் தொடரும் விமர்சனங்களுக்குப் பிறகும் இவ்வளவு சாதியத்தோடு செயல்படுவது திமிர்த்தனம். ஊடக அதிபர்களை மட்டும் இதில் குற்றஞ்சாட்ட முடியாது; ஊடகங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களும் சமமான அளவுக்குக் குற்றவாளிகள்.

ஆச்சர்ய முரண் என்னவென்றால், தொட்டதெற்கெல்லாம் அரசியல் துறையைச் சாடுவதும், மஹா யோக்கியர் வேஷம் கட்டுவதும் ஊடகத் துறையின் வழக்கம். சுதந்திர இந்தியாவில் சமூக நீதி மாற்றங்கள் அதிகம் நிகழ்ந்துவரும் துறைகளில் அரசியல் முன் வரிசையில் நிற்கிறது என்றால், ஊடகம் கடைசி வரிசையில் நிற்கிறது. ஊடகங்கள் துளியேனும் வெட்கப்பட வேண்டாமா?

மக்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. தமக்கான ஊடகத்தை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். எல்லாத் தளங்களிலுமே கேள்வி கேட்பதன் வாயிலாகவே ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க முடியும். அரசியலில் எப்படி இன்றைக்கு மாற்றம் நடக்கிறது? அரசியல் கட்சிகளை நோக்கிக் கேள்வி கேட்பதன் வழியாகவும், திருந்தாத கட்சிகளைத் தண்டிப்பதன் வழியாகவும் நடக்கிறது. ஊடகங்களை நோக்கியும் இனி மக்களின் சாட்டை சுழலட்டும்!


13

4

1
1

பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

Pandi Thurai.M   5 months ago

மக்கள் பக்கம் நின்று நியாயம் பேசும் உங்களுக்கு நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Lakshmanan Krishnamoorthy   5 months ago

I don't understand why you do Brahmin Bashing. The Hindu gave platform to you to express your views fearlessly. Everybody knows that The Hindu newspaper follows Left ideology. who stopped you ? You also run online news portal . It is unfair sir, Please stop this biased articles like this.

Reply 2 5

Login / Create an account to add a comment / reply.

S.SELVARAJ   5 months ago

சாதியத்தை அதிகம் விமர்சிக்கும் ஊடகங்கள் சுய விமர்சனம் செய்து கொள்வதில்லை. என்ன ஒரு முரண் என்றால் பிற்படுத்தப்பட்ட சாதியினரால் நடத்தப்படுகிற ஊடகங்களில் கூட முடிவெடுக்கிற நிர்வாகக்குழுவில் கட்டுரையாளர் குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கமே அதிகம். அரசின் கொள்கைகளை வடிவமைப்பவர்களும் இவர்கள்தான். பிறகு சமூக நீதி எங்கிருந்து கிட்டும்?... நமக்கான ஊடகமாக இவர்கள் நடத்துகிற ஊடகங்களுக்குள்தான் தெரிவு செய்து கொள்ள வேண்டியுள்ளது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   5 months ago

பிற சமூக மக்கள் ஊடக அதிபதி ஆவதை தடுப்பது யார்.....

Reply 1 2

Login / Create an account to add a comment / reply.

Ganesan   5 months ago

ஒரு வேளை ஊடகங்களின் தாக்கம் தேவை இல்லை என்று அலட்சியமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருக்கிறார் களோ

Reply 0 2

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   5 months ago

மிகவும் தைரியமான கட்டுரை.... செய்தி ஊடகங்கள் தன்னுடைய முகமூடியை கழற்றி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்... இந்த கட்டுரைக்கு எவ்வளவு மறுப்புத் தெரிவித்து தலைமையிடத்தில் இருக்கக் கூடிய செய்தியாளர்களிடம் இருந்து கட்டுரைகள் வரும் என்று எதிர்பார்த்து இருக்கலாம்...

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   5 months ago

Disappointing article! People read your write-ups because of your calibre and journalistic excellence! Nobody goes into caste factor! Nobody prevented anybody becoming good in journalism! Please get out of this caste-myopia!

Reply 3 6

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பழ. நெடுமாறன்ஜார்கண்ட்முதல்வர் கடிதம்குறைந்தபட்ச ஆதார விலைகி.வீரமணி பேட்டிமோடி - அமித் ஷாவுக்குப் பிறகு பாஜகவில் யார்?காட்டுமிராண்டித்தனம்ஹிஜாப் தடைபெட்ரோல் டீசல் விலை உயர்வுசமஸ் பாலு மகேந்திராகாருண்யம்ஆசான்சிதம்பரம் கட்டுரைகொங்கு பிராந்தியம்பாமாஎல்லாநிலத்தடிநீர்மாதிரிகள்தேவனூரா மகாதேவா ‘உண்மையான மனிதர்’பங்களாதேஷ் பொன்விழாபாமகவிமர்சனங்களே விளக்குகள்நவ நாஜிகள்காவேரி கல்யாணம்கார்த்திக்வேலுஜெயகாந்தன்சர்வாதிகார அரசியல்செயல்பட விடுவார்களா?தனியுரிமையின் இதயத்தில் பாய்ந்த வாள்!காங்கிரஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!