தலையங்கம் 4 நிமிட வாசிப்பு

கல்வியாளர்கள் தமக்குரிய கண்ணியத்தைப் பேணட்டும்

ஆசிரியர்
08 Sep 2021, 12:00 am
1

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் முற்போக்கான சில படைப்புகள் நீக்கப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னரே, மத்திய பிரதேச மருத்துவத் துறை தன்னுடைய மருத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந்துத்துவத் தலைவர்களின் வரலாற்றைச் சேர்த்து அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது; எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும் அது தொடர்ந்து மாற்றப்படுவதுதான் நல்லது; மாற்றத்தின்போது எதைச் சேர்க்கிறார்கள், எதை நீக்குகிறார்கள் என்பதன் பின்னணியில் நெளியும் சிறுமையான அரசியல் நோக்கங்கள்தான் முகம் சுளிக்க வைக்கின்றன.

இந்தியாவின் மதிப்புக்குரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றும், நூற்றாண்டை நெருங்குவதுமான டெல்லி பல்கலைக்கழகம் பல வகைகளிலும் முன்னுதாரணமாகத் திகழ்வது; கட்டமைப்புரீதியாகவும், அதனுடைய வரலாற்றுக்காகவும், வளத்துக்காகவும், அது உருவாக்கிய ஆளுமைகளுக்காகவும் உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆங்கிலப் பாடத்திலிருந்து மஹாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி மூவரின் எழுத்துகளையும் அது சமீபத்தில் நீக்கியது. பாடத்திட்ட மாற்றம் தொடர்பிலான குறிப்பில் கையெழுத்திட்ட அகாடெமிக் கவுன்சில் உறுப்பினரான மிதுராஜ் துஷியா, “பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. ஒரு வருடத்துக்கு முன்பாக, சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக மேற்பார்வைக் குழுவொன்றை அகாடெமிக் கவுன்சில் அமைத்தது. அந்தக் குழுவுக்கு எதையும் மாற்றுவதற்கான அதிகாரம் இல்லை. ஆயினும், சிலவற்றை நீக்குவதற்கு அரசியல் காரணங்கள் இருந்தன. 15 நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றாலும், ஆங்கிலப் பாடத்திட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது” என்று கூறியிருப்பது நீக்கத்துக்கான பின்னணியைச் சுட்டுகிறது.

வங்கத்தைச் சேர்ந்த மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’ கதையானது பழங்குடிகள் மீதான ஆதிக்க வேட்டைக்கு எதிரான படைப்பு. கதையில்  விசாரணையின் பெயரால், கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண் நம் நாட்டில் பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் அத்தனை வன்முறைகளுக்கும் குறியீடாகிறாள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் பெண் படைப்பாளிகளான பாமா, சுகிர்தராணி இருவரின் ‘சங்கதி’, ‘கைம்மாறு’ படைப்புகளும் இயல்பாக ஆதிக்கத்தில் உறைந்திருக்கும் சாதிய மனநிலையைச் சுட்டுவன. ஏன் இந்த எழுத்துகள் சங்கடப்படுத்துகின்றன என்பதை டெல்லி பல்கலைக்கழகத்தின் மற்றொரு தேர்வு விளக்குகிறது. ‘காலனியத்துக்கு முந்தைய இந்திய இலக்கியங்கள்’ எனும் பாடத்தில் ‘சந்திரபதி ராமாயணம்’ நீக்கப்பட்டு, ‘துளசிதாஸ் ராமாயணம்’ சேர்க்கப்பட்டிருக்கிறது. ராமாயணத்தைப் பெண்ணியப் பார்வையில் அணுகும் பிரதி, ‘சந்திரபதி ராமாயணம்’; மாறாக, ‘துளசிதாஸ் ராமாயணம்’ செவ்வியல் பார்வையைத் தருவது ஆகும். ஆளும் பாஜகவின் அரசியல் பார்வையை வரித்துக்கொள்ளும் அசிங்கமான முயற்சி இது.  2019-ல் இப்படி குஜராத் கலவரம், முஸாஃபர்நகர் கலவரம் தொடர்பான பகுதிகளையும், பால்புதுமையினர் தொடர்பிலான பகுதிகளையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்க டெல்லி பல்கலைக்கழகம் முடிவு எடுத்ததை இங்கே நினைவுகூரலாம்.

கல்வித் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் இத்தகு நடவடிக்கைகளுக்காக வெட்க வேண்டும். வெளியே இது தொடர்பிலான விமர்சனங்கள் வருகையில் ஆட்சியாளர்கள் பதில் அளிக்க வேண்டும். அப்படி நடக்காதபோது இதுவே ஒரு மோசமான கலாச்சாரம் ஆகிறது. மத்திய பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுவாமி விவேகானந்தர், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர், பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் தீனதயாள் உபத்யாய ஆகியோரின் வரலாறு இடம்பெறவிருப்பதற்கான அறிவிப்பையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. விவேகானந்தர் வரலாறு மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான்; ஆனால், என்ன நோக்கில் எந்த வரிசையில் அது வைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. உத்தர பிரதேச அரசு தன்னுடைய பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலிருந்து ரவீந்திரநாத் தாகூர், எஸ்.ராதாகிருஷ்ணன், சரோஜினி நாயுடு, ராஜாஜி ஆகியோரின் வரலாற்றைப் பாடத்திட்டச் சுமை என்று நீக்கியதையும், அதே நேரத்தில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பாபா ராம்தேவ், உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரின் வரலாற்றைச் சேர்த்ததையும்கூட இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

அது இலக்கியமோ வரலாறோ, எந்தப் பிரதியும் பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. செவ்வியல் போக்கை அறிந்துகொள்ளும் ஒரு மாணவர் பின்நவீனத்துவப் போக்கையும் அறிந்துகொள்ளட்டும். ஹெட்கேவர் தொடர்பிலான பாடம் இருக்கிறதா, பெரியாரின் பாடமும் இருக்கட்டும்; வரலாற்று மாணவர்களுக்கு; இருவரது வரலாற்றுப் பாடங்களுமே மருத்துவ மாணவர்களுக்குத் தேவையற்றவை என்பது வெளிப்படை. வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கவும் முடியாது, எதிர்காலத்தை ஒற்றைப் பார்வை கொண்டதாக மாற்றவும் முடியாது. ஆட்சியாளர்களாக அமர்ந்திருக்கும் அரசியலர்கள் இதை உணராமல் தங்கள் சுயலாபத்துக்காக ஆட்டம் போடலாம். கல்வியாளர்களும் அதே இழிந்த பாதையில் பின்பற்றிச் செல்ல முனைவது வெட்கக்கேடு. கல்வியாளர்கள் தம்முடைய பணிக்கு ஏற்ற பண்பாட்டையும் கண்ணியத்தையும் பேண வேண்டும்!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

பல்கலைக் கழகங்கள் ஆளுங்கட்சியின் மேலாண்மையின் கீழ்தான் இயங்குகின்றன. தன்னாட்சி என்பதெல்லாம் பெயரளவுக்குத்தான். பாடத்திட்டங்களில் சில பகுதிகளை நீக்குவது என்று முடிவெடுத்த தில்லி பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறை ஏன் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் நீக்க வேண்டும். அவைகள் இலக்கியம் ஆகமாட்டா என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்களா? இலக்கியத்தின் நோக்கம் என்பது மாணவர்களுக்கு செவ்வியல் யுகங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் பழமையான எழுத்துக்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல. ஒரு நாட்டின் தற்கால வாழ்வியலை, கலையை, கலாச்சாரத்தை, மக்கள் இன்றைய நிலையில் யார் யாராக இருக்கிறார்கள், இன்றைய கலை, அரசியல், சமுதாய, கலாச்சார, மெய்யியல் சவால்கள் யாவை என்பன பற்றியும் அறிவிப்பதாகவும், ஒரு தர்க்கத்தை உண்டாக்குவதாகவும் இருக்க வேண்டும். வெவ்வேறு நிலப் பகுதிகளில் வசிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் வாழ்க்கையும், அவர்கள் எதிர் நோக்கும் வாழ்வியல் சவால்களும், அவர்களின் சந்தோஷங்களும் அனைவரும் கற்கத் தகுந்தவை. அவற்றை வாசிக்கும் ஒருவர் தன்னுடைய சிக்கலைத் தீர்க்கும் எத்தனையோ தரிசனங்களைப் பெற முடியும். இதுதான் இலக்கியத்தின் பிரதான நோக்கம். உலக இலக்கியங்களைப் படிப்பதும் இதனால்தான். இதன் காரணமாகத்தான் டால்ஸ்டாய் நமக்கு பாடங்களை கற்றுத் தந்த வண்ணம் உள்ளார். ஆனால், அரசுகளுக்கு உள்நோக்கம் உண்டு. எழுத்துக்களை கண்டு அரசியலர்கள் பயந்த வண்ணமே உள்ளனர். ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தவுடன் பாடத் திட்டங்களின் மீது கை வைப்பது இந்த அச்சத்தினால்தான். ஆனால் வேறொன்று நடந்து விடுகிறது. நீக்கப்பட்ட நூல்களின் விற்பனை, அதன் காரணமாகவே, பல மடங்கு அதிகரித்து விடுகிறது. எதன் பொருட்டு இவை நீக்கப்பட்டன என்கிற ஆவல், இந்த நூல்களை மேலும் ஆயிரமாயிரம் பேர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கிறது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு இதுதான் நடந்தது. நீக்கப்படுதலும் தடைசெய்யப்படுதலும் அந்த நோக்கங்களுக்கு எதிரான செயற்பாடுகளையே சாதிக்கின்றன. பாடத் திட்டத்தை புதுப்பித்தல் என்பது ஏன் தலித் எழுத்தாளர்களின் நூல்களை மாற்றுவது என்பதாக மட்டும் இருக்கிறது என்ற கேள்விக்கு தில்லி சர்வகலாசாலை பதில் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் உலக இலக்கியத்திற்கு என்ன பங்கு உள்ளதோ, அதற்கு சற்றும் குறையாத அளவிலானது இந்திய இலக்கியத்திற்கும் உண்டு. இந்திய இலக்கியம் என்பது தலித் இலக்கியமும்தான். தலித் இலக்கியம் இந்திய பெரும்பான்மை சமூகத்தை விமர்சனம் செய்கிறது என்பதாக குறைசொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் நம்மில் ஆயிரம் குறைகள் கண்டவாறு உள்ளபோது, நம்மை நாமே விமர்சிப்பதில் என்ன தவறு? உண்மையில் அது ஒரு மேன்மையான பண்பல்லவா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வினைச்சொல்அத்துமீறல்கள்மௌனங்களை நாம்தான் உற்றுக் கேட்க வேண்டும்மாநிலங்களவையின் முக்கியத்துவம்தான் என்ன?நீர்நிலைகள்தமிழ்ச் சமூகத்தில் முதியவர்களின் எதிர்காலம்?கடுமைதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?விமான நிலையம்கே.ஆர்.விஅடிப்படைக் கல்விமோசமான தீர்ப்புஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?பொருளாதார வளர்ச்சிபள்ளி மாணவர்கள்நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்கொள்முதல்சட்டமன்ற உறுப்பினர்ஐன்ஸ்டீனின் போதனைவே.வசந்திதேவிசுவாரஸ்ய அரசியலர் உம்மன் சாண்டிதைவானை ஏன் இணைத்துக்கொள்ள துடிக்கிறது சீனா?ஷனா ஸ்வான் ‘கவுன்டவுன்’மயிர் பிரச்சினையே அல்ல!வெண்ணாறுஊடகர்கள்குடும்பப் பெயர்பருவகால மாறுதல்கள்அர்னால்ட் டிக்ஸ்பொதிகை மலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!