ஆரோக்கியம், வரும் முன் காக்க 6 நிமிட வாசிப்பு

தொல்லை தரும் வாய்வு

கு.கணேசன்
27 Feb 2022, 5:00 am
0

மக்களை அதிகமாகப் பாதிக்கும் வயிற்றுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டால், அதில் 'வாய்வுத் தொல்லை'க்கு முக்கிய இடம் உண்டு; தமிழகத்தைப் பொறுத்தவரை பாமரர்கூட 'கேஸ் டிரபுள்' (Gas trouble) என்ற வார்த்தையைத் தெரிந்திருந்துவைத்திருக்கிறார்கள். நோயைத் தெரிந்துவைத்திருப்பது மட்டும் அல்ல, அதற்கான சிகிச்சையையும் அவர்களே செய்துகொள்கிறார்கள். 

எப்படி காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்றவற்றுக்குத் தாங்களாகவே கடைகளில் மாத்திரை, மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொள்கிறார்களோ அவ்வாறே இந்த வாய்வுப் பிரச்சினைக்கும் 'இஞ்சி மரப்பா'வில் ஆரம்பித்து, வெள்ளைப்பூண்டு, டைஜீன், ஜெலுசில் என்று தங்களுக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் சுயமாகப் பயன்படுத்துவதை நடைமுறையில் காண்கிறோம். 

எது வாய்வுத் தொல்லை?

பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப் பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் 'வாய்வுத் தொல்லை' (Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்களோ வாய்வுக்குத் துளியும் தொடர்பில்லாத முதுகுவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, விலாவலி, தசைவலி என்று உடலில் உண்டாகிற எல்லா வலிகளுக்கும் வாய்வுதான் காரணம் என்று முடிவுசெய்துகொள்கிறார்கள்.

வாய்வு எப்படி உருவாகிறது?

பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும்போது உணவுடன் சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கிவிடுகிறோம். குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, டீ மற்றும் காற்றைடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, சுருட்டு பிடிக்கும்போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கிவிடுகிறோம். 

இந்தக் காற்றில் 80% இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. இந்தக் காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை தருவதில்லை. அளவுக்கு மீறினால்தான் இது ஒரு 'வாய்வுப் பிரச்சினை'யாக உருவாகும்.

நொதிகள் குறைந்தால்?

வயிற்றில் வாய்வு உருவாக இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, குடலில் உணவு செரிமானமாகும்போது, அங்கு இயல்பாகவே உள்ள தோழமை பாக்டீரியாக்கள் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது ஹைட்ரஜன், மீதேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறுகின்றன. 

சாதாரணமாக இந்த வாயுக்களில் துர்நாற்றம் இருப்பதில்லை. மாறாக, குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாகச் செரிமானம் ஆகாது. சமயங்களில் 'அல்வளி பாக்டீரியா'க்களின் (Anaerobic bacteria) ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும். இந்த இரு நிலைமைகளில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டியது வரும்.

பிற வழிகள் என்ன?

நம் தினசரி உணவில் பால், பருப்பு, கிழங்கு மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாகச் சேர்க்கும்போது, அடிக்கடி வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், குடல் புழுக்கள், பித்தப்பைக் கற்கள், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல்வால் அழற்சி முதலிய நோய்கள் உள்ளபோது வாய்வுத் தொல்லை அதிகமாகும். 

தவறான உணவுப்பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, முதுமை, உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறைகளும் வாய்வுத் தொல்லையை வரவேற்பவை.

பரிசோதனை உண்டா?

ஒருவருக்கு அடிக்கடி வாய்வுப் பிரச்சினை, தொல்லை தருமானால், வாய்வுக்குக் காரணம் உணவா, நோயா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு 'இரைப்பை என்டோஸ்கோப்பி பரிசோதனை' (Gastro endoscopy), வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மலக்குடல் அகநோக்கல் பரிசோதனை (Colonoscopy), மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.

என்ன செய்யலாம்?

வாய்வுத் தொல்லைக்குப் பெரும்பாலும் நம் தவறான உணவுமுறைதான் காரணமாக இருக்க முடியும்.  அன்றாட உணவுமுறைகளில் சிறிது மாற்றம் செய்துகொண்டால் வாய்வுக்குத் தீர்வு கிடைத்துவிடும். 

இப்போது எல்லாமே அவசர யுகம் ஆகிவிட்டது. உணவை அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அது வாய்வுக்கு ஆகாது. சரியான உணவை, சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள். வாய்வுப் பிரச்சினை பாதி சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ஒரே வேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட, சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது. உணவு சாப்பிட்டதும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடியுங்கள். 

பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள். இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள். காற்றடைத்த புட்டிப்பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிப்பதைத் தவிருங்கள். மது அருந்துதல், சூயிங்கம் மெல்லுதல், புகைபிடித்தல், சுருட்டு பிடித்தல், வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா பயன்படுத்துதல் போன்ற தீயபழக்கங்களை நிறுத்துங்கள். 

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்துவந்தால் வாய்வு குறையும். துர்நாற்றத்ததுடன் வாய்வு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். அடிக்கடி வாய்வுத் தொல்லை தருமானால் குடல்புழுவுக்கும் அமீபா கிருமிகளுக்கும் மாத்திரை சாப்பிடலாம்.

இவை அடிக்கடி வேண்டாம்!

மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் குளித்த, வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறு மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.

குறைத்துக்கொள்ளுங்கள்

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, டீ. இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

வாயுவை உண்டாக்காத உணவுகள்

அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற முழுத் தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள். எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை. காரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்.

சோடா உதவுமா?

நம்மில் பலரும் வாய்வு வெளியேற வேண்டுமானால் சோடா குடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சோடா குடித்ததும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறிவிடுவதாக நம்புகிறோம். இதில் உண்மை இல்லை. நடப்பது என்னவென்றால், சோடாவில் கலந்திருக்கும் கரியமில வாயுதான் ஏப்பமாக வெளியேறுகிறது. குடலில் உள்ள வாயு வெளியேறுவது இல்லை.

(பேசுவோம்)

 

 

 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆஃப்கன் ஊடகம்பால் வளம்Thirunavukkarasar Samas Interviewகாந்தியம்எண்ணிக்கை குறைவுகலித்தொகைபொருளாதார நெருக்கடிஆதியோகிடெல்லி பச்சையை நம்மூருக்குக் கொண்டுவர முடியாதா?நேரு படேல் விவகாரம்டர்பன் முருகன்பொதிகை தொலைக்காட்சிடாக்டர் ஆர்.மகாலிங்கம்திருமாவளவன் பேட்டிகுப்பைக் கிடங்குமதுரைஆறு காரணங்கள் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!ரயில்வே துறைஏன் எதற்கு எப்படி?சோசைபர் வில்லன்கள்இந்துத்துவர்கள்பாரத இணைப்பு யாத்திரைஅருமண் தனிமம்பாகிஸ்தான் வெற்றிக்குக் கொண்டாட்டம்விடுப்பு மனம்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்இடைநீக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!