பேட்டி, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

கக்கூஸ் பக்கத்தில் சிறுதெய்வங்கள்: சாரு

சமஸ்
19 Mar 2023, 5:00 am
2

படம்: பிரபு காளிதாஸ்

தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

சி.சு.செல்லாவால் 1959இல் ஆரம்பிக்கப்படுகிறது ‘எழுத்து’ இதழ். அங்கிருந்து அடுத்த 50 ஆண்டுகள்; அதாவது 2010 வரைகூட நாம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் செயல்பாடுகள் ஒரு தாளாத தவிப்பையும் தகிப்பையும் கொண்டிருந்திருப்பதை இன்று திரும்பிப் பார்க்கும்போதும் உணர முடிகிறது. ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தையே தலைகீழாக்கிவிட முடியும் அல்லது ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்றிவிட முடியும் என்று நம்பிவிடும் அளவுக்குத் தீவிரமாகவும் மூர்க்கமாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு தகிப்புக்கும் தவிப்புக்கும் பின்னே என்ன கனவு நம்முடைய இலக்கியர்களுக்கு இருந்தது? குறிப்பாக 1975-2000 இடையிலான காலகட்டம் ரொம்பவே கொதிநிலையான ஒரு காலகட்டம்; நீங்கள் ஓர் எழுத்தாளராக எழுந்துவந்த காலகட்டமும் அது. அந்த நாட்களைக் கொஞ்சம் நினைவுகூர முடியுமா?

நீங்கள் கேட்கும் கொந்தளிப்பான காலகட்டத்துக்கு முன்பு, தமிழ் இலக்கியத்தில் நடந்த இரண்டு மகத்தான காலகட்டங்களை நாம் நினைவு கூர வேண்டும். ஒன்று, சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்துகொண்டிருந்த இலக்கியப் பத்திரிகைகள். பாரதியிடமிருந்தே நாம் இதை ஆரம்பிக்கலாம் என்றாலும், 1930களின் ‘மணிக்கொடி’யை முக்கியமான ஒன்றாகச் சொல்லலாம். இலக்கியமும் காந்தியம் எனும் இரு லட்சியவாதங்கள் அதன் பின்னணியிலும் குணாம்சத்திலும் இருந்தது. அந்தக் காலகட்டத்தின் பல பத்திரிகைகளுக்கும் உந்துசக்தியாக காந்திய லட்சியவாதம் இருந்திருக்கிறது என்றாலும், இலக்கிய லட்சியவாதமும் சேர்வது இரு நாக்குத் தீ. பெரிய போராட்டங்களுக்கு மத்தியில்தான் இலக்கிய வேள்விகளை  நடத்தியது ‘மணிக்கொடி’. தமிழில் இலக்கியப் பத்திரிகை நடத்துவது பெருந்துயரம் என்பதை ‘மணிக்கொடி’ ஒரு பாலபாடம்போலச் சொல்லிக்கொடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறலாம். 

அடுத்து, 1960களில் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட ‘எழுத்து’. அதுதான் தமிழின் நவீன இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தொடக்கத்தை உண்டாக்கியது. தமிழ் இலக்கியத்தை நவீனத்துவத்துக்கு நகர்த்திய பாரதிக்கு அடுத்த கட்டமாக ‘எழுத்து’ பத்திரிகையைக் காணலாம். நவீனத்துவத்தின்பால் இலக்கியத்தைக் கொண்டுவந்ததுதான் ‘எழுத்து’ பத்திரிகையின் மகத்தான சாதனை. புதுக்கவிதை இயக்கத்தையும் ‘எழுத்து’தான் ஆரம்பித்துவைத்தது. அதன் மற்றொரு பங்களிப்பு என்னவென்றால், இலக்கியத்தை மற்ற கலைகளின் பக்கம் கொண்டுசென்றது. அதாவது, இலக்கியம் என்றால் கதை, கவிதை என்று மட்டுமே இருந்ததை சினிமா, நாடகம், நடனம், இசை, சிற்பம் என்று பல்வேறு கலைகளின் தாக்கமும் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்பதாக மாற்றியது. இதைச் செய்தவர் வெங்கட் சாமிநாதன். அவரது ‘பாலையும் வாழையும்’ என்ற தொகுப்பு ஒருகாலத்தில் ஒரு புனைவு நூலைவிட அதிசய நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்திருப்பதே ஒரு பெருமையாகக் கருதப்பட்ட காலம் அது. 

நினைத்துப்பாருங்கள். எம்ஜிஆர், சிவாஜி படங்களே சினிமா என்றும், ‘குமுதம்’, ‘விகடன்’ இதழ்களில் வரும் ஜெ ஓவியங்களே ஓவியம் என்றும், மைக்கின் முன்னே ஒவ்வொருவராக வந்து வந்து நின்று பேசும் சபா நாடங்களே நாடகம் என்றும் நம்பிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் வெங்கட் சாமிநாதன் வேறோர் உலகத்தைக் காட்டினார். 

சினிமா என்றால், ‘அமர்காட்’ (ஃபெலினி) என்றும், ஓவியம் என்றால், ‘கெர்னீக்கா’ (பிக்காஸோ) என்றும், நாடகம் என்றால், ரத்தன் திய்யம், இப்ரஹீம் அல்காஸி என்றும், நடனம் என்றால் உதய் ஷங்கர், பிர்ஜு மஹராஜ் என்றும், இசை என்றால் டாகர் சகோதரர்கள், பண்டிட் ஜஸ்ராஜ் என்றும் எங்களுக்கெல்லாம் கற்பித்தவர் வெங்கட் சாமிநாதன் (பிற்காலத்தில் அவர் பிராமண மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடித்து ஓர் இனவாதியாக மாறியது துரதிர்ஷ்டம்! அது மட்டுமல்லாமல் யாரெல்லாம் அவரை வந்து பார்த்து முகஸ்துதி செய்கிறார்களோ அவர்களையெல்லாம் உயர்த்திப் பிடித்து எழுத ஆரம்பித்தார். அவரது வீழ்ச்சி பற்றி ஜெயமோகன் விரிவாக எழுதியிருக்கிறார்.) 

இதற்குப் பிறகு ‘எழுத்து’ போன்று பல பத்திரிகைகள் தோன்றின. அவை சமகாலத் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளுக்குக் காரணமாக அமைந்தன. ‘சதங்கை’, பரந்தாமன் நடத்திய ‘அஃக்’, ஞானக்கூத்தனும் அவரது நண்பர்களும் நடத்திய ‘கசடதபற’, ‘கவனம்’, ‘ழ’, வத்திராயிருப்புவிலிருந்து வந்த ‘யாத்ரா’ என்று நூறு பத்திரிகைகளை உதாரணமாகச் சொல்லலாம். 

சி.சு. செல்லப்பா ‘எழுத்து’ பத்திரிகை நடத்தியது ஒரு சாகசக் கதை போன்றது. தன் பிதுரார்ஜித சொத்துகளை விற்றும், தன் மனைவி கொண்டுவந்த ஏராளமான நகைகளை விற்றும்தான் அவர் ‘எழுத்து’ பத்திரிகையையும், ‘எழுத்து பிரசுரம்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். பத்திரிகையையும் நூல்களையும் தன் தோளில் சுமந்துகொண்டு கல்லூரி கல்லூரியாகச் சென்று விற்றார். அப்படிச் செல்லும்போது திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து ஓய்வு எடுப்பது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தத் திண்ணையைத் தொட்டு வணங்க வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. 

சி.சு.செல்லப்பா ‘எழுத்து பிரசுரம்’ மூலம் கொண்டுவந்த பல நூல்கள் என்னிடம் இருக்கின்றன. பிரசுரமாகி 60 ஆண்டுகள் ஆகியும் அதன் தரம் இன்னமும் மங்காமல் நேற்று வந்த புத்தகம்போல் இருப்பதிலிருந்து அக்காலத்தில் புத்தகப் பிரசுரம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்தத் தரத்தில் இப்போது என்னால் ஒரு புத்தகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. கேட்டால் விலை அதிகம் வைக்க வேண்டி இருக்கும், யாரும் வாங்க மாட்டார்கள், கட்டுப்படி ஆகாது என்கிறார்கள்.

க.நா.சு.வின் கதையும் இதேதான். ‘அஃக்’ நடத்திய பரந்தாமனின் கதையும் இதேதான். சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போல் இவர்களெல்லாம் இலக்கியத்துக்காகத் தம் உயிர் பொருள் ஆவியை விட்டார்கள். 

இவர்களுக்கு என்ன கனவு இருந்தது? சமூகத்தைத் திருத்த வேண்டும் என்ற கனவு இல்லை அது. இவர்கள் எல்லோருமே ஒருவகையில் சமூகத்திலிருந்து அந்நியமானவர்கள்தானே? மேலும், சமூகத்தைத் திருத்த முடியும் என்று கனவு காணும் அளவுக்கு இவர்கள் வெகுளியும் இல்லை. வேறு என்ன விதமான கனவினால் இவர்கள் தம் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்தார்கள்? அவர்களின் கனவு என்ன? நோக்கம் என்ன? ஒன்றே ஒன்றுதான் எனக்குத் தோன்றுகிறது, இலக்கியம்!

இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ் இலக்கியத்தை மீண்டும், சமகாலத்திலும் சர்வதேசத் தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமும் கனவுமாக இருந்தது. அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றியும் அடைந்தார்கள். எந்தவொரு சர்வதேச எழுத்தாளருக்கும் நிகரான படைப்புகளை தமிழ் எழுத்தாளர்கள் இங்கே சாதித்துக்காட்டினார்கள்.

ஆனாலும் இந்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் அரசியல் பிரக்ஞை இல்லாதவர்களாக இருந்தார்கள். உதாரணமாக, புதுமைப்பித்தனின் கதைகளிலேயே உயர்சாதி மனோபாவத்தைக் காண முடியும். அப்போதுதான் ‘பிரக்ஞை’ என்ற பெயரில் ஒரு இடதுசாரி சிறுபத்திரிகை நான்கைந்து பிராமண இளைஞர்களால் தொடங்கப்பட்டது. பிராமண இளைஞர்கள் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அந்தக் குழுவோடு சம்பந்தப்பட்ட ஒருவர்தான் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வீராச்சாமி. இன்னொருவர் அமெரிக்காவில் இப்போது ஒரு தீவிர இந்துத்துவராக இருக்கிறார். 

ஆரம்பத்தில் நான் ‘சாவி’ போன்ற பத்திரிகைகளில்தான் நிவேதிதா என்ற பெயரில் ஜனரஞ்சகக் கதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். பிறகுதான் ‘கணையாழி’ என்ற இலக்கியப் பத்திரிகை எனக்கு அறிமுகம் ஆயிற்று. ‘கணையாழி’யில் என் சிறுகதைகளும் குறுநாவல்களும் பிரசுரமாயின. அப்போது என்னுடைய ஒவ்வொரு கதையையும் பாராட்டி அசோகமித்திரன் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதுவார். அப்போது அவர் ‘கணையாழி’யின் பொறுப்பாசிரியராக இருந்தார். என் குரு ஸ்தானத்தில் இருந்த அசோகமித்திரனிடமிருந்து அப்படிக் கடிதங்கள் வருவது அப்போது எனக்குப் பெரும் உந்துதலை அளித்தது.  

அப்போதுதான் ‘சாவி’யிலோ ‘குமுத’த்திலோ கமல்ஹாசனின் ஒரு பேட்டியில் ‘பிரக்ஞை’ என்ற பத்திரிகை பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் படித்து, பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்து தஞ்சாவூர் பொது நூலகத்தில் ‘பிரக்ஞை’யைத் தேடிப் பிடித்தேன். அதோடு எனக்கும் வணிகப் பத்திரிகைகளுக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று. அந்த வகையில் நான் தீவிர இலக்கியத்தில் நுழைவதற்குக் காரணமாக இருந்த கமல்ஹாசனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அப்போது ‘பிரக்ஞை’யில் நான் வாசித்த ஹோர்ஹே சான்ஹீனஸ் (Jorge Sanjines) என்ற பொலிவிய இயக்குனரின் நேர்காணலை என்னால் மறக்கவே முடியாது. சான்ஹீனஸின் சினிமா என்பது வெறும் சினிமா மட்டும் அல்ல. அது அவருடைய நேரடியான அரசியல் செயல்பாடாகவும் இருந்தது. பிரக்ஞையில் ஜோர்கே சன்ஜயன்ஸ் என்ற தப்பான உச்சரிப்புடன் அவர் பெயர் வந்திருந்தது என்பது முதற்கொண்டு இப்போது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

என்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால், அந்தப் பேட்டியைப் படித்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே சான்ஹீனஸின் மொத்த படங்களையும் எனக்குப் பார்க்க வாய்த்தது. இன்றைய காலகட்டத்தில் அந்தப் படங்கள் நம் கைபேசியிலேயே கிடைக்கக் கூடிய விஷயம். ஆனால் 40 – 50 ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் அமெரிக்க சினிமாவைப் பார்ப்பதெல்லாம் மிகவும் அரிதாக நடக்கக் கூடியது. உலகப் புகழ் பெற்ற ஐரோப்பிய சினிமாவைப் பார்ப்பதற்கே நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். திரைப்பட சங்கங்களும், திரைப்பட விழாக்களும்தான் அப்போது அதற்கான ஒரே வழியாக இருந்தது. 

நான் 1978இல் தில்லி சென்ற உடனேயே அங்கே நடந்த திரைப்பட விழாவில் லத்தீன் அமெரிக்க சினிமா எனக்கு அறிமுகமாகிவிட்டது. மற்ற தேசங்களின் சினிமாவுக்கும் தென்னமெரிக்க சினிமாவுக்குமான வித்தியாசம் என்னவென்றால், தென்னமெரிக்காவில் சினிமா ஒரு நேரடியான அரசியல் செயல்பாடு. உதாரணமாக, ‘பேட்டில் ஆஃப் சீலே’ ஆவணப் படத்தின் படப்பிடிப்பின்போது பினோசெத்தின் ராணுவத்தில் இருந்த அதிகாரி ஒருவர் ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார். அந்தக் கொலையையும் படம் பிடித்தார் ஒளிப்பதிவாளர். அப்போது, அதிகாரி ஒளிப்பதிவாளரைப் பார்த்து “டோன்ட் ஷூட், அதர்வைஸ் ஐ வில் ஷூட்” (படம் பிடிக்காதே; பிடித்தால் சுட்டுவிடுவேன்) என்கிறார். அதையும் படம் பிடிக்கிறார் ஒளிப்பதிவாளர். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொல்லப்பட்டதை நமக்கு அறிவிக்கிறார் படத்தின் இயக்குநர். 

ஆரம்பத்தில் ஆன்மீகத்தில் மூழ்கியிருந்த நான் ‘பிரக்ஞை’ என்ற பத்திரிகையின் மூலமாகத்தான் இடதுசாரித் தத்துவத்தின் பக்கம் வந்தேன். அரசியல் பிரக்ஞை கொண்டவனாகவும் மாறினேன். 

தமிழ்நாட்டில் ‘பிரக்ஞை’க்கு அடுத்து நடந்த ஒரு முக்கியமான கலாச்சார நிகழ்வு என்று ‘படிகள்’ பத்திரிகையின் வரவைச் சொல்லலாம். பெங்களூரில் பேராசிரியர்களாக இருந்த தமிழவன், சிவராமன், கிருஷ்ணசாமி ஆகிய நண்பர்கள் தொடங்கிய பத்திரிகை. 

தமிழ்க் கலாச்சார சூழலில் முதல் முதலில் இலக்கியத்தை சமூகவியலின் பக்கம் திருப்பியது ‘படிகள்’ பத்திரிகை. அதில்தான் நானும் ராஜ் கௌதமனும் முதல் முதலாகக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தோம். நான் சே குவேரா பற்றிய ஒரு நீண்ட கட்டுரையும், அதைத் தொடர்ந்து பிரெஞ்ச் தத்துவவாதிகள் பற்றிய தொடர் கட்டுரையும் எழுதினேன். சமூகவியல், மானுடவியல் என்று இலக்கியத்தின் தளங்கள் விரிந்தது படிகள் மூலம்தான். 

கூடவே ஜெனகப்ரியா வ.புதுப்பட்டியிலிருந்து இலக்கிய வெளிவட்டம் என்ற சிறுபத்திரிகையைக் கொண்டுவந்தார். அதில்தான் நான் ஜான் பால் சார்த்தரின் இருத்தலியல் குறித்தும், அதற்குப் பிறகான சார்த்தரின் மாற்றங்கள் குறித்தும் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினேன். ஞானி, தமிழவன், ராஜ் கௌதமன், நான் ஆகிய நால்வரும் மிக நீண்ட விவாதங்களைத் தொடர்ந்தது இலக்கிய வெளிவட்டத்தில்தான். தமிழவன் ‘படிகள்’ மூலமாக  ‘அமைப்பியல்வாதம்’ என்ற புதிய தத்துவக் கோட்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து நாகார்ச்சுனன், எஸ்.சண்முகம் போன்றோர் அந்த விவாதத்தை இன்னும் விரிவுபடுத்தினார்கள். அவர்கள் ‘வித்தியாசம்’ என்ற பத்திரிகையையும் கொண்டு வந்தார்கள். 

இங்கே இலக்கிய வெளிவட்டம் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் எனக்கு ஊருக்கெல்லாம்கூட இனிஷியல் போடுவார்கள் என்றே தெரிந்தது. அப்போது நான் தில்லியில் இருந்தேன். க.நா.சு. ஒருமுறை என்னிடம், “இலக்கிய வெளிவட்டம் பத்திரிகையை நடத்தும் ஜெனகப்ரியா யார்? அவருடைய தமிழ் பிரமாதமாக இருக்கிறது. பிரெஞ்சுத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்திருப்பார் போலிருக்கிறதே? பேராசிரியராகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.

அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு இலக்கியச் செயல்பாடுகளை கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு க.நா.சு.வின் அந்த வார்த்தைகள் உதாரணம். நானுமே ஜெனகப்ரியாவின் எடிட்டிங், தலையங்கக் கட்டுரைகள் போன்றவற்றைப் பார்த்து மிரண்டு போயிருந்தேன். ஏனென்றால், நான் ஏராளமான தத்துவ நூல்களைப் படித்து எழுதும் கட்டுரைகளையே ஜெனகப்ரியா சிறந்த முறையில் எடிட் செய்ததோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவும் செய்வார்.

அதனால் தில்லியிலிருந்து கிளம்பி அவரைப் பார்ப்பதற்காகவே தமிழ்நாடு வந்தேன். புதுப்பட்டிக்கே போனேனா அல்லது வேறு எங்காவது வைத்து சந்தித்தேனா என்று இப்போது ஞாபகம் இல்லை. பார்த்தால் ஜெனகப்ரியா ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதராக இருந்தார். க.நா.சு. சொன்னதைச் சொன்னேன். வ.என்ற ஊர் இனிஷியல் பற்றியும் கேட்டேன். வாய் விட்டுச் சிரித்தவர் புதுப்பட்டி என்ற பெயரில் பல கிராமங்கள் இருப்பதால் இந்தப் புதுப்பட்டி வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள புதுப்பட்டி என்பதால் அந்த இனிஷியல் என்றார். ‘சரி, என்ன வேலை?’ என்றேன். புதுப்பட்டியில் அவர் ஒரு உடைந்த தையல் மிஷின் வைத்திருக்கிறாராம். அதைக் கொண்டு புது ப்ளவுஸ்களைத் தைக்க முடியாதாம். ஆனால் கிழிந்த ப்ளவுஸ்களுக்கு ஒட்டுப் போட முடியுமாம். அதுதான் அவர் வேலையாம். ஜெனகப்ரியாவுக்கு அப்போதே திருமணமும் நடந்து குழந்தையும் இருந்தது. 

ஜெனகப்ரியாவின் இயற்பெயர் நடராஜன் (அப்போதெல்லாம் பெண் பெயரில் எழுதுவது சிறு பத்திரிகைகள் இடையேகூட மோஸ்தராக இருந்தது! மற்றொரு உதாரணம், கலாப்ரியா!) 

இந்த தியாகக் கதையையெல்லாம் இப்போது நடராஜன் படித்தால் சற்றே எரிச்சல் அடையலாம். ஆனால் இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான மனிதர்களால்தான் சமகாலத் தமிழ் இலக்கியம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. ஜெனகப்ரியா என்ற பெயரில் நடராஜன் கவிதைகளும் நாவலும் எழுதியிருக்கிறார். 

சற்றே யோசித்துப்பாருங்கள், கிழிந்த ப்ளவுஸ்களுக்கு ஒட்டுப் போடும் தொழிலைச் செய்துகொண்டு க.நா.சு. போன்ற ஒரு மேதையே வியந்து பாராட்டும்படி ஒரு இலக்கியப் பத்திரிகையை ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு நடத்திக்கொண்டிருந்த ஜெனகப்ரியாவின் கனவு அப்போது என்னவாக இருந்திருக்கும்? 

இமயமலையில் எத்தனையோ துறவிகள் உடம்பு பூராவும் சாம்பலைப் பூசிக்கொண்டு நிர்வாணமாகத் திரிந்துகொண்டிருப்பார்கள். சே குவேராவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் மந்திரி சபையில் வங்கிப் பொருளாதாரத் துறை கிடைத்தது. அவரோ அதைத் தூக்கியெறிந்துவிட்டு பொலிவியாவின் காடுகளுக்குப் புரட்சி செய்ய வந்தார். இப்படி ஒரு முடிவை எடுக்கும்போது அது எப்பேர்ப்பட்ட முடிவு என்று நாம் உணர்வதற்கு அந்தப் பிராந்தியத்தின் சூழலை இங்கே கொஞ்சம் விளக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

நான் பொலிவியா போயிருக்கிறேன். 14,000 அடி உயரம் உள்ள நாடு அது. மாச்சு பிச்சுக்குப் போகும்போது எப்படியோ தாக்குப் பிடித்துவிட்டேன். அது பகலாக இருந்தது ஒரு காரணம். ஆனால் அன்றைய இரவு 12,000 அடி உயரம் உள்ள குஸ்கோவில் என்னால் மூச்சுவிட முடியாமல் போனது. அன்றைய இரவு முழுவதும் ஆக்ஸியன் சிலிண்டரை வைத்தே மூச்சுவிட்டேன். ஒருகட்டத்தில் வாய் குழறிப் பேச முடியாமல் போனபோது அலுமினியப் பெட்டியில் திரும்பப் போகிறோமோ என்றுகூட நினைத்துவிட்டேன். 

அதனால் மறுநாள் காலையிலேயே விமானத்தைப் பிடித்து சீலேவுக்கு ஓடி வந்துவிட்டேன். அப்போது சே குவேரா பற்றித்தான் யோசனை ஓடியது. கொடும் ஆஸ்த்மாவினால் பீடிக்கப்பட்டிருந்த சேவினால் எப்படி அவ்வளவு உயரமான பொலிவியாவில் சுவாசிக்க முடிந்தது? எவ்வளவு துணிச்சலும் வேட்கையும் இருந்திருந்தால் மனிதர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்! 

அப்படித்தான் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழைப்பை ஏற்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் படிப்பையெல்லாம் விட்டுவிட்டு வந்து பிரிட்டிஷ்காரர்களின் தடியடியை ஏற்றார்கள். மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நேரத்திலும் பின்வாங்கி ஓடாமல் முன்னே முன்னே சென்று தடியடியைத் தங்கள் தலையால் தாங்கினார்கள். பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் போராட்ட முறையைக் கண்டு திகைத்துப் போனார்கள்.

இமயமலையில் அலையும் நிர்வாணத் துறவிகளுக்கும், சே குவேரா போன்ற புரட்சியாளர்களுக்கும், காந்தியின் பேச்சை மந்திரமாக ஏற்று தடியடியைத் தங்கள் தலையிலே வாங்கியவர்களுக்கும் என்னென்ன கனவுகள் இருந்திருக்குமோ அதேவிதமான கனவுகளைக் கொண்டவர்கள்தான் சிறுபத்திரிகையைச் சேர்ந்தவர்களும். இவர்களுக்கெல்லாம் நோக்கம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அவர்களின் தியாகம் ஒன்றுதான். 

வ.புதுப்பட்டியில் நடராஜனைச் சந்தித்த அன்று இரவு அவரை நான் மது அருந்த அழைத்தேன். 1980ஆக இருக்கலாம். குடிப்பதில்லை என்றார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது என்ன பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது என்று நினைத்தேன். சமூக மதிப்பீடுகளுக்கெல்லாம் எதிரானவர்களாயிற்றே நாம் என்றேன்.

அதற்கு நடராஜன் ஒரு பதில் சொன்னார். “நீங்கள் தில்லியிலிருந்து ஒருநாள் வருகிறீர்கள். உங்களோடு குடித்துவிட்டு, இங்கே நான் தனியாக இருக்கும்போது குடிப்பதற்கு காசு யார் கொடுப்பார்? அதைவிட நான் குடிக்கும் பழக்கத்திலிருந்தே தள்ளியிருந்தால் பிரச்சினையில்லாமல் வாழலாம் இல்லையா?”

எனக்கு அன்று ஒரு பாடம் கிடைத்தது. 

ஒருநாள் திருநெல்வேலிக்கு நானும் நண்பர் ஸ்ரீராமும் சென்றிருந்தோம். வேலை முடிந்ததும் பக்கத்திலிருந்த ஒரு கோயிலுக்குச் செல்லலாம் என்றார் ஸ்ரீராம். “கோயிலில் உள்ள தெய்வத்தைப் பார்த்தால் நமக்கு நல்லது நடக்கும்; ஆனால் இன்னொரு சிறுதெய்வம் இருக்கிறது. அந்த சிறு தெய்வத்தைப் பார்ப்பது தெய்வத்தைப் பார்ப்பதைவிட முக்கியமானது. ஏனென்றால், இந்த சிறுதெய்வம் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறது. நன்றி சொல்லிவிட்டு வருவோம், வாருங்கள்” என்றேன். அந்த சிறுதெய்வம் பல ஆண்டுகள் ஒரு சிறுபத்திரிகையை நடத்தியிருக்கிறது.  

அந்த சிறுதெய்வத்தின் வீட்டுக்கு ஒருமுறை தனியாகப் போயிருந்தேன். ஒரே ஒரு அறைதான் வீடு. அந்த அறையிலேயே மண்ணெண்ணெய் அடுப்பு. அதற்குப் பக்கத்திலேயே சாமான் கழுவும் இடம். அங்கே ஒரு குழாய். அந்தக் குழாயில்தான் குளித்தேன். இரவில் தூங்குவதற்கு ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டது. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இரண்டு குழந்தைகளும் நண்பரும் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டார்கள். நண்பரின் மனைவி அடுப்படி அருகில். அறைக்குள் கக்கூஸ் கிடையாது. வெளியே உள்ள முற்றத்தில்தான். தண்ணீரும் வராது. முற்றத்திலேயே இருந்த கிணற்றில்தான் தண்ணீர் இறைத்துக்கொண்டு கக்கூஸுக்குள் போக வேண்டும். கக்கூஸ் வாசலிலேயே ஒரு அம்மாள் அரிசி புடைத்துக்கொண்டிருப்பார். இப்படித்தான் நான் சொல்லும் சிறுதெய்வங்கள் வாழ்ந்தன. 

மூன்று நாள் அந்த நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். இப்படித்தான் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டும் ஊர் ஊராக மற்ற எழுத்தாளர்களைச் சந்தித்துக்கொண்டும் இருந்தோம். எழுத்தாளர்களேதான் பத்திரிகை ஆசிரியர்களும். 

ஓர் இயக்கமாகச் செயல்பட்டது ‘படிகள்’ இதழ். ஆம், ‘இலக்கு’ என்பது ‘படிகள்’ முன்னிறுத்திய பண்பாட்டு இயக்கத்தின் பெயர். ‘படிகள்’ பத்திரிகையிலிருந்து ‘இங்கே இன்று’ என்ற இடைநிலைப் பத்திரிகை வந்தது. அப்போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். பெங்களூரிலிருந்து 50 பிரதிகள் எனக்கு வரும். அதை ரவிக்குமாரின் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்) சைக்கிளில் வைத்து எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கடையாகப் போய் விற்பனைக்குப் போடுவோம். இரண்டு வாரம் கழித்து அடுத்த இதழ் வந்ததும் அந்தக் கடைகளுக்குப் போய் நாங்கள் கொடுத்த அத்தனை இதழ்களையும் அப்படியே வாங்கிக்கொள்வோம். ஒன்றுகூட விற்பனை ஆகியிருக்காது. அப்போது ரவிக்குமார் பாண்டிச்சேரியில் ஒரு வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அடுத்து, ‘படிகள்’ இதழுக்குப் பிறகு ‘நிறப்பிரிகை’. தமிழ்க் கலாச்சார சூழலில் ‘நிறப்பிரிகை’யின் தாக்கம் மிகவும் அதிகம். அ.மார்க்ஸ், ரவிக்குமார் மற்றும் பா.கல்யாணி ஆகியோரால் நடத்தப்பட்டது நிறப்பிரிகை. அதில் இருந்தவர்கள் முன்னாளில் இடதுசாரி இயக்கங்களோடு தொடர்புடையவர்கள். களப்பணி ஆற்றிக்கொண்டிருந்தவர்கள். ஒவ்வொருவர் மீதும் ஏகப்பட்ட போலீஸ் வழக்குகள் இருந்தன. ஆனாலும் மிகத் தீவிரமான அளவில் ‘நிறப்பிரிகை’ மூலம் விவாதங்கள் நடந்தன. 

இன்று கல்வித் துறையிலும் மாற்று அரசியலிலும் சில சிறப்பான மாற்றங்களை நாம் பார்க்கிறோம் என்றால், அதற்கான காரணங்களில் ‘நிறப்பிரிகை’யும் அதன் மூலம் நடத்தப்பட்ட விவாதங்களும் ஒன்றாக இருந்தன. 

மேலே குறிப்பிட்ட ஆளுமைகளில் சிலர் இன்று அதிகாரத்தின் பக்கம் போய்விட்டதையும் நான் வருத்தத்துடன் கவனிக்கிறேன். ஆனால் அப்படி அவர்கள் முன்வைத்த மதிப்பீடுகளிலிருந்து அவர்களே சரிந்துபோனாலும்கூட அவர்கள் கட்டி அமைத்த சிந்தனை மற்றும் அறிவார்த்தத் தளங்களில் ஏற்பட்ட சாதனைகளும் அவற்றின் விளைவுகளும் போற்றுதலுக்கு உரியதாகவே உள்ளன. அக்காலகட்டத்தின் விளைவுகளில் ஒருவன்தான் நானும். நான் இப்போது இருக்கும் இடத்துக்கு மேற்கண்டவர்களுக்குத்தான் நன்றி கூறியாக வேண்டும். 

இலக்கியத் தளத்தில் நடந்த மற்றொரு இயக்கம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’. பத்திரிகையாகவும், பதிப்பகமாகவும், புத்தகம் மற்றும் சிறுபத்திரிகைகளின் விற்பனைக் கூடமாகவும் செயல்பட்டது ‘முன்றில்’. முன்றில் நடத்திய கருத்தரங்குகளும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த முன்றில் விற்பனைக் கூடமும் அக்காலத்திய எழுத்தாளர்களின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள். மத்தியதர வாழ்வின் குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் ரங்கநாதன் தெருவுக்கெல்லாம் ஒருகாலத்தில் போவேன் என்று நான் அப்போது கனவுகூட கண்டதில்லை.  ஆனாலும் முன்றில் கூடத்தில் சக எழுத்தாளர்களை சந்திப்பதற்காக அங்கே நான் தினமும் சென்றுகொண்டிருந்தேன். இதற்கெல்லாம் மையமாக இருந்தவர் மா. அரங்கநாதன்.

தமிழ் இலக்கியத்துக்குப் பணி செய்தவர்களை சிறு தெய்வங்கள் என்று குறிப்பிட்டேன். அப்படி ஒரு சிறு தெய்வம்தான் கலாப்ரியா. ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடந்த பட்டறைகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். நாள் பூராவும் ஒரு தோப்பின் மையத்தில் உள்ள பங்களாவின் உள்ளே கட்டுரைகள் வாசிக்கப்படும், விவாதிக்கப்படும். இரவில் கொஞ்சம் மதுவோடு விடியற்காலை வரை நீடிக்கும் விவாதங்கள். 

இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் சமகாலத்தன்மைக்கும் இவ்விதமான பட்டறைகள்தான் மிகப் பெரும் கிரியா ஊக்கிகளாக இருந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குற்றாலம் பட்டறையை ஆண்டுதோறும் கலாப்ரியா என்ற ஒரே ஒரு மனிதர்தான் செயல்படுத்தினார். இப்படித்தான் கலாப்ரியா நடத்தும் ‘குற்றாலம் பட்டறை’ தொடங்கி ‘காலச்சுவடு’ முன்னெடுத்த ‘தமிழினி மாநாடு’ வரை நடந்தது.  

இதெல்லாம் தவிர தீவிரமான சிறுபத்திரிகைத் தளத்துக்கும், வெகுஜனக் கலாச்சாரத்துக்கும் இடையில் ஒரு பாலத்தை ஏற்படுத்த முயன்றவர்களும் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் கோமல் சுவாமிநாதன். அவர் நடத்திய ‘சுபமங்களா’ மாதப் பத்திரிகைதான் அந்தப் பணியைச் செய்தது. சிறுபத்திரிகை இயக்கத்தில் இருந்த எல்லா குழுக்களையும் அவர்களின் தீவிரமான கருத்து முரண்பாடுகளைத் தக்க வைத்தபடியே ஒன்றிணைக்க முயன்றார் கோமல். அதாவது, அவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு தளத்தை ‘சுபமங்களா’வில் ஏற்படுத்திக் கொடுத்தார். ஒரே இதழில் அ.மார்க்ஸும் எழுதுவார்; ஜெயமோகனும் எழுதுவார். அது ‘சுபமங்களா’வுக்கு முன்னும் நடக்கவில்லை; பின்னும் நடக்கவில்லை. கோமல் சுவாமிநாதன் என்ற ஒரே மனிதரால் நடந்த செயல்பாடு அது. ஆனால், கோமலுக்குப் பிறகு ‘சுபமங்களா’வை எடுத்து நடத்த ஆள் இல்லை. ‘சுபமங்களா’வின் கருத்தரங்குகள் மிகவும் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வுகளாக இருந்தன. 

நீங்கள் சொல்வது சரிதான், கொந்தளிப்பு என்றால் எல்லாமே கொந்தளிப்பு மிகுந்த விவாதங்கள்தான். அப்போது ‘பிரக்ஞை’யில் நான் வாசித்த ஒரு கட்டுரையை இங்கே சொல்லலாம். கீழ்வெண்மணிப் படுகொலையை வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலை நீங்கள் வாசித்திருக்கலாம்; உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டார்கள் என்று குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட அந்தக் கொடுமைக்கு எதிராகக் கொந்தளித்த இந்திரா பார்த்தசாரதி, அந்தப் படுகொலையின் சூத்திரதாரியான கோபாலகிருஷ்ண நாயுடுவை ஆண்மையில்லாதவர் என்று வர்ணித்திருப்பார். நாவலுக்கு ‘பிரக்ஞை’யில் விமர்சனம் வந்திருந்தது. அம்பை எழுதியிருந்தார். “அப்படியானால் எல்லா ஆண்களுக்கும் சாமான் ஒழுங்காக வேலை செய்தால் புரட்சி ஏற்படாது என்று நினைக்கிறாரா இந்திரா பார்த்தசாரதி?”

நான் மிரண்டு போனேன். 

இன்றைக்கு அப்படியெல்லாம் இல்லை என்பது வெளிப்படை. இன்றைய இளைஞர்களுக்கு அன்றைய நாட்களைப் போல சமூகம் சார்ந்த கனவுகள் இல்லையோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. ஒரு விஷயம் தெரிகிறது, இன்று பணமும் புகழும் வந்தால் போதும் என்று பலருக்கும் இருக்கிறது. அந்த இரண்டும் வருவதற்கான ஒரே வழி சினிமா. அதனால்தான் நம்மூரில்  பெரும்பாலானவர்களுக்கு சினிமாவில் வசனம் எழுதுவதோ பாட்டு எழுதுவதோதான் கனவாக இருக்கிறது. ஆனால் அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் சமூகத்தை அவ்விதமாகத்தான் பழி வாங்குவார்கள். வெகுஜன அரசியலில் சேரும் எழுத்தாளர்களையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஒருவர் நூறு புத்தகங்கள் எழுதியும் சமூகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்றால், வெகுஜன அரசியலில் சேர்ந்துதானே சமூகத்தைப் பழி வாங்க முடியும்?

(உரையாடல் தொடர்கிறது, அடுத்த வாரம்…)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


7

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

இலக்கியப் பத்திரிகை நடத்தியவர்களுக்கு சமூகத்தின் சார்பில் ஒரு salute, நன்றி! பத்திரிகை வாங்காத சமூகம் சொல்லும் நன்றியால் எந்தப் பலனும் இல்லை தான். இப்படி அந்த பத்திரிகைகளை எங்களுக்கு யாரும் அறிமுகப்படுத்தவில்லையே!

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

'இலட்சியவாத' காலகட்டம் முடிந்து 'காரியவாத' காலகட்டம் வந்துவிட்டது. 'உரிய முறையில்' லாபி செய்தால் ஆஸ்கர் விருது பெறலாம். 'உரிய முறையில்' பயிற்சி எடுத்தால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். 'உரிய முறையில்' செலவு செய்தால் தேர்தலில் வெற்றிபெறலாம். 'உரிய முறையில்' அணுகினால் ஞானபீடம் கிடைக்கலாம்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

கழிவுகள்அண்ணா ஹசாரேசமஸ் வி.பி. சிங்தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜிமழைநீர்வேலைவாய்ப்பு குறைவுதமிழகத்தில் பள்ளிகள் திறப்புதிறந்தவெளிச் சிறைபகேல் ஆட்சிபுதிய அரசமைப்புச் சட்டம்ரத்த அழுத்தம்கவனம் ஈர்த்த அதிகாரி2024: ஆட்டம் முடிந்துவிடவில்லைகாவிரி வெறும் நீரல்லதிராவிட இயக்கக் கொள்கைகள்எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?குஜராத்தியர்களின் பெருமிதம்புதிய கல்விக் கொள்கைசர்வாதிகார வல்லரசுதேர்தல்பக்கங்களுக்குள் சிக்கித் திணறாத வரலாற்றுப் பெட்டகமலவ் யூ லாலுநீதி நிர்வாக முறைமை மீது அச்சுறுத்தல் வேண்டாம்பாகுபலிமீன் குழம்புதமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்சிவ சேனாதுணைவேந்தர் நியமனம்பஞ்சாப் முதல்வர்பாமயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!