கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 4 நிமிட வாசிப்பு

செமி-கன்டக்டர்கள் தட்டுப்பாட்டை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம், ஏன்?

டி.வி.பரத்வாஜ்
14 Oct 2021, 5:00 am
2

லக அளவில் இன்று ‘செமி-கன்டக்டர்கள்’ என்றழைக்கப்படும் சிப்புகளுக்கு, பெரும் தட்டுப்பாடும், கிராக்கியும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கும், தைவானை சீனா உள் இழுக்க முற்படுவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால், நம்ப முடிகிறதா? ஒரு செய்தியாக, செமி-கன்டக்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கிராக்கியை நீங்கள் தெரிந்துகொள்வதைத் தாண்டி அதன் பின்னணியை இப்படி முழுமையாக அறிந்துகொள்வது இன்று அவசியமானது. ஏன்? ஏனென்றால், ஒரு பொருள் இன்று எப்படி உலகளாவிய தொடர்போடும், வணிகத்தோடும், அரசியலுறவோடும் பிணைந்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது!

செமி-கன்டக்டர்களின் முக்கியத்துவம்

சென்ற நூற்றாண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை எப்படி ஆட்டிப்படைத்ததோ அப்படி ஓர் அத்தியாவசிய இடத்தை நோக்கி செமிகன்டக்டர்கள் சென்றுகொண்டிருக்கின்றன. உலகம் பிணைந்த தயாரிப்பு இது. அதாவது, ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பில் முன்னிலை வகிப்பது அமெரிக்கா. கணிசமாகத் தயாரிப்பது சீனா. ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பின் முக்கிய அம்சங்களான இன்டெர்நெட் புரோடோகால் (சுருக்கமாக ஐபி), வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை அமெரிக்காவிடம் உள்ளன. சிலிக்கான் வேஃபர்களைத் தயாரிப்பது ஜப்பான். அந்த சிலிக்கான் வேஃபர்களில் சர்க்யூட்டுகளைப் பதிக்கும் வேலையைச் செய்வது நெதர்லாந்து. யாருக்கு எவ்வளவு தேவை என்றாலும் எவ்வளவு சிறிது, பெரிது என்றாலும் தயாரித்துக்கொடுப்பதில் கில்லாடி தைவான். இந்தத் துறையில் முன்னோடியான ‘சாம்சங்’ நிறுவனத்தின் நவீன ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பு ஆலை இருப்பது தென் கொரியாவில். 

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம்

மிகக் குறைந்த விலையில் ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பில் வெற்றி கண்ட சீனாவால், நவீன ரக சிப்புகளைத் தயாரிக்க முடியவில்லை. அதற்காக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் உள்ள சில நிறுவனங்களை வாங்க முயன்றபோது, அந்நாடுகள் விழிப்படைந்துவிட்டன. 5ஜி சாதனங்களுக்கு சிப்புகளைத் தயாரிப்பதில் சீனாவின் ‘ஹுவாவே’ நிறுவனம் சாதித்திருந்தாலும்கூட, அந்த சிப்புக்கான வடிவமைப்புக்கு அமெரிக்காவையே நாடி நிற்க வேண்டி உள்ளது.

தன்னுடைய ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்தி, தங்கள் நாட்டு நிறுவனங்கள் ‘ஹுவாவே’ நிறுவனத்துக்கு உதவிவிடாமல் 2019-ல் தடுத்துவிட்டது அமெரிக்கா. பிறகு தைவானின் ‘டிஎஸ்எம்சி’, தென் கொரியாவின் ‘சாம்சங்’ மற்றும் இதர வெளிநாடுகளையும் அமெரிக்க வடிவமைப்பு பயன்படுத்தப்பட்ட சிப்புகளை ‘ஹுவாவே’வுக்கு விற்கக் கூடாது என்று கட்டுப்படுத்திவிட்டது. சிப்புகள் தயாரிப்பில் தனக்குள்ள ஏகபோக உரிமையை அமெரிக்கா இப்படி நிலைநாட்டிவருகிறது.

இப்போது ஏன் தட்டுப்பாடு? 

‘செமி-கன்டக்டர்கள்’ உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி பெரிய அளவில் இருப்பதே தட்டுப்பாட்டுக்குக் காரணம். 2023 வரையில் இந்தத் தட்டுப்பாடு நீடிக்கும் என்றும் கணிக்கிறார்கள். கோவிட் ஊரடங்கின் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்தபடி பணியாற்றும் போக்கு தொடங்கியதும், கணினி - செல்பேசி பயன்பாடு தாறுமாறாக அதிகரித்தது. அதேவேளையில், இந்த செமி-கன்டக்டர் உள்பட எல்லா உற்பத்தி ஆலைகளும் ஊரடங்கின் விளைவாக, கணிசமான காலகட்டம் மூடப்பட்டன. ஆலைகள் திறக்கப்பட்டு, உற்பத்தி தொடங்கிய நிலையிலும் பாதிப்புகள். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் ஏற்பட்ட சேதத்தால் ‘செமி-கன்டக்டர்கள்’ உற்பத்தி அடியோடு நின்றது. ஜப்பானில் ஓர் ஆலையில் தீப்பிடித்ததால் அங்கும் உற்பத்தி நின்றது. இவையெல்லாம் மிகப் பெரிய நிறுவனங்கள். அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சீனாவுக்கு இந்த ‘செமி-கன்டக்டர்’களை விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதிக்கும் முன்பே, இப்படி நேரலாம் என்று ஊகித்து ‘ஹுவாவே’ நிறுவனம் ‘செமி-கன்டக்டர்’களை ஏராளமாக வாங்கிப் பதுக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து பிற நிறுவனங்களும் வாங்கிப் பதுக்கின.

இப்படி எல்லாமும் சேர்ந்து திடீர் தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டன. விளைவாக,  உலகம் முழுவதும் ‘செமி-கன்டக்டர்கள்’ விலை பல மடங்கு அதிகரித்ததோடு இன்னமும் தட்டுப்பாடு நிலவுகிறது. சமாளிக்க உலக நாடுகளும், கார் நிறுவனங்கள் - செல்பேசி நிறுவனங்களும் தடுமாறுகின்றன. 

புதிய ஆலைகளைத் திறந்தால் என்ன?

‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிக்கும் ஆலைகளை இன்று திறந்து, நாளையே தயாரித்துவிட முடியாது. ஒரு மி.மீ. நீளம்கூட இல்லாத இந்த ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பது நுட்பமான வேலை. சிலிக்கான் மீது அடுக்கடுக்காக ரசாயனங்களை அளவாக ஏற்றித்தான் தயாரிக்க வேண்டும். புதிதாகத் திறக்கப்படும் நிறுவனம், ‘செமி-கன்டக்டர்’களைத் தயாரிக்க குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிடும். ஏற்கெனவே உள்ள நிறுவனங்களால் தயாரிப்பை அதிகப்படுத்த முடியுமே தவிர, ஒட்டுமொத்தத் தேவையையும் பூர்த்திசெய்துவிட முடியாது. அதனால்தான் குறைந்தபட்சம் 2023 வரையேனும் இந்தத் தட்டுப்பாடு நிலவும் என்கிறார்கள். 

உலகளாவிய முனைப்பு என்ன?

தென் கொரியா ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பை முன்னகர்த்துவதற்காக 451 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தது. ‘செமி-கன்டக்டர்கள்’ தயாரிப்பு நிறுவனங்களுக்கு 52 பில்லியன் டாலர்கள் மானியம் தருவதாக அமெரிக்கா அறிவித்தது. 2030-க்குள் சிப் உற்பத்தியை மேலும் 20% அதிகரிக்க வேண்டிய ஏற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கியது. தைவானைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நீண்ட காலமாகக் காத்திருந்த சீனா இப்போது தைவானை வளைக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய தரவுகளைச் சேமிப்பதும், எல்லாப் பொருட்களிலுமே தரவுகளை உள்ளிடுவது வழக்கமாவதும் ‘செமி-கன்டக்டர்’களுக்கான தேவையைத் தொடர்ந்தும் அதிகரிக்கத்தான்போகிறது. இத்தகு சூழலில், ‘செமி-கன்டக்டர்கள்’ உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் முக்கியமான இடத்தில் உள்ள தைவானை உள்ளே கொண்டுவருவது தன்னுடைய பொருளாதாரத்தையும், ஆளுகையையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறது சீனா.

இந்தியா என்ன செய்கிறது?  

ஒரு பொருளுக்கு இப்படி உலகளாவியத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன் தேவை நம் நாட்டுக்கும் அதிகமாக இருக்கும்போது, ‘ஏன் அதை நாமே தயாரித்து தன்னிறைவு காணக் கூடாது?’ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. அப்படி ஒரு சிந்தனை இந்த விஷயத்திலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. “சிப்புகளைத் தயாரிப்பதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவு, தயாரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதார வலிமை நம்மிடம் இல்லை என்பது போன்றவற்றைக் கருத்தில்கொண்டு இதை ஒதுக்கிவிடலாம்” என்று இதற்குப் பதில் சொல்கிறார் அஜய் ஸ்ரீவாஸ்தவா. 'செமி-கன்டக்டர்’களைத் தயாரிக்க தொடர் ஆராய்ச்சிகள் முக்கியம். தொடக்கக் காலத்தில் ஆண்டுக்கு 2,000 கோடி டாலர்கள் ஆராய்ச்சிக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும்பாலும் தோல்வியாகவே இருக்கும். இருபதாண்டுகள் முயற்சி செய்தும் சீனத்தால் பெரிய வெற்றி காண முடியவில்லை. எனவே பணம் வீணாவது குறித்து கவலைப்படாத நாடு மட்டுமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Askar ALI .S   3 years ago

அறிவார்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களை முன்னெடுத்து வரும் அருஞ்சொல் இதழுக்கு வண்ணப்பலகை மின்னிதழின் வாழ்த்துக்கள் !

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Prabu Muruganantham   3 years ago

தமிழில் செமி-கன்டக்ர்கள் தயாரிப்பும்.அதன் அரசியல் குறித்து எழுதியமைக்கு நன்றி. ஒரு சிறிய திருத்தம். அமெரிக்கா அதிகம் வைத்திருப்பது செமி-கன்டக்ர்கள் சார்ந்த இன்டலக்சுவல் பிராபர்டி (ஐபி). இன்டர்நெட் புரோடாக்காள் என்பது வேறு.

Reply 14 0

Login / Create an account to add a comment / reply.

வாக்குப்பதிவுமனத்திண்மைபொதுத் துறைமதுரைஉலக சினிமாமதிய உணவுத் திட்டம்இலவசமா? நலத் திட்டமா?நினைவேற்றல்தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?நான்தான் ஔரங்கசீப்மாநில நிதிநிலை அறிக்கைகருங்கடல் மோஸ்க்வாஏழை எளியோர்எதிர்க்கட்சிகள் ஒற்றுமைபுரட்சிகர்சான் வைலிதேசிய குடும்ப நலம்: நல்லதுமதுபானக் கொள்கைமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்சமஸ் புதிய தலைமுறைப் பேட்டிஉள்ளாட்சிகள் கையில் பள்ளிகள்அமெரிக்கா - தைவான் உறவுகிழக்கு மாநிலங்கள்பொருளியல்மோடியின் கவர்ச்சியில் தேய்வுபியூரின்பாசிதேர்தல் ஜனநாயகம்நாற்காலிஅராத்து

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!