கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
எந்த அளவுக்கு வெற்றி பெறும் ராகுலின் நடைப்பயணம்?
காட்சி-1
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு தொடர்பான ஒரு தமிழ்த் தொலைக்காட்சி விவாதத்தில், வழக்கத்துக்கு மாறாக ஒருவர் நிபுணர் குழுவுடன் அமர்ந்திருந்தார். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். பணமதிப்பிழப்பு தொடர்பாக ஆதரித்தும், எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்தவர்களை இடைமறித்து, அந்த ஆட்டோ ஓட்டுனர் சொன்னார், “அய்யா நீங்க இருக்கற இந்தியா வேற. நாங்க இருக்கற இந்தியா வேற… நீங்க பொருளாதார வளர்ச்சி / வீழ்ச்சி பேசிகிட்டு இருக்கீங்க… நாங்க, தினமும் சம்பாத்தியம் சரியா இல்லாம வெறுங்கையோட வீட்டுக்குப் போயிகிட்டு இருக்கோம். தினசரி செலவுக்குக் காசு கேட்கும் மனைவிக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல!”
காட்சி-2
கரோனாவின் பிடியில் இந்தியா மூழ்கியிருந்த காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், உணவுக்கு வழியின்றி, தங்கள் சொந்த ஊருக்குக் கால்நடையாகச் செல்லத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் சிரமங்களை அறிந்துகொள்ள அவர்களுடன் நடந்து சென்ற சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஒரு முக்கியமான அவதானிப்பை முன்வைக்கிறார்.
"ஒருகாலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள், பெரும்பாலும் புளிய மரங்கள் நின்றிருக்கும். சாலையில் நடந்து செல்லும் / சைக்கிளில் செல்லும் மனிதர்களுக்கு அந்த நிழல் ஆசுவாசமாக இருக்கும். களைப்பாக இருக்கையில், ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தோ / படுத்தோ ஆசுவாசம் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர முடியும். ஆனால், இன்றைய நெடுஞ்சாலைகளில் மரங்கள் அருகிவிட்டன பாலைவனம்போல ஆயிரக்கணக்கான மைல்கள் மொட்டையாக நிற்கும் யாருக்கானவை?"
காட்சி-3
பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி நகரலான காலகட்டம். 2019 செப்டம்பர். பெரும் சமூக அழுத்தத்தின் விளைவாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்புக் கொள்கையை அறிவிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதார நிபுணர்கள் பலரும் கோரியதுபோல, மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டங்களை அவர் அறிவிக்கவில்லை. மாறாக, தனியார் நிறுவனங்களுக்கான வருமான வரியை 8% வரை குறைத்தார். இதனால், வருடத்துக்கு ரூ.1.7 லட்சம் கோடி அளவுக்கு நிறுவன உரிமையாளர்களுக்கு, இந்தியாவின் 1% மக்களுக்கு, அதிக லாபம் கிடைக்கும் வழி உருவானது. இந்த லாபத்தைத் தொழிலதிபர்கள் பொருளாதாரத்தில் முதலீடு செய்வார்கள். அதனால், பொருளாதாரம் வளரும் என்பதே நிதியமைச்சர் அறிவித்த கொள்கையின் அனுமானம், இந்த ரூ.1.7 லட்சம் கோடி. இந்த வரிச்சலுகை அரசின் வருமானத்தைப் பாதித்தது.
அடுத்து வந்த மாதங்களில் இருந்து அரசு, பெட்ரோலியப் பொருட்களின் மீதான செஸ் என்னும் மத்திய அரசுக்கு மட்டுமே செல்லும் வரியை அதிகரித்து, கிட்டத்தட்ட வருடம் ரூ.3 லட்சம் கோடி அளவுக்குப் பொதுமக்களிடம் இருந்தது வசூலிக்கத் தொடங்கியது. இதன் மூலம் அரசு தனக்கு ஏற்பட்ட வருமான இழப்பைச் சரி செய்துகொண்டது.
சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவின் 1% மக்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் வகையில் வரிச்சலுகையை அதிகரித்துவிட்டு, அதை ஈடுகட்ட இந்தியாவின் 99% மக்களிடம் இருந்தது எரிபொருள் வரி என்னும் பெயரில் வசூல் செய்யும் கொள்கை.
பணமதிப்பிழப்புக் காலத்தில், அதை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘திட்டமிட்ட கொள்ளை; சட்டப்பூர்வமான சுருட்டல்’ (Organised Loot; legalised Plunder) என விமர்சித்திருந்தார். அதற்கான சரியான உதாரணம் இதுதான்.
காட்சி-4
வேளாண்மை மாநிலங்களின் கீழ் வரும் ஒரு துறை. ஆனால், 2020ஆம் ஆண்டு, பாஜக அரசு, வேளாண் துறையைச் சார்ந்து மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள், தனியார் துறையில் இருந்து பெரும் முதலீடுகள் வேளாண் துறைக்கு வருவதை ஊக்குவிக்கும் எனவும், அதனால் உழவர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் அரசு கூறியது. ஆனால், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேச மாநில விவசாயிகள், இதன் விளைவாக, அரசு கொள்முதல் நின்று போகலாம் என அச்சம் கொண்டனர்.
அந்த அச்சத்துக்குக் காரணம் இருந்தது. அரசுக் கொள்முதல் செய்யும் பஞ்சாப்பில், உழவருக்கு நெல்லுக்கு விலை கிலோவுக்கு 19.25 ரூபாய் கிடைக்கையில், அரசுக் கொள்முதல் இல்லாமல், தனியார் வணிகர்கள் கொள்முதல் மட்டுமே உள்ள பிஹாரில் நெல்லுக்கு விலை 10 ரூபாய்கூடக் கிடைக்கவில்லை.
எனவே, அரசின் சட்டங்களின் ஒரு பகுதியாக, வேளாண் பொருட்கள் தொடர்ந்து குறைந்தபட்சக் கொள்முதல் விலையிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அப்படி ஒரு வாக்குறுதி தரப்பட்டால், தனியார் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் என்பதையறிந்த அரசு, அந்த வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாகத் தரத் தயங்கியது.
எனவே, உழவர்கள் சட்டத்தை எதிர்த்து, தில்லியை முற்றுகையிட்டுப் போராடினர். சில நாட்களில் பிசுபிசுத்துப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போராட்டம் ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்தது. உழவர் சங்கங்கள் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். உலக வரலாற்றில், மிக நீண்ட காலம் நடந்த சத்தியாகிரகப் போராட்டம் இதுவாகத்தான் இருக்கும்.
பாஜக அரசு தம் பிடியில் இருக்கும் ஆதரவு ஊடகங்கள் மூலம் எதிர்கொள்ள முயன்றது. போராடுபவர்களை இடைத்தரகர்கள், தேச விரோதிகள், காலிஸ்தானிகள் என்றெல்லாம் சித்தரிக்க முயன்றது. ஆனால், போராட்டம் நிற்கவில்லை. கடுங்குளிர், மழை என்றெல்லாம் பாராமல், போராடினார்கள். போராட்டத்தில் கிட்டத்தட்ட 700 பேர் இறந்துபோனார்கள்.
இறுதியில் உத்தர பிரதேச தேர்தலில் இதன் பாதிப்புகள் இருக்கும் என அச்சமுற்ற அரசு, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது.
என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சிக்கு வந்த இந்த எட்டாண்டுகளில் ஒட்டுண்ணி முதலாளித்துவம் பெரிய அளவில் வளரத் தொடங்கியது. நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் பலவும் இந்தியாவின் சக்தி வாய்ந்த சில முதலாளிகளின் செல்வங்களாக மாறிவருகின்றன.
இந்தியாவின் 1% மக்களைக் கொண்ட உயர் வர்க்கத்திடம் இன்று இந்தியாவின் செல்வத்தில் 70% உள்ளது. இந்தியாவில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புகள் ஒவ்வொன்றாக இந்த 1% மக்கள் வசம் சென்றுகொண்டிருக்கின்றன. நேர் எதிராக, பணமதிப்பிழப்பு, அதன் பின்னர் வந்த புதிய ஜிஎஸ்டி வரிச் சட்டம் போன்றவை காரணமாக, இந்தியாவில் முறைசாராத் தொழில்கள், சிறு / குறுந்தொழில்கள் தொடர்ந்து நசிவைச் சந்தித்துவருகின்றன. 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், இந்தியாவின் ஏழ்மை அதிகரித்துவருகிறது. வேலையின்மை, குறிப்பாக ஊரக வேலையின்மை அதிகரித்துவருகிறது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. இதைப் பொதுவெளியில் விவாதித்து, தீர்வுகளை நோக்கி அரசைச் செலுத்த வேண்டிய ஊடகங்கள் அரசின் மேலாதிக்கம் காரணமாகச் செய்வதில்லை.
பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் சமூகம், இன்று வாழ்வாதாரம் குறித்த பெருங்கவலைகளோடு உள்ளது. வேலைவாய்ப்பின்மை இளைஞர்களைக் கொந்தளிப்பு நிலையில் வைத்திருக்கின்றன. வழக்கமான ராணுவத்தில் வழக்கமான ஆட்சேர்ப்பு முறைக்கு மாறாக, ‘அக்னி வீர்’ என்னும் ஒப்பந்தமுறைத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த முயன்றபோது வட மாநிலங்களில் எழுந்த வன்முறை இதற்கான மிகச் சரியான உதாரணம்.
இந்தியாவில் வாழும் 90% மக்கள், வருடம் 3 லட்சத்துக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்துவருகிறார்கள். அரசுத் திட்டங்கள் தீட்டும் தளங்களில், நீதிமன்றங்களில், ஊடகங்களில், உயர்கல்வி நிலையங்களில், பொதுவெளிகளில் அவர்கள் இல்லை. அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அந்தப் பொதுவெளிகளில் உரிய முக்கியத்துவத்துடன் பேசப்படுவதே இல்லை.
போலி பொதுஜனம்!
இந்தியாவில் பொதுஜனம் என்பதற்கான பிம்பம், உண்மையில் மத்திய / உயர் மத்திய வர்க்கத்துக்கானது. ஆர்.கே.லக்ஷ்மண் உருவாக்கிய பொதுஜனம், இந்தியாவின் உயர் 10% வருமான தளத்தில் வசிப்பவர். ‘ஆம் ஆத்மி’ (சாதாரண மனிதன்) அரசியல் கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் தொடங்கி அடுத்த நிலைத்தலைவர்கள் அனைவரும் பொருளாதார உயர் தளத்தைச் சேர்ந்தவர்களே. ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில், தன்னை ‘ஸ்டுப்பிட் காமன் மேன்’, என அழைத்துக்கொள்ளும் கதாபாத்திரம் உண்மையிலேயே உயர் மத்திய வர்க்கம்.
இந்த வர்க்கம் உருவாக்கும் அரசியல் சொல்லாடல்கள் வழிதான் இந்தியாவின் திட்டங்கள் உருவாகின்றன. இவர்கள் முன்வைக்கும் சமூக அரசியல் சொல்லாடல்களுக்கு மாற்றான வாழ்வியலைக் கொண்ட மக்கள் இன்று அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. கரோனா காலத்தில் உழைப்பாளிகள் கால்நடையாகச் சென்றுகொண்டிருந்தபோது, பல மாநில அரசுகள், தினசரி உழைக்கும் நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக்கும் திட்டங்களை ஆலோசிக்கத் தொடங்கின.
அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப இயங்கும் இந்த மத்திய வர்க்கம் நிரம்பியிருக்கும் ஊடகங்கள் வெட்டி விவாதங்களை உருவாக்கி மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. யார் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என முடிவெடுக்கின்றன. இவர்கள் நலனே மொத்த இந்திய மக்களின் நலன் என்பதாய் ஒரு பிம்பம் வலுவாக உருவாகியுள்ளது.
உண்மையில், இந்தப் பொருளாதாரத் தளத்துக்கு வெகு கீழேதான் இந்தியாவின் 90% மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள்தாம் இந்தியாவின் உண்மையான பொதுஜனம். இன்றும் ஒரு வாரம் வேலை இல்லையெனில், அவர்கள் வீடுகளில் பொருளாதாரப் பிரச்சினை தொடங்கிவிடும். வீட்டில் ஒருவருக்கு ஏதேனும் பெரும் வியாதியோ பிரச்சினையோ வந்தால், குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும். நல்ல கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் தூரத்துக் கனவுகள். இந்தப் பட்டியலில், குறு விவசாயிகள், உழைப்பாளிகள், தலித்கள், பழங்குடியினர் போன்றவர்கள் அடங்குவார்கள். இந்தத் தளத்திலும் பெண்களின் நிலை இன்னும் கீழே உள்ளது.
இந்த நிலை மாற ஒரே வழி, ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்ரீதியாக ஒன்றிணைத்து, அவர்களின் குரலை மக்கள் மன்றத்தில் வைப்பதுதான். இந்த வகையில்தான் ராகுல் காந்தி முன்னெடுக்கும் ‘பாரத் ஜோடோ யாத்திரா’, (இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்) இந்திய அரசியலில் பெரும் முக்கியத்துவம் பெறகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை, 12 மாநிலங்கள் வழியாக அவர் மேற்கொள்ளவிருக்கும் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணமானது மக்கள் இடத்தில் உருவாக்கியிருக்கும் உற்சாகமும் உத்வேகமும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான்.
நடைப்பயணத்தின் முக்கியத்துவம்
இத்தகைய நடைப்பயணத்தின் மிக முக்கியமான அம்சம், சாமானிய மக்களின் வாழ்வைத் தலைவர்கள் மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ள இவை உதவும் என்பதும், அவர்களுடைய அபிலாஷைகளை அரசியல் தளத்தின் மையத்துக்குத் தலைவர்களால் கொண்டுவர முடியும் என்பதும்தான்!
மக்களைப் பொருத்த அளவில், சிதறிக் கிடப்பவர்களை ஒருங்கிணைக்கும் சக்தியை இத்தகு நடைப்பயணங்கள் உருவாக்கும். முக்கியமாக, மக்களோடு இணைந்து இயங்கும்போது மக்களும் தலைவர்களை அருகில் சந்தித்து உரையாட முடியும். இப்படியான உரையாடல்கள்தாம் சமூகத்தின் ஏழை விளிம்புநிலை மக்களை, அவர்களின் பிரச்சினைகளை அரசியல் சொல்லாடல்களின் மத்திக்குக் கொண்டுவர முடியும்.
காங்கிரஸ் கட்சி, இன்று மாநில அரசியல் கட்சிகளால், பல முக்கியமான மாநிலங்களில் புறந்தள்ளப்படும் ஒரு பலவீனமான அரசியல் சூழலில் இருக்கிறது. இதன் காரணம், கட்சிக்கான வலுவான கட்டமைப்பும், தேர்தலை எதிர்கொண்டு வெல்லும் உணர்வுரீதியான பிணைப்பும் கொண்ட களப்பணியாளர்களும் இல்லாமை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், சட்டீஸ்கர், கர்நாடகம். கேரளம் போன்ற சில மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளையே நம்பியுள்ளது. இது காங்கிரஸின் முக்கியமான பலவீனம்.
இதுபோன்ற யாத்திரைகள், வலுவிழந்துபோன பகுதிகளில், மக்களுடனான பிணைப்பைப் புதுப்பித்துக்கொள்ளவும், சோர்வடைந்திருக்கும் கட்சியின் அபிமானிகளை உற்சாகப்படுத்தவும் பெருமளவு உதவும். தங்கள் தலைவர் 2,500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவரல்; நம்முடன் இருப்பவர் என்னும் அண்மை உணர்வை இது தரும். கட்சி நிர்வாகிகளுக்குப் புதுத் தெம்பைத் தரும். நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இப்படி ஒரு தெம்பைப் பெறுவது ஜனநாயகத்துக்கும் தெம்பைத் தரும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் அனைத்து மனிதர்களுக்குமான சமத்துவத்தை வழங்குகிறது. வயது வந்த அனைவருக்கும் சம மதிப்புள்ள வாக்குரிமையை வழங்குகிறது. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு, மக்களுக்கு சமுக, பொருளாதார, அரசியல் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்பு அது முழுமையாகச் சாத்தியப்பட்டிருக்கிறதா எனில், இல்லை என்பதே பதிலாக இருக்கும். மோசத்திலும் மோசமாக சமூகரீதிப் பிளவுகள் மேலும் அதிகரித்திருக்கின்றன. நம்மில் ஒரு பகுதி சகோதரர்களை வெறுப்பரசியல் முற்றிலுமாக இரண்டாம் குடிமக்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
ராகுலின் நடைப்பயணம் எதன் நிமித்தம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், தேர்தல் அரசியலைப் பின்தள்ளி நாடு எதிர்கொள்ளும் பிரதான எதிரியை அது குறிவைக்கிறது. இந்தப் பயணத்தின் வழி அவர் கொண்டுவர முற்படும் 'ஒருங்கிணைப்பு'க்கான அறைகூவல் ஒருவகையில், ஒட்டுமொத்த தேசமும் தன்னை மறுசீரமைத்துக்கொள்வதற்கான அழைப்பாகிறது. மீண்டும் இந்திய அரசியல் சாமானிய மக்களையும், அவர்கள் குரலையும் நோக்கித் திரும்புவதற்கான சூழலை உண்டாக்குகிறது.
ராகுலின் நடைப்பயணம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று ஆளும் பாஜக சார்ந்த கருத்துருவாக்கர்களும், ஊடகங்களும் எழுதுவதை, பேசுவதைப் பார்க்க முடிகிறது. முழு வெற்றியைப் பற்றி அப்புறம் பேசலாம்; தன்னுடைய நோக்கில் எத்தனை சதவீதம் வென்றாலும், அது ராகுலுக்கும், காங்கிரஸுக்கும் மட்டும் அல்லாது மொத்த தேசத்துக்கும் வெற்றிதான். ஏனெனில், இந்தப் பயணத்தின் வெற்றி அதன் நல்ல நோக்கத்தில் இருக்கிறது!
2
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 2 years ago
2014இல் மோடி இப்படித்தான் உருவகப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் வென்றால் முதல் விருந்தினர்கள் அம்பானிகளும், அதானிகளும் ஆகத்தான் இருப்பார்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.