தலையங்கம் 4 நிமிட வாசிப்பு

படுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்

ஆசிரியர்
19 Oct 2021, 4:49 am
3

அதிக எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் பெரிய ஏமாற்றத்தைத் தருவதாக முடிந்திருக்கிறது. தேசிய அளவிலான பின்னடைவோடு, ஆளும் மாநிலங்களிலும் பெரும் உட்கட்சிக் குழப்படிகளை காங்கிரஸ் சந்தித்துவரும் நிலையில், ஒரு பெரிய மாற்றத்துக்குக் கட்சி தயாராக வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் ஒலிக்கின்றன; கட்சியின் தலைவர் பதவியில் ஏற்படும் மாற்றமானது இவற்றில் முதன்மையானது.

நடந்து முடிந்திருக்கும் கூட்டம் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் மோசமாக இருக்கின்றன. “காங்கிரஸ் முழு நேரத் தலைவராக நான் நீடிக்கிறேன்” என்று கட்சியின் தலைவர் சோனியா பேசியிருக்கிறார். “கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2022 செப்டம்பர் வாக்கில் நடைபெறும்; தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதை ஏற்பதும், நிராகரிப்பதும் ராகுலின் விருப்பம்” என்று பொதுச்செயலர் வேணுகோபால் கூறியிருக்கிறார். ராகுல் தன்னுடைய இரண்டாண்டு மௌனத்தை மேலும் தொடர்கிறார்.  

காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், “கட்சிக்கு யார் தலைவர்? முழு நேரத் தலைவர் இல்லாத நிலையில் யார் முடிவுகளை எடுக்கிறார்கள் எனத் தெரிவது அவசியம். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இதுகுறித்து விவாதிக்க வேண்டும்” என்று சமீபத்தில் வெளிப்படையாகவே பேசியிருந்தார். காங்கிரஸில் மாற்றங்களை வலியுறுத்தும் - ஊடகங்களால் ‘ஜி-23’ என்றழைக்கப்படும் - 23 தலைவர்களுமே  முழு நேரத் தலைவர் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். 

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே சோனியாவின் பேச்சைப் பார்க்க வேண்டி இருக்கிறது. “கட்சியின் தலைவர் நான். நீங்கள் அனுமதித்தால், ‘நான்தான் முழு நேரத் தலைவர்’ என்று கூறுவேன். எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவர்களை வரவேற்கிறேன். கட்சியின் மூத்த அங்கத்தினர்கள் என்னிடம் ஏதேனும் கூற வேண்டும் என்று விரும்பினால், தாராளமாக நேரடியாகத் தெரிவிக்கலாம். ஊடகங்கள் மூலமாக என்னுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள் நேர்மையான, சுதந்திரமான விவாதங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது, இங்கே நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் முடிவுகளை ஏன் பொதுவெளியில் பேசுகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார் சோனியா.

நியாயமான சில வருத்தங்களை சோனியாவின் பேச்சு வெளிப்படுத்தினாலும், ஏன் பொதுவெளியில் பேச வேண்டிய நிலை காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுக்கு ஏற்பட்டது என்று அவர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ‘முழு நேரத் தலைவர்’ எனும் பிரயோகம் ஏன் உருவாயிற்று? காங்கிரஸுக்கு மிகச் சங்கடமான காலத்தில் தலைமைப் பொறுப்பேற்று, அளப்பரிய சேவையை அவர் கட்சிக்கும், நாட்டுக்கும் கொடுத்திருக்கிறார் என்றாலும், ஒரு காலகட்டம் நிறைவுக்கு வருவதை உணர்ந்தவராகவே மகன் ராகுலிடம் கட்சித் தலைமையை ஒப்படைத்தார். 

ராகுல் 2019 தேர்தல் தோல்வியின் விளைவாகப் பதவியிலிருந்து விலகியதும், ஓராண்டு காலம் தலைவர் பதவியில் ஆள் இல்லாமல் காங்கிரஸ் இயங்கியதும் வரலாற்றுக் கொடுமை. இதன் பின்னர் மீண்டும் பொறுப்பேற்ற சோனியா முதுமையோடு, உடல்நலமும் குன்றி, செயல்பாடுகள் குறைந்தவராகவே வெளிப்படுகிறார். சோனியாவுடனும், ராகுலுடன் தொடர்புகொள்வதில் நிலவும் சிரமங்களை இடைப்பட்ட காலகட்டத்தில் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். இன்று தலைமை மாற்றம் கோருபவர்கள் எவரும் கட்சிக்கோ, நேரு குடும்பத்துக்கோ எதிரிகள் இல்லை. அவர்களும் விசுவாசிகளாக அறியப்பட்டவர்கள்.

ஆளுங்கட்சியாக பாஜகவை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அமருமா என்கிற கேள்வி போய், பலமான எதிர்க்கட்சி என்ற இடத்துக்கேனும் நகருமா என்கிற இடத்துக்கு சறுக்கியிருக்கிறது காங்கிரஸ். பாஜகவை எதிர்த்துச் செயலாற்றும் பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸுடனான தம்முடைய முரண்களை எல்லாம் மறந்து, ‘எதிர்க்கட்சிகளின் தலைமை’ எனும் இடத்தை அதற்கு அளிக்க முன்வந்தபோதும் அதை வசப்படுத்திக்கொள்ள காங்கிரஸால் முடியவில்லை. இன்று காங்கிரஸ் மீது எல்லாக் கட்சிகளும் நம்பிக்கை இழக்கின்றன.

திரிணமூல் காங்கிரஸ் வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகளின் கூட்டு மையம் எனும் இடத்தை நோக்கி நகரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கோவாவில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பெலய்ரோ திரிணமூல் காங்கிரஸுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அஸாமிலும், திரிபுராவிலும், வங்கத்திலும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களை உள்ளே கொண்டுவரும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டிருக்கிறது. மம்தா பானர்ஜியின் கணக்குகள் எடுபடுமா என்பது தனி விவாதம். எதிர்க்கட்சிகள் இடையேயான இத்தகு நகர்வுகள் காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தும்.

எதிர்க்கட்சிகளில் இன்றும் நாடு தழுவிய 19.5% ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான். இப்படி எதிர்க்கட்சிகள் இடையிலேயே பிளவுகள் வலுப்பது தொடர்ந்தால் நிலைமை என்னவாகும் என்பதற்கு சமீபத்திய குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சியம். காந்தி நகரில் 41/44 இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கிறது; காங்கிரஸின் ஓட்டுகளை ஆஆக பிளந்தது இதற்கு முக்கியமான காரணம். தமிழ்நாடு, பிகார், மகாராஷ்டிரம்போல நாடு முழுக்க விரிந்த கூட்டணியை அமைக்க முடியும் என்றால் மட்டுமே காங்கிரஸால் பொருட்படுத்தத்தக்க ஓர் எதிர்ப்பை தேசிய அளவில் பாஜகவுக்கு உண்டாக்க முடியும். அதற்கு காங்கிரஸ் முதலில் தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வெளிப்படுத்தும் செய்திகள் என்னவென்றால், இன்னும் சீரமைப்புக்கு அது தயாராகவில்லை என்பதும், ராகுல் எந்த வியூகமும் இல்லாமல் கட்சியை சீரழிய விடுகிறார் என்பதும்தான். ராகுலின் நியாயமற்ற மௌனம் தொடரும்பட்சத்தில் அது காங்கிரஸை மட்டும் அல்லாது தேசத்தையும் படுகுழியில் தள்ளிவிடக் கூடும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

MBM.BATHURUDHEEN    3 years ago

ராகுல் காந்தி ராஜினாவின் காரணங்கள் g23நண்பர்களில் தீர்க்கப்பட்டதா? மாநில செயற்க்குழு சரியாக சிந்தனை செயல் வாக்காளர்களை கொண்டு தரப்படவேண்டும். காரியக்கமிட்டியில் செயல் திட்டங்களை சமர்ப்பிக்காமல் சோனியா காந்தியை குறை கூறுவதை முறையாக நிராகரித்துவிட்டார். கட்சியில் உத்வேகம் தமது குடும்பத்தால் மட்டுமல்ல இதர தலைவர்களாலும் உறுவாவதை ராகுல் விரும்புவதாக தெரிகின்றது. மாற்றங்கள் துடிப்புடையதாக மாறவேண்டும் நாங்கள் துடிப்புடன் உள்ளோம் என பிரியங்கா, ராகுல் நிறுபனம் செய்கின்றனர். அடிமட்ட எழுச்சி உறுவாவதை எப்படி கொண்டுவருவது அதன் சாத்தியங்கள் தலைமையை தொகுப்பில் வைத்துள்ளது. அதில் இருந்து மீண்டுவரவேண்டும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

It is saddening to read the article, but it is the reality. Any democratic minded, secular minded person would feel the same. Even to imagine an India without Congress (Mr Modi's declared intention) is frightening. Leadership crisis in the Congress Party should come to an end to save the country from catastrophe!.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   3 years ago

குடும்ப சொத்தாக வளர்த்த கட்சிகளின் நிலைமை எல்லாம் இப்படித்தான் முடியுமா?

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

உணவுத் தன்னிறைவெறுப்பரசியல்ஜெயமோகன் அருஞ்சொல் சமஸ்சூப்பர் ஸ்டார்பஞ்சாப் விவசாயம்மண்புழு நம் தாத்தாஅரசியல் கட்சிகள்செங்கோல் ‘கதை’யை வாசித்தல்மாதவிலக்குமேயர் பிரியாபி.ஆர். அம்பேத்கர்மகப்பேறுஅரபுஒரு கட்சி ஜனநாயகம்வட கிழக்கு மாநிலம்சைக்கோபாத்பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாelection உப்புப் பருப்பும்வெளியேற்றம்அஜயன் பாலா கட்டுரைதான்சானியா: சுற்றுலா தலங்களும்ஆறு விதிகள்துர்காமுரசொலி கருணாநிதிகாருண்யம்இஸ்ஸாதிருப்புமுனைகற்பிதங்கள்கண்காட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!