தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

மேலும் ஜனநாயகப்படட்டும் புத்தகக்காட்சிகள்

ஆசிரியர்
17 Dec 2022, 5:00 am
2

படம்: பிரபு காளிதாஸ்

மிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகக்காட்சிகள் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் அரசு சார்ந்த அமைப்பு ஒன்றிடமிருந்தே வெளிப்பட்டிருப்பதை முக்கியமான சுட்டலாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. ‘சென்னை புத்தகக்காட்சியில் 10% அரங்குகளையேனும் தலித்துகள் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில வாரியம் பரிந்துரைத்திருப்பது அர்த்தபூர்வமான இடையீடு. 

தமிழ்நாட்டின் முக்கியமான அறிவுசார் அமைப்புகளில் ஒன்றான ‘பபாசி - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ தன்னளவில் சீர்திருத்திக்கொள்வதற்கும் அடுத்துவரும் காலகட்டத்துக்கு அமைப்பைச் செழுமைப்படுத்தி நகர்த்துவதற்குமான வாய்ப்பாக  இதைக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்படி நடக்கும் முக்கியமான புத்தகக்காட்சிகள் பலவற்றிலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் புத்தகக்காட்சிகள்  வெற்றிகரமாக நடப்பதற்கும், புத்தகக்காட்சிகள் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாவதற்கும் சென்ற காலங்களில் ‘பபாசி’ கொடுத்திருக்கும் உழைப்பு போற்றுதலுக்கு உரியது. 

அரசு உள்பட சாத்தியப்பட்ட எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்தே ‘பபாசி’ இந்தப் புத்தகக்காட்சிகளை நடத்துகிறது. குறிப்பாக, 800+ அரங்குகளுடன் பல லட்சம் வாசகர்கள் வந்து செல்லும் ரூ.15 கோடி விற்பனை மதிப்பைக் கொண்ட நாட்டின் பெரிய புத்தகச் சந்தையாக சென்னைப் புத்தகக்காட்சியை அது வளர்த்தெடுத்திருக்கிறது. இதற்காக எவ்வளவு ‘பபாசி’ பாராட்டத் தக்கதோ அதே அளவுக்கு, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களுக்கு முகங்கொடுக்காமல், அமைப்பைக் கெட்டித்தட்டிப்போக வைப்பதற்காக அது விமர்சிக்கத் தக்கதும் ஆகிறது.

பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் புத்தகக்காட்சிகள் ஒரு பெரும் சந்தை என்றாலும், வெறும் விற்பனைக்கான தளமாக மட்டுமே அவற்றைச் சுருக்கிட முடியாது. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பதில் ஆரம்பித்து குழந்தைகளுக்கு அறிவுலகத்தை அறிமுகப்படுத்துவது வரை ஏராளமான செயல்பாடுகளோடு புத்தகக்காட்சிகள் பிணைந்திருக்கின்றன. மிக முக்கியமாக புத்தகக்காட்சியானது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. புத்தகம் என்பது ஓர் அறிவுக் கருவி. 

தமிழ்நாட்டில் ஓராண்டில் பத்தாயிரம் புத்தகங்கள் வெளியாகின்றன என்றால், ஒரு சமூகம் அந்தக் குறிப்பிட்ட ஓராண்டில் எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறது, அதன் சிந்தனை எந்தத் தளங்களையெல்லாம் மையமிட்டிருக்கிறது, நம்முடைய அக்கறைகள் ஒளிரும் இடங்களும் இருளும் இடங்களும் என்னென்ன என்பதை வெளிப்படுத்தும் குறிப்பான்களாகவும் இந்தப் புத்தகங்கள் திகழ்கின்றன. அப்படியென்றால், இந்தச் சமூகத்தின் பல்வேறு முயற்சிகளையும் கொஞ்சமேனும் ஒரு புத்தகக்காட்சி பிரதிபலிக்க வேண்டும். 

இங்கே நடப்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மூத்த அங்கத்தினர்கள் இந்த அமைப்பையும் புத்தகக்காட்சிகளையும் தம்முடைய கட்டுத்திட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, விற்பனை மதிப்பு அதிகரிக்கிறது, ஊடகக் கவனம் அதிகரிக்கிறது, வெளியிலிருந்து கிடைக்கும் உதவிகள் அதிகரிக்கின்றன, சந்தையின் மதிப்பு வளர்ந்துகொண்டே இருக்கிறது; ஆனால், சங்கத்தில் புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கையோ, புத்தகக்காட்சியில் ஒதுக்கப்படும் அரங்குகள் எண்ணிக்கையோ இந்த வளர்ச்சிக்கு இணையானதாக இல்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?  ‘சந்தையை நாமே பங்கிட்டுக்கொள்ளலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?’ என்ற குரல்கள் சங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேட்கின்றன.   

தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அறிவுலகம். ஒரு சமூகத்தின் சிந்தனையும் மொழியும் வேகமாக மாறுகின்றன. புதுப்புதுப் போக்குகள் உருவாகின்றன. புத்தகங்கள் இதை வேகமாகப் பிரதிபலிப்பவை. தங்களுக்குள் உள்வட்டம் அமைத்து சங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் சிலர் கையில் வைத்திருப்பதன் வழி இப்படியான அமைப்பின்  போக்கைக் கட்டுப்படுத்த எண்ணினால் சகலமும் நொறுங்கும் என்பதை யாரோ சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.

சந்தை மையப் பார்வையையே நம்முடைய புத்தகக்காட்சிகள் பெருமளவில் பிரதிபலிக்கின்றன; ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக அவற்றை மாற்ற வேண்டும் என்ற வாசகர்கள் - எழுத்தாளர்கள் எண்ணங்களை முற்றிலுமாக அவை புறந்தள்ளுகின்றன. புதிதாக உருவாகிவரும் பதிப்பகங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; சமூகத்தின் பல்வேறு தரப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்; புத்தகங்களையும் வாசிப்பையும் வளர்த்தெடுக்க மேலும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை உள்ளடக்க வேண்டும்... இப்படியான குரல்கள் நீண்ட காலமாக ஒலிக்கின்றன. 

சாதாரண அமைப்புகள், பொது நிகழ்ச்சிகளில்கூட இன்று பல தரப்புப் பிரதிநிதித்துவம் தார்மிகக் கடமையாகக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் அறிவுசார் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றான புத்தகக்காட்சி எப்படி அந்தக் கடமையைப்  புறக்கணிக்க முடியும் என்ற கேள்வியைக்கூட இதை நடத்துபவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை. இப்போது கேள்வி அரசுசார் அமைப்பு ஒன்றிலிருந்தே வந்திருக்கிறது. ‘அரசின் உதவியோடு நடத்தப்படும் ஒரு நிகழ்வில் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவது அவசியம் இல்லையா? எங்கே பிரதிநிதித்துவ சமத்துவம்’ என்பதே அந்தக் கேள்வியின் அடிநாதம். 

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும் அளவுக்கு மோசமான நிலையில் சங்கத்தைத் தள்ளியிருக்கிறோமே என்று இப்போதேனும் ‘பபாசி’யின் நிர்வாகிகள் உணர வேண்டும். வெறுமனே சமூகம் சார் பிரதிநிதித்துவமாக மட்டும் இதை அர்த்தப்படுத்தாமல் புத்தகங்களில் துறைசார், பதிப்பாளர்களில் வகைசார் பிரதிநிதித்துவமாகவும் பார்க்க வேண்டும். இதை ஒரு சங்கடமாகக் கருதாமல் சங்கத்தைப் புனரமைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பாகக் கருதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசுக்கும் இந்த விஷயத்தில் பொறுப்பு உண்டு. பல்வேறு வகைகளிலும் புத்தகக்காட்சிகளுக்கு அரசு உதவுகிறது. அந்த வகையில் மக்கள் பணம் செலவிடப்படும் இடங்களில் ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்ட வேண்டியது அதன் கடமை. அரசும் சங்கமும் கூடி ஆலோசிகட்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை முதலாக அரங்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான நிர்ணயம் வரை நம்முடைய புத்தகக்காட்சிகளை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படட்டும். 

கூடுதல் வண்ணங்களோடு வரவிருக்கும் புத்தகக்காட்சிகள் நடக்கட்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4

2

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

avargal unmaigal   1 year ago

இனிமேல் புத்தக திருவிழாவை அரசு சார்பில் தமிழ்துறை ஏற்று நடத்த முயல வேண்டும்

Reply -1 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   1 year ago

The South India Book Sellers and Publishers Association should have a relook at its functioning, especially the aspects relating to member admission and to the Book Fairs being organized at various places. Thanks to the present State Government for deciding to conduct book fairs in all districts, there is a silent revolution going on in Tamil Nadu with the initiatives of the respective district level administration in coordination with the above Association, book sellers, publishers and local organizations , There are districts, where book fairs are being conducted for the first time like Karur, Virudhunagar and even there one could see enthusiastic visitors and book-lovers thronging the stalls in large numbers. School children are being encouraged to visit the fairs, the yeomen step that will help to inculcate reading habit among up-coming generation. Bapasi, on its part should make best use of the emerging opportunities by broadening its thinking and allowing new members and be fair in allocating stalls in fairs. There are reports that some new book sellers and publishers had tough time to get membership in the Association and to get stalls allocated in fairs. In this background, one could understand the need of the State SC/ST Commission to write to the State Government to ensure social justice.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சங்க இலக்கியம்பங்குச் சந்தைவிமான நிலையங்கள்அதிருப்திகள்மாமியார் மருமகள்பால் தாக்கரேசமஸ் - பிரசாந்த் கிஷோர்ராஜீவ் காந்திமனப்பாடக் கல்விசமஸ் அருஞ்சொல்அருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிஅக்னிபத்தமிழவன் தமிழவன்பொருளாதாரக் கொள்கைலத்தீன் அமெரிக்க இலக்கியம்கல்விச்சூழல்நீராருங் கடலுடுத்தஅன்பு உள்ளங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகுரும்பிதி டெலிகிராப்சுர்ஜீத் பல்லா கட்டுரைஎம்.என்.ஸ்ரீனிவாஸ்ஜி ஜின் பிங்எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?கன்னட இலக்கியம்ஜப்பான் புதிய திட்டம்தீமைவெடிப்புகள்சில முன்னெடுப்புகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!