தலையங்கம் 2 நிமிட வாசிப்பு

இந்திய அரசே, ஜொமட்டோவைக் கவனி!

ஆசிரியர்
21 Oct 2021, 5:00 am
4

சமூகவலைதளங்களில் ஒரே நாளில் சூடான விவாதமாகி முடிந்திருக்கும், ‘ஜொமெட்டோ விவகாரம்’ வழியே நுண்ணுணர்வுள்ள எந்த ஓர் அரசும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக இந்திய அரசுக்கும், அரசுசார் பொது நிறுவனங்களுக்கும் இது முக்கியமான ஒரு செய்தி.

சென்னையைச் சேர்ந்த விகாஸ், ‘ஜொமெட்டோ’ நிறுவனத்தின் வழியே உணவை ஆர்டர் செய்திருந்தார். அந்த ஆர்டரில் குறிப்பிட்ட ஓர் உணவு அவருக்கு வந்து சேரவில்லை. விகாஸ் எவ்வளவு முயன்றும், அதற்கான தொகையை ‘ஜொமெட்டோ’ நிறுவனத்திடமிருந்து பெற முடியவில்லை. இதற்கான காரணமாக ‘ஜொமெட்டோ’ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் தெரிவித்தது, உணவக உரிமையாளருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதாகும்.

தமிழ்நாட்டில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியான அந்த ஊழியர், இந்த மாநிலம் சார்ந்து  பணியாற்ற தனக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணரவில்லை. விகாஸுக்கும் அந்த ஊழியருக்கும் இடையிலான உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தாலும், ‘உணவக உரிமையாளருக்கு ஆங்கிலம் தெரியாதது பிரச்சினை இல்லை; மாறாக தமிழ் தெரிந்த ஒருவரை ‘ஜொமெட்டோ’ வேலையில் அமர்த்தியிருக்க வேண்டும்’ என்பதை அந்த ஊழியரிடம் தெரிவிக்கிறார் விகாஸ். இதற்கு அந்த ஊழியர் அளித்த பதில்தான் பிரச்சினையின் மையம் ஆனது: “இந்தி நம் தேசிய மொழி. நீங்கள் சின்ன அளவுக்காவது இந்தியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம் இல்லையா!”

இந்த விஷயத்தை ட்விட்டரில் விகாஸ் எழுதியதும், அது பரபரப்பாகப் பரவியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, செந்தில்குமார் இருவரும் இதில் விகாஸுக்கு ஆதரவாகப் பேசிய பிறகு, தேசிய அளவிலான விவாதமாக இது உருவெடுத்தது. ‘ஜொமெட்டோவை நிராகரிப்போம்’ எனும் ஹேஷ்டேக் பரவிய வேகத்தையும், நிலைமை மோசமாவதையும் உணர்ந்த ‘ஜொமெட்டோ’ நிறுவனம் இதற்காக வருத்தம் தெரிவித்ததுடன் தமிழில் தன்னுடைய சேவைகளுக்கு உத்தரவாதம் அளித்தது. சம்பந்தப்பட்ட ஊழியரைப் பணியிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்த அந்நிறுவனம், ”இத்தகு பணிநீக்கம் தேவையற்றது” என்ற கருத்து சமூகவலைதளங்களில் பரவியபோது அவரை மீண்டும் பணியில் அமர்த்துவதாக அறிவித்தது. பின்னர் அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் ஒரு புலம்பலை வெளியிட்டார். “சேவை மைய ஊழியர் செய்த ஓர் அறியாதப் பிழை, தேசியப் பிரச்சினை ஆகியிருக்கிறது. இப்போதிருப்பதைவிட இந்த நாட்டுக்கு சகிப்புத்தன்மை என்பது நிறைய இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள், மொழி சம்பந்தமான புரிதல்களோ, மாநிலப் பிரச்சினைகளோ அறியாதவர்கள். இதில் யாரைக் குறை சொல்வது?” என்ற அந்தப் புலம்பலோடு பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

இந்த ஒட்டுமொத்த கதையிலும் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள், ‘ஜொமெட்டோ’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற ஒரு வாசகம்: “உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்!” மேலும், இந்த விஷயத்தில் அந்நிறுவனம் அடுத்தடுத்த மேற்கொண்ட உடனடித் தொடர் நடவடிக்கைகள், எதிர்வினைகள். கொஞ்சம் போதாமைகள் இருக்கலாம்; துல்லியமாக மேற்கண்ட நடவடிக்கைகளின் வழி ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளிப்படுத்தியது, ‘மக்களுடைய உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்!’

இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வுகளுக்கு மட்டும் அல்லாது, ஊழியர் நீக்கம் தேவையற்றது என்ற குரல்களுக்கும் அது உடனடியாக செவி சாய்த்ததும், தன்னுடைய முடிவை உடனடியாகத் திருத்திக்கொண்டதும் மிகுந்த  பாராட்டுக்கு உரியதாகும். சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமியர் ஒருவர் தனக்கான உணவை எடுத்து வருகிறார் என்பதை செல்பேசியில் கண்டவுடன், ‘அந்த உணவை வாங்க மாட்டேன்; இந்துக்களுக்கு இந்துக்களைக் கொண்டே உணவை வழங்க வேண்டும்’ என்று இந்து மத வெறியர் ஒருவர் பிரச்சாரத்தில் இறங்கியபோதும், அவருக்கும் மதவெறிக்கும் எதிராகவும், அந்த இஸ்லாமிய ஊழியருக்கு ஆதரவாகவும் உடனடியாக ‘ஜொமெட்டோ’ நிறுவனம் எதிர்வினையாற்றியதை இங்கே நினைவுகூரலாம். இத்தகு நடவடிக்கைகளின் பின்னணியில் வியாபார நலன்கள், சமூகத்தின் தார்மிக அழுத்தங்கள் எல்லாம் இருந்தாலும்கூட நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி, எப்போது நம்முடைய அரசும், அரசுசார் நிறுவனங்களும் இந்த உணர்திறனைப் பெறும்?

இந்திய அரசமைப்பில், மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகாரபூர்வமாகவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் களம் உண்டு என்றால், அது மொழி. ஒரு குடியரசாகக் கட்டமைக்கப்படும் காலம் தொட்டு மொழி சமத்துவத்துகான குரல்கள் இங்கே வலியுறுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்வருகின்றன. இரண்டு இட்லி வாங்கும்  ஒரு தனியார் நிறுவனத்திடம், ‘என் மொழியில் நீ பேசு!’ என்று சேவையைப் பெற முடியும் நம்மால், அரசு நடத்தும் ரயில் நிலையம், அஞ்சலகம், வங்கி தொடங்கி பள்ளிக்கூடங்கள், போட்டித் தேர்வுகள், பணி வாய்ப்புகள் எங்கும் சேவையைப் பெற முடியவில்லை என்றால், அதற்குப் பின்னணியில் உள்ளது அரசினுடைய ஆதிக்கவுணர்வும், தடித்தனமும் அன்றி இயலாமையோ, திறனின்மையோ இல்லை. இந்திய அரசிடம் குடி கொண்டிருக்கும் இந்த இந்தி ஆதிக்கவுணர்வுதான் தன்னியல்பாக அந்த இந்தி ஊழியரிடம் வெளிப்பட்டிருக்கிறது; இன்றைக்கும் நாட்டின் கணிசமான இந்தி பேசும் பிராந்தியத்தினரிடமும் வெளிப்படுகிறது. இத்தகு விஷயங்கள் வழியே மக்கள் தாங்கள் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள் என்று சொல்லலாம். நுண்ணுணர்வைப் பழகிக்கொள்ள விரும்பும் ஓர் அரசானது தம்முடைய மக்களை எப்படி ஆள வேண்டும் என்பதையும் இதன் வழி கற்கலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   3 years ago

மிகச் செம்மையான கட்டுரை! //இரண்டு இட்லி வாங்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம், ‘என் மொழியில் நீ பேசு!’ என்று சேவையைப் பெற முடியும் நம்மால், அரசு நடத்தும் ரயில் நிலையம், அஞ்சலகம், வங்கி தொடங்கி பள்ளிக்கூடங்கள், போட்டித் தேர்வுகள், பணி வாய்ப்புகள் எங்கும் சேவையைப் பெற முடியவில்லை என்றால், அதற்குப் பின்னணியில் உள்ளது அரசினுடைய ஆதிக்கவுணர்வும், தடித்தனமும் அன்றி இயலாமையோ, திறனின்மையோ இல்லை// - இந்த வரிகளை எழுத இதழாளருக்கும் / வெளியிடப் பதிப்பாளருக்கும் பெரும் துணிச்சல் தேவை. அதுவும் இன்றைய காலக்கட்டத்தில். தோழர் சமசு அவர்களைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். ‘இந்து தமி’ழிலிருந்து ஓய்வு பெற்றதும் புதுமையாக வேறு முயற்சியில் இறங்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார். இதோ ‘அருஞ்சொல்’ மலர்ந்திருக்கிறது. தோழருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

மொழி ஓர் உணர்வுபூர்வமான பிரச்சனை. ஒன்றிய அரசு தான் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி அல்லது சமஸ்கிருதம் சார்ந்த பெயர்களைச் சூட்டுவது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் அந்தப் பெயரின் பொருள் சார்ந்த ஆங்கிலப் பதத்தை அல்லது அம்மாநில மொழியில் வெளியிடுவதே இல்லை. இதற்கு முன் அரசிடம் இவ்வளவு தடித்தனம் (கட்டுரையில் காணப்படும் பிரயோகம்) இருந்ததில்லை. அதுபோல அரசு பொதுத்துறை வங்கிக் கிளைகளில், நான் செல்லும் கிளைகளில், வேற்றுமொழிக்காரர்கள் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. அது வாடிக்கையாளர் மற்றும் வங்கி ஊழியர் இருவருக்குமிடையேயான தொழில்சார் உரையாடலையும் பாதிக்கிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

srinivas venkat   3 years ago

தமிழகத்தில் இந்தி ஆதரவும், எதிர்ப்பும் அரசியல் ரீதியாக மட்டுமே பேசப்படுகிறது. இதனால் தான் தமிழர்களிடம் இவ்வாறெல்லாம் பேச முடிகிறது. தமிழகத்தில் இந்தி வேண்டாம் என்றால் எந்த விதத்திலும் அதை அறியும் வாய்ப்பு இருக்க கூடாது. ஆனால் அவ்வாறு இல்லை. மனைவி கையால் சாப்பிடும் வழக்கம், தன் இருப்பிடம் அருகே உள்ள கடைகளில் உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் எல்லாம் போய், இன்று நகரின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடுவேன் என்ற தன் வழக்கத்தை மாற்றிக் கொண்டதால் தான் இது போன்ற நிறுவனங்களால் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது. அரசு அரசு சார்ந்த நிறுவனங்கள் தமிழை புறக்கணிக்கும் போது அதை எதிர்க்க துணிவு இல்லாமல் பயந்து சாகிறோம் என்பது தான் உண்மை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Dhumi   3 years ago

எந்த அரசாங்கம் மாறினாலும் இந்தி என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றனர்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

நிலவில் 'தங்க' வேட்டைநெருக்கடிநிலைபயிர்கள் மக்கள்மார்ட்டென் மெல்டால்ஆரியர் - திராவிடர்ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரையஷ்வந்த் சின்ஹாமத அரசியல்தம்பிஅரசுகளுக்கிடையிலான அணையம்இலக்கியவாதிசோடாபிஹார்சோஷலிஸம்சமையல் கூடம்கே.அண்ணாமலைமுதியவர்கள்அயோத்தி கோவிலால் முடிவுக்கு வந்துவிடுமா குடியரசு?கீர்த்தனைகுறுங்காவியம்நேரு காந்திஆசை கவிதைசெய்தி சேனல்மண்டல் அரசியல்உலகம்ஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?தமிழர்மொழிப் போராளிகள்டிம் பார்க்ஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!