கட்டுரை 3 நிமிட வாசிப்பு

ஒரு பயணம், ஒரு வாழ்க்கை, ஒரு செய்தி

எஸ்.அப்துல் ஹமீது
27 Oct 2021, 5:00 am
1

ஹெம்லி கோன்சலஸ். க்யூபா - அமெரிக்க பின்புலம் கொண்டவர். கல்லூரிப் படிப்பு முடித்து அமெரிக்கா மியாமி நகரில் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டுவந்த ஹெம்லி, 2008-ல் உலகளாவிய பொருளாதார நெருக்கடிநிலை ஏற்பட்டபோது ஒரு மனமாற்றத்துக்கு ஆளாகிறார். ஏதேனும் ஒரு தொண்டு ஊழியத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சுயதேடலில் ஈடுபட்டவருக்கு இந்தியா தெரிகிறது.

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா சேவை அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்கிறார் ஹெம்லி. ஆனால்  அவருக்கு அது மனநிறைத் தரவில்லை. சில மாதங்களிலேயே அங்கிருந்து விலகுகிறார். ‘இந்திய ஏழ்மையைப் பண உதவி மூலம் ஒழித்துவிட முடியாது. கல்விதான் அதற்கு நிரந்தரத் தீர்வு’ என்ற முடிவுக்கு வருகிறார். சொந்த ஊர் திரும்புகிறார்.

2010-ல் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறார். இம்முறை புதிய திட்டம் அவரிடம் இருக்கிறது - ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளைத் தேடிச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பேசிக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்கிறார். ஆனால், அவர்கள் சில நாட்களிலே பள்ளியிலிருந்து நின்றுவிடுகின்றனர். வழக்கமான கல்விமுறை இப்படி முறையாகப் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு சரிபட்டுவருவதில்லை எனும் விஷயத்தை உணருகிறார்.

விளையாட்டுச் சூழலுடன் கூடிய ஒரு கல்விமுறையைத் திட்டமிடுகிறார். அதன்படி விளையாடிக்கொண்டே படிக்கிறார்கள் குழந்தைகள். ஒரு வருஷம் இப்படிப் போகும். பள்ளிக்கூடம் அன்றாடம் வருவது பழக்கமானவுடன் எல்லோர்க்குமான பள்ளிகளில் சேர்த்துவிடுகிறார். கூடவே இளைஞர்கள் - தன்னார்வலர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். கல்லூரி மாணவர்களும்கூட மாலை நேரங்களில் வீடு சென்று குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கின்றனர்.

இப்போது இப்படிச் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. குழந்தைகளுக்குப் பொருளாதாரரீதியாக உதவவும் வேண்டியிருக்கிறது. ‘ரெஸ்பான்ஸிபிள் சேரிட்டி’ என்று ஓர் அமைப்பை நிறுவி, அதன் வழி இந்தக் காரியங்களை முன்னெடுக்கிறார். ”கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை குழந்தைகளின் கல்விக்கு நாங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்கிறோம்; கூடவே, அவர்களின் பெற்றோருக்குமான வேலைவாய்ப்புகளுக்கும்கூட உதவுகிறோம்” என்கிறார்.

அவ்வப்போது மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அவ்வமைப்பினர் பேசுகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களுடன் நல்ல உறவைக் கடைப்பிடிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், கடன் உதவிகள் வழங்குகின்றனர். 

இப்படியாக, ‘ரெஸ்பான்ஸில் சேரிட்டி’ அமைப்பானது கொல்கத்தாவைத் தாண்டி, மும்பை, புணே நகரங்களுக்கும் விரிவடைகிறது. “500 பேருக்கு உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவதைவிட, அதில் 40 பேருக்கு கல்வி வழங்கினால், அவர்களது தலைமுறையே ஏழ்மையிலிருந்து விடுபடும்” என்கிறார் ஹெம்லி.

பசி போக்குவதும் முக்கியம், கல்வியும் முக்கியம். அப்படித்தானே!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 years ago

ஹெம்லி செய்வது நல்லது: ஹெம்லிக்கு. இந்த மாதிரியான முயற்சிகள் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் பொருட்படுத்தத் தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. வெகுஜன மாற்றம் வர வேண்டுமானால், அரசின் தலையீடு இருக்க வேண்டும். எது முன்னேற்றம் என்பது குறித்து சர்ச்சை வளர்ந்தவாறு உள்ளது. திருவேறு தெள்ளியராதல் வேறு என்கிறார் வள்ளுவர். திரு மட்டுமே போதும் என்கிறது நவ பொருளாதாரக் கொள்கை. ஏறத்தாழ அனைத்து இந்தியக் கட்சிகளும் இந்த கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் கூட விகிதத்தில்தான் மாறுபடுகின்றனர். அடுத்த வீட்டுக்காரன் புது கார் வாங்கி விட்டான்; வீட்டை விற்றாவது நான் புது கார் வாங்க வேண்டும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற பெயரில் தாராளமயமாக்கல் - தனியார்மயமாக்கல் - உலகமயமாக்கல் செய்தாயிற்று. எல்லாம் தனியார் மயம். சேவை வழங்குவதில் வெறும் பெயரளவிற்கு அரசு இருந்து வருகிறது. தரமான கல்வி வழங்குதல் (வெகுஜன புரிதலின் படி) கடந்த நாற்பது வருடங்களாக தனியாரிடம் இருந்து வருகிறது. தற்போது கல்வி வழங்குதல் சேவை அல்ல; வணிகம். இதில் ஹெம்லி போன்றோரின் தலையீடுகள் வறண்ட நதியில் யாரோ தெரியாமல் கொட்டும் ஒரு சொம்பு தண்ணீரைப் போல. ஹெம்லி தன்னுடைய குற்ற உணர்வை துடைத்துக் கொள்ள நிச்சயம் இந்த முயற்சி உதவும். அரசிற்கு இது குறித்து குற்ற உணர்வு சர்வ நிச்சயமாக இருக்கும். அதை துடைத்துக் கொள்ள அரசு முன்வரும்போது இந்தியா எழ்மையிலிருந்து விடுபடலாம்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

யூட்யூப் சேனல்ஃபெட்எக்ஸ்இரட்டைக் காளை சின்னம்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்நியமன நடைமுறைமுற்போக்கானது: உண்மையா?குற்றவியல் சட்டங்கள்வாதம்இந்து மதம்வாழ்க்கை வரலாறுமுன்னோடி மாநிலம்கலைக் கல்லூரிசோவியத் தகர்வுகேசவானந்த பாரதி தீர்ப்புபுதிய தொழில்கள்செலவழுங்குதல்பணிமனைகள்பெலகாவிதிப்பு சுல்தான்ஒரே தேசம் – ஒரே தேர்தல்இரு தலைவர்கள் மரபுகாஷ்மீரம்குடல்வால் அழற்சிசாஸ்த்ரீய இசைதேசிய மாநாட்டுக் கட்சிசாரதா சட்டம்விமான விபத்துஒன்றிய அரசுவழிகாட்டிபத்மினி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!