கட்டுரை, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

பூனி

தூயன்
28 Nov 2021, 5:00 am
0

தமிழின் சமீபத்திய வருகைகளில் முக்கியமானது, தூயன் எழுதி வெளிவந்திருக்கும் ‘கதீட்ரல்’ நாவல். தூயன் தன் எழுத்துகளில் அடுத்த அடியை எடுத்துவைக்கவில்லை; மாறாக ஒரு பெரிய தாவல் தாவியிருக்கிறார். தூயனின் எழுத்துகளை வாசகர்களுக்குப் பகிரும் வகையில் ‘அருஞ்சொல்’ இதை வெளியிடுகிறது!

 

பெண் தன் முழு அன்பையும் தரத் தயாராகவே இருக்கிறாள். அதைப் பூரணமாகப் பெற்றுக்கொள்ளும் திடம் வாங்கும் பிறிதொன்றிடம் கிடையாது. அதாவது, பிறிதொன்றால் அதை முழுமையாக ஏற்கும் அமைப்பு இயற்கையாகவே அவ்வுயிர்க்கு வாய்க்கப் பெற்றிருக்கவில்லை.

ஆண் (ஒரு பரிதாபமான பிறவி) அன்பைச் சுயத்தில் அடங்கிய உணர்வுகளில் (ஆசை, கோபம், அதிகாரம்.) ஒன்றாகப் பார்க்கிறான். மாறாக, பெண் அன்பிலிருந்தே அத்தனையையும் உருவகிக்கிறாள். ஆண் தூலத்திலிருந்து சூட்சமத்தைக் கற்பனை செய்வதில், கற்பனையை அறியமுடியாத ஒரு மாயக் கருவியாக வைத்துக்கொள்கிறான் என்றால் பெண்ணிடம் அது கிடையாது. அவளால் இரண்டுக்கும் இடையில் ஊடுபாய முடியும். அவளுக்குத் தூலமும் சூட்சுமமும் ஒருசேர நிகழும். காரணம் ஆண் வளர்க்கப்படுகிறான். பெண் தன்னை வளர்த்துக்கொள்கிறாள்.

அதனால்தான், பெண்ணின் அன்பை முழுவதாகப் பெற்றுக்கொள்ள மிகப் பெரிய சூழ்ச்சிகள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் இருக்கும் என ஆப்ரஹாம் எண்ணினான்.

ஒவ்வொரு நாளும் அந்திப் பொழுதில் சூரியன் நெற்றிக்கு எதிரில் இருக்கையில் (சிலசமயம் மேகம் மறைத்து அடையாளம் அனுமானமாகத்தான் இருக்கும்) இருவரும் கண்ணாடிக்குள் நுழைவார்கள். தங்களுக்கான வேலைகளை முடித்துவிட்டு அதற்குள் தயாராகிவிட வேண்டும். நேரத்தைத் தவறவிட்டால் பிறகு அடுத்த நாள்தான். சில சமயங்களில் பேசிக்கொண்டிருக்கையில் அந்தி சாய்ந்து வெறும் நிழலுருவம் மட்டும் தெரியும். அவளுடைய சமிக்ஞைகள் தெளிவில்லாமல் அதன் அழகான நிருத்தியங்களைக் காண முடியாது என்றாலும் வெறுமே அவளுடைய பிரசன்னத்தை மட்டும் கண்ணாடிக்குள் நிறுத்திக்கொண்டு நான் சொல்வது புரிகிறதா உனக்கு என்பதற்கு ஆமாமெனத் தலையசைத்தபடி நிற்பான்.

சந்திப்பு தவறிய நாட்கள் நின்று போன கடிகாரமாகப் பொழுதுகள் மாதிரி அப்படியே நகராமல் துடித்துக்கொண்டிருக்கும். அந்தியன்றிப் பிற பொழுதுகளில் கண்ணாடி முன் நிற்கக் கூடாதென அவந்திகை எச்சரித்திருந்தாள். அதாவது, இருவரில் யார் கண்ணாடியைப் பார்த்து நின்றாலும் அது யாருக்கேனும் சந்தேகத்தைக் கொடுத்துவிடும். ஆனால், அவனைப் பொறுத்தவரை அப்படி ஓராள் மட்டும் பிரதி பிம்பமற்ற கண்ணாடியை நோக்கும்போது அதொரு பொருள், இரண்டடி சட்டம், ரஸம் தடவிய வஸ்து, அந்தரங்கத் திரை, செயலிழந்த மந்திரக்கோல், வெறும் விளையாட்டுப் பொருள், யாரோ வேண்டாமென்று எறிந்திருக்கலாம் இப்படிப் பலவித எண்ணங்களில் தன்னைக் காட்டி மனதில் வைத்திருக்கும் மாயத்தன்மையை மங்கச் செய்யக்கூடும் என்கிற அச்சம் ஆப்ரஹாம்க்கு இருந்தது. அது உண்மையில் மாயத்தன்மையானதா?

ஆமாம். அன்றலர்ந்த மலர்களை அறியும் வண்டுகளைப் போன்றது. அதுபற்றி அவந்திகையிடம் கேட்டதற்கு, அவள், கண்ணாடியில் அப்படியொரு தவிப்பை ஒருநாளும் தான் உணரவில்லை என்று பதில் கூறியதோடு அல்லாமல் ஒருவேளை நான் அதைக் கடந்திருப்பேனோ தெரியவில்லை. ஏனெனில், என்னைப் பொறுத்தவரை அன்பு ஆண், பெண் கடந்தது. அதை மற்றவற்றில் பார்ப்பதுதான் சரி.

இந்த உடல் மிகச் சாதாரணமான படைப்பு ஆப்ரஹாம். மன்னிக்கவும் என் உடல் பற்றிய அபிலாஷை உனக்கு ஏற்படாதிருந்தால் நான் சொல்வப் பொருட்படுத்து. ஏனென்றால், பலமுறை வெறும் உடலால் மட்டுமே நான் தீண்டப்பட்டிருக்கிறேன். எப்போதுமே என் மனம் அன்பின் லயத்தில் இணைந்ததில்லை. அல்லது பிணைக்கும் வழியை என்னை நெருங்கிய ஆத்மா அறியவில்லை. நானாக அதை ஏற்றுக்கொண்ட பாவனையைச் சூடிக்கொள்வேன். அவ்வளவுதான். சில சமயங்கள் சூட்சமமாக யாருமற்ற தருணங்களில் அந்த பாவனையை அணிவதும் உண்டு. நானாக விரும்பினாலொழிய அதை அணிய முடியும். அக்கணம் இடமும் சப்தமும் உருவமும் வேறொன்றாகிவிடும். அது எப்படியென அதிசயித்திருக்கிறேன். கற்பனைகள் களவுத்தனமானவை. அவந்திகை சிரித்தாள்.

அவன் உடனே குறுக்கிட்டு, கற்பனைகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சதா அன்பில் திளைத்திருப்பவர்களாலேயே அது இருக்கிறது. மயில் தன் பீலிகளைக் கழித்துக்கொள்வதுபோல அது எங்காவது தன் அழகான இருப்பைக் காட்டி நகர்கிறது. அத்தனை மீதும் காதலாக உருகுவதற்கும் பிரதிபலிக்கும் பிறிதொன்றின்மீது காதல்கொள்வதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நோவும் நெஞ்சம் இரண்டாவதில்தான் உள்ளது. அலர்தலைப்போல கூம்புதலும் அழகு என்றான். ஆனால், அவன் சைகைகளை அவள் புரிந்துகொண்டாளா என்று தெரியவில்லை இருந்தாலும், வேறொரு பதிலைக் கூறினாள். அன்பு அசாத்யமானதையெல்லாம் சாதித்துவிடும். பிரபஞ்சத்தின் புராதனமான ஒன்று. இன்னும் தன் காலத்தை உறைய வைத்தபடி எத்தனை யுகங்களுக்குமான நிறத்தையும் தன்மீது ஏற்றிக்கொள்ளாமல் அப்படியே இருக்கிறது. சிலசமயம் அதொரு மிருகம்போல, பறவைபோல, சிங்கம்போல அல்லது இது மூன்றும் கலந்ததாகக்கூட இருக்குமென எண்ணியிருக்கிறேன். சட்டென மனம் காதல் வயப்பட்டதும் அது தன் எஜமானன் முன் மண்டியிடுகிறது. வாறியணைத்துக்கொள்கிறது. தூக்கிப் பறக்கிறது, ஏங்க ஏங்க அது தன் ஆகிருதியை மீட்டிக்கொள்கிறது. பின்பு, சட்டென தன் கற்பனைகளைக் களைத்துவிட்டு ஒரு பூனையாக மாறி நிற்கிறது. மனம் கூம்பி வீழ்ந்ததும் சொட்டிய குருதியை நக்கிவிட்டு நகர்ந்துவிடுகிறது.

அவந்திகை தன் கடந்த கால வாழ்வின் அனுபவங்களிலிருந்து அன்பைப் புராதனமான பயங்கர மிருகமாகக் கற்பனை செய்திருந்தாள். உடல் ஒரு சாதாரண படைப்பு என்று சொன்னதும் அதுவே. அன்பின் உயிர்ப்பே அது செல்லச் செல்ல அடையாமல் தன் இருப்பைக் கானல் நீராகக் காட்டி ஏமாற்றிக்கொண்டே இருப்பதில்தான் இருக்கிறது. நிறைமதி போல அப்பால் நின்றபடி ஏக்கத்துடன் கூடவே நகர்வதில் உண்டு. தன் முன் இறைந்து நிற்கும் பிம்பத்தைக் கண்டு அவந்திகை அஞ்சினாள். ஒவ்வொரு நாளும் கண்ணாடிக்குள் நுழையும்போதெல்லாம் அக்கணத்தைச் சீந்தாமல் விலகிக்கொண்டாள். ஆனால், ஆப்ரஹாம் கண்ணாடியைவிட்டு வெளியேறும்போது மந்தகாசமான உணர்வுடன் கற்பனையில் அலைந்தான். அவனுக்குத் தெரியும் அவந்திகை மறுப்பதும் விளக்கமளிப்பதும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பாவனைகள்தான் என. இது அவள் கூறாத வேறொன்று. பிறிதொரு வகை பாவனை. அவற்றை ‘நான்’ என்பது அணிந்துகொள்கிறது. ‘நான்’ அவளை விடுதலையடையச் செய்வதில்லை. அவளும் நடுக்கத்துடன், பலவீனத்துடன் அந்த ‘நானை’ பற்றிக்கொண்டிருக்கிறாள். நான் விடுபடாமல் அன்பு சாத்தியமே இல்லை.

ஆக, ‘நான்’ பூரணமாகக் களைந்து நிற்பதுதான் அன்பைப் பெறத் தகுதியான இடம். அவன் தயாரான அதே தருணத்தில் மிஷனில் அவந்திகையுடன் சுற்றிய வெண்-சாம்பல் நிறப் பூனை ஒன்றும் தயாரானது.

அந்தப் பூனைக்கு பூனி என்று அவந்திகை பெயரிட்டிருந்தாள். அவனுடைய மொழியில் அதொரு புதிய சொல். பூனி தன்னை அதிகமாக விரும்புகிறதென அவந்திகைக்குத் தெரியும் என்றாலும் பூனியின் தயாரிப்புகளையும் திட்டங்களையும் அவள் அறிந்திருக்கவில்லை. முன்பே கூறியதுபோல அஃறிணைகளுக்கும் ‘பெற்றுக்கொள்ளும்’ திராணியில்லை. அது தெரிந்துதான் பெண் அவற்றைக் கொஞ்சிக்கொண்டேயிருக்கிறாள். பாவம்.

ஆப்ரஹாம் முதன் முதலில் அவந்திகையைப் பார்த்ததிலிருந்து கண்ணாடிக்குள் தினம் பேசிக்கொள்வதுவரை எப்போதெல்லாம் சந்திப்பு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் பூனையும் உடன் இருக்கிறது. வெகு அரிதாகவே (பூசை சமயத்திலோ சாப்பாட்டுக் கூடத்திலோ) இருவருக்கும் நடுவே பூனை இருந்ததில்லை. அப்போது இருவருக்கும் நடுவே நிறையபேர் இருப்பார்கள். ஆக, தனிமைத் தருணங்களில், சிலசமயம் கண்ணாடியிலும்கூட, அவந்திகையை மட்டுமின்றி, அவன் பூனியையும் சேர்த்தே சந்தித்தான்.

அவந்திகையை இரண்டாம் தளத்திலிருந்து பங்கா இழுத்தவாறு பார்த்த முதல் நாள் பூனி அவளுடைய தொடைக்கு நடுவில் உடலை நீட்டிக்கொண்டு கதகதப்பாகப் படுத்திருந்தது. அல்லது அதுதான் அவனை முதலில் பார்த்துவிட்டு அவளுக்குக் காண்பித்திருக்க வேண்டும். மியாவ் என்றபோது அவள் அண்ணாந்தாள். ”நான் வருவதற்கு முன்பே மிஷனில் இது சுற்றிக்கொண்டிருந்தது. இதுபோல இன்னும் இரண்டு இருந்தன. எலித் தொல்லைக்காக வளர்க்கிறார்கள். ஆனால், இதுமட்டும் என்னிடம் வந்து எப்படியோ ஒட்டிக்கொண்டது.” அவள் சொல்வதுபோல பூனி அவளுடன் ஒட்டிக்கொண்டதற்குப் பிறகு மற்ற இரண்டையும் எப்போதாவதுதான் சந்திக்கும்.

பூனிக்கு அவந்திகையைப் பிடிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று, மிஷன் அளிக்கும் கோதுமை ப்ரட்டும் பாலும் தினமும் பூனிக்கு வைத்தாள். அங்கு இருந்த அத்தனைபேருக்கும் அது தினமும் பரிமாறப்பட்டது. அவந்திகைக்கு அதுபோன்ற உணவுகள் பிடிக்காது.முதலில்சில நாட்கள் வேண்டாமென்று பூனிக்கு வீசியவள் பின்பு தட்டில் பிசைந்து வைத்தாள்(பிசைந்துகொண்டே இருக்கையில் பூனி தவிப்பில் முணங்கும்) இது பூனியின் பசிசார்ந்த தேவை.

இரண்டாவது, கண்ணாடியை நோக்கியபடி சித்திரத்தை வரைவது. பிறகு, மரப்பலகையைச் செதுக்குவது இந்த இரண்டில், முதலில் கண்ணாடியை வைத்துக்கொண்டு அவள் அமர்ந்ததும்,“அது என்ன?” என்று பூனியும் எட்டி நிற்கும். சிலசமயம் இங்கும் அங்கும் தாவித் தாவி நடுவே குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும். அடுத்ததாக, சிந்தியிருக்கும் மரப்பலகைச் சீவல்களுடன் விளையாடும். உருட்டியும் விரித்தும் சமயங்களில் மீசையில் மாட்டிக்கொண்டு ஓடும். இந்த இரண்டும் பூனிக்கு விளையாட்டு சார்ந்த விஷயம்.

மூன்றாவது, அவந்திகைமீதிருக்கும் வாசனை. அவள் உடலின் அந்தரங்க மணம். எல்லா பெண்களும் அப்படி வாசனையைக் கொண்டிருப்பதில்லை. வாத்சாயனார் கூறுவதுபோல் எவள் ஒருத்தியிடம் அது வெளிப்படுகிறதோ அவள் உலகின் அத்தனை சுகந்தகளால் ஆனவள். பூனி அறிந்த சுகந்தம், அவந்திகையின் உள்ளங்கைகளுக்கு உள்ளிருக்கலாம்-அடிக்கடி அவள் பூனியின் முகத்தைப் பிடிப்பாள், மார்பின் நடுவில் இருக்கலாம்- கீழே இறங்கும்போது தூக்கிவைத்து நடப்பாள், இரண்டு பாதங்களில் இருக்கலாம் – படுக்கும்போது பூனியை உயரத் தூக்கியெறிந்து விளையாடுவாள், மடியில் இருக்கலாம் -சித்திர வேலையின்போது நடுவில் வைத்துக்கொள்வாள், மூச்சுவிடும் சுவாசத்தில் இருக்கலாம் – குளித்துவிட்டு வந்ததும் ஈரத்துடன் பூனியை இறுக்கி முகத்தில் முத்தமிடுவாள். இவற்றில் எதில் பூனி அதை உணர்ந்ததென்று தெரியவில்லை. அல்லது ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு வாசனைகளை அது அறிந்திருக்கலாம். இது பூனியின் உணர்ச்சி சார்ந்த மூன்றாவது.

அவந்திகையை இரண்டாம் முறையாகப் பார்த்தபோது அவளும் பூனியும் வராந்தாவில் நடந்து சென்றார்கள். ராணியைப் போல அவந்திகை முன்னால் நடக்க பூனி வாலைத் தூக்கியபடி பாதங்களில் எதையோ கவனித்துக்கொண்டு பின்னால் ஓடியது. ஒருவேளை பூனிக்குப் பாதங்கள் பிடித்திருக்கலாம். விளையாட எதுவும் சிக்காத சமயத்தில் அப்படி வெளியே தெரியும் கெண்டைக் கால் சதையைக் கவ்விப் பிடித்து விடுவது லாவகத்துடன் கீழே விழுந்தெழும்.

கால்களைக் கவ்வி விளையாடிக்கொண்டிருந்த பூனியிடம் கண்ணாடிக்குள்ளிருக்கும் ஆப்ரஹாமைக் காட்டியபோது பூனி பயந்துதான்போனது. சிலகணங்கள் பார்த்துவிட்டுச் சட்டென செவிமடல்களைப் பின்னால் சுருக்கிக் கத்தியபடி பிடியிலிருந்து தாவி மறைந்தது. ”அது உன்னைப் பார்த்துப் பயப்படுகிறது” என்று சைகைக் காட்டினாள். தூரத்தில் ஒரு மரத்தில் மட்டும் கதவு இருப்பதாகவும் அதனுள்ளிருந்து உருவம் தலை நீட்டுவதாகவும் நினைத்துப் பயந்திருக்கலாம். மரத்தைத் தேடிப் போயிருக்குமென அவளும் துரத்திச்சென்றாள். அது அறைக்கு வெளியே வந்து நின்றுகொண்டிருந்தது. அள்ளியெடுத்து மார்போடணைத்துச் சமாதானம் செய்தாள். பிறகு, அதுபோல என்றைக்குமே கண்ணாடிக்குள் பூனியைத்தூக்கிக் காட்டியதில்லை. ஆனால், அவந்திகை ஜன்னலைத் திறந்து கண்ணாடிக்குள் நுழைந்ததும் பூனி அறையைவிட்டு வெளியே போய்விடும், எட்டிப்பார்த்தபடி சிலசமயம் மெல்லச் சப்தமெழுப்பும் அல்லது அமைதியாக அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

பூனி மிகப் பெரிய தந்திரவாதி. அவந்திகை கண்ணாடிக்குள் செல்லத் துவங்கியதற்குப் பிறகு, பூனிக்குக் கிடைத்த அவளுடைய நெருக்கம் ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அல்லது அவளது வாசனை தினமும் வெறும் நான்கடிக் கண்ணாடிச் சட்டத்தின் முன் கரைந்துகொண்டிருப்பது ஆத்திரத்தை உண்டாக்கிருக்க வேண்டும். ஆப்ரஹாம் கண்ணாடிக்குள் வந்ததும் மடியிலிருந்து பூனியை இறக்கிவிட்டு(சிலசமயம் அவசரத்தில் கட்டிலில் தூக்கிப்போட்டு) ஓடுவாள். ஆனால், பூனி அவள் மடியை விட்டு நகராது. நகங்களால் ஆடை நூலைப் பிடித்துத் தொங்கும். சிக்கிய முள்ளை எடுக்கும் நேர்த்தியுடன் அகற்றுவதற்குள் நாலைந்து நூல்கள் நகத்தோடு வந்துவிடும். பதிலுக்கு அவள் பாதத்தில் சின்னக் கீறலைக் கொடுத்தனுப்பும். அவந்திகைக்கு இதெல்லாம் பூனியின் கோபமெனத் தெரியாது. தூக்கி வீசியதும் கட்டிலிலோ தரையிலோ விழுந்ததும் மியாவ் என அவள் திசையை நோக்கிக்கத்திவிட்டு நகராமல் மெல்ல முன்னங்காலை எடுத்துவைக்கும். முதுகெலும்பு புடைத்து வால் அலைபோல எழுந்து மடிந்திருக்கும். மிஷனில் பன்றிக்கறி சமைக்கும்போதுதான் அப்படி உடலை வைத்துக்கொண்டு அடுப்படியை வலம்வருவதுண்டு. அதாவது, நல்ல பசி இருக்க வேண்டும் அப்போது தனக்குப் பிடித்தமான சுவையை உடல் முழுக்க நிறைத்துக்கொள்ளும் வேட்கை. ஆனால், இங்கு, பூனி நடந்துகொண்டவிதற்குக் காரணம், பொதுவாக மிருகங்கள் ஒரேவிதமான உடலசைவை இரு நேரெதிர் உணர்வுகளுக்குக் வெளிபடுத்தும். ஆக, அவந்திகையின் விலகல் பூனிக்கு உடல் முழுவதுமிருந்து அவளது வாசனை வெளியேறுகிற இயக்கமாக இருக்கலாம். இன்னொன்று, பூனிக்குப் பிடிக்காத, வெறுக்கக்கூடிய ஒன்று சேய்மையில் நிகழ்கிறது.

நாளாக ஆக பூனியால் கண்ணாடியுலகை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. குட்டிபோட்டதுபோல அறைக்குள் அலைந்தது. சாப்பாட்டுத் தட்டையும் பால் கிண்ணத்தையும் உருட்டிச் சப்தம் எழுப்பியது. அவந்திகையை வெறித்துக்கொண்டு சாத்தப்பட்ட கதவருகே அமர்ந்திருந்தது. அவள் பேசிமுடித்து வந்து அள்ளி எடுக்கும்போது தரையிலிருந்து தன் பிடியைத் தளர்த்தாமல் ‘விடு’ என விரல்களை கடித்தது. கதவைத் திறந்ததும் கோபமாக அறையைவிட்டு வெளியேறியது. இதே பூனிதான் பின்னாளில் அவந்திகை கண்ணாடிக்குள் மறைத்துவைத்திருந்த ஆப்ரஹாமை எமிலியிடம் காட்டிக்கொடுக்க யத்தனிக்கையில் பாவம் அவந்திகை மாட்டிக்கொண்டாள்.

--

தூயன் எழுதிய ‘கதீட்ரல்’ நாவலிலிருந்து ஒரு பகுதியே மேலே கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நூல் குறித்த விவரங்கள் கீழே...

கதீட்ரல்

ஆசிரியர்: தூயன்

காலச்சுவடு வெளியீடு

பக்கங்கள்: 185, விலை ரூ.220

நூலை வாங்க தொடர்புக்கு:

செல்பேசி: 9677778863

இணையத்தில் வாங்க:

https://www.kalachuvadu.com

https://www.commonfolks.in/books/d/cathedral

https://www.amazon.in 

 

தூயன்

தூயன், தமிழ் எழுத்தாளர். புதுக்கோட்டையைப் பின்னணியாகக் கொண்டவர். ‘இருமுனை’, ‘டார்வினின் வால்’ சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.
பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராஜாஜி விடுத்த எச்சரிக்கைஇந்திய தேசிய காங்கிரஸ்பண்டைய இந்திய வரலாறுபாரத ரத்னாராஜ்ய சபாவரும் முன் காக்க!இந்தியப் பொருளாதாரம்முறையீடுமதவாதம்நான்கு சிங்கங்கள்அமைப்புப் பொதுச்செயலர்இந்தி மொழிஇரைப்பைப் புற்றுநோய்தாய்மொழியில் உயர்கல்விஅவுரி விவசாயம்பிரெக்ஸிட்விடுதலைச் சிறுத்தைகள்நிதீஷ்குமார்சமூகநீதிபண்டிதர் 175வான் நடுக்கோடுமெட்ரோ ரயில்பசவராஜ் பொம்மைஹார்மோனியத்துக்குத் தடைபெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்பரக் அகர்வால் நியமனம்தோற்றப்பாட்டியல்கீழ் முதுகு வலிதி டெலிகிராப்பசுங்குடில் வாயுக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!