கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

கல்யாண் சிங் கதை

வ.ரங்காசாரி
30 Aug 2021, 12:00 am
0

அயோத்தியில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலின் பிரதான சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறது உத்தர பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு; வேறு எதையும்விட இது நல்ல அங்கீகாரம் என்று அவர் மகிழ்ந்திருக்கக்கூடும். ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில், அனைவருக்குமான பொது சிவில் சட்டம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து’ இந்த மூன்று முழக்கங்களையும் வைத்துதான் பாஜக எனும் கட்சி முன்னகர்ந்தது. மூன்றில் எல்லாக் காலகட்டங்களிலும் அந்தக் கட்சிக்கு உத்வேகமும் புத்தெழுச்சியும் கொடுத்துவந்தது ராமர் கோயில் விவகாரம். எப்போதெல்லாம் கட்சி சரிவைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் ராமரைக் கையில் தூக்குவது பாஜகவுக்கு வாடிக்கையாக இருந்தது; ராமரும் அதற்குக் கை கொடுத்தார். மேலும், இந்து - முஸ்லிம் பிளவு அரசியலும் இதன் வழி உயிர்ப்போடு இருந்தது.

நேரு காலத்திலிருந்து நீடிக்கும் பிரச்சினை இது என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் இந்த விவகாரத்தில் தடுப்பாட்டமே ஆடின. இந்த விவகாரத்தை நீதிமன்றம் மூலமோ, பேச்சுவார்த்தை மூலமோ தீர்க்கக்கூட அஞ்சின. பாஜக தெளிவாக இந்துக்கள் பக்கம் போய் நின்றுகொண்டதோடு, ஏனைய கட்சிகளெல்லாம் முஸ்லிம்கள் பக்கம் நிற்பதாகவும் பேசியது. மாநிலத்தில் ஐந்தில் ஒருவர் முஸ்லிம் என்கிற அளவுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால், முஸ்லிம்கள் வாக்குவங்கியைக் கவர எதையாவது மாற்றி மாற்றிப் பேசுவது ஏனைய கட்சிகளுக்கும் வழக்கமாக இருந்தது.

எப்படியும் இந்த விவகாரம் பாஜகவின் களத்துக்குள்ளேயே இருந்தது. ஆனாலும், அரசியல் தளத்தில் இதை வைத்து ஒரு பாய்ச்சல் பாய உத்தர பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரசியலானது பாஜகவுக்கு ஒரு தடையாக இருந்தது; ஏனென்றால், பிராமணர்கள் - தாக்கூர்கள் ஆதிக்கமும் செல்வாக்கும் நிரம்பிய உயர்சாதி இந்துக் கட்சியாகவே அன்றைக்கு பாஜக பார்க்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் உத்தர பிரதேச பாஜகவின் முகவரியாகவும் உந்துவிசையாகவும் கல்யாண் சிங் உருவெடுக்கிறார்.

இளமையும் வளர்ச்சியும்

பாரதிய ஜன சங்கமாகவும் பிற்பாடு பாரதிய ஜனதா கட்சியாகவுமான உயர்சாதி ஆதிக்கக் கட்சியைப் பிற்படுத்தப்பட்டோரும், ஏனைய சமூக மக்களும் தங்களுடைய கட்சியாகவும் பார்க்க வைத்ததில் கல்யாண் சிங் போன்றவர்களின் பங்களிப்பு பெரியது. இளவயதிலேயே ஆர்எஸ்எஸ் தொண்டரானார் கல்யாண் சிங். அவர் பிறந்த லோத் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் வளையத்துக்குள் வருவதாகும். உத்தர பிரதேசத்தில் இந்தச் சமூகத்தினர் எண்ணிக்கை சற்றேறத்தாழ 7% இருக்கலாம். ஆகையால், ஒட்டுமொத்த  பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதியாகவே தன்னை கல்யாண் சிங் வளர்த்துக்கொண்டார். அந்நாட்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் செல்வாக்கு மிக்க தலைவராக இன்றைய சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் இருந்தார் என்றாலும், அவர் சார்ந்த யாதவச் சமூகத்தின் ஆதிக்கம் அக்கட்சியில் நிறைந்திருந்தது அப்போதே ஏனைய சமூகத்தினரால் முணுமுணுக்கப்பட்டது. பாஜக இதைத் தனக்கான வாய்ப்பாகப் பார்த்தது. இந்நாளில் அது வெற்றிகரமாகச் செயல்படுத்தும், ‘யாதவர்கள் நீங்கலான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒன்றுதிரட்டும் வியூகம்’ அப்போதே உருவானதுதான். கல்யாண் சிங்தான் இதற்கான கருவியாக இருந்தார்.

உத்தர பிரதேசத்தின் அட்ராலி சிறுநகரத்தில் 1932-ல் பிறந்த கல்யாண் சிங், சிறு வயதிலேயே இந்துத்துவ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவராக வளர்ந்தார். ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர், பாரதிய ஜன சங்கத்தில் முழு நேரத் தொண்டராகச் சேர்ந்தார். 1967-ல் அட்ரௌலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது தொடங்கி 2002 வரை 11 முறை அத்தொகுதியில் வென்றார்; இடையில் 1980-ல் மட்டும் ஒரு முறை தோற்றார். பாரதிய ஜன சங்கத்தில் இருந்தபோதும், பின்னாளில் அது பாரதிய ஜனதா கட்சியாக மாறியபோதும், இடையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய கிராந்தி கட்சியைத் தொடங்கி அதன் சார்பில் நின்றபோதும் மக்கள் அவரைத் தங்களவராகவே பார்த்தனர். இது மட்டுமல்லாமல், புலந்த்ஷகர், எடா மக்களவைத் தொகுதிகளிலிருந்தும் இரு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கல்யாண் சிங். தொகுதியில் ‘களச்செயல்பாட்டாளர்’ என்ற பெயர் அவருக்கு உண்டு.

பாஜகவுக்குள்ளும் களச்செயல்பாட்டாளராகவே அவர் வளர்ந்தார். 1970-1980-1990-களில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்துவந்த நிலையில், ஜனதா கட்சி வளரலானது. காங்கிரஸிலிருந்து விலகிவந்தவர்களே ஜனதா கட்சியின் தூண்களாகச் செயல்பட்டுவந்தாலும் இக்கட்சியுடன் வெட்டியும் ஒட்டியும் செயல்படலானது இன்றைய பாஜக. நெருக்கடிநிலைக் காலகட்டமானது  காங்கிரஸின் எதிர்த்தரப்புகளுடன் நெருக்கமான ஓர் உறவை வளர்த்துக்கொள்ள சங்கப் பரிவாரத்தினருக்கு உதவியது. ஜனதாவின் வீழ்ச்சிக்குப் பின் அதில் ஒரு பகுதியைத் தன்னுடையதாக்கிக்கொண்ட பாஜகவை கல்யாண் சிங் புதிய உயரத்துக்குக் கொண்டுசென்றார். 1990-ல் நடந்த ரத யாத்திரைக்குப் பிந்தைய 1991 தேர்தலில் பாஜகவின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.

வரலாற்று இழுக்கு

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டப்படுவதற்குத் தொடக்கமாக, டிசம்பர் 6, 1992-ல் ‘பாபர் மசூதி’ இடிக்கப்பட்டபோது உத்தர பிரதேசத்தின் முதல்வர் பதவியில் இருந்தவர் கல்யாண் சிங். நாடு முழுக்கவுள்ள ‘கரசேவகர்கள்’ அயோத்திக்கு ‘கரசேவை’க்காக வந்தபோது இப்படி ஓர் ஆபத்து நேரலாம் என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடமும் இருந்தன. ‘அந்தக் கட்டுமானத்துக்கு எந்தச் சேதமும் இல்லாமல் காப்பாற்றுவேன்’ என்று அப்போது உச்ச நீதிமன்றத்துக்கு வாக்குறுதி அளித்தார் கல்யாண் சிங். பிரதமர் நரசிம்ம ராவ் அதை எப்படி நம்பினார் என்பது தனி விவாதம்; ஆனால், நம்பினார்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் கறுப்பு நாளாகக் கருதப்படும் அந்த நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் கூடியிருந்தனர். மாநிலக் காவல் படையினர் மட்டுமல்லாமல் ஆயுதப் படையும், மத்திய துணை ராணுவப் படைகளும்கூட குவிக்கப்பட்டிருந்தன. இருந்தும், பாபர் மசூதி என்ற அந்த வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டது. முன்னதாகவே எல்லோருடைய கைகளையும் கட்டிப்போட்டிருந்தார் கல்யாண் சிங். பிறகு, நடந்தவை வரலாறு. உச்ச நீதிமன்றத்திடம் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது தொடர்பில் அவர் வருத்தமோ வேதனையோ கொள்ளவில்லை. அந்தக் குற்றத்துக்காக உச்ச நீதிமன்றம் கல்யாண் சிங்குக்குப் பின்னாளில் ஒரு நாள் சிறைத் தண்டனை, ரூ.20,000 அபராதம் என்று சொன்னபோது மகிழ்ச்சியும் பெருமிதமும்தான் அடைந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஊதியும் அணைத்தும் கையாளப்பட்ட இந்த விவகாரம் அத்துடன் ஓயவில்லை. அதற்குப் பிறகு நாடு முழுவதும் நடந்த வகுப்புக் கலவரங்களில் இந்து - முஸ்லிம் இரு தரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.  

அரசியல் அஸ்தமனம்

இதற்குப் பின் சட்டென ஒரு இருளுக்குள் சென்றாலும், உத்தர பிரதேசத்தில் கிளர்ந்தெழுந்து பாஜக வளரலானது. விமர்சனங்கள், வழக்குகள் சூழ்ந்தாலும், கட்சிக்குள் கல்யாண் சிங்கின் இடம் தனித்துவம் பெற்றது. கல்யாண் சிங்கின் எழுச்சியானது உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, அதன் பக்கத்திலேயே இருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாசலம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பேசுபொருளானது. பாஜக இங்கெல்லாம் இன்று பெரும் கட்சியாக எழுந்து நிற்க அவருடைய தாக்கமும் ஒரு காரணம். பிற்படுத்தப்பட்டோரிலும்கூட பெரிய செல்வாக்கு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர் கல்யாண் சிங் என்பதால்,  பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும்கூட தங்களுக்கும் பாஜகவில் வாய்ப்பு இருக்கும் என்று நம்பி பாஜக நோக்கி நகரலாயினர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட கையோடு கல்யாண் சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் குடியரசுத் தலைவரின் ஆட்சி. 1993-ல் மீண்டும் தேர்தல் நடந்தபோது முந்தைய தேர்தலில் வாங்கியதற்கு இணையான வாக்குகளையே வாங்கியிருந்தது பாஜக. ஆனால், முன்பு 221 தொகுதிகள் என்றிருந்த அதன் எண்ணிக்கை இப்போது 177 ஆகியிருந்தது. மொத்தம் 403 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேசச் சட்டமன்றத்தை ஆள இந்த இடங்கள் போதுமானவையாக இல்லை. ஆகையால், மேடைக்குப் பின்புறம் நின்று ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இரண்டும் கூட்டணி அமைக்க, முலாயம் சிங் முதல்வர் ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தக் கூட்டணி உடைந்து, ஆட்சி கவிழ்ந்தபோது மாயாவதி முதல்வர் ஆக ஆதரவு அளித்தது பாஜக. இந்த உறவும் ஆரோக்கியமாக நீடிக்கவில்லை. விளைவாக, 1996-ல் இன்னொரு தேர்தலை எதிர்கொண்டது உத்தர பிரதேசம். இந்த முறையும் 174 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்தது பாஜக. ஆனாலும், தொங்கு சட்டமன்றச் சூழல். குடியரசுத் தலைவர் ஆட்சி. மீண்டும் மாயாவதியுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்துக்குச் சென்றது பாஜக. மாயாவதி முதல்வராகிப் பதவி விலகினார். கல்யாண் சிங் 1997-ல் இரண்டாம் முறையாக முதல்வர் பதவியேற்றார். சீக்கிரமே ஆதரவைத் திரும்பப் பெற்றார் மாயாவதி. தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்த சிறு குழு, காங்கிரஸிலிருந்து பிரிந்த சிறு குழு என்று உதிரிகளின் துணையோடு ஆட்சியை நகர்த்த முயன்றார் கல்யாண் சிங். முடியவில்லை. இதற்குள் கட்சிக்குள்ளேயே செல்வாக்கை இழந்திருந்தார். இரண்டு ஆண்டுகளில் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்கும் மிக நெருக்கமான ஆட்சியாக அவருடைய ஆட்சி இருந்தது. கட்சியில் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று வெளிப்படையாகவே பிராமணர்களும் தாக்கூர்களும் பேசினர். இதற்குப் பின், உத்தர பிரதேச பாஜகவானதும் செல்வாக்கு மிக்க தாக்கூர் தலைவரான ராஜ்நாத் சிங் ஆளுகைக்குள் கீழ் சென்றது.

பாஜகவிலிருந்து வெளியேறினார் கல்யாண் சிங். “பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கட்சியில் மதிப்பு இல்லை” என்றே குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரீய கிராந்தி கட்சியைத் தொடங்கினார். 2002-ல் புதிய கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வென்றாலும், கட்சிக்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், 2004-ல் மீண்டும் பாஜகவுக்கே வந்தார். கட்சியும் அவருடைய இழப்பை உணர்ந்திருந்தது. ஆயினும், முன்புபோல கட்சிக்குள் மரியாதையோ செல்வாக்கோ இல்லை. இதனால், மனம் புழுங்கிய கல்யாண் சிங் 2009-ல் மீண்டும் பாஜகவிலிருந்து  விலகி ஜன கிராந்தி கட்சியைத் தொடங்கினார். இம்முறை முலாயம் சிங் அவரை அரவணைத்தார். 2009 மக்களவைத் தேர்தலில் எடா தொகுதியில் கல்யாண் சிங் வென்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி பெரும்  பின்னடைவைச் சந்தித்தது. மசூதி இடிப்புக்குக் காரணமான கல்யாண் சிங்குடன் கூட்டு சேர்ந்ததால் தங்களுடைய வழக்கமான முஸ்லிம் வாங்கு வங்கி தங்களைக் கைவிட்டுவிட்டது என்று பகிரங்கமாகவே பேசினார் முலாயம் சிங். மீண்டும் பாஜகவிலேயே கல்யாண் சிங் அடைக்கலமானார்.

இதற்குள் கால வெள்ளம் கட்சிக்குள் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தது. வாஜ்பாய் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டிருந்தார்.  அத்வானியின் செல்வாக்கு குறைந்துகொண்டிருந்தது. கல்யாண் சிங் காலத்து ஆட்கள் எல்லோரும் மங்கும் நட்சத்திரங்கள் ஆகியிருந்தனர். 2014 மக்களவைத்  தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உத்தர பிரதேசம் முக்கியம் என்று கருதி மகா வியூகம் அமைத்த ‘மோடி - ஷா’ இணையர், தேர்தலில் கல்யாண் சிங்கைப் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாகச் சரியாகவே பயன்படுத்தினர். பாஜக ஆட்சிக்கு வந்த பின் ‘முதியவர்கள் தீவிர அரசியலிலேயே தொடர்ந்தால், கட்சி ஓட்டத்துக்குத் தடையாகிவிடுவர்’ எனும் புதிய விதிக்கு உட்பட்டு ராஜஸ்தான் ஆளுநர் பதவியில் கல்யாண் சிங் அமர்த்தப்பட்டார். இதில் இன்னொரு பாதுகாப்பு வியூகமும் இருந்தது. விரைவில், ‘பாபர் மசூதி விவகாரம்’ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நோக்கி நகரவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கே வாக்குறுதி தந்துவிட்டு, துரோகம் இழைத்த கல்யாண் சிங்கை வழக்கின் பிடியிலிருந்து காப்பதே அது. இதனால், ஆளுநர் பதவி வகித்த ஐந்தாண்டுகள் அவர் வழக்கு விசாரணையைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

இதற்கிடையே, மசூதி இடிப்பை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் லிபரான் ஆணையமானது 16 ஆண்டுகளில் 399 அமர்வுகளை நடத்திவிட்டு 1,029 பக்க அறிக்கையை அளித்தது. ‘மசூதி இடிப்பு தன்னெழுச்சியாகவோ திட்டமிடப்படாமலோ நடக்கவில்லை’ என்று எல்லோரும் அறிந்த உண்மையைத் தனது கண்டுபிடிப்பாக வெளியிட்டது. இதற்கிடையே மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) விசாரணை காரணமாக இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ‘இது திட்டமிட்ட சதிச் செயல் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை’ என்று கூறி, கல்யாண் சிங் உள்பட 32 பேரை விடுவித்தது.

கல்யாண் சிங்கின் மறைவை ஒட்டி பாஜக முன்னெடுக்கும் விஷயங்கள் அவருடைய அரசியல் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. அவருடைய அஸ்தி நரோராவிலேயே கங்கையில் கரைக்கப்பட்டாலும் எஞ்சிய பகுதிகள் காசியில் உள்ள கங்கை நதிக்கரையிலும் அயோத்தியில் சரயு நதிக்கரையிலும் கரைக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் அவருக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அயோத்தியில் நடந்த கூட்டத்தில் யோகிகளும் பாபாக்களும் கலந்துகொண்டனர். அது மட்டுமல்ல; கட்சி நடத்தும் ஜன் ஆசீர்வாத் யாத்திரையை உத்தர பிரதேசத்தில் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை கல்யாண் சிங்கின் சீடரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருமான மத்திய இணையமைச்சர் பி.எல்.வர்மாவிடம் கட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறது. 2022 உத்தர பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் கல்யாண் சிங்தான் காவல் தெய்வமாக முன்னிறுத்தப்படப்போகிறார் என்பதை முதல்வர் யோகி அரசு சார்பில் முன்னின்று செய்த முதல் மரியாதைகள் சுட்டிக்காட்டுகின்றன. காரணம் இல்லாமல் இல்லை; யோகியின் ஆட்சி தாக்கூர்களின் ஆட்சி என்ற தீவிரமான விமர்சனத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் தாழ்த்தப்பட்டவர்களிடமும் உருவாக்கியிருக்கிறது. கட்சி அதிலிருந்து விடுபட விரும்புகிறது. எப்படியும் பல காலம் அவருடைய நண்பர்களாலும் எதிரிகளாலும் கல்யாண் சிங் நினைவுகூரப்படுவார்!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


1






பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தைவானில் நெருப்பு அலைகள்இந்தியக் கடற்படைமாநில அரசுகள்g.kuppusamyஅல்லிஎம்.ஐ.டி.எஸ். வரலாறுதங்கம் தென்னரசுஜெய்பூர்பிஹார்கேம்பிரிட்ஜ் சமரசம்கூடங்குளம்கேரளம்காலிஸ்குளிர்கால கூட்டத் தொடர்கர்ப்பப்பைக் கட்டிகள்மலக்குடல்கூட்டணியின் வலிமைபிளவுப் பள்ளத்தாக்குஜனரஞ்சகப் பத்திரிகைசத்தியமங்கலம் திருமூர்த்தி: முன்னோடி இயற்கை உழவர்1977: மீண்டும் நினைவுக்கு வருகிறதுதேசியப் புள்ளியியல் அலுவலகம்yogendra yadavபெருமாள் முருகன் தமிழ் ஒன்றே போதும்ஆணைஉழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம்சாஹேப்வழக்குப் பதிவுமாநிலங்களவையின் முக்கியத்துவம்தான் என்ன?எழுத்துப் பிழை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!