கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ஜனசக்தியின் விளக்கத்துக்கு ஒரு பதில்

எஸ்.வி.ராஜதுரை
15 Oct 2022, 5:00 am
0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘ஜனசக்தி’யின் அருஞ்சொல்லின் கட்டுரைக்கு எமது விளக்கம்’ என்ற தலைப்பில் வகிதா நிஜாம் 13.10.2022 அன்று எழுதியுள்ள பதிலை வரவேற்கிறோம். உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சுருக்கமான எதிர்வினையை மட்டுமே இப்போது நம்மால் தர முடிகின்றது: 

1. சோவியத் ஒன்றியம் 1922இலேதான் உருவாக்கப்பட்டது, 1921இல் அல்ல என்பதை வகிதாவும் ஒப்புக்கொள்கிறார். “ஆனால், சோவியத் ஒன்றியம் உருவாவதற்கான அனைத்து ஆக்கபூர்வமான ஒப்பந்தங்களும் 1920 மற்றும் 21ஆம் ஆண்டுகளிலேயே கையெழுத்திடப்பட்ட வரலாற்று விவரங்களை ராஜதுரை இணைக்க மறந்துவிட்டார். அதனால்தான் என்னுடைய பேச்சில் விவரப் பிழை அவருக்கு தோன்றியிருக்கக்கூடும்” என்று கூறுகிறார்.    

என் கட்டுரை சோவியத் ஒன்றியம் உருவான வரலாறு பற்றியது அல்ல. ஆனால், வகிதா நிஜாம் கூறுவதுபோல சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான எந்த ஒப்பந்தமும் 1920இல் கையெழுத்திடப்பட்டதாக நான் படித்ததில்லை. 1921இல் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால், அவை எல்லாமே சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்கள் என்று சொல்ல இயலாது. எப்படியிருந்தாலும் 1922 டிசம்பர் 30ஆம் தேதிதான் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது (Tamas Krausz, Reconstructing Lenin: An Intellectual Biography, Monthly Review Press, New York, 2015, pp.382-391).

2. ‘ஜனசக்தி’ இதழில் 28.9.2022 அன்று வெளியிருந்த கட்டுரையில், “சோவியத் ஒன்றியத்தில் 1972 வரை லெனின் அமலாக்கி இருந்த புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறையில் இருந்தது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம்தான் அது” என்று வகிதா கூறிருந்தார். 

என் கட்டுரையில் “உள்நாட்டுப் போர் ஒன்றை எதிர்ப் புரட்சியாளர்கள் வழி ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போர் முடிவடைந்த பிறகு நசிவுக்குள்ளாகியிருந்த பொருளாதரத்தை வலிமை மிக்கதாக மாற்றுவதற்கு 1921இல் லெனின் கொண்டுவந்ததே ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் தடையற்ற சந்தையை அனுமதிக்கும் அதேவேளை நாட்டுடைமையாக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை லாபகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது இந்தக் கொள்கை. இதைத் தற்காலிகான ஒன்றாகவே லெனின் கருதினார்” என்று எழுதியிருந்தேன். 

அக்கொள்கையைப் பற்றி, வகிதாவால் குறிப்பிடப்பட்டவரும் வரலாற்றில் என்றோ மறைந்துவிட்டவருமான ஒரு சோவியத் அறிஞரை மேற்கோள் காட்டுவதைவிட, லெனின் கூற்றையே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 

லெனின் எழுதுகிறார்: “புதிய பொருளாதாரக் கொள்கை என்பதன் பொருள், (உழவர்கள் உணவுபொருட்களைக் கட்டாயமாக அரசாங்கத்திற்குக் கொடுத்தாக வேண்டும்) என்ற கொள்கையை மாற்றீடு செய்வதாகும். அதன் பொருள் கணிசமான அளவுக்கு முதலாளியத்தை மீள்கொணர்வது – எந்த அளவுக்கு என்பது நமக்குத் தெரியாது - என்பதாகும். வெளிநாட்டு முதலாளிகளுக்குச் சலுகைகள் கொடுப்பதாகும் (நாம் சலுகை வழங்க விரும்பும் முதலாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஒரு சிலரே அவற்றைப் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை). தொழில்முனைப்புகளைத் தனிப்பட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயமாக முதலாளியத்தை மீள்கொணர்வதுதான். இதுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் இன்றியமையாத அம்சம். உபரி உணவுப்பொருட்களைக் கட்டாயமாக அரசுக்கு வழங்க வேண்டும் என்பதை ஒழித்துக்கட்டுவது என்பது வரிவசூலிக்கப்பட்டது போக - வரி என்பது அந்த உற்பத்தியில் மிகச் சிறு பகுதியே - மீதியுள்ள உபரி வேளாண் பொருட்களை உழவர்கள் தடையற்ற முறையில் வணிகம் புரிய அனுமதிக்கும் என்பதுதான். உழவர்கள் நம் நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியாக அமைந்துள்ளனர். எனவே, இந்த தடையற்ற வணிகத்தின் மூலம் முதலாளித்துவம் வளர்ந்தாக வேண்டும் (V. I. Lenin,The New Economic Policy, And The Tasks Of The Political Education Departments, Report To The Second All-Russia Congress Of Political Education Departments October 17, 1921, Lenin, Collected Works, Vol.33, pp 60-79).

ஆக, இது கலப்புப் பொருளாதாரமா? மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமா? அல்லது திட்டமிடப்பட்ட பொருளாதாரமா? இதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். தனது உரையைக் கேட்ட ஒருவர்கூட எஸ்.வி.ராஜதுரைபோல அபத்தமான கேள்வி எழுப்பவில்லை என்று கூறுகிறார் வகிதா. அப்படிப்பட்டவர், 28.9.2022 அன்று ‘ஜனசக்தி’யில் எழுதியிருக்கிறாரே “லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கைதான் சோவியத் ஒன்றியத்தில் 1972 வரை நடைமுறையில் இருந்தது” என்று. அது அபத்தமில்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

3. மது விற்பனையில் அரசுக்கு நல்ல வருவாய் வந்துகொண்டு இருந்தது. லெனின் மது தடை செய்யப்பட்டதை நீக்கினார். மது மூலம் கிடைத்துவந்த கணிசமான வருவாய் நிறுத்தப்பட்டதால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறாக கோர்பசெவ் கொண்டுவந்த பெரிஸ்த்ரோய்கா மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது” என்று வகிதாவின்  28.9.2022ஆம் தேதி கட்டுரை கூறுகிறது. இதை அப்படியே மேற்கோள் காட்டித்தான் வகிதா லெனினை மிகவும் இழிவுபடுத்தியுள்ளார். கம்யூனிஸ்ட் விரோதிகள்கூட லெனினை இவ்வாறு செய்ததில்லை” என்று என் கட்டுரையில் கூறியிருந்தேன். அடிக்கோடு இடப்பட்ட வகிதாவின் வாக்கியம் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவால் கவனக்குறைவாக வெட்டி நீக்கப்பட்டுவிட்டதால், வகிதா லெனினை இழிவுசெய்வதாக நான் கூறியது இப்போது அவருக்கு அபத்தமாகப் பட்டிருக்கிறது.

4. கட்டுரையில் உள்ள துணைத் தலைப்புகளும் சில சொற்பிரயோகங்களும் என்னுடையவை அல்ல. எனினும், அவற்றுக்குத் தார்மிகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியது என் கடமை. இவை ஒருபுறமிருக்க, நான் கேட்ட முக்கியமான கேள்விகளை வகிதா தட்டிக் கழித்திருக்கிறார். அவற்றில் சில பின்வருமாறு:

  • 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்டாலின் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு என்ன?
  • கட்சி சிபிஐ, சிபிஎம் என்று இரண்டாக உடைந்த பிறகு ஸ்டாலின் பற்றி சிபிஐ மேற்கொண்ட நிலைப்பாடுகளும் தீர்மானங்களும் என்ன?
  • சிபிஐ கட்சி அலுவலகங்களிலிருந்து ஸ்டாலின் படம் அகற்றப்பட்டது ஏன்?
  • கோர்பசெவின் ‘கிளாஸ்நோஸ்ட்’ மற்றும் ‘பெர்ய்ஸ்த்ரொய்கா’ சீதிருத்தங்களைத் தொடக்கத்தில் சிபிஐ உற்சாகமாக வரவேற்றது ஏன்?
  • சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்குப் பிறகு கோர்பசெவின் சீர்திருத்த முயற்சிகள் அதில் வகித்த பாத்திரம் பற்றிய அதிகாரபூர்வமான கட்சி ஆவணங்கள் – சுயவிமர்சனத்தோடு - ஏதேனும் தமிழில் வந்திருந்தால், அவை பற்றிய விவரங்களை நமக்குத் தர முடியுமா?

‘அருஞ்சொல்’லில் எழுதப்பட்ட கட்டுரைக்கு அதே தளத்திலேயே வகிதா நிஜாம் பதில் எழுதியிருந்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவரது கருத்துகள் போய்ச் சேர்ந்திருக்குமே! ராஜதுரைக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றபோதிலும் என்னுடைய உரைத்தொகுப்பை விமர்சிக்கும் பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியையும் மிக மோசமாக விமர்சித்து இருப்பது காரணமாக நான் இந்த விளக்கத்தை அளிக்க முன்வந்தேன்” என்று தன் கட்டுரையை முடிக்கிறார் வகிதா. இப்படிப்பட்டவரைக் கொண்டு அரசியல் பாடம் எடுக்கும் ‘ஜனசக்தி’க்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!

தொடர்புடைய கட்டுரைகள்

கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்
கோர்பசெவ் கட்டுரையும் சில தோழர்களின் எதிர்வினையும்
அறிவுப் பாரம்பரியத்தை இழந்துவிட்டதா ஜனசக்தி?
எஸ்விஆர் கட்டுரைக்கு 'ஜனசக்தி'யின் எதிர்வினை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com


2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹாங்காங்பஞ்சாங்கக் கணிப்புஇல்லாத தலைமை!குடிசை மாற்று வாரிய வீடுகள்மதிப்பு கூட்டு வரிஇம்ரான் கான்ராஜன் குறை கிருஷ்ணன்திருவாளர் பொதுஜனம்ஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்தியாகராய கீர்த்தனைகள்விழுமியங்கள்ஹெய்ல் செலாசிஇந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை!இந்தியாவிற்கு முந்தைய காந்திநிமோனியாஒற்றைத்துவம்எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்வாழ்க்கை வரலாறுமருத்துவர் கு.கணேசன்மாரடைப்புதலைமைப் பண்புபாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிபாஜக எம்.பிகலைப் படைப்புஎரிச்சல்இரைப்பை ஏப்பம்பெருமாள் முருகன் கம்ப ராமாயணம் கட்டுரைபின்தங்கிய பிராந்தியங்கள்யாத்திரைஷரம் எல் ஷேக் மாநாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!