இந்தியாவின் பெரும்பான்மைக் கட்சிகளில் அடித்தட்டு தொண்டர்களைத் திரட்ட பயன்படுத்தப்படும் பேச்சு பாணி மிகுந்த சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உரியது என்றாலும், இந்திய வெகுஜன அரசியலில் அதுவும் ஒரு பிரிக்க முடியாத அம்சம். தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. திமுகவின் பரபரப்புப் பேச்சாளரான வெற்றிகொண்டானுடைய பேச்சுகள் பல சமயங்களில் வரம்பு மீறினாலும், தீவிரமான நகைச்சுவையில் தோய்ந்தவை. அவருடைய பேச்சுகளிலிருந்து சில சுவாரஸ்யமான துணுக்குகளைத் தன்னுடைய 'அரசியல் பிழைத்தோர்' நூலில் எழுதியுள்ளார் ஆர்ப்பி.ராஜநாயஹம் (R.P.Rajanayahem). சம்பந்தப்பட்ட தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலை நாம் இங்கே ஆதரிக்கவில்லை. அதேசமயம், தமிழக அரசியல் மேடைகள் எத்தகு நாடகத்தன்மையுடன் செயல்பட்டன என்பதற்கு இவையெல்லாம் சாட்சியம். நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியை இங்கே வாசகர்களுக்குத் தருகிறோம்.
எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம்.
தன் அரசியல் வரலாறு ரொம்ப நீண்டது என வலியுறுத்த வேண்டி, "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன்" என என்னத்தையோ பேசிவைத்தார் எம்ஜிஆர்.
வெற்றிகொண்டான் இதைத் தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி!
"குல்லாக்காரப்பய வாயத் தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறான்ய்யா. இவன் பொய்க்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான்கூட நம்ம கோடம்பாக்கம் காந்திகிட்டே 'ஏலே, நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?'ன்னு கேட்கிறேன். அவன் பதறிப்போய் 'சத்தியமா நான் இல்லே அண்ணே...'ன்னு புலம்புறான். குல்லாக்காரப் பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்!"
(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள்.)
¶
அப்போதெல்லாம் குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜிஆரை கோமாளியாகச் சித்தரித்து வெற்றிகொண்டான் அப்போது கூட்டத்தைச் சிரிக்க வைக்கும்போது பலருக்கு வயிறே புண்ணாகிவிடும்.
எம்ஜிஆர் திடீரென்று "நான் மன்றாடியார் பரம்பரை" என்றார் ஒருமுறை. கலைஞர் கருணாநிதி பதிலடி கொடுத்தார், "ஆம். டெல்லியில் மன்றாடிய பரம்பரை!"
திமுக மேடைகளில் அப்போது வெற்றிகொண்டான் செய்த கலாட்டா இது: "பக்தவத்சலத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுதுகொண்டே சொன்னார். 'இந்தக் குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான்போல இருக்குப்பா.'
நான் கேட்டேன், 'ஏன்யா இப்படிக் கவலைப்படுகிறீர்கள்?'
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார்: 'திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம்தான் எங்க அப்பா'ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது?'
¶
மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறுநாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றிகொண்டான் பேசியது இது:
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார், 'மோகன், நீ கலைஞரை ரொம்ப திட்டுற!'
மோகன் குமாரமங்கலம் பதில்: ஆமா கடவுளே... அதுதான என் வேலை. திமுகவை எம்ஜிஆரை வைச்சு உடைச்சதே என் வேலைதான். இந்திரா காந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வெச்சிருக்கு கடவுளே!
கடவுள்: மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து. கலைஞரை திட்டாதே!
மோகன்: முடியாது கடவுளே!'
கடவுள்: அப்ப நீ கலைஞரைத் திட்டுவே?
மோகன்: 'ஆமா கடவுளே...'
கடவுள்: திட்டுவ நீ?
மோகன்: ஆமா திட்டுவேன்...
கடவுள்: சரி நீ ஏறு ப்ளேன்னுலே!
¶
எம்ஜிஆர் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைதுசெய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி வெற்றிகொண்டான் பேசியது இது:
மாஜிஸ்ட்ரேட் சொன்னார், 'கருணாநிதியைக் கைதுசெய்ய உத்தரவிடுகிறேன்!'
இப்படி சொன்னதுதான் தாமதம்.
அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல். நல்ல பெரிய ஓட்டல்.
நீங்க ஓட்டல்காரன்கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன்... அவன் சொல்வான் 'இந்த இடத்திலேதான் என் ஓட்டல் இருந்துச்சி!'
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான். 'இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி!'
(கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே உடனே தொண்டர்கள் ஓட்டலை அடித்து நொறுக்கிவிட்டார்களாம். இப்போது வெறும் பொட்டல்தான்.)
¶
நாவலர் நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகிய பின் அதுபற்றி வெற்றிகொண்டான் பேசியதுதான் உச்சம்!
"அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்ககிட்டே... நல்லா நெடுநெடுன்னு, கொழு,கொழுன்னு! அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்!"
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Sundar Gopalakrishnan 7 months ago
வெற்றிகொண்டான் பேச்சுகள் அருமை. தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா ஆகியோரின் பேச்சுகளையும் வெளியிடுங்கள். ஆர்.பி.ராஜநாயகத்துக்கு நன்றி!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.