திரிசிரபுரம் மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815 - 1876), பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் புலவர்; திறன் வாய்ந்த கவிஞர். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கம்பர்’ என்று பலரால் போற்றப்பட்டவர். உ.வே.சாமிநாதையர் போன்ற ஆளுமைகளை உருவாக்கிய ஆசிரியர். மரபு சார்ந்த விழுமியங்களைக் கடைப்பிடித்தவர்.
தமிழிலக்கிய மரபை ஆழமாக உள்வாங்கி அதன் சாரமும் வடிவமும் துலங்கப் பல செய்யுள் நூல்களை இயற்றியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நினைத்தவுடன் பாடும் அபாரமான ஆற்றல் வாய்ந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும் மரபு சார்ந்தே செயல்பட்டவராக இருந்தபோதும் ‘கருத்துரிமைப் பிரச்சினை’ அவரையும் விடவில்லை.
கருத்துரிமை என்னும் கருத்தாக்கம் ஜனநாயக சமூகத்தின் விளைபொருளாக இருக்கலாம். சட்டரீதியான உரிமைகள் ஜனநாயகக் காலத்திலேயே கிடைத்திருக்கலாம். ஆனால், இப்பிரச்சினை எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறது. குறிப்பாகப் படைப்பாளர்கள் இதிலிருந்து தப்பிக்க முடிந்ததில்லை.
மரபிலிருந்து விலகாமல் சமூக நியதிகளைக் கடைப்பிடித்துவந்தபோதும், கால மாற்றம் இப்பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது. இடம் சார்ந்தும் கருத்துரிமைப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. விழுமியங்களைக் காணும் பார்வையில் நேர்ந்த மாற்றங்களும் காரணம் ஆகியுள்ளன. அப்படித்தான் மகாவித்வானுக்கும் பிரச்சினை வந்திருக்கிறது!
திருவிடைமருதூர் காதல்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தேவாரப் பாடல் பெற்ற தலம். அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் இங்கு கோயில் கொண்டுள்ள மகாலிங்கேசுவரரைப் பாடியுள்ளனர். ‘திருவிடைமருதூர் மும்மணிக் கோவை’ என்னும் நூல் பட்டினத்தடிகள் எழுதிப் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. கருவூர்த் தேவர் ‘திருவிடைமருதூர்ப் பதிகம்’ பாடியுள்ளார். இவ்வாறு பல இலக்கியச் சிறப்புகளைப் பெற்ற திருத்தலம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும் இரண்டாம் சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவருமான கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் ‘திருவிடைமருதூர்ப் புராணம்’ எழுதியுள்ளார். சிவக்கொழுந்து தேசிகர் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மகாவித்வான் ‘திருவிடைமருதூர்ப் புராண’த்தைத் தம் மாணவர்களுக்குப் பாடம் சொன்னார். அப்போது அந்நூலின் நயம் அவரை ஈர்த்ததோடு திருவிடைமருதூரின் மீதும் ஈடுபாடு உருவாயிற்று.
பெருஞ்சிறப்புடைய திருவிடைமருதூர் தொடர்பாக ஏதேனும் நூல் இயற்ற வேண்டும் என்னும் ஆசை ஏற்பட்டது. அவருடைய அன்பர்கள் பலர் ‘அவ்வூர் தொடர்பாக ஓர் உலா நூல் இயற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினர். அவ்வேண்டுகோளை ஏற்றுத் ‘திருவிடைமருதூர் உலா’ என்னும் நூலை மகாவித்வான் இயற்றினார்.
உலாவின் இலக்கணத்தையும் மரபாக அது பாடப்படும் விதத்தையும் உட்கொண்டும் திருவிடைமருதூர் தொடர்பான நூல்களை எல்லாம் பயின்று அவ்வூர் பற்றிய செய்திகளைத் தொகுத்தறிந்தும் தம் உலாவில் பயன்படுத்திக்கொண்டார். தகவல்களும் இலக்கியச் சுவையும் நிரம்பியதாக நூல் அமைந்தது.
இறைவனோ அரசனோ யானை, குதிரை உள்ளிட்ட வாகனத்தில் ஏறி நகரை வலம் வரும்போது வீதியின் இருபுறமும் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்கள் அவன் மீது காதல் கொள்வதாகப் பாடுவது உலா என்னும் இலக்கிய வகை. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு பருவப் பெண்களும் காதல் கொண்டு பிதற்றுவதாக இவ்விலக்கியம் பாடும். நூற்றுக்கணக்கான உலா நூல்கள் தமிழில் உள்ளன.
இரு வகைக் கூறல் மரபு
ஒருவரது பெருமையை இருவகைகளில் சொல்வது தமிழ் இலக்கிய மரபு. புறப்பொருள் சார்ந்து ‘வீரத்தில் சிறந்தவன்’ என்று பாடுவர். அகப்பொருள் சார்ந்து ‘காமத்தில் சிறந்தவன்’ என்று பாடுவர். வீரத்திலும் காமத்திலும் சிறந்தவனாக இருப்பதே ஆண் ஒருவனுக்குரிய பெருமையாக அப்போது கருதப்பட்டது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மரபு தொடர்ந்து வந்திருக்கிறது. அதன் ஒருவகை வடிவம்தான் உலா.
முக்கியமான நாட்களில் அரசன் தன் பரிவாரங்களோடு நகர்வலம் வருவது வழக்கம். அதேபோல விசேஷ நாட்களில் இறைவன் தம் வாகனத்தில் வீதியுலா வருவது இன்று வரைக்கும் வழக்கிலிருக்கிறது. இந்த நடைமுறையை இலக்கிய உத்தியாகப் பயன்படுத்திக்கொண்ட இலக்கிய வகையே உலா. சிற்றிலக்கியம் வகைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இது. கலிவெண்பா என்னும் கடினமான யாப்பில் இது பாடப்படும்.
உலா நூல்கள் பலவற்றைக் கற்றுப் புலமை வாய்ந்திருந்த மகாவித்வான் தம் திறனை எல்லாம் பயன்படுத்தித் ‘திருவிடைமருதூர் உலா’ நூலை இயற்றினார். அந்நூல் 1870ஆம் ஆண்டு திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயிலிலேயே அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவதாணுத் தம்பிரான் என்பவர் முன்னிலையில் பல வடமொழி வித்வான்களும் ஊர்ப் பெரியவர்களும் மிராசுதார்களும் நிறைந்திருந்த அவையில் அரங்கேற்றம் சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. நூலின் அருமையை உணர்ந்து பலரும் பாராட்டினார்கள். ‘புறங்கூற்றாளர்’ சிலர் நூலைப் பற்றி இழிவாகப் பேசி அவ்வூர் மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்பினர். அரங்கேற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தபோதே இந்த தூஷணையும் நடைபெற்றது.
மன்னரிடம் கொண்டுசெல்லப்பட்ட அவதூறு
தஞ்சையை அப்போது ஆண்ட மராட்டிய மன்னர்களின் உறவினர்கள் சிலர் திருவிடைமருதூரின் ஒருபகுதியில் வசித்தனர். அவர்களிடம் சென்று ‘இந்த ஸ்தலத்தில் ஸ்வாமி வருகையில் வீதியில் உள்ள பெண்கள் காமம் கொண்டு பிதற்றினார்கள்’ என்று இவ்வூர் உலாவை இயற்றிய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த வீதியில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். உங்கள் ஜாதி ஸ்திரீகளுக்கு அபவாதம் அல்லவா இது?’ என்று அந்தப் புறங்கூற்றாளர் சொல்லிக் கலகத்தை மூட்டிவிட்டனர். இதனால் மகாவித்வானுக்குச் சில இடையூறுகள் ஏற்பட்டன. அவை என்னவென்று விரிவாகத் தெரியவில்லை. அவ்வூருக்குள் நுழையத் தடை விதித்திருக்கலாம். அவரை யாரும் ஆதரிக்கக் கூடாது என்று வாய்மொழியாகச் சொல்லியிருக்கலாம். அதைப் பற்றிச் ‘சில அசௌகரியங்கள் நேர்ந்தன’ என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.
இறைவனோ அரசனோ நகர்வலம் செல்லும்போது பெண்கள் கண்டு காதல் கொள்வர்; காதல் மீறிய காமத்தில் பிதற்றுவர் என எழுதுவது உலா இலக்கிய மரபு. அம்மரபின்படியே ‘திருவிடைமருதூர் உலா’ நூலும் இயற்றப்பட்டிருந்தது. இம்மரபை அறியாத மராட்டியர்களிடம் சென்று புறங்கூற்றாளர்கள் ‘உங்கள் ஜாதிப் பெண்களுக்கு இழிவு’ என்று கோள் மூட்டிவிட்டனர்.
பெண்களை உடைமையாகக் கண்டு வெளியுலகத்தில் உலவ விடாத, பிற ஆண்கள் முன்னால் வரவிடாத கட்டுப்பாடுகள் மிகுந்திருந்த காலம் அது. பெண்களையும் ஒழுக்கத்தையும் தொடர்புபடுத்தும் பார்வை இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வருகிறது. இன்றுபோலப் பெண்கள் நிலையில் முன்னேற்றம் இல்லாத காலத்தில் இந்த அபவாதம் பெருமளவு எடுபட்டிருக்கிறது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நூல் இழிவுபடுத்துகிறது என்று சொல்லும்போது அதன் முக்கியத்துவம் கூடியிருக்கும் என்பது உறுதி. ஆகவே புறங்கூற்றாளர் பேச்சு எடுபட்டு மகாவித்வானுக்குப் பல பிரச்சினைகள் உருவாயின.
முவ்வழி எதிர்கொள்ளல்
இப்பிரச்சினைகளை மூன்று வகையாக மகாவித்வான் எதிர்கொண்டார். முதலாவது, நூல் அரங்கேற்றத்தின்போது அவரது மாணவரும் கும்பகோணம் கல்லூரியின் ஆசிரியருமாகிய தியாகராச செட்டியாரைத் துணை வைத்துக்கொண்டார். உடன் இருப்பதற்காகவே தினமும் மாலையில் கல்லூரிப் பணி முடிந்ததும் கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூருக்குத் தியாகராச செட்டியார் வந்தார். அன்றைய அரங்கேற்றப் பகுதி நிறைவுற்றதும் சபையோரை நோக்கி ‘இதில் எவருக்கேனும் ஏதாவது ஆட்சேபமுண்டா? இருந்தால் நான் சமாதானம் கூறுவேன்’ என்று தியாகராச செட்டியார் கேட்பார். அரங்கேற்றம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் தியாகராச செட்டியார் வருகையும் அவர் கேள்வியும் தொடர்ந்தது.
அரங்கேற்றம் முடிந்த பிறகும் நூலைப் பற்றிய அபவாதம் முடிவுக்கு வரவில்லை. புறங்கூற்றாளர்கள் மீண்டும் மீண்டும் ‘பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட நூல்’ எனப் பரப்பிக்கொண்டே இருந்தனர். மகாவித்வான் மீது அபரிதமான பற்றுகொண்டிருந்தவர் பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை. பெருநிலக்கிழார். செல்வாக்குப் பெற்றவர். கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயல்புடையவர்.
அவரது அழைப்பின்பேரில் மகாவித்வான் ஒருமுறை பட்டீச்சுரம் சென்று தங்கினார். அப்போது ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் ஒரு திதி வந்தது. திதி விருந்துக்குப் புறங்கூற்றாளர்கள் உட்பட பலரையும் அவர் அழைத்தார். அனைவரும் மனம் மகிழும்படி பெருவிருந்து படைத்தார். விருந்து முடிந்ததும் ஓரிடத்தில் அனைவரும் கூடினர். கூடியிருந்தோரை நோக்கி ‘திருவிடைமருதூர் உலாவைப் பற்றிக் குற்றம் சொல்பவர்கள் இப்போது சொல்லலாம். ஐயா அவர்கள் சமாதானம் சொல்வார்கள்’ என்று அறிவித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அந்த அவையில் திருவிடைமருதூர் உலா மீண்டும் அரங்கேற்றப்பட்டது. அப்போது மகாவித்வானின் மாணவராக இருந்த உ.வே.சாமிநாதையர் நூலை வாசித்தார். மகாவித்வான் விளக்கம் சொல்லிக்கொண்டே வந்தார். புறங்கூற்றாளர்கள் தவறென்று சொல்லிக்கொண்டிருந்த இடங்களைக் குறிப்பாக எடுத்துக்காட்டி மரபிலிருந்தும் பிற உலா நூல்களிலிருந்தும் சான்றுகள் கொடுத்து உரிய சமாதானங்களை மகாவித்வான் கூறினார். பகலுணவுக்குப் பிறகு தொடங்கி இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் இந்த ‘இரண்டாம் அரங்கேற்றம்’ நடைபெற்று முடிந்தது. எல்லோரும் நூலையும் மகாவித்வானையும் போற்றினர். முன்பு குறை கூறிப் பரப்பியவர்களும் இப்போது பாராட்டினர்.
புறங்கூற்றாளர்களுக்குக் கேள்வி
புறங்கூற்றாளர்களைப் பார்த்து ‘நீங்கள் இப்பொழுது சொன்னது உண்மைதானா? இனி எங்கேனும் உலாவைப் பற்றித் தூஷணமான வார்த்தைகள் உங்கள் வாக்கிலிருந்து வெளிப்படுமானால் நான் சும்மா விட மாட்டேன். அறிந்து கொள்ளுங்கள்! இப்படிக் கண்டிப்புடன் ஆறுமுகத்தா பிள்ளை சொன்னார். அதற்குப் பிறகே நூலைப் பற்றிய புரளிகள் அடங்கின. அரசு நிறுவனம் சார்ந்த தியாகராச செட்டியார் துணை, செல்வாக்கு மிகுந்த நிலக்கிழார் ஆறுமுகத்தா பிள்ளையின் முயற்சி ஆகியவற்றைக் கொண்டு நூல் தொடர்பான பிரச்சினையை மகாவித்வான் எதிர்கொண்டார்.
இப்பிரச்சினையை உருவாக்கிய இருவர் பின்னர் மகாவித்வானிடமே பாடம் கேட்க மாணவர்களாக வந்து சேர்ந்தனர். அவர்களை அங்கீகரித்து மாணவர்களாக மகாவித்வான் ஏற்றுக்கொண்டார். தம் குருவுக்குப் பிரச்சினை கொடுத்தவர்கள் என்று அவ்விருவரையும் புறக்கணித்தும் இழிவுபடுத்தியும் பிற மாணவர்கள் பேசினர். அப்படிச் செய்யக் கூடாது என்று மகாவித்வான் கண்டித்தும் மாணவர்கள் கேட்கவில்லை.
திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடம் இப்பிரச்சினை சென்றது. ‘இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று’ என்னும் திருக்குறளை அவர் எடுத்துக்காட்டி அவ்விருவரையும் நல்லவிதமாக நடத்த வேண்டும் எனப் பிற மாணவர்களுக்குத் தேசிகர் அறிவுரை சொன்ன பிறகே சுமுகமாயிற்று. ‘நன்னயம்’ செய்து புறங்கூற்றாளரைத் தம் வசமாக்கிக் கொண்ட மகாவித்வானின் மூன்றாம் எதிர்வினை இது.
இவையெல்லாம் புற அளவில் அவர் செய்த எதிர்வினைகள். ஒரு படைப்பாளராக இப்பிரச்சினையை அவர் எப்படி எதிர்கொண்டார்? அவர் மனதில் இப்பிரச்சினை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது? அவர் இலக்கிய வாழ்வில் இப்பிரச்சினை எப்படி எதிரொலித்தது?
புராணம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி உள்ளிட்ட ஒவ்வொரு இலக்கிய வகையிலும் பல நூல்களை இயற்றிய மகாவித்வான் ‘திருவிடைமருதூர் உலா’ நூலுக்குப் பிறகு தம் வாழ்நாளில் வேறு உலா நூல் எதையும் இயற்றவில்லை. அவர் இயற்றிய முதலும் முடிவுமான ஒரே உலா அது மட்டுமே. தம் நூலை இழிவுபடுத்திய சமூகத்திற்கு ஒரு படைப்பாளராக மகாவித்வான் காட்டிய இந்த எதிர்வினை துயரமானது. ஒரு படைப்பாளரின் மன அவஸ்தையை வெளிப்படுத்துவது ஆகும்.
Ω
பயன்பட்ட நூல்கள்:
1. உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்வான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், இரண்டு பாகங்கள், 1986, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு.
2. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
Ω
(பிப்ரவரி 01, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நினைவு நாள்)
3
3
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
HARI HARAN K 3 years ago
கருத்துரிமையைப் பாதுகாக்க( கருத்தை வெளியிட்டவரும் & அதற்குத் துணையாக பிறரின் ஆதரவும்) தேவை என்பதை மகாவித்வான் வாழ்விலிருந்தே எடுத்துக்காட்டிய பெருமாள்முருகன் ஐயாவிற்கு நன்றி
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Latha 3 years ago
சூப்பர் கட்டுரை
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
MANI N 3 years ago
இலக்கிய வரலாற்றின் வேர்களைத் தேடி கருத்து சுதந்திரத்தின் மீது அந்தக் காலத்தில் விழுந்த அடிகளை அழகாக பெருமாள் முருகன் எடுத்துக் காட்டியுள்ளார். இதனை ஒட்டித் இச்சொல் வடையும் உருவாகி இருக்க வேண்டும். " எட்டு ஆள் வேலை செய்யலாம். ஆனா எதுத்தாள் வேலை ஆகாது"
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
படைப்பாளிகளைப்போல் வசவாளர்களும் ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சிதான் போலிருக்கிறது. ஆனால், அக்காலத்தவர்கள் எழுத்தாளரின் குரலைக் கேட்கச் சித்தமாயிருந்திருக்கிறார்கள்; எழுத்தாளன் தரப்பைக் கேட்க எதிராணியிலும் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.