கட்டுரை, அரசியல், மொழி 5 நிமிட வாசிப்பு

இந்து, இந்திதான் இந்தியாவுக்குச் சொந்தமா?

ப.சிதம்பரம்
17 Oct 2022, 5:00 am
1

த்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜையினி நகரில் உள்ள தொன்மையான மஹாகாலேஸ்வர் ஆலயத்தைப் புதுப்பித்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அக்டோபர் 11ஆம் நாள் (செவ்வாய்) பங்கேற்றார்.

மோடி, ஆழ்ந்த பக்தி கொண்ட இந்து. இந்தியர்களில் பெரும்பாலானவர்களும் பக்தியுள்ள இந்துக்களே. இந்துக்கள் அல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் அவரவர் மதங்களில் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்று சொல்லலாம்.

மஹாகாலேஸ்வர் ஆலயத்துக்கு மோடி சென்று பிரார்த்தனையில் பங்கேற்றதுடன் சில சடங்குகளையும் செய்தார். நான் பார்த்தவரைக்கும், எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் அந்த நிகழ்ச்சியை ஒரு நிமிடம்கூட விட்டுவிடாமல் கடமையுணர்வுடன் தொடர்ந்து ஒளிபரப்பின. ஆலய சன்னிதானத்தில் அவருக்கு பொன்னிற அங்கவஸ்திரம் சார்த்தப்பட்டது, காவி நிற வஸ்திரமும் தலையில் அணிவிக்கப்பட்டது. அரைத்த சந்தனத்தை நெற்றி நிறையப் பூசியிருந்தார், பெரிய குங்குமத் திலகத்தையும் தரித்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இடையே (கிட்டத்தட்ட அனைவருமே இந்துக்கள் என்று கருதுகிறேன்), நன்றாகத் தயார் செய்திருந்த உரையை நிகழ்த்தினார்.

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தொன்மையான நகரங்களையும் அங்குள்ள பெரிய ஆலயங்களையும் அவர் நினைவுகூர்ந்தார். சம்ஸ்கிருத வேதத்திலிருந்து சில வரிகளையும் மேற்கோள் காட்டினார். சிவ பக்தியின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை விரிவாக விளக்கினார். இந்த உரைக்காக உருப்போட்டுவிட்டு வந்தாரா, அல்லது பிறர் கண்ணில்படாமல் அவர் மட்டும் பார்த்துப் பேசும்படியான ‘டெலி-பிராம்ப்டர்’ வசதியைச் செய்திருந்தார்களா தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது மிகவும் திறமையாக அரங்கேற்றப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி.

வழக்கமான தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கான உரையல்ல அது. இந்து பக்தர்களுக்கிடையே, ஆன்மிக இந்து பிரவசனகர்த்தாக்கள் பேசுவதைப் போன்றதொரு நடை. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கூட்டம் வரவேற்று ஆமோதித்தது. இந்தியா இப்போது ஆன்மிகப் பாதையில் பயணிப்பதாகவும், பண்டைய இந்தியாவின் ஆன்மிகப் பெருமையைத் தாங்கள் மீட்டுருவாக்கம் செய்வதாகவும் பேசினார். உரையை முடிக்கும்போது, ‘ஜெய் ஜெய் மஹாகால்’ என்று பல முறை உரத்து சொல்லி முடித்தார். அவர் சொன்ன ஒவ்வொரு முறையும் கூட்டம் உற்சாகம் பொங்க அப்படியே திருப்பிச் சொல்லியது. அவர் சொல்ல வந்த செய்தி தெளிவானது: மோடியின் வரலாற்றுப் பக்கத்தில் இந்தியா என்றால் ‘இந்து இந்தியா’. மோடியின் கனவும் ‘இந்து இந்தியா’ என்பதே!

முழுச் சித்திரம் அல்ல  

நிகழ்ச்சியை மோடி தொடங்கியது, பேசியது எல்லாம் சரி – ஆனால், ஒன்று மட்டும் சுருதிபேதமாக நெருடுகிற அளவுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது – மோடி தனிநபரல்ல – இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் – 79.8% ஹிந்துக்கள், 14.2% முஸ்லிம்கள், 2.3% கிறிஸ்தவர்கள், 1.7% சீக்கியர்கள், 2.0% பிற மதத்தவர்களைக் கொண்ட நாடு இது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கக் கட்டுப்பட்டவர், அனைத்து மக்களுக்குமாகப் பேச வேண்டியவர் பிரதமர்.

யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றில்லாமல் அனைத்து மதத்தவராலும் உருவாக்கப்பட்டது நம் நாடு. இதனால்தான் நம்முடைய அரசமைப்புச் சட்டம் ‘சமத்துவம்’ என்பதை வலியுறுத்துகிறது; நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில், ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அழுத்தம் தரப்பட்டது. காரணம், நம்முடைய குடியரசை உருவாக்கிய ஆவணத்திலேயே அது ‘உள்ளடக்கம்’ ஆக இருந்துவருகிறது.

உஜ்ஜையினியில் நிகழ்ந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றது குறித்து எனக்கு மகிழ்ச்சியே! இதேபோல கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமியர்களின் மசூதி போன்றவற்றின் புதுப்பிப்பு – அர்ப்பணிப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பதை விரும்புகிறேன். இந்துக்களின் ஆன்மிகப் பயணம் குறித்து மிக விரிவாகப் பேசினார், அதேபோல இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமயத்தாரின் ஆன்மிகப் பயணங்கள் குறித்தும் அவர் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்.  

மோதலைத் தூண்டும் முயற்சி

இந்து மத நம்பிக்கையை நம்முடைய பிரதமர் இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடிவரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியைப் பிற மொழிக்காரர்கள் மீது திணிக்கும் வேலையை ஓசையில்லாமல் மேற்கொண்டிருக்கிறார். ஆட்சிமொழிக் குழுவுக்கு உள்துறை அமைச்சர்தான் ‘பதவி-வழி’ தலைவர். அந்தக் குழுவின் 11வது அறிக்கை, குடியரசுத் தலைவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள் வெளியில் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘தி பிரின்ட்’ செய்தி நிறுவனம் அதை அம்பலப்படுத்தும் வரையில் யாருக்கும் தெரியாது. இப்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிச்சயமாக இந்தி பேசாத மாநிலங்களில் பெரிய எதிர்ப்பலைகளை உண்டாக்கும்.

‘தி பிரின்ட்’ நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையின்படி, குழுவின் முக்கியப் பரிந்துரைகள் வருமாறு:

கேந்திரிய வித்யாலயங்கள், ஐஐடிக்கள், ஐஐஎம்கள், ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்திதான் கட்டாயப் பயிற்றுமொழி.

கேள்வி: இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயங்கள், ஐஐடிக்கள், ஐஐஎம்கள், ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் இந்தியே கட்டாயப் பயிற்றுமொழியாக இருக்குமா? இந்தி மட்டுமே ஒரே பயிற்றுமொழியாக இருக்குமா, மாற்று பயிற்றுமொழியாக இருக்குமா?

அரசு வேலைகளுக்கான ஆள் தேர்வுகளுக்கு ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி இனி பயன்படுத்தப்படும்.

கேள்வி: இந்தி தெரியாதவர்கள் இதனால் அரசு வேலைக்குத் தேர்வெழுத முடியாமல் தடுக்கப்படமாட்டார்களா?

இந்தியில் அறிக்கைகளையும் ஆவணங்களையும் கோப்புகளையும், வேண்டுமென்றே எழுதாத அதிகாரிகளிடம் அதற்கான விளக்கங்கள் கோரப்படும்.

கேள்வி: வங்காளி, ஒடியா அல்லது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகள் இந்தியைக் கட்டாயமாகக் கற்றுக்கொண்டு, அவருடைய அலுவலைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார்களா?

எங்கெல்லாம் மிகவும் அவசியமோ அங்கு மட்டுமே ஆங்கிலம் பயிற்றுமொழியாக தக்கவைத்துக்கொள்ளப்படும், அங்கும் காலப்போக்கில் இந்தி அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும்.

கேள்வி: தங்களுடைய மகன் அல்லது மகள் எந்த மொழியில் படிக்க வேண்டும் – அல்லது தாங்கள் எந்த மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கோ – மாணவர்களுக்கோ இனி கிடையாதா?

அரசு வேலைகளில் சேர்க்கப்பட இந்தி மொழியறிவு இருப்பது உறுதிசெய்யப்படும்.

கேள்வி: இந்தியைப் பேசாத ஒருவர் – அவருக்கு இந்தி தெரியாது என்பதால் அரசு வேலை மறுக்கப்படுமா?

விளம்பரங்களுக்காக அரசு ஒதுக்கும் தொகையில் 50% இந்திக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

கேள்வி: எஞ்சிய 50% தொகை மட்டும்தான் ஆங்கிலம் உள்பட பிற மொழிகளுக்கு ஒதுக்கப்படும் என்றால் இந்தி மொழியல்லாத ஊடகங்கள் வருமானம் குன்றி அழிவதை விரைவுபடுத்திவிடாதா?

இந்தியை பிரச்சாரம் செய்வதும் வளர்ப்பதும் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்பூர்வ கடமையாக்கப்படும்.

கேள்வி: இந்தியைப் பிரச்சாரம் செய்ய மறுக்கும் மாநில அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்படுமா?

நான் ஓர் அசாமியனாகவோ மலையாளியாகவோ இருந்தால் - அரைக் குடிமகனாகவே என்னை உணர்வேன்; முஸ்லிமாகவோ கிறிஸ்தவராகவோ இருந்தால் - நான் குடிமகனே அல்ல என்றே நினைப்பேன்!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4

2

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெரெஸ்த்ரொய்காஒன்றிய சட்ட அமைச்சர்அகிம்சைபிட்ரோடாமின்சக்திதர்மசக்கரம்நாடகம்அருஞ்சொல் நாராயண குருகுஜராத் படுகொலைபதவி விலகவும் இல்லைஸ்வீடன்ஆக்கப்பூர்வமான மாற்றம்அருஞ்சொல் நேருஆளுமைகள்மோதும் இரு விவகாரங்கள்இடதுசாரிதேசத் துரோகச் சட்டம்பார்வையிழப்புபீமா கோரெகவோன்அதிதீவிர தேசியவாதிகள்மேலாதிக்கம்இந்தியத் தாய்மொழிகளின் தகைமைவாசகர்கூடுதல் முக்கியத்துவம்அருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டிஅண்ணாவின் மொழிக் கொள்கைஆண்டாள்காந்திய வழியில் அமுல்டி.டி.கோசம்பிகழுத்து வலியால் கவலையா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!