கட்டுரை, அரசியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

அக்னி பாதை: முட்டாள்தனமான திட்டம்

ப.சிதம்பரம்
27 Jun 2022, 5:00 am
0

உலகப் போர்களின் சமயத்தில் அமெரிக்கா முழுவதும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. “எனக்கு நீ வேண்டும் – அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்ற” என்று அந்த சுவரொட்டி நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதில் இடம்பெற்றிருந்த நீளமான தொப்பி அணிந்த உருவத்தை ‘அங்கிள் சாம்’ என்று செல்லமாக அழைத்தார்கள். இந்தியாவின் முப்படைக்கு வீரர்களைத் தேர்வு செய்ய இந்திய அரசும் அதே பாணியில் சுவரொட்டிகளைத் தயார் செய்யலாம். ஆனால் அதில், 'தையல்காரர், சலவையாளர், சிகை திருத்துநர் ஆக ஆட்கள் தேவை' என்ற சிறு வாசகத்தைச் சேர்த்தாக வேண்டும்.

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான ‘அக்னிபத்’ எளிமையானது, உண்மையில் மிக மிகச் சாதாரணமானது. ஆண்டுதோறும் முப்படைகளுக்கு மொத்தம் 46,000 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அதற்குப் பிறகு 42 மாதங்களுக்கு அவர்கள் படைகளில் பணியாற்றுவார்கள். அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் (25%) மட்டும் 11 முதல் 13 ஆண்டுகள் வரையில் மேலும் படைகளில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

எஞ்சிய 34,500 பேர் பணிமுடிப்புத் தொகையாக மொத்தம் ரூ.11,67,000 ரொக்கம் கையில் தரப்பட்டு அனுப்பப்படுவார்கள். அதற்குப் பிறகு அவர்களுடைய வேலைக்கோ, ஓய்வூதியத்துக்கோ, பணிக்கொடைக்கோ, மருத்துவ உதவிக்கோ - வேறு எதற்குமே ராணுவத்திடமிருந்து எந்த உத்தரவாதமும் கிடையாது.

முதலில் செயல், பிறகே சிந்தனை

இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளும் பாதகமான அம்சங்களும் பளிச்செனக் கண்ணில் படுகின்றன, அப்பட்டமாகத் தெரிகின்றன. இந்த யோசனை ‘மேல்நிலையிலிருந்து திணிக்கப்பட்டது’ என்பது முதலிலேயே தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற 2014 முதலே இப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திடீர் பணமதிப்பு நீக்கம், பிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு அவசரகதியில் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள் இதற்கு உதாரணங்கள்.

எதிர்பார்த்தபடியே, அரசின் புதிய ராணுவ ஆளெடுப்பு திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் அதில் முன்னிலை வகித்தனர். ராணுவத்துக்கு ஆளெடுக்கும் பணி, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலமாக அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் நடைபெற முடியாமல் போனதால், ராணுவத்தில் சேருவதற்கான தகுதி வயது 21-ஐத் தாண்டிய இளைஞர்கள் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்தனர். போராட்டங்கள் வலுத்ததும் அரசு ஒவ்வொன்றாக இடைக்கால அறிவிப்புகளை, இளைஞர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக வெளியிடத் தொடங்கியது. இந்த அறிவிப்புகளை ‘ஏற்கெனவே முடிவு செய்திருந்ததாகவும்’ வெட்கமில்லாமல் அரசு சொல்லிக்கொண்டது. அரசும் ராணுவமும் பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்த எந்தச் சலுகையும் விதிவிலக்கும் மாற்று ஏற்பாடும் இந்த ஆளெடுப்புத் திட்டத்தின் அடிப்படையான குறைபாடுகளைத் தீர்ப்பதாக இல்லை.

முதலாவதாக, இந்த அறிவிப்பு வெளியான நேரமே சரியில்லை. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அசாதாரணமான நிலை நிலவுகிறது. சீன எல்லையிலிருந்து திடீர் படையெடுப்புகளும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து ஊடுருவல்களும் முடிவில்லாமல் தொடர்கின்றன. கோடை காலத்தில்தான் ஒழுகும் வீட்டுக்கூரையைப் பழுது பார்க்க வேண்டும் - மழை பெய்துகொண்டிருக்கும்போதல்ல!

இரண்டாவதாக, அரசு அறிவித்துள்ள அக்னி வீரர்கள் போதிய அளவுக்குப் பயிற்சி பெறாமலேயே எல்லைகளில் கொண்டுபோய் நிறுத்தப்படுவார்கள். கடற்படைத் தளபதி அருண் பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார், வழக்கமாக கடற்படைக்கு வீரர்கள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பயிற்சி பெற்ற பிறகே முழுமை அடைவார்கள். கடற்படையும் விமானப் படையும் தொடர்ச்சியாக நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்திக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் எந்த ஒரு கடற்படை வீரரும் விமானப் படை வீரரும் ஆறு மாதங்களுக்குள் பயிற்சிகளை முடித்துக்கொள்ள முடியாது.

அக்னிபத் திட்டப்படி ராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து முப்படைகளிலும் சேர்க்கப்பட்ட பிறகு பிரம்மோஸ், பினாகா அல்லது வஜ்ரா போன்ற நவீன ரக ஏவுகணைகளையும் போர்த் தொழில்நுட்பங்களையும் கையாளும் திறமையற்றவர்களாக இருப்பார்கள் எனக் கவச வாகனப் படையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் பி.ஆர்.சங்கர் ஏராளமான தரவுகளுடன் கட்டுரையில்  சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர்கள் பீரங்கியைக் கையாளவும் படைப்பிரிவின் தலைவருக்கு அடுத்தநிலை அதிகாரியாகவும்கூட பணியாற்றும் அளவுக்குப் போதிய பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள் என்கிறார். அக்னிபத் திட்டத்தின் கீழ் உருவாகும் தரைப் படையை ‘கிண்டர் கார்டன் சேனை’ என்கிறார்!

மூன்றாவதாக, போர்க்குணம் மிக்க படைவீரர் தன்னுடைய படைப்பிரிவு குறித்துப் பெருமை கொள்பவராக இருக்க வேண்டும். நெருக்கடியான நிலையில் தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறவராகவும் எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று ராணுவத்தில் பணிபுரிந்து தங்களுடைய அயராத உழைப்பு, திறமை ஆகியவற்றால் புகழ்பெற்ற பல தரைப்படை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆறு மாதப் பயிற்சிக் காலத்தில் இந்தப் பண்புகள் வந்துவிடும் என்று மனிதவளம் தொடர்பான எந்தப் பாடப்புத்தகமும் சொல்லவில்லை. மாநிலங்களில் காவல் துறையில் ஒரு போலீஸ்காரருக்குப் பயிற்சி தருவதற்குகூட அதிக காலம் பிடிக்கிறது.

நான்காவதாக, ராணுவத்தில் அதிலும் குறிப்பாக தரைப்படைப் பிரிவில் பாரம்பரியமும், சமுதாயப் பண்புகளும் நிலவுகின்றன. ஒரு போர் வீரர் தன்னுடைய நாட்டுக்காகவும் சக வீரர்களைக் காப்பாற்றவும் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்பவராக இருக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு படைப்பிரிவுகள் தொன்மையானதாக இருக்கலாம்; ஆனால், உலகிலேயே மிகச் சிறந்த ராணுவமாக இந்தியா திகழ அவையே காரணமாக இருக்கின்றன.

நான்காண்டுகள் படையில் பணிபுரியும்போதே அக்னி வீரர்களுக்குத் தெரியும், நான்காண்டுகளுக்குப் பிறகு தங்களில் முக்கால்வாசிப்பேர் ‘ராணுவத்தில் சேர்ந்தவர்கள்’ என்ற அடைமொழியுடன் மகிழ்ச்சியற்றவர்களாக விடுவிக்கப்படப்போகிறார்கள் என்று. அவர்களை ‘முன்னாள் படை வீரர்கள்’ என்றுகூட அழைக்க மாட்டார்கள். வாழ்க்கையை எதிர்கொள்வதிலும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருப்பார்கள். அப்படிப்பட்ட வீரர்களிடையே நான்காண்டுகளில் தோழமை நிலவுமா, போட்டி நிலவுமா? அப்படிப்பட்ட வீரர்கள் தேவைப்படும்போது எப்படி உச்சபட்ச தியாகங்களைச் செய்வார்கள்?

ஐந்தாவதாக, நிதிச் செலவை மிச்சம் பிடிக்க வேண்டும் என்கிற சிக்கன நடவடிக்கைக்காக ராணுவ வீரர்களின் தரம், திறம், பயனுள்ள செயல்பாடு ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றியவர்களின் ஓய்வூதியச் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவது உண்மையில் பிரச்சினைதான். அதைச் சமாளிப்பதற்காக மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதே ‘அக்னிபத்’ வழிமுறைதான் இஸ்ரேலில் முயற்சிக்கப்பட்டு வெற்றிகரமாக அமலாகிறது எனும் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. இஸ்ரேல் என்பது மிகவும் குறைவான மக்கள்தொகையுள்ள சிறிய நாடு. அங்கே வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அங்கே இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து கட்டாயம் சேவையாற்ற வேண்டும்.

சரி, ‘அக்னிபத்’ திட்டத்தை ஏன் சோதனை திட்டமாக சில படைப்பிரிவுகளில் மட்டும் அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று அனுபவம் மூலம் விளைவுகளைத் தெரிந்துகொண்ட பிறகு, முழு ராணுவத்துக்கும் விரிவுபடுத்தக் கூடாது? இவ்வளவு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த பிறகு தரைப்படையின் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜு சொல்கிறார், “இது முன்னோடி திட்டம்தான் – நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று!

ஒப்பந்தப் படையணிகளா?

போதிய பயிற்சி இல்லாமல், உரிய லட்சியமும் ஊட்டப்படாத, பெருமளவு ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களைக் கொண்ட படைப் பிரிவுகள் நாட்டின் பாதுகாப்புக்குப் பெருத்த பலவீனமாக அமைந்துவிடாதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாத அரசு, அடுத்தடுத்து சில மாற்றங்களையும் சலுகைகளையும் அறிவித்தபடி இருக்கிறது.

மத்திய துணைநிலை ராணுவப் படைப்பிரிவுகளிலும் மத்திய அரசின் அரசுத் துறை நிறுவனங்களிலும், பணிக்காலம் முடிந்து வெளியேவரும் அக்னி வீரர்களுக்கு 10% பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது சரியான பதில் அல்ல.

முன்னாள் படை வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிரிவின் தலைமை இயக்குநர் அளித்த தகவல்களின்படி (21.06.2022 இந்தியன் எக்ஸ்பிரஸ்), குரூப்-சி பதவிகளில் 10-14.5% பதவிகளும் குரூப்-டி பதவிகளில் 20-24.5% பதவிகளும் ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தும் உண்மையில் குரூப்-சி பிரிவுகளில் 1.29% குறைவாகவும் குரூப்-டி பிரிவில் 2.66% குறைவாகவும்தான் சேர்க்கப்பட்டனர்.

ராணுவப் படைப் பிரிவுகளில் ஆள் சேர்ப்பதில் மாறுதல்களைச் செய்ய வேண்டிய தேவையேற்பட்டால் அது தொடர்பாக விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரச்சினைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். மாற்று வழிகளை ஆலோசனைகளாகக் கூறுமாறு கேட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறைக்கென்று உள்ள நிலைக்குழுவில் இதைப் பற்றி விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகே சட்டமாகவோ திட்டமாகவோ இதைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

போதிய முன்தயாரிப்புகளின்றி தயாரிக்கப்பட்ட அக்னிபத் ஆள் சேர்ப்புத் திட்டத்தை மோடி அரசு  உடனடியாகக் கைவிட வேண்டும், மாற்று வழி என்ன என்று அரசு மறுபடியும் ஆரம்பத்திலிருந்து சிந்திக்க வேண்டும்!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!வாசிப்புஐம்புலன்எம்.எஸ்.கோல்வால்கர்பொரு:ளாதாரம்தெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?சென்னையை நாசப்படுத்திவிட்டோம்: ஜனகராஜன் பேட்டிஅருஞ்சொல் சமஸ் கி.வீரமணிடெசிபல் சத்தம்குறைந்த பட்ச ஆதரவு விலைதேசிய பள்ளிலக்‌ஷ்மி ராமச்சந்திரன்மதவாதம்பின்தங்கிய பிராந்தியங்கள்மு.க.அழகிரிவயிற்றுவலிஇவர் இல்லை என்றால் எவர் தமிழர்பண்டிதர் 175திருநாவுக்கரசர் சமஸ் பேட்டியோசாபொருளாதார நிலைஜாங் வெய்அமெரிக்கர்கள்கிருபளானிதமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்சபாநாயகர் அப்பாவுதேவேந்திர பட்னாவிஷ்இயர் மஃப்கார்போவுக்கு குட்பை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!