தலையங்கம் 3 நிமிட வாசிப்பு
மாத்தூர் முன்னெடுக்கும் மக்கள் நெருக்க நிர்வாகம் செழித்துப் பரவட்டும்
கேரளத்தின் மத்தூர் ஊராட்சி சமீபத்தில் நிறைவேற்றியிருக்கும் ஒரு தீர்மானம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் சார்பிலிருந்து ஒரு அறைகூவலை விடுப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தின்படி இனி பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும், கோரிக்கைகளுடன் வரும் மக்கள், ‘சார், மேடம்’ என விளிக்க வேண்டியது இல்லை; அவர்களுடைய பெயர்களைச் சொல்லியோ, பதவியைச் சொல்லியோ, வயதில் மூத்தவர்களாக இருந்தால், ‘அண்ணன் அல்லது அக்கா’ என்று சொல்லியோ விளிக்கலாம். காங்கிரஸ் கட்சியின் பிரவிதா முரளீதரன் தலைவர் பதவியை வகிக்கும் இந்த ஊராட்சியின் மார்க்ஸிஸ்ட் கட்சி, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். அலுவலர்களும் இதற்கு ஒத்திசைந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
நாட்டிலேயே இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றி செயல்படுத்தியுள்ள முதல் ஊராட்சி இது. அலுவலகத்தில் இது தொடர்பான அறிவிப்புப் பலகையை வைத்திருப்பதுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் அமரும் இடங்களில் சம்பந்தப்பட்டவருடைய பெயர், பொறுப்பு அடங்கிய பெயர்ப் பலகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. “காலனிய கால நடைமுறைகளை நாம் இனியும் தொடர வேண்டியது இல்லை. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமான்கள். மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சேவை புரிபவர்கள். நாம் மேலும் ஜனநாயகமாக வேண்டும் என்றால், மக்கள்தான் ஜனநாயகத்தில் எஜமானர்கள் எனும் உணர்வு அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்களில் நிலைப்பெற வேண்டும். அதற்கான எங்களாலான முயற்சி இது” என்கிறார் மாத்தூர் ஊராட்சித் தலைவர். அதேபோல, ஊராட்சிக்கு அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களின் பெயர்களையும், ‘விண்ணப்பப் படிவம்’ என்பதற்கு மாறாக ‘உரிமைப் படிவம்’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
மாத்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்னெடுப்பை அடையாள அரசியலாக மட்டும் கருதிட இயலாது. இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதிட முடியும். சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டாகும் காலத்திலும் நம்முடைய ஆட்சியாளர்களின் நடைமுறைகளில் காலனியக் காலக் கலாச்சாரத்திலிருந்து பெரிய மாற்றங்கள் இல்லை. சொல்லப்போனால், ‘அண்ணன், அக்கா’ என்ற விளிப்பானது அரசியலர்களுக்கு ரொம்பவும் புதிதாக இருக்காது. அரசியலர்களைப் பெரும்பாலும் அத்தகு உரிமையோடுதான் கீழே உள்ள மக்கள் அழைக்கிறார்கள். அதிகார வர்க்கம்தான் இந்த விஷயத்தில் மிகுந்த இடைவெளியைப் பராமரிப்பதாக இருக்கிறது. நீதித் துறையினர் இதன் உச்சத்தில் இருக்கிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்துரு செயல்படுத்திக் காட்டிய முன்னுதாரணங்களை இங்கே நினைவுகூரலாம். நீதிபதிகளை நோக்கி வழக்கறிஞர்கள் ‘மை லார்டு!’ என்று அழைப்பதைக் கைவிடச் சொன்னவர் சந்துரு. நீதிபதி, நீதியரசர் என்கிற வார்த்தைகளைவிட, ‘நீதிநாயகம்’ எனும் சொல் பொருத்தமானது என்று அவர் கூறினார். காவல் துறைப் பாதுகாப்பு, செங்கோல் ஏந்திய ஊழியர் போன்ற நீதிபதிகளுக்கே உரிய சம்பிரதாயங்களை அவர் ஒதுக்கித் தள்ளினார். நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அளிக்கப்படும் பிரிவு உபச்சார விருந்தையும்கூட நிராகரித்தார். இவை எல்லாமே காலனிய ஆட்சிமுறையின் எச்சங்கள் என்பதே சந்துரு முன்வைத்த முக்கியமான வாதம். பணி ஓய்வுக்குப் பின்னர் ‘மக்கள் நீதிபதி’ என்று மக்களால் அவர் கொண்டாடப்பட்டதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
இப்படியான மாற்றங்களை யாரோ முன்னெடுக்கும்போது, அவர்களைப் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்வதானது அந்த மாற்றங்களைத் தொடர்ந்து பரவச் செய்திட உதவாது. அடுத்தடுத்து அந்தந்தத் துறைகளைச் சேர்ந்தோரும், சமூகத்தின் ஏனைய பிரிவினரும் மாற்றங்களை வரித்துக்கொள்ள வேண்டும். அதுதான் புதிய மாற்றத்துக்கு சமூகம் கொடுக்கும் மரியாதையாக இருக்க முடியும். இப்படித்தான் ஒரு புதிய கலாச்சாரத்தை நம்மால் உருவாக்கிடவும் முடியும்.
இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் ஆண்டான் - அடிமை உறவுமுறைதான் ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையே தொடர்கிறது. அரசுத் துறைகளின் அதிகாரப் படிநிலையிலேயே அடிமைத்தனம் இன்னும் உறைந்திருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். சீருடைப் பணிகளில் இருப்பவர்களின் நிலை இந்த விஷயத்தில் மிக மோசம். அரசு ஊழியர்களின் பணிக் கலாச்சாரத்தை ஜனநாயகப்படுத்துவதைச் சிந்திக்காமல் மக்களுக்கும் அவர்களுக்குமான உறவில் சீர்திருத்தத்தை நம்மால் சிந்திக்க முடியாது.
ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்குமான இடைவெளியை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு ஜனநாயகத்துக்கு நல்லது. இது மேலிருந்து நடைமுறைக்கு வர வேண்டும்; அப்படி வரவில்லை; இப்போது கீழிருந்து வரும் நடைமுறையையாவது மேலே இருப்பவர்கள் ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தைக் கவனிக்கட்டும்!
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Prabhu 4 years ago
அதிகாரமானது தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் மொழியையே அதிகம் சார்ந்திருக்கிறது. மொழி சார்ந்த சம்பிரதாயங்களை சிதைக்க அதிகாரம் முன்வருவது தன் வளமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள அது தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது என்பதாகும். இந்த வகையில் மாத்தூர் பஞ்சாயத்தார் முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.