தலையங்கம், இலக்கியம், தொழில் 5 நிமிட வாசிப்பு

பத்திரிகைகளின் வீழ்ச்சி ஜனநாயகத்தின் வீழ்ச்சி

ஆசிரியர்
23 May 2022, 5:00 am
5

ழுத்தாளரும், அரசியலருமான ரவிக்குமார் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பானது, ஒரு முக்கியமான பிரச்சினை தொடர்பில் பொதுச் சமூகத்தின் கவனத்தைக் கோருகிறது. ‘அச்சுக் காகிதத்தின் கடுமையான விலை உயர்வு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது; ஆகையால், ‘மணற்கேணி பதிப்பகம்’ மூலம் அச்சு நூல்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்’ என்று ரவிக்குமார் அறிவித்திருக்கிறார். இப்போது அவர் நடத்திவரும் மூன்று பத்திரிகைகளில், 25 ஆண்டுகளாக வெளிவரும் ‘தலித்’ பத்திரிகையையும் நிறுத்திக்கொள்ளும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. 

ரவிக்குமாரின் ‘மணற்கேணி பதிப்பகம்’ மட்டும் அல்லாது, அவர் நடத்திவரும் ‘மணற்கேணி’, ‘போதி’, ‘தலித்’ மூன்று பத்திரிகைகளுமேகூட தனித்துவமானவை; தமிழ்ச் சூழலில் பலர் கவனம் செலுத்தாத, வெளியிடத் தயங்கும் விஷயங்களை வெளிக்கொண்டுவருபவை. முக்கியமாக அரசின் கொள்கை முடிவுகளில் தொடர்ந்து இடையீடு செய்பவை; எளிய மக்களின் தரப்பில் நின்று அரசோடு உரையாடுபவை. இத்தகு பண்பைக் கொண்ட ஒரு பத்திரிகை நிறுத்தப்படுவதும், பதிப்பகம் தன் செயல்பாடுகளைக் குறுக்கிக்கொள்வதும் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு நிறுவனத்துக்கான இழப்பு என்பதைத் தாண்டி விளிம்புநிலை மக்களின் இதழியலுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகச் சூழலுக்கும் ஏற்படும் இழப்பு ஆகும். 

இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக ரவிக்குமார் இருக்கிறார்; கூடவே விசிக போன்ற பல லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரு வெகுஜன அரசியல் கட்சியின் பொதுச்செயலர் பதவியிலும் இருக்கிறார். அரசியலுக்கு வரும் முன், ஒரு சாதாரண வங்கி ஊழியராக இருந்த காலத்திலும்கூட அவரால் பதிப்புப் பணியில் வெற்றிகரமாகச் செயல்பட முடிந்தது; இன்று முடியவில்லை என்றால், அச்சுப் பத்திரிகைகளையும், நூல்களையும் கொண்டுவருவது இன்று எவ்வளவு சவாலாக மாறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதோடு, அதற்கான கட்டுரைகளை எழுதிடுதல், வெளிமொழிப் படைப்புகளை மொழிபெயர்த்திடல், பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் என்று பெரும்பான்மைப் பணிகளைத் தனியாகவே பார்த்திடும் ஆற்றலும் கொண்டவர். இத்தகு பின்னணி கொண்ட ஒருவராலேயே தாக்கு பிடிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது என்றால், சாதாரணர்களுக்கு இது இன்னும் எவ்வளவு தீவிரமான நெருக்கடியாக இருக்கும் என்பதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டி உள்ளது.

பெரிய நிறுவனங்கள் நடத்தும் வெகுஜன அச்சுப் பத்திரிகைகளும், பெரும் பதிப்பகங்களுமே சரிந்துவரும் காலம் இது; கரோனா ஊரடங்கு முடக்கத்தோடு பல நூறு பத்திரிகைகள் அடியோடு நின்றன. தமிழில் முக்கால் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘கல்கி’ இதழ் தொடங்கி மிகச் சமீபத்திய வருகையான ‘காமதேனு’ இதழ் வரை இணையத்தோடு தங்கள் பதிப்பைச் சுருக்கிக்கொண்டன. அப்படியிருக்க மாற்றுக் குரல்களை முன்வைக்கும் சிறு – குறு பத்திரிகைகள், பதிப்பகங்களின் சூழலை விவரிக்க வேண்டியது இல்லை. இவர்களைத் தாங்கிப் பிடிப்பது சமூகத்தின், குறிப்பாக அரசின் கடமை. இதை உணர்ந்திருந்ததாலேயே வரிவிதிப்பில் தொடங்கி அஞ்சல் விநியோகம் வரை அரசுத் தரப்பானது சில சலுகைகளை எப்போதும் இத்துறை சார்ந்து வழங்கியது. ஆனால், இந்திய அரசின் சமீபத்திய போக்கானது தன்னுடைய அடிப்படைக் கடமைகளிலிருந்து அது பிறழ்வதைக் காட்டுகிறது.

பொதுவாக, நூறு ரூபாய் செலவில் ஒரு பிரதியை அச்சடித்தால் அதில் ரூ.60 அச்சுக் காகிதத்துக்கும், ரூ.40 அச்சுக்கான தளவாடப் பொருட்கள் மற்றும் அச்சுக் கூலிக்கும் என்பதாக இருக்கும். அரசு என்ன செய்தது என்றால், அச்சு மை, அச்சுத் தட்டுகள், அச்சு ரசாயனம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் அச்சுக் கூலிக்கு 18% (ஜிஎஸ்டி) என்றும், அச்சகக் காகிதத்துக்கு 12% (ஜிஎஸ்டி) என்றும் சில மாதங்களுக்கு முன் வரியை நிர்ணயித்தது. அதாவது, இரண்டையும் கூட்டிக் கழித்தால் நூறு ரூபாய் செலவில் அச்சடிக்கும் ஓர் இதழ் அல்லது புத்தகத்தின் மீதான வரி ரூ.14. இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் புத்தகத்தை யாருமே வாங்கவில்லை என்றாலும், அரசுக்கு அது பொருட்டு இல்லை; ஏனென்றால், முன்கூட்டியே புத்தகத்தின் மீது வரி திணிக்கப்பட்டுவிடுகிறது!

முன்னதாக, அச்சகங்கள் பயன்படுத்தும் காகிதத்துக்கான வரியையே 12% என்பதிலிருந்து 5% ஆக்க வேண்டும் என்று கோரிவந்தனர் அச்சுத் துறையினர். அப்போது காகிதத்துக்கான வரி 12%; ஏனைவற்றுக்கான வரி 5% என்பதாக இருந்தது. அதாவது, ஓர் இதழ் அல்லது புத்தகத்தின் மீதான சராசரி வரி 5% என்பதாக இருக்க வேண்டும் என்று கோரினர். அரசோ அதுபோல மூன்று மடங்குக்கு நிர்ணயித்திருக்கிறது. இது அநீதியானது என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டா?

இதோடு விஷயம் முடிந்திடவில்லை!

அச்சுக் காகித விலைக் குறைப்பு, வரிக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை அச்சகர்கள் கூட்டமைப்பினர்.

கரோனா காலகட்டத்துக்குப் பிறகு அச்சுக் காகிதத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 78% அளவுக்கு அதன் விலை உயர்ந்திருக்கிறது (சென்னையில், 2021 அக்டோபர் நிலவரப்படி ஒரு டன் ரூ.55,000 விற்ற காகிதத்தின் விலை மே, 2022 நிலவரப்படி ரூ.98,000). பல காரணங்கள் இதன் பின்னணியில் பேசப்படுகின்றன. உள்நாட்டு காகித உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசுவது, உற்பத்தியை அதிகரிப்பது, ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு இறக்குமதியை அதிகரிப்பது, வரியைக் குறைப்பது என்று அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவ்வளவோ இருக்கின்றன. அச்சு மற்றும் பதிப்புத் துறையினர் மூச்சு திணறுகிறார்கள். எதுவும் நடக்கவில்லை.

அச்சு இதழ்கள் சரிவதும், இணைய இதழ்கள் பெருகுவதும் ஒரு போக்காக இருந்தாலும், வருவாய் ஈட்டுவதில் அச்சு இதழ்களைக் காட்டிலும் மோசமான நிலையிலேயே இந்தியாவின் பெரும்பான்மை இணைய இதழ்கள் உள்ளன. அதேசமயம், இன்று பாரம்பரிய வெகுஜன ஊடகங்கள் தயங்கும் பல விஷயங்களைத் துணிச்சலாக இணைய இதழ்களே வெளியிடுகின்றன. பெரும்பாலும் சுயாதீன ஊடகர்களால் அல்லது சிறு அணியினரால் நடத்தப்படும் இணைய இதழுக்கான வேலைகள், இணைய இதழ்களுக்குச் செலுத்தப்படும் சந்தாக்களுக்கும் 18% (ஜிஎஸ்டி) வரியையே அரசு நிர்ணயித்திருக்கிறது. அதேசமயம், பெரும் நிறுவனப் பலத்தில் நடத்தப்படும் பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நியூஸ் பிரின்ட்’ காகிதத்துக்கும், அவை பயன்படுத்தும் அச்சுத் தளவாடப் பொருட்களுக்கும் 5% (ஜிஎஸ்டி) வரியையே நிர்ணயித்திருக்கிறது. அதேபோல, அச்சிதழ்களின் சந்தாக்களுக்கு வரியும் கிடையாது. எனில், இந்த வேறுபாடானது அறியாமையின் வெளிப்பாடு என்று எப்படிக் கருதிட முடியும்?

மொத்தமாகவே பத்திரிகைத் துறை தடுமாற்றத்தில் இருக்கிறது என்றாலும், பெரிய நிறுவன பலம் இல்லாத இடைநிலை இதழ்களும், இணைய இதழ்களுமே இன்று ஜனநாயகத்துக்கு உரக்கக் குரல் கொடுக்கின்றன. ஆகையால், பத்திரிகைகள் மற்றும் பதிப்புத் துறை சார்ந்து அரசு பாகுபாடு காட்டக் கூடாது. அது, பெரிய பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நியூஸ் பிரின்ட்’ வகை காகிதமோ, சிறிய பதிப்பகங்கள் பயன்படுத்தும் ‘மேப்லித்தோ’ வகை காகிதமோ, எதுவானாலும் சரி; இதழ்கள் – நூல்கள் சார்ந்து மேற்கொள்ளப்படும் அச்சுத் தளவாடப் பொருட்கள், அச்சகக் கூலி, அச்சிதழ் மற்றும் இணைய இதழ்களுக்கான பணிகள் எல்லாவற்றுக்குமான வரிவிதிப்பை 5% (ஜிஎஸ்டி) எனும் வரிவிதிப்புக்குள் கொண்டுவர வேண்டும். அச்சிதழ்களைப் போலவே இணைய இதழ்களுக்கான சந்தாக்கள் மீதான வரியும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசை நியாயமான பாதை நோக்கி நகர்த்தும் கடமை எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

7

2




1

பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

விலைவாசி் உயர்வு மொத்த பொருளாதாரத்தையே அசைத்துவிட்டது. இந்நிலையில் ஒரேயொரு துறைக்கு மட்டும் அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் சலுகைகள் கொடுத்தால் மற்ற துறைகள் இன்னும் அதிகம் பாதிக்கப்படும். ஆனால் பல வருடங்களாக உற்பத்தித்துறையின் பங்கு குறைந்துவருவதும், சேவைத்துறையின் பங்கு அதிகரிப்பதும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். இந்தப் பிரச்சினை வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். பி.கு. இந்தப்பிரச்சினையை தீர்க்க பத்திரிகைகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. உதாரணமாக புல்லட் இரயில் திட்டத்தால் எந்தப்பயனும் இல்லை. அதே சமயம் 12000hp இரயில் என்ஜின்கள் விலைவாசியை குறைக்கவும், GDP அதிகரிக்கவும் பயன்படும். இதை எத்தனை பத்திரிகைகள் கண்டுகொண்டன?

Reply 1 2

Login / Create an account to add a comment / reply.

M A Nijamudeen   2 years ago

அச்சு ஊடகங்கள் சமகாலத்தில் அச்ச ஊடகங்களாக பொருளாதார அச்சத்திலும் வாசிப்பு குறை அச்சத்தாலும் உள்ளன…

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

அச்சு இதழ்கள் குறைவாக வெளிவரும் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் ஒன்றும் குறைந்து விடவில்லை....அரசோ மற்றவர்களோ யார் உதவி செய்தாலும் இனி அச்சு ஊடகங்கள் தங்களது இடத்தை இழந்தே தீரும் என்பது நிதர்சனம்....மேலும் செய்தி தாள் , வார இதழில் வரும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய கட்டுரைகள் அவைகளின் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அப்பாற்பட்டது என்பது உண்மை...நானே வார இதழின் முகவராக இருந்து நொந்து போனவன்.

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

Thuraivan NG   2 years ago

பத்திரிகைத் துறை வீழ்ச்சி அடைந்து வரும் அவலநிலையை தெளிவாக பதிவு செய்துள்ளார் தோழர் ரவிக்குமார்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

rajasekaranthirumalaisamy   2 years ago

அச்சு ஊடகங்களுக்கான காகித விலையேற்றம் வரிகள் எல்லாம் மற்ற துறைகளுக்குப் உயர்த்துவது போல உயர்த்தினால் புத்தகங்கள் அச்சிடப்படாமல் குறைவது மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் நல்லதல்ல..மக்களிடம் வாசிப்பு மறைந்து போகும். இணையதளங்களில் எல்லாமே கிடைக்குமென்றாலும் அது தாய்ப்பாலை கறந்து குளிர்சாதனத்தில் வைத்திருந்து தேவைக்கு புகட்டுவதாகும் .அன்பு பாசம் இருக்காது..இணையதளத்தை பயன்படுத்தும் முழு வாய்ப்பு இன்னும் பலரை அடையவில்லை..அச்சு வழி வெளியீடுகள் குறைவது அரசுக்கு பொருளாதார ரீதியிலும் கருத்து பரவலை தடுத்தல் போன்றவற்றிற்கும் இயற்கை வள பாதுகாப்புக்கு பயன் தருதாக இருக்கலாம்..ஆனால் ஜனநாயகத்தில் ஒரு சறுக்கலாகவே இருக்கும்..காலச்சூழல் மாற்றத்தில் வரும் புதிய நடைமுறைகளை ஏற்றும் ஆகவேண்டிய மனநிலைக்கும் தயாராவதும் முக்கியமாகிறது..

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

விவசாயிகள் போராட்டம் எப்படித் தொடர்கிறது?ஓரங்கட்டப்படுதல்வேலையில்லா பிரச்சினைத.செ.ஞானவேல்பசுமை கட்டிடங்கள்திமுகஇந்திய ஜனநாயகம்!உள்ளதைப் பேசுவோம்தொல்லைடொனால்ட் டிரம்ப்இடைத்தேர்தல்சௌத் வெஸ் நார்த்வங்க அரசியல் எப்படி இருக்கிறது?தமிழ்ச் சூழல்வெறுப்புக்கு இடையே அன்புஅருஞ்சொல் எல்.ஐ.சி.வினோத் அதானி உப்புப் பருப்பும்தேசிய அரசியல் கட்சிதேர்தல் அதிகாரிகள்ஔரங்ஸேப்தந்தை வழிபரத நாட்டியக் கலைஞர்விவசாயிகளைத் தாக்காதீர்கசாபைத் தூக்கிலிடக் கூடாதுஉருவாக்கம்மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்மண்டல் கமிஷன்கல்விகுஹா கட்டுரை மொழிபெயர்ப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!