நம் முந்தைய தலைமுறை உணவுக்கும் இன்றைய தலைமுறை உணவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். இலையில் போடும் இட்லி, தோசையிலிருந்து குடிக்கும் குளிர்பானம் வரை எல்லாவற்றிலும் செயற்கை நிறமிகளும் மணமூட்டிகளும் வந்து உட்கார்ந்துகொண்டன. இவை ஹோட்டல் உணவுகளில் உட்கார்ந்திருந்த காலம் மலையேறிவிட்டது; நம் வீடுகளுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இதன் விளைவால் சென்ற தலைமுறையிடம் காணப்படாத ‘உணவு அலர்ஜி’ இந்தத் தலைமுறையிடம் ரொம்பவே காணப்படுகிறது.
அலர்ஜி ஆகும் உணவுகளில் மிக முக்கியமானவை கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானிய உணவுகள்தான். காரணம், இவற்றில் ‘குளுட்டன்’ (Gluten) எனும் புரதம் இருக்கிறது. இதுதான் பலருக்கு வில்லன் ஆகி, ‘சிலியாக் நோயை’ (Coeliac Disease) ஏற்படுத்துகிறது. இந்த நோய் உள்ளவர்கள் மிகச் சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் மட்டுமே நோயிலிருந்து விடுபட முடியும். இல்லை என்றால், வாழ்நாள் முழுவதும் தொல்லை தரும்.
நோய் ஏற்படும் விதம்
குளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு அது உள்ள உணவைச் சாப்பிட்டதும், உணவுப் பாதையில் ஐஜிஏ (IgA) எதிரணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன. இவை குளுட்டனை தம் எதிரியாகப் பாவித்து குடலைவிட்டு விரட்டுகின்றன. இந்தப் போரில் குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் (Villi) அழிக்கப்படுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறையும் குளுட்டன் உள்ள உணவை உண்ணும்போதும் இந்தப் போராட்டம் நிகழ்வதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்னும் நிலை உருவாகிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி ரத்தத்தில் சேர்ப்பதற்கு குடல் உறிஞ்சிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்கிறபோது, உணவுச் சத்துகள் உறிஞ்சப்படாமல் மலத்தில் வெளியேறிவிடும். இதனால், சத்துக் குறைவு நோய்களும் செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படும்.
அறிகுறிகள்
சிலியாக் நோய் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வரலாம். பெரும்பாலும் அலர்ஜி பாதிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். ஆரம்பத்தில் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாமல் இருக்கும். நாளடைவில் வயிற்றில் வாயு சுற்றுவதுபோலிருக்கும். வயிறு உப்பும். உணவைச் சாப்பிட்டதும் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். வாந்தி வரும். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். அல்லது இந்த இரண்டும் மாறிமாறி தொல்லை தரும். மலம் வழுவழுப்பாகவும் மிகுந்த நாற்றத்துடனும் வெளியேறும். குறிப்பாக, சாப்பிட்டதும் மலம் கழிக்கத் தோன்றும். குளுட்டன் இல்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்தால், இந்த அறிகுறிகள் எல்லாம் ஒரே நாளில் மறைந்துவிடும்.
இந்த நோயைக் கவனிக்கத் தவறுபவர்களுக்கு நாளடைவில் ரத்தசோகை ஏற்படுவதால், எந்த நேரமும் களைப்பாக இருப்பார்கள். வாய்ப்புண் அடிக்கடி தொல்லை தரும். உடல் எடை குறையும். கை, கால்களில் மதமதப்பு, எரிச்சல், ஊசி குத்தும் வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். எலும்பு வலுவிழப்பு நோய் (Osteoporosis) வரலாம். குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால், உடல் வளர்ச்சி வயதுக்கு ஏற்றபடி இருக்காது. குழந்தையின் நடவடிக்கைகள் எல்லாமே மந்தமாக இருக்கும். பற்கள் வளர்வது தாமதப்படும். திருமணமான வளரிளம் வயதினருக்கு இது ஏற்படுமானால், குழந்தை பிறப்பது தாமதமாகும். அவ்வப்போது முதுகு, முழங்கால், முழங்கை மற்றும் பிட்டத்தில் உள்ள சருமத்தில் கடுமையான அரிப்பும் எரிச்சலுடன் கூடிய கொப்பளங்கள் தோன்றும். தைராய்டு பிரச்சினை தலைகாட்டலாம்.
என்ன பரிசோதனை?
நோய் அறிகுறிகளை மட்டும் பரிசீலித்து, சிலியாக் நோய் உள்ளவர்களைச் சரியாகக் கணிப்பது மிகவும் சிரமம். காரணம், கிரான் நோய் (Chron’s disease), குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome - IBS) போன்ற நோய்களின் அறிகுறிகளும் இவ்வாறே இருக்கும். இதனால், மருத்துவர்களுக்கே குழப்பத்தை உண்டாக்கும். ரத்தத்தில் ‘ஐஜிஏ எதிரணுக்கள் பரிசோதனை’ செய்து. இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், இந்த நோய் உள்ளதை உறுதி செய்யலாம். குடலில் ‘பயாப்சி’ எடுத்துப் பரிசோதனை செய்தும் இதை உறுதிப்படுத்தலாம். ‘கேப்சூல் எண்டோஸ்கோப்பி’ பரிசோதனையில் குடல் உட்சுவரின் தன்மையைப் பார்த்து, இந்த நோயைச் சரியாகக் கணிக்கலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு மரபணுப் பரிசோதனைகளும் வந்துள்ளன. DQ2, DQ8 எனும் மரபணுக்கள் (Genes) ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
என்ன சிகிச்சை?
சிலியாக் நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. குளுட்டன் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவதுதான் இது வராமல் தடுக்கும் ஒரே வழி. அரிசி மாவு, உருளைக்கிழங்கு மாவு, கடலை மாவு, சோயா மாவு, சோள மாவு, மக்காச்சோள மாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவு, ஆரோரூட் மாவு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இவர்களுக்குப் பாதுகாப்பான உணவுகள் என்று பொதுவாகச் சொல்லலாம். இந்த நோயின்போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவும் உடலில் குறைவதால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை, கால்சியம், வைட்டமின்-டி மாத்திரை, துத்தநாகம், போலிக் அமிலம், தாமிரம் கலந்த சத்து மாத்திரைகளை மருத்துவரை ஆலோசித்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
குளுட்டன் உள்ள உணவுகள் – தவிர்க்கப்பட வேண்டியவை:
பொதுவாகச் சொன்னால், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸில் தயாரிக்கப்பட்ட எல்லா உணவுகளையும் பட்டியல் போட்டு கட்டாயம் தவிர்க்க வேண்டும். என்றாலும், ஓர் ஆதாரக் குறிப்புக்காக அந்த உணவுகளை இங்கே பட்டியல் தந்துள்ளேன்.
· ரொட்டி, பூரி, சப்பாத்தி, நாண், புரோட்டா, நூடுல்ஸ், மால்ட் கலந்த பண்டங்கள், வினீகரில் தயாரிக்கப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரன்சு ஃபிரை, கஸ்டர்ட் பவுடரில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
· பிஸ்கட், ரஸ்க், குக்கீஸ், கேக், பன், பீஸா, பர்கர், சமோசா, பிரட் ரோல், டோஃபீ, வெணிலா கலந்த இனிப்புகள், கார்ன்ஃபிளேக்ஸ், பாலாடைக்கட்டி, சான்ட் விச், ஷாஸ், கேட்ச் அப், சூப் மிக்ஸர்கள், சூயிங்கம், மில்க் கேக், ஜிலேபி, குலோப்ஜாமுன், ஐஸ்கிரீம், சாக்லேட்.
· பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், செயற்கை உணவுச் சேர்க்கைப் பொருட்கள்.
· ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, இன்ஸ்டன்ட் காபி, பீர்.
· தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், புகையில் வாட்டிய எல்லா இறைச்சிகள், கிரேவி, டிக்கா மசாலா.
குளுட்டன் இல்லாத உணவுகள் – சேர்த்துக்கொள்ள வேண்டியவை
· இட்லி தோசை, இடியாப்பம், ஆப்பம், பொங்கல், வடை, அரிசியில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
· பால், மோர், தயிர், லஸ்ஸி, பன்னீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக்.
· கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், முட்டை.
· வேகவைத்த வேர்க்கடலை, பாப்கார்ன், ஸ்வீட் கார்ன், வறுத்த கடலை.
· காபி, தேநீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள்.
· வெல்லம், தேன், ரசகுல்லா, அல்வா, லட்டு.
· ஆர்கானிக் உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள்.
(பேசுவோம்...)







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.