இந்தியக் குடிநபர் ஒருவரின் மரணத்துக்கு பாகிஸ்தான் அரசு தேசிய துக்கத்தைக் கடைப்பிடிப்பது அரிதான அஞ்சலிதான். ஒருவேளை இந்திய அரசு தன்னுடைய கொடியை அப்படிப் பறக்கவிட்டிருந்தால்கூட சையத் அலி ஷா கிலானியை அது திருப்திபடுத்தியிருக்காது; பாகிஸ்தானின் இந்த அஞ்சலி அவருக்கு நிறைவைக் கொடுத்திருக்கும் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், காஷ்மீர் ஒன்று சுதந்திர நாடாக வேண்டும் அல்லது பாகிஸ்தானோடு இணைக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர் அவர்.
கிலானியின் இறுதிச் சடங்கு நாளன்று காஷ்மீர் ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட அரசானது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து அவருடைய குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இணையதளங்களின் சேவை முடக்கப்பட்டது. அதேசமயம், ‘காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்காகத் தொடர்ந்து போராடிய கிலானிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன்னுடைய நாட்டில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும்’ என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்திய அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் காஷ்மீரின் சுதந்திரத்துக்காகவும் தொடர்ந்து போராடிய கிலானி மறைந்துவிட்டார் என்றே ‘அல் ஜஸீரா’ தொலைக்காட்சியானது செய்தி வெளியிட்டுள்ளது.
வாஜ்பாய் - முஷராஃப் காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்க உருவாக்கப்பட்ட நான்கு அம்சத் திட்டம் கையெழுத்தாகாமல் போனதில், சொல்லப்பட்ட முக்கியமான காரணங்களில் ஒன்று, பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்ப்பு; பாகிஸ்தான் தரப்புக்கு காஷ்மீரில் உள்ள பிரிவினைவிய இயக்கங்கள் கொடுத்த அழுத்தம்; கிலானியின் பெயர் அதில் முக்கியமானதாக இருந்தது. இந்த நான்கு அம்சத் திட்டங்களில் ஒன்று, இந்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சியை காஷ்மீருக்கு வழங்குவதானது. கிலானி இந்தியாவின் ஆளுகையை எந்த அளவிலும் முற்றிலுமாக வெறுத்தார்.
வளர்ந்த வரலாறு
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பிறந்த கிலானி, சுதந்திரத்துக்கு முன் லாகூரில் இருந்த பஞ்சாப் கீழ்த்திசைப் பல்கலைக்கழகத்து உயர்கல்வி நிலையத்தில் மதக் கல்வியில் பட்டம் பெற்றார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மௌலானா முஹம்மது சய்யீத் மசூதியின் சீடராக அரசியலில் ஈடுபட்டார். அவர்களுடைய மிதப்போக்கானது கிலானிக்கு அதிருப்தி உண்டாக்கியது. ஜமாத்-இ-இஸ்லமி அமைப்பில் சேர்ந்தார் கிலானி.
தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த கிலானி, சோபூர் தொகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலச் சட்டமன்றத்துக்கு 1972, 1977, 1987 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின், காஷ்மீர் சுதந்திரத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் ஹுரியத் அமைப்பை உருவாக்கினார். அதன் தலைவராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். காஷ்மீர் மக்களிடையே பெரும் செல்வாக்கு கிலானிக்கு இருந்தது. குறிப்பாக, அவருடைய ஆக்ரோஷப் பேச்சுக்கு இளைஞர்கள் கட்டுண்டு கிடந்தனர். கிலானி நினைத்தால் எந்நேரமும் காஷ்மீரின் இயக்கத்தை நிறுத்த முடியும் அல்லது பெரும் போராட்டத்தில் மக்களைத் தள்ள முடியும் என்ற சூழல் அப்போது இருந்தது.
இவ்வளவு செல்வாக்கையும் காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்கவோ, அங்கு அமைதியைக் கொண்டுவரவோ எந்த அளவுக்கு கிலானி பயன்படுத்திக்கொண்டார் என்பது பெரிய கேள்வி. இந்திய அரசுத் தரப்புக்கு மட்டுமல்லாது, காஷ்மீர் விவகாரத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பேசிவந்த மித அணுகுமுறைத் தலைவர்களுக்குமே அவர் தலைவலியாக இருந்தார். ஆயுதப் போராட்டத்தை அவர் தொடர்ந்து ஆதரிப்பவராக இருந்ததும், வன்முறை காரணமாகத் தொடர்ந்து காஷ்மீரிகள் பலியாகிக்கொண்டிருந்ததுமே இதற்கான காரணம். “காஷ்மீரில் தீவிரவாதமும் ரத்தக்களரியும் அதிகரிக்க கிலானிதான் காரணம்” என்று முதல்வராக இருந்தபோது ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டினார்.
காஷ்மீரைச் சுதந்திர நாடாகக் கோரும் காஷ்மீர இயக்கங்களிலும்கூட சில கிலானியை சங்கடமாகப் பார்த்தன. “நாங்கள் இந்தியர்கள் அல்ல, காஷ்மீரிகள். எங்கள் மீது இந்தியக் குடியுரிமை திணிக்கப்படுகிறது. காஷ்மீர் என்பது எல்லைப் பிரச்சினை அல்ல, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட காஷ்மீரிகளின் எதிர்காலம் தொடர்பிலான வாழ்வாதாரப் பிரச்சினை” என்று அவர் பேசிய வரை அங்கே யாருக்கும் சங்கடம் இல்லை. தொடர்ந்து, “இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் உருவானபோதே காஷ்மீரைத் தனி நாடாக ஆக்கியிருக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீரைச் சேர்த்திருக்க வேண்டும்” என்ற அவருடைய பாகிஸ்தான் ஆதரவானது, இந்தியாவுடனான பேச்சுகளில் தார்மீகப் பலத்தைக் குறைப்பதாக அவை எண்ணின.
இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்றதை மறுத்துவந்தாலும், ஏனைய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களை காஷ்மீரின் பக்கம் திருப்புவதில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவந்தார் கிலானி. “இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்; கல்வி - வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடக்கப்படுகின்றனர்; இந்துத்துவப் பெரும்பான்மை ஆட்சியால் முஸ்லிம்களின் நிலைமை மேலும் மேலும் மோசமாகிறது” என்று முஸ்லிம்கள் பிரச்சினைகளைச் சந்திக்கும்போதெல்லாம் குரல் கொடுத்தார் என்றாலும், இந்திய முஸ்லிம்களைத் தன் வசம் நோக்கி அவரால் ஈர்க்க முடியவில்லை. மாறாக, மாநிலங்களின் உரிமைகளையும், கூட்டாட்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் இயக்கங்களும் கட்சிகளும் அவரைப் பரிவோடு பார்த்தன. காஷ்மீர் மக்கள் அதிகாரம் பெறுவதற்கான குரல்களை இந்த இயக்கங்கள் கொடுத்தன. ஆயினும், அவற்றாலும் கிலானியோடு முழுக்க உடன்பட முடியவில்லை. ஒரே காரணம்தான், இந்தியா எனும் அமைப்பை உடைத்துக்கொண்டு சிந்திக்க அவர்கள் யாரும் தயாராக இல்லை.
மூர்க்கமான இந்திய எதிர்ப்பு
காஷ்மீரிகள் இந்தியர்களுக்கு எதிரிகள் இல்லை என்றெல்லாம் சொன்னாலும், மிக மோசமான தருணங்களில்கூட இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார் கிலானி. எல்லைக்கு அப்பாலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும் விடுதலைப் போருக்கு ஆதரவு தரும் வீரர்கள் என்றே வர்ணித்தார். 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தின் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலையும்கூட ஆதரித்தவர் அவர். மும்பை மீது 2008-ல் தாக்குதலின் முக்கியக் கண்ணியாகச் செயல்பட்ட அஜ்மல் கசாப்புக்கும், தாக்குதலின் பின்னணியில் இருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையதுக்கும்கூட அவர் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தார். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன், அமெரிக்க கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை ‘அப்பட்டமான மனித உரிமைகள் மீறல்’ என்று கண்டித்தார். 2019-ல் புல்வாமாவில் இந்தியப் பாதுகாப்புப் படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும்கூட அவர் வரவேற்றார்.
காஷ்மீரில் டெல்லி மேற்கொள்ளும் அடக்குமுறை அணுகுமுறைக்கு எதிரான மனநிலை கணிசமான இந்தியர்கள் மத்தியில் உண்டு. ஆயுதப் படைகள் அகற்றப்பட்டு, காஷ்மீரிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஜனநாய அரசு அங்கு அனுமதிக்கப்பட வேண்டும்; இந்திய ஆளுகைக்குட்பட்ட உயரிய தன்னாட்சி காஷ்மீருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பேசுவோரும்கூட இந்தியா முழுவதும் உண்டு. காஷ்மீர் தொடர்பில் கிலானி பேசும் விஷயங்கள் அங்குள்ள சூழலை அப்பட்டமாகத் தெரிவிப்பதாகக் கருதி அவரைக் கவனித்தவர்கள் பலர். கிலானியின் செல்வாக்கைத் தாழ்த்த “போராளி அல்ல கிலானி; அவர் பாகிஸ்தானின் கைக்கூலி” என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்திருக்கிறது இந்திய அரசு. கிலானியின் இந்திய வெறுப்பும், அவருடைய நெருப்பு வார்த்தைகளும் அவரைப் பரிவோடு பார்த்தவர்களிடமும்கூட அதிருப்தியையே உண்டாக்கின.
வாழ்வின் பிற்பகுதியில் கிலானியின் செல்வாக்கு காஷ்மீரிலேயே நாளுக்கு நாள் மெல்ல மங்க ஆரம்பித்தது. காஷ்மீரின் மிகுந்த செல்வாக்கு மிக்க அமைப்பாகத் திகழ்ந்த ஹுரியத் அமைப்பில் 2003-ல் பிளவு ஏற்பட்டது. சென்ற 12 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்த கிலானி, முதுமை காரணமாகவும் நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்தார். 2014-ல் அவருடைய உடல்நிலை மோசமடைந்தபோது அவருக்கு அமெரிக்காவில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்குக் குடும்பத்தினர் விரும்பினர். அமெரிக்கா அவரைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சைகள் நடந்தன. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் அவர் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தார்.
பாஜகவுக்குப் பிந்தைய காலம்
2014-ல் டெல்லி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் மீதான அணுகுமுறை வேகமாக மாறியது. “காஷ்மீர் மக்களுடைய உரிமைகள் மேலும் நசுங்குபட்டன. முன்னதாக, 2014-ல் ஜம்மு - காஷ்மீர் மாநிலச் சட்டமன்றப் பொதுத் தேர்தலையே காஷ்மீரிகள் புறக்கணிக்க வேண்டும், அந்தத் தேர்தலில் பங்குகொள்வதன் மூலம் இந்திய அரசியல் சட்டத்துக்குட்பட்ட செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக ஆகிவிடும், சர்வதேச அரங்கில் நம்முடைய கோரிக்கைகளுக்கு ஆதரவு குறைந்துவிடும்” என்று காஷ்மீர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் கிலானி. ஆனால், காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகள் பங்கேற்ற அந்தத் தேர்தலில்தான் 65% வாக்குகள் பதிவாகின. அதற்கு முன்னர் நடந்த எந்தத் தேர்தலிலும் இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை.
மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் இணைந்து ஒரு கூட்டணி அரசை காஷ்மீரில் அமைத்தபோது, இரு கட்சிகளின் முரண்பாடான சேர்க்கையைத் தாண்டியும் பாஜகவின் அணுகுமுறையில் இது ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்; காஷ்மீரிகளுக்கு ஏதேனும் நல்லது நடக்கலாம் என்று எதிர்பார்த்தவர்கள் உண்டு. மாறாக, நிலைமைகள் மேலும் மோசம் ஆயின. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் இவை மூன்றில் பள்ளத்தாக்கு நீங்கலாக ஏனைய இரு பிராந்தியங்களிலும் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்வது; பள்ளத்தாக்கு மக்களை அடக்கிக் கையாள்வது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதுபோல இருந்தது பாஜகவின் அணுகுமுறை. பொருந்தாத கூட்டணி விரைவில் உடைந்தது. இடையில் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி பள்ளத்தாக்கில் உருவான கொந்தளிப்பான சூழலும், மக்கள் போராட்டங்களை ஒடுக்க இந்தியப் படையினர் கையாண்ட மூர்க்க வழிமுறைகளும் நிலைமையை மேலும் மோசமாக்கின.
2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் காஷ்மீர் விவகாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுத்தது பாஜக அரசு. காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்துசெய்ததுடன், அதன் மாநில அந்தஸ்தையும் பறித்து, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டாக்கியது. முக்கியமான தலைவர்கள் அப்துல்லா, முப்தி உள்ளிட்டோரோடு முழுமையாக வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டவர்களின் பட்டியலில் கிலானியும் இருந்தார். சுதந்திர காஷ்மீர் கேட்டவர் மாநில அந்தஸ்தையும்கூட தன்னுடைய பிராந்தியம் பறிகொடுக்க வேண்டியிருந்ததை சகிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மிக விரைவில் ஹுரியத் அமைப்பிலிருந்து விலகினார். சென்ற இரண்டு ஆண்டுகளாகவே அசாத்தியமான அமைதி அவரைச் சூழ்ந்திருந்தது. ஒரு பெரும் மக்கள் திரள் தலைவராக அரசியலில் எழுந்தவர் இறுதியில் தனிமையின் மௌனத்தில் மறைந்தார்.


1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.