கட்டுரை, கல்வி, தொழில்நுட்பம் 3 நிமிட வாசிப்பு

சுரண்டும் பைஜுஸ்

ஆனி பானர்ஜி
22 Dec 2022, 5:00 am
2

ராகேஷ் குமார் டெல்லி புறநகரில் உள்ள ஃபரீதாபாதைச் சேர்ந்த ஒரு தச்சர். அவர் தனது மகளுடன் செப்டம்பர் மாதத்தின் ஒரு மாலையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ராகேஷை அணுகிய நவநாகரிக இளைஞர்கள், தாங்கள் பைஜுஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று தெரிவித்தார்; பைஜுஸ் செயலியின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். அதன் பிறகு ராகேஷின் வீட்டுக்கு வந்து அவரின் மகளின் அறிவைச் சோதிப்பதற்காக இரண்டு மணி நேரம் அவளிடம் கேள்வி கேட்டார்கள். “அவளது அறிவுத் திறன் மிகவும் மோசமாக இருக்கிறது” என்று ராகேஷிடம் சொல்லி, தங்கள் ஆன்லைன் வகுப்பில் அவருடைய மகளைச் சேர்க்கும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

மாதம் 20 ஆயிரம் சம்பாதித்துக்கொண்டிருந்த தன்னால் ரூ.36 ஆயிரம் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்பதால் ராகேஷ் மறுத்துவிட்டார். “உங்களின் மகளும் உங்களைப் போலவே ஏழையாகவே இருப்பாள். அவள் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்குத் தடையாக இருந்ததை நினைத்து நீங்கள் வருத்தப்படுவீர்கள்” என்று ராகேஷை அவர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

தான் படிக்காமல் படும் கஷ்டத்தை, தன் மகள் எதிர்காலத்தில் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்த ராகேஷ், அந்த பைஜுஸ் பணியாளர் சொன்னபடி மகளின் ஆன்லைன் வகுப்பு கட்டணமாக ரூ. 36,000 செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டார். ராகேஷுக்கு அதன் பின்னர் வாழ்க்கை கடினமானதாக மாறியது; கடன் பிரச்சினை நெருக்கியது. 

இது ராகேஷ் குமாரின் பிரச்சினை மட்டும் அல்ல. குழந்தைகளின் கல்வி என்கிற பைஜுஸின் தூண்டிலில் சிக்கி, பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். முறையாகப் புகார் கொடுத்தாலும் பைஜுஸ் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உரிய பதிலை அளிப்பது இல்லை.  தற்போது அவர்களில் சிலர் பைஜுஸிடமிருந்து பணத்தை மீட்பதற்கு வேறு வழியில்லாமல் சமூக வலைதளங்களில் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பதிவுசெய்துவருகின்றனர்.

பைஜுஸ் போன்ற நிறுவனங்கள் முதலில் பெற்றோர்களின் உணர்ச்சியுடன் விளையாடுகின்றன. சட்ட விரோதமாகத் திரட்டிய தகவல்களின் துணையுடன், வீடு, போன், இணையதளம் என்று திரும்பும் இடங்களிலெல்லாம் அவை பெற்றோர்களுக்கு வலைவிரித்துக் காத்திருக்கின்றன. 

குறிப்பிட்ட ஒரு பெற்றோரை வழிக்குக் கொண்டுவர எந்த மாதிரியான வியூகத்தை வகுக்க வேண்டும் என்பது பைஜுஸ் ஊழியர்களுக்குக் கைவந்த கலை. அதேசமயம் பைஜுஸ், வாடிக்கையாளர்களை மட்டுமல்ல தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களையும் சுரண்டிவருகிறது என்று இந்தக் கட்டுரைக்காக நான் பேசிய 26 பைஜுஸ் ஊழியர்கள் கூறினார்கள். அவர்களில் 18 பேர் தற்போதைய ஊழியர்கள், 8 பேர் முன்னாள் ஊழியர்கள். 

இலக்கை எட்டாத பைஜுஸ் ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள். ஆனால் தன் மீதான  குற்றச்சாட்டுகளை பைஜுஸ் நிறுவனம் மறுக்கிறது. “எங்கள் சேவையைப் பெற முடியாத அல்லது பெற விருப்பமில்லாத வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று எங்கள் விற்பனைப் பிரதிநிதிகள், மேலாளர்கள் யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தியதோ ஊக்குவித்ததோ இல்லை. வணிகத்தில் நாங்கள் மிக உயரிய அறத்தைப் பின்பற்றுகிறோம்” என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஊழியர்கள் மீதான சுரண்டல் குற்றச்சாட்டுகளையும் பைஜுஸ் மறுக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஊழியர்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்களில் என்னுடன் பேசியவர்களின் எண்ணிக்கையானது பொருட்படுத்தவே தேவையற்ற அளவுக்கு குறைவானது என்றும் பைஜுஸ் கூறியது. மேலும் தங்களின் பணியிடம் இந்தியப் பெருநிறுவனக் களத்தில் “மிகவும் ஆரோக்கியமானதும் நட்புணர்வு கொண்டதும் ஆகும்” என்று கூறிக்கொள்கிறார்கள். 

ராகேஷ் குமாரை அணுகிய பைஜுஸின் விற்பனைப் பிரதிநிதிகளுள் ஒருவர் ராகேஷ் உடனடியாக 7 ஆயிரம் கொடுத்தால் 15 நாட்கள் முன்னோட்டக் காலம் முடிந்ததும் அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரிடம் கைபேசியையும் அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொண்டு அவர் அனுமதி இல்லாமலேயே கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

வரும் மாதத்துக்கான தவணை கட்ட வேண்டுமென்று நிதி நிறுவனத்திடமிருந்து கைபேசிக்குச் செய்தி வரும்போதுதான் ராகேஷ் குமாருக்கே இது தெரியவந்திருக்கிறது. 

பைஜுஸுக்காகப் பதிவு செய்வதற்குத்தான் தன்னிடம் கைபேசியும் அடையாள அட்டையும் வாங்குகிறார்கள் என்று ராகேஷ் நினைத்ததால் வந்த பிரச்சினை இது. “அடுத்த நாளே என் மனதை மாற்றிக்கொண்டேன். நான் ஒரு சாதாரணத் தொழிலாளி. என்னிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. என்னை நம்பி வீட்டில் நான்கு வயிறுகள் இருக்கின்றன. ஆகவே, அந்த விற்பனைப் பிரதிநிதிகளின் செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். அவர்களோ மாயமாகிவிட்டார்கள்” என்றார் ராகேஷ்.

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து ராகேஷின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 4 ஆயிரம் பைஜுஸுக்கான கட்டணமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தன் மகளின் வகுப்பை ரத்துசெய்துவிடும்படி கேட்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட தடவை பைஜுஸின் மையம் ஒன்றுக்கு ராகேஷ் போயும் பார்த்துவிட்டார். ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அந்த நிறுவனத்தின் வெவ்வேறு ஊழியர்கள் கூறினாலும் அவர் கணக்கிலிருந்து மாதாமாதம் பணம் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

வழக்கமாக பைஜுஸ் நிறுவன ஊழியர்களின் கைங்கர்யத்தால் இப்படி ஏமாறுபவர்கள் பெரும்பாலும் படிக்காத ஏழைகளாகவே உள்ளனர். ஆகவே இம்மாதிரியான நிறுவனங்கள் மீது அரசு கண்காணிப்பும் வாடிக்கையாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் வேண்டுமென்று தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். 

பைஜுஸுக்குக் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக 75 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்று பைஜுஸின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் தங்கள் சேவையின் 1,50,000 அலகுகள் விற்பனையாகின்றன என்றும், அவற்றில் 1,500 பேர் மட்டுமே தங்கள் தொகையைத் திருப்பியளிக்கும்படி விண்ணப்பிக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். முன்னோட்டக் காலத்துக்குள் அவர்கள் விண்ணப்பித்திருந்தால் அந்தத் தொகை எந்தக் கேள்வியுமின்றித் திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு 2011இல் பைஜுஸ் நிறுவனம்  நிறுவப்பட்டது.  ஆயினும் அது 2015இல்தான் ஒரு முழுமையான கல்விச் செயலியாகச் செயல்பட ஆரம்பித்தது. கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது பள்ளிகள் இயங்க முடியாத சூழலில் பைஜுஸ் செயலிகள் பரவலான கவனத்தைப் பெற்றன. மேலும் சிறிய அளவிலான போட்டி நிறுவனங்களை வாங்கியதன் மூலம் பைஜுஸ் இந்தத் துறையில் தனிக்காட்டு ராஜாவாக மாறியது.   

குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்குத் திரும்பியதாலும் உலகப் பொருளாதார நிலை மோசமாகிக்கொண்டிருப்பதாலும் பைஜுஸின் வெற்றிக் கதைக்குப் பெரும் தடுமாற்றம் ஏற்படத் தொடங்கியது.  பைஜுஸின் சமீபத்திய மொத்த மதிப்பு ரூ. 1,82,070,90,00,000 (ரூ.1.82 லட்சம் கோடி). செப்டம்பர் 2021 வரையிலான நிதியாண்டில் ரூ.4,564 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக பைஜுஸ் தெரிவித்தது. அதன் வருவாய் 3% அளவுக்குக் குறைந்துவிட்டது. 

தங்கள் சந்தாவை ரத்துசெய்துவிட வேண்டும் என்று பைஜுஸ் வாடிக்கையாளர் மையத்தை அழைத்த பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. ரத்துசெய்ய வேண்டும் என்ற தங்களுடைய வேண்டுகோள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் இந்தத் தாமதத்தால் தொகை திருப்பியளிக்கப்படுவதற்கான காலக்கெடுவும் முடிந்துவிடுகிறது என்றும் அவர்கள் புகார் கூறுகிறார்கள். ‘கன்ஸ்யூமர்கம்ப்ளெய்ன்ட்ஸ்.இன்’ (consumerComplaints.in) என்ற சுயாதீன இணையதளத்துக்கு பைஜுஸ் தொடர்பாக 3,759 புகார்கள் வந்திருக்கின்றன. 

ரத்து நடவடிக்கைகளில் தாமதம், தொகை திரும்பக் கிடைப்பதில் பிரச்சினை, மூர்க்கத்தனமான பிரச்சார உத்தி போன்றவை தொடர்பானவை இந்தப் புகார்கள். இவற்றில் 1,397 புகார்களுக்கு மட்டுமே தீர்வு கிடைத்திருக்கிறது; 2,362 புகார்கள் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

பைஜுஸுடன் ஒப்பிடும்போது சிம்பிளிலேர்ன், வேதாந்து, அன்அகாடமி, தற்போது திவாலாகியிருக்கும் லிடோ லேர்னிங் போன்ற கல்விநுட்ப நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிராக தலா 350க்கும் குறைவான புகார்களே வந்திருக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஒடுக்குமுறைத் தேர்வுகள்

சமஸ் | Samas 15 Jan 2020

பைஜுஸ் போன்றுதான் லிடோ லேர்னிங்கும் ஷாபா ஷேக் என்ற பெண்ணின் கதையும் துயரமானது. ஓராண்டு நீடிக்கும் கட்டணத் திட்டத்தின் கீழ் அவர் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் இழந்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிடோ லேர்னிங் பெரும் பொருளாதார நெருக்கடியால் இழுத்து மூடப்பட்டாலும் ஷாபாவின் வங்கிக் கணக்கிலிருந்து மாதமாதம் ரூ. 2,100 தானாகவே கழிக்கப்படுவது நிற்கவில்லை. கடைசித் தவணை கழிக்கப்படும் வரை அதைத் தன்னால் தடுக்கவே முடியவில்லை என்கிறார் ஷாபா. 

இதை நிறுத்த வேண்டும் என்று வங்கியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால்தான் அப்படிச் செய்ய முடியும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். “எங்கள் வீட்டுச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம்” என்கிறார் ஷாபா. அவருக்கு மூன்று பிள்ளைகள். அவருடைய கணவர் டாக்ஸி ஓட்டுவதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

தகவல்தொழில்நுட்பத் துறைச் சட்டம் போன்ற ஏராளமான சட்டங்களின் நிழலில் கல்விநுட்பத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் துறையைத் தீவிரமாகக் கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், எண்முறை உரிமைச் செயல்பாட்டாளர்கள் (digital rights activists), கல்வியாளர்கள் போன்றோர் குரல்கொடுத்துவருகிறார்கள்.

கல்விநுட்பத் துறைக்கென்று குறிப்பான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படாததால் இந்த நிறுவனங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன என்று இந்தச் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். “ஒரு வேட்டை விலங்கு போன்று மக்களை இந்த நிறுவனங்கள் வேட்டையாடுகின்றன… இந்தியப் பெற்றோர்களைச் சுரண்டுகின்றன. இந்தியக் கல்வி அமைப்பில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு இந்தக்காரியங்களைச் செய்கின்றன. இதுவரை அரசின் தலையீடே இதில் இல்லை” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை அவர் சமீபத்தில் எழுப்பினார். 

பைஜுஸ் போன்ற கல்விநுட்ப நிறுவனங்களுக்கென்று தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து கல்விநுட்பச் செயலிகளின் விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்கிறார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 

பஞ்சாபைச் சேர்ந்த ரஞ்சனா சர்மா கொஞ்சம் துணிச்சலானவர். தனக்கு திருப்பித் தர வேண்டிய ரூ.60 ஆயிரத்தை பைஜுஸ் தராமல் ஏமாற்றியது என்றும், ட்விட்டரில் இதைப் பற்றிப் பதிவிட்ட பிறகே அவர்கள் தன்னைத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர் என்றும் கூறுகிறார். “அவர்கள் என்னை மனத்தளவில் மிகவும் புண்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டு போலி மாணவர்களை என் எண்ணில் பதிவுசெய்து ஒரு கடன் திட்டத்தில் என்னை மாட்டிவிட்டார்கள். போலீஸுக்குப் போனேன், அரசாங்கத்திடம் முறையிட்டேன், வங்கியிடம் முறையிட்டேன்… எல்லாம் செய்துபார்த்துவிட்டேன். கடைசியாக ட்விட்டரில் பதிவிட்டேன். அதுதான் எனக்குக் கை கொடுத்தது” என்கிறார் ரஞ்சனா.

ரஞ்சனாவின் பிரச்சினை தொடர்பாக பைஜுஸிடம் நாம் கருத்து கேட்டும் அவர்கள் ஏதும் பதில் அளிக்கவில்லை.

கொல்கத்தாவாசியான மௌஷுமி தாஸுக்கு நடந்தது நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்கான பாடம். ஒருநாள் அவருக்கு செல்பேசி அழைப்பு வந்தது. பைஜுஸின் பிரதிநிதிதான் அழைத்திருக்கிறார். 

மௌஷுமி பையனின் பெயர், அவன் படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் என்று அவன் தொடர்பான எல்லாத் தகவல்களையும் ஒப்பித்திருக்கிறார்கள். “எனக்கு அச்சம் ஏற்பட்டது. என் மகனைப் பின்தொடர்ந்திருக்கிறார்களோ என்று பயந்தேன். உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டதும் அந்தப் பிரதிநிதி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.”

உலக நாடுகள் பலவற்றிலும் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கல்விநுட்பச் செயலிகள்கூட சிறுவர்கள் தொடர்பான தரவுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாச்’ என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி தெரியவந்திருக்கிறது. இந்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ஆனால், பைஜுஸின் செயலியை அந்த அமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

பைஜுஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் பள்ளிகளுடன் சேர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுக்கின்றன என்கிறார்கள் ரஞ்சனா போன்ற பெற்றோர்கள். 

அப்படி வகுப்புகள் எடுக்கும்போது அந்தப் பிள்ளைகளின் செல்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகவரிகள் உள்ளிட்ட தகவல்களைப் படிவங்களில் நிரப்பச் சொல்கின்றனர். அவற்றைத் தங்கள் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். “உங்கள் எண்ணுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு உங்களைப் பற்றி கிட்டத்தட்ட எல்லாமே எங்களுக்குத் தெரியும்” என்கிறார் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ஒரு பைஜுஸ் பிரதிநிதி.

தகவல் பாதுகாப்புச் சட்டம் இல்லாமல், பைஜுஸ் போன்ற நிறுவனங்களின் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. அடித்தட்டு மக்களுடைய  எண்முறை தகவல் பாதுகாப்புக்குத் தகவல் பாதுகாப்புச் சட்டம் ஒன்று மட்டும்தான் தீர்வு.

மீண்டும் ராகேஷுக்கு வருவோம்! வாழ்க்கைப்பாட்டுக்கான பணத்தைச் சம்பாதிப்பதுதான் இப்போது தன்னுடைய ஒரே நோக்கம் என்கிறார் ராகேஷ் குமார். பைஜுஸ் தொடர்ந்து தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டிருப்பதால் அதைத் தடுப்பதற்காகத் தனது வங்கிக் கணக்கை மூடிவிட்டார். 

தனது இழப்புகளை சரிகட்டிக்கொள்வதற்காகத் தனது வழக்கமான வேலையுடன் கூடுதலாக அக்கம்பக்கத்து அடுக்ககங்களில் தச்சு வேலைக்கும் செல்கிறார். “என் குழந்தைகளுக்கு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வேன். அவர்கள் படிக்க வேண்டும், படித்துப் பட்டம் வாங்க வேண்டும், ஏசி வைத்த நல்ல அலுவலங்களில் வேலைபார்க்க வேண்டும்” என்கிறார் ராகேஷ் குமார். 11 வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டவர் அவர். “அவர்களும் என்னை மாதிரி ஆகிவிடக் கூடாது, அப்படி ஆனார்கள் என்றால் அதுதான் என்னுடைய மிகப் பெரிய தோல்வியாக இருக்கும்!” 

ராகேஷ் வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியக் கல்வி அமைப்பில் பைஜுஸ் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?
ஒடுக்குமுறைத் தேர்வுகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: தினேஷ்

4

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   1 year ago

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் தனிநபர்கள் கால் பதிப்பது இதன் நீட்சியாக பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதை அச்சத்துடன் அணுக வேண்டிய காலமிது....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Bhuvana Gopalan   1 year ago

https://frontline.thehindu.com/news/investigation-byjus-staff-reveal-harsh-work-conditions-indian-parents-say-edtech-giant-pushed-them-into-debt/article66274546.ece

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாப் ஸ்மியர்வலிப்புதமிழாசிரியர் வரலாறுமுரசொலி வரலாறுஇந்தியப் பெண்கள்குரியன் வரலாறுவந்தே பாரத் ரயில்சிறைவாசம்மாற்றமில்லாத வளர்ச்சிராங்கோவ.சேதுராமன் கட்டுரைஸ்ரீஹரிக்கோட்டாஇந்து மகா சபைமுதியவர்கள்உறுப்பு தானம்கொலைகள்ஸ்ரீசங்கராச்சாரியார்தமிழ் மாதிரிஎன்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?மதச்சார்பின்மைவே.வசந்திதேவிசங்கீத கலாநிதிகொலைவெறி தாக்குதல்பற்பசைகாலநிலை மாற்றம்ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டிஎச்சரிக்கையான பதில்கள்ஆரவாரம்மதுரை வீரன் கதைபூங்காக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!