கட்டுரை, அரசியல், ஊடக அரசியல் 5 நிமிட வாசிப்பு

இந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்

யோகேந்திர யாதவ்
31 May 2023, 5:00 am
2

ந்தி இதழியல் – குறிப்பாக செய்தித் தொலைக்காட்சிகள் - எப்படி இந்த அளவுக்குத் தரம் தாழ முடிகிறது என்ற கேள்வி என்னைவிட்டு அகல மறுக்கிறது; நெஞ்சு நிமிர்த்தி புகழ் பெறுவதற்குப் பதிலாக ஏன் இப்படி பிராமண மேலாதிக்க காலத்தையே நினைத்துத் தவிக்கிறது? ஊடக உலகில் மிகவும் மரியாதையுடன் ‘எஸ்பி’ என்று அழைக்கப்படும் சுரேந்திர பிரதாப் சிங் தொடங்கிய, ‘ஆஜ் தக்’ இந்தி செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தேன். இந்தி தொலைக்காட்சிகளிலேயே சுதந்திரமாகச் செயல்பட்ட முதல் நிறுவனம் அதுதான்.

சமீபத்திய காலத்தில் மிகவும் அபூர்வமான நிகழ்வு அது. அவர்களுடைய ‘ஆங்கில’ செய்தித் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கவும் கருத்து தெரிவிக்கவும் என்னைத் தொடர்ந்து அழைக்கின்றனர், ஆனால் ‘இந்தி’ செய்திச் சேனலோ என்னை விரும்புவதில்லை. தேர்தல் கணிப்புகள் பற்றிய செய்திகளுக்கும் சரி, விவசாயிகளின் இயக்கம் தொடர்பானதற்கும் சரி - என்னைத் தவிர்க்கிறார்கள். விவசாய இயக்கத்திலும் நான் நேரடியாகப் பங்கு வகிப்பவன். எந்த நிகழ்ச்சிக்காகவும் என்னை அழைக்கக் கூடாது என்று இந்தி செய்திச் சேனல் உயர் நிர்வாகிகள் – அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் – தடை விதித்திருப்பதாக அங்கிருப்பவர்களே தெரிவித்தார்கள். இது உண்மைதானா என்று என்னால் உறுதிசெய்துகொள்ள முடியவில்லை. 

அந்த நிகழ்ச்சி, கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தொடர்பானது. அந்தச் சேனல் சொல்லவந்தது மிகவும் தெளிவு: இதர பிற்படுத்தப்பட்ட சாதிக்கு (ஓபிசி) ஆதரவான நிலை காரணமாகத்தான் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்தது, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் காந்தி திடீர் ஆதரவு தந்ததே அதற்கு உதாரணம் என்பது அதன் நிலை. அது சொல்லாமல் விட்டதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது: திறமையற்ற ஆட்சியாலோ, ஊழலாலோ பாஜக தோற்கவில்லை, அசிங்கமான சாதி அரசியல் காரணமாகத்தான் தோற்றது; மிகவும் கொடூரமான – பிற்காலத்தில் தேசம் முழுவதும் எழக்கூடிய சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்ற கோரிக்கை காரணமாகத்தான் தோற்றது.

இதற்குச் சான்று என்னவென்றால் ஒரு காலத்தில் நாட்டின் 20 முதல்வர்களில் 13 பேர் பிராமணர்கள், மக்களவையில் கால் பங்கினர் பிராமணர்கள். இப்படிச் சொல்ல அந்த நிகழ்ச்சி நெறியாளருக்குக் கூச்சமே இல்லை, அதில் உண்மையைச் சொல்வது அவசியம் என்றும் அவர் அக்கறைப்படவில்லை. பிராமண மேலாதிக்கம் ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்ற பழம்பெருமையை - (சூரஜ் யெங்கடே வார்த்தையில் சொல்வதென்றால்) நினைவேக்கத்தை - சிறிதும் லஜ்ஜை இல்லாமல் வெளிப்படுத்திக்கொண்டார் நெறியாளர்.

சாக்கடை உடைந்து வழிந்தது

நான் பேச வேண்டிய தருணம் வந்தபோது ‘எஸ்பி’ முகம் நினைவில் வந்தது. கிழக்கு உத்தர பிரதேசத்தில் ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்து, கொல்கத்தாவில் வளர்ந்த ‘எஸ்பி’, சாதிரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்து காரசாரமான கருத்துகளை வெளியிடுவார்; சமூக நீதி தொடர்பான செய்திகளில் சம்பந்தம் இல்லாமல் உளறினாலும், பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலையில்லாமல் கருத்து தெரிவித்தாலும் நிருபர்களைக் கடுமையாகச் சாடுவார். ‘ஆஜ் தக்’ செய்தித் தொலைக்காட்சி செயல்படத் தொடங்கிய காலத்தில் செய்தி அறையை, அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொண்டதாக உருவாக்கினார்.

என்னுடைய கருத்து நெறியாளருக்கு மிகவும் எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, நான்கு அம்சங்களை அதில் வலியுறுத்தினேன். 1. மொத்த மக்கள்தொகையில் 3% மட்டுமே உள்ள சாதியினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து, நாகரிகம் அடைந்த எந்தச் சமூகமும் கவலைப்பட வேண்டும், பெருமைப்படுவதற்கு அதில் ஏதுமில்லை. 2. ‘ஆஜ் தக்’ நடத்திய வாக்கு கணிப்பே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒரேயடியாக காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிடவில்லை என்பதை புலப்படுத்துகிறது. 3. பிற கட்சிகளைப் போலவே பாஜகவும் சாதி அரசியல் செய்கிறது, அதேசமயம் பிராமணர்கள் தொடர்ந்து அதற்கு வாக்கு வங்கியாக நீடிக்கிறார்கள். 4. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது புதிய கோரிக்கை அல்ல, 2010இல் நாடாளுமன்றத்திலேயே பாஜக ஆதரித்த கோரிக்கைதான் அது, 2018இல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினேன். இந்தக் கருத்துகளைக் கூற எனக்கு நேரம் தரப்பட்டதை நான் பாராட்டியே தீர வேண்டும்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆஜ் தக்குக்கு நான் அளித்த பேட்டியுடன், அதன் பிராமண மேலாதிக்க நினைவேக்கத்தைச் சுட்டிக்காட்டி ஒரு ட்வீட் (சுட்டுரை) வெளியிட்டேன். அதில் அந்த நெறியாளர் குறித்து ஒரு வார்த்தையையும் நான் சொல்லவில்லை, அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இதற்குப் பிறகுதான் விமர்சனம் என்ற பெயரில் தெருச் சாக்கடை உடைந்து துர்நாற்றம் மிக்க தண்ணீர் வழிந்தோடியது. நெறியாளர் அதற்குத் தந்த பதிலில் என்னை ஆபாசமான வார்த்தையில் அர்ச்சிக்கவில்லையே தவிர, மற்றதையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டார். நான் கூறிய தரவுகளுக்கோ உண்மைகளுக்கோ அவர் பதில் அளிக்கவில்லை.

விரக்தியால் மனநிலை பிறழ்ந்தவன், அரசியலில் தோற்றவன், பச்சையான சந்தர்ப்பவாதி – இன்னும் ஆச்சரியம், நான் தேச விரோதியும்கூட! தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் ட்வீட் செய்வதாக இருந்தால், செய்தியைத் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், தங்களுடைய கருத்துகளைச் சேர்க்கக் கூடாது என்று ‘இந்தியா டுடே’ குழுமம் கொள்கை கொண்டிருந்தது. அதை மீறிய ஷியாம் மீரா சிங், வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது, பிரதமரை மட்டும் யாரும் அவதூறாகக் குறிப்பிடக் கூடாது என்று குறுக்கப்பட்டுவிட்டது போலும்! 

அந்தச் சொல்லாடலில் நிறையப் பேர் வந்தனர். அவர்களில் பலர் சமூக நீதிக் காவலர்கள், சில சமயம் நண்பர் – சில சமயம் விரோதி என்று எனக்கு எதிராகச் செயல்படும் திலீப் மண்டல் தலைமையில் அவர்கள் வந்தனர். அந்தச் சேனலும் நெறியாளரும் பிராமண மேலாதிக்கப் பற்று உள்ளவர்கள் என்று பலரும் நியாயமாகவே சுட்டிக்காட்டினர். நெறியாளரை ஆபாசமாக அர்ச்சித்தும் சிலர் கருத்து தெரிவித்திருந்ததைப் பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தேன். பிராமண துவேஷி என்று பலரும் என்னைச் சாடியிருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பிராமணர்கள் குறித்து நான் ஒன்றையுமே குறிப்பிடவில்லை. யாதவாக இருப்பதற்காகவே வசைபாடியிருந்தார்கள். இப்படியெல்லாம் பொதுவெளியில் திட்ட எப்படி அனுமதிக்கிறார்கள்? சிறு வயதிலிருந்து எனக்கிருந்த செல்லப் பெயரைக் குறிப்பிட்டும் சிலர் தாக்கியிருந்தனர், இதைச் செய்தவர் ஒரு ஊடகர். இதற்குப் பதில் அளிக்கலாமா என்று பார்த்தேன், ஏன் மீண்டும் குப்பையைக் கிளற வேண்டும் என்று என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இந்தி இதழியல் பற்றி புத்தகம்

ஒரு கேள்வி மட்டும் என்னைவிட்டு அகலவில்லை; இந்தி இதழியல் - குறிப்பாக செய்திச் சேனல் ஊடகம் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது? இந்தக் கேள்வியை ‘எஸ்பி’யிடம்தான் கேட்க விரும்புகிறேன். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பலர்தான் இன்று பல ஊடகங்களில் செய்திப்பிரிவுத் தலைவர்களாக இருக்கின்றனர். ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சி முழு அளவு ஊடகமாக மாறுவதற்கு முன்னதாகவே அவர் எங்கள் நிறுவனத்தைவிட்டு போய்விட்டார்.

இதற்கு விடை காண, மிருணாள் பாண்டே எழுதிய சமீபத்திய புத்தகத்தைப் படித்தேன். இந்தி செய்தித்தாள்களில் பெரியதான ‘இந்துஸ்தான் தைனிக்’ பத்திரிகையின் முதல் பெண் ஆசிரியர் அவர், இந்தி பத்திரிகை உலகால் மிகவும் மதிக்கப்படுபவர். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது வரை இந்தி மொழி இதழியலின் இந்தியப் பயணம் என்ற அந்தப் புத்தகம் அவருடைய சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் இந்தி ஊடகத்தின் ஆதியையும், பிறகு அதுவே தொலைக்காட்சி செய்திச் சேனலானதையும், இப்போது எண்ம வடிவிலும் வளர்ச்சி பெற்ற விதத்தையும் விவரித்திருக்கிறார். ஆவணக் காப்பகங்களிலிருந்து தகவல் திரட்டியிருப்பதுடன் அறிவியல்பூர்வமான ஆய்வுகளையும் மேற்கொண்டு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இந்தி மொழி ஊடகம் எப்படிச் சரிந்து, காணாமலேயே போய்விட்டது என்று சோகமாக அவர் எழுதிவிடவில்லை. மாறாக அது தொடர்ந்து வளர்ந்ததையே எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறை, பத்திரிகையை லாபகரமாக நடத்த முடியாமல் எதிர்ப்பட்ட பொருளாதார சவால்கள், இந்தி ஊடகத்தை கலாச்சாரரீதியாக மட்டம்தட்டிய நிலை ஆகியவற்றை விவரித்திருக்கிறார்; அதன் பிறகு அதன் விற்பனை எண்ணிக்கை அதிகரித்த விதம், அதற்கு ஏற்பட்ட அரசியல் – சமூக செல்வாக்கு, விற்பனை மூலமும் விளம்பரங்களாலும் ஏற்பட்ட லாபம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் செய்திப் பத்திரிகைகள் விற்பனை சுருங்கி மூடப்படும் வேளையில் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தி நாளிதழ்கள் எப்படி விற்பனையில் முந்துகின்றன, எப்படிச் செல்வாக்குடன் திகழ்கின்றன என்று முடித்திருக்கிறார்.

இதைப் படிக்கும்போது என்னுடைய கேள்வி மேலும் தீவிரமாகிறது. இந்தி ஊடகத் தொழில் உச்சத்தை நோக்கிச் செல்லும்போது, அதன் தொழில்தரம் மேலும் உயர வேண்டும் அல்லவா? இந்தி செய்தித்தாள்களின் வடிவமைப்பு, எழுத்துருக்கள் நவீனமாயின, புகைப்படங்களை எண்ம வடிவில் சேர்ப்பது உள்ளிட்ட நுட்பங்கள் பத்திரிகைக்கு வலுசேர்த்தன, ஆனால் அதன் செய்திகளின் தரம், கட்டுரைகள், தலையங்கங்கள் உள்ளிட்ட இதர அம்சங்கள் நாளுக்கு நாள் தேய்வடைந்தே வருகின்றன, ஏன்? பத்திரிகையில் இடம்பெறும் படைப்புகளின் தரம் தாழ்வது இந்தி மொழியில் மட்டுமில்லை, பிற மொழிகளிலும் நிலவுகின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளும் இதர மொழிப் பத்திரிகைகளும்கூட தரம் தாழ்ந்துகொண்டே வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் தரம் தாழ்ந்துகொண்டே வருகிறது, ஆனால் இந்தியா அளவுக்கு இல்லை.

என்னுடைய கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடை இல்லை. ஆனால், பரபரப்பான செய்திகளுக்கே இப்போது முக்கியத்துவம் தரப்படுகிறது, அடுத்து பொதுவெளியை நவபிரபுத்துவ காலத்துக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்தக் கருத்தை ஜெர்மன் சிந்தனையாளர் ஜுர்கன் ஹேபர்மாஸ் சொல்லியிருக்கிறார். இந்தி ஊடகம், குறிப்பாக செய்திச் சேனல்களின் இன்றைய நிலைக்கான மூன்று காரணங்கள் குறித்து பாண்டேவின் புத்தகம் மறைமுகமாக சிலவற்றைத் தெரிவிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஊடகங்களின் சாதியம் வெட்கக்கேடு

ஆசிரியர் 19 Oct 2022

டி.வி. செய்தி முற்பட்ட சாதிகளுக்காக  

வெளிப்படையான முதல் காரணம் அரசியலின் பங்களிப்பு. இந்தி ஊடகம் அரசியலுக்கு நெருக்கமாக இருப்பதால் அது பாதிப்படைந்துள்ளது. மோடி பிரதமரான 2014 முதல் செய்தித் தணிக்கைகளும் சுய தணிக்கைகளும் அமலாகிவிட்டன; அரசுக்கு ஆதரவான ஊடகங்களுக்கு ஊக்குவிப்புகள் கிடைத்தன, எதிர்ப்பவர்கள் அங்கீகாரம் இழந்தனர்.

இரண்டாவது, ஊடகங்களின் பொருளாதார நிலை. ஊடகங்களால் பணமும் சம்பாதித்துக்கொண்டு, யாருக்கும் வளைந்துகொடுக்காமலும் இருக்க முடியாது. பத்திரிகை நிறுவனங்களின் பழைய முதலாளிகள் ஓய்வெடுத்துக்கொண்டனர், அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் படித்துத் திரும்பிய அடுத்த தலைமுறை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றது. பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஓரங்கட்டப்பட்டனர், பத்திரிகைக்கு விளம்பர வருவாயை தேடித்தரவல்ல மேலாளர்கள் முக்கிய இடத்துக்கு வந்தனர். நம்பத்தக்கச் செய்திகளுக்குப் பதிலாக அதிகம் படிக்கத்தக்கச் செய்திகள் முன்னுரிமை பெற்றன, பணம் கொடுத்து எழுதவைக்கும் செய்திகள், ஏற்புடைய அங்கமாகிவிட்டன.

இந்தி ஊடகங்களின் செய்தி அறைகளுடைய சமூகவியலும் முக்கிய காரணம். தொலைக்காட்சி செய்திச் சேனல்களிலாவது அழகும் இளமையும் முதலிடம் பெற்று பெண்களை செய்தி வாசிப்பாளர்களாகவும் தொகுப்பாளர்களாகவும் வேலைக்கு அமர்த்தினர். அப்படி வந்தவர்களும் முற்பட்ட சாதிக்காரர்களாகவே இருந்தனர். செய்தி அறைகளிலும் முற்பட்ட சாதிக்காரர்களே – இன்னும் குறிப்பாக பிராமணர்களே இடம்பெற்றனர். ஆங்கில செய்திச் சேனல்களிலாவது பிராமணர் அல்லாதவர்கள் சிலர் இடம்பெற முடிந்தது. எனவேதான் பிராமணர்கள் ஆட்சியதிகாரத்தை இழக்கும்போது, ‘மஞ்சள் தேய்த்துக் குளித்த அந்த நாள் நினைவேக்கம்’ பிராமண ஊடகர்களுக்கு வந்துவிடுகிறது.

‘ஆஜ் தக்’ பேட்டிக்காக என்னைக் கண்டித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் தனக்கு வியப்பைத் தரவில்லை என்று கூறும் ஊடக விமர்சகர் ஊர்மிளேஷ், இந்தி டி.வி. செய்திச் சேனல்கள் பிராமணர்களுக்கானவை என்று சுட்டிக்காட்டுகிறார். அவருடைய கருத்தை ஏற்க மறுப்பவர்களிடம், செய்தி அறைக்குப் போய் பாருங்கள் – தொலைக்காட்சி நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பட்டியலைப் பாருங்கள் அதன் பிறகு என்னுடைய கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை என்பதைக் கூறுங்கள் என்கிறார். ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சி செய்திப் பிரிவிலேயே அதை உறுதிப்படுத்தத்தான் எனக்கு விருப்பம், ஆனால் அடுத்த முறை கூப்பிடுவார்களா என்பதே சந்தேகம்தான்!

 

தொடர்புடைய கட்டுரைகள் 

ஊடகங்களின் சாதியம் வெட்கக்கேடு
துணிச்சல் மிக்கதாக வேண்டும் இதழியல்: வினோத் கே.ஜோஸ் பேட்டி
மக்களிடமிருந்து விலகும் இந்திய வெகுஜன ஊடகங்கள்
என்டிடிவி கதை ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5

1

1
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   9 months ago

இந்தி செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மட்டுமல்லாது தமிழ் ஊடகங்களிலும் பார்ப்பனர் ஆதிக்கம் தான் அதிகம் என்ற நிலையில் அதை விமர்சனம் செய்யும் இந்த கட்டுரையை ரங்காச்சாரி அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பது அருஞ்சொல் ஆசிரியர் அவர்கள் எத்தகைய சிறந்த ஊடக தர்மத்தைப் பேணுகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் திரு ரங்காச்சாரி அவர்களே, திரு சமஸ் அவர்களே.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   9 months ago

நினைவேக்கம் என்பது அற்புதமான சொல். நோஸ்டால்ஜியா என்ற ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழாக்கம். இது சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இருக்கிறதா? இல்லாவிட்டால் ரங்காசாரியே உருவாக்கிய சொல்லா? அவருக்கு என் பாராட்டுகள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சித்தார்த்சோராஷகிஅமித் ஷா காஷ்மீர் பயணம்சவுக்கு சங்கர் அருஞ்சொல் தலையங்கம்கலைச்சொற்கள்துர்நாற்றம்கல்வி மற்றும் சுகாதாரம்உற்பத்திமீனாட்சியம்மன் கதைவாக்கு வங்கிஇரைப்பைப் புண்இப்போது உயிரோடிருக்கிறேன்இன்டிகாசனாதன தர்மம்அரசுக் கல்லூரிகள்டிடி கிருஷ்ணமாச்சாரிகோர்பசேவ்: கலைந்த கனவாதனிப் பயிற்சிஅம்பானி ரிலையன்ஸ்சோஷலிஸ அரசியல்பேரிடர்அரசமைப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறோம்?சந்தேகத்துக்குரியதுயஷ்வந்த் சின்ஹாஹார்னிமன்பாலின விகிதம்போல்சொனாரோஒடுக்குமுறைத் தேர்வுகள்ப.சியின் தொழில் பசி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!