கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 20 நிமிட வாசிப்பு

சித்ரா ராமகிருஷ்ணன் முறைகேடுகளின் கதை

ஸ்வாமிநாத் ஈஸ்வர்
25 Feb 2022, 5:00 am
14

ந்தியாவில் சாதியும், வர்க்கமும் ஆதிக்கம் செலுத்தாத இடம் என்று ஒன்றும் இல்லை. தேசியப் பங்குச் சந்தையில் சித்ரா ராமகிருஷ்ணன் செய்திருக்கும் முறைகேடு இதற்கான சமீபத்திய உதாரணம். நாட்டின் பெரிய நிதி அமைப்புகளில் ஒன்றான தேசியப் பங்குச் சந்தையில் எப்பேர்ப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதையும், இவற்றைக் கவனித்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய கண்காணிப்பு அமைப்புகள் எவ்வளவு சாவதானமாக நடந்துகொண்டன என்பதையும், ஊடகங்கள் எப்படி இது தொடர்பில் அடக்கி வாசித்தன என்பதையும் விலாவரியாகப் பேசுகிறது இந்தக் கட்டுரை.  

தாமதமாக வழங்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதியாகும் என்னும் சொல்வழக்கு நீதித் துறையில் உள்ளது. ஆனால், தாமதமாக வழங்கப்படும் நீதி, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை என்பது பொதுவெளியில் அதிகம் பேசப்படுவது இல்லை. குற்றவாளிகள் அதிகார வர்க்கத்திலோ, சாதிய அடுக்கிலோ, செல்வத்திலோ உயர் இடத்தில் இருக்கையில் இது நிகழ்கிறது. இதற்கான ஒரு நல்ல உதாரணம்தான் சமீப காலத்தில் வெளியான தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் தொடர்பான நடவடிக்கைகள். 

2010 முதல் 2016ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த தேசியப் பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரித்த இந்தியப் பங்குச் சந்தை வாரியம் - செபி (Securities and Exchange Board of India), சமீபத்தில் தன் அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, மத்தியப் புலனாய்வுத் துறை, தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா, குழுமச் செயல் அலுவலர் ஆனந்த் சுப்ரமணியம், தேசியப் பங்குச் சந்தையின் முதல் மேலாண் இயக்குநர் ரவி நாரயண் மூவரையும் தேடப்படும் நபர்களாக அறிவித்தது.

இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை, உலகின் மிகப் பெரும் பங்குச் சந்தைகளுள் ஒன்று. இது 1992ஆம் ஆண்டில், நடைபெற்ற மும்பைப் பங்குச் சந்தை ஊழலைச் சரிசெய்து, பங்குச் சந்தைச் செயல்பாடுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சாதாரண முதலீட்டாளர்கள் நலன்களை முன்வைத்து நடத்தவும் உருவாக்கப்பட்ட ஒன்று. இன்று அந்த நிறுவனத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. எப்படிப்பட்ட நிர்வாக அமைப்பிலும், வெளிப்படையான செயல்பாடுகளும், சரியான கட்டுப்பாடுகளும் இல்லாவிடில் முறைகேடுகள் நடக்கும் என்பதற்கான உதாரணம்.

மும்பைப் பங்குச் சந்தை ஊழல்

இந்தியப் பங்குச் சந்தையில் 1992ஆம் ஆண்டு ஒரு பெரும் ஊழல் வெடித்தது. இந்த ஊழலின் பின்ணணியில் இருந்தவர் ஹர்ஷத் மேத்தா என்னும் பங்குச் சந்தைத் தரகர். அந்தக் காலத்தில், பங்குச் சந்தை வர்த்தகம் என்பது ஊரக வேளாண் சந்தைபோல நடந்துவந்தது. பங்குகள், பங்குச் சந்தைக் கட்டிட வணிக வளாகங்களில், கூவி விற்றல் (Open Cry) முறை மூலம் நடந்துவந்தன. ‘கூவி விற்றல்’ முறை என்பது வெளிப்படையான ஒரு வணிக முறை அல்ல. அந்த வணிகம் நடத்துபவர்களிடம் சங்கேத பாஷைகள் உண்டு. 

அந்தக் காலத்தில், வங்கிகள், குறைந்தபட்ச முதலீட்டை, அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாடு ஒன்று இருந்தது. பலவீனமான வங்கிகளிடம் அதற்கான நிதி வசதிகள் இல்லாமல், பெரும் வங்கிகளிடமிருந்து அரசுக் கடன் பத்திரங்களை தற்காலிகமாக வாங்கித் தமது அக்கவுண்டில் காட்ட வேண்டியிருந்தது. அதேபோல, வளமான வங்கிகளிடம் நிதி ஆதாரங்கள் அதிகம் இருக்க, அவற்றை அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடுசெய்து, அதில் அதிக வருமானம் ஈட்ட விருப்பம் கொண்டிருந்தன. இந்தப் பரிவர்த்தனைகள், பங்குச் சந்தைத் தரகர்கள் மூலம் நடக்க வேண்டி இருந்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஹர்ஷத் மேத்தா, இந்தப் பரிவர்த்தனைகளுக்கான பணத்தை, தன் சொந்தக் கணக்கு வழியே பெற்று, அதைச் சட்டத்துக்குப் புறம்பாக, பங்குச் சந்தையில் முதலீடுசெய்தார். பத்திரப் பரிவர்த்தனையில் வங்கிகள் தரும் ‘வங்கி ரசீது’களைத் தானே போலியாக அடித்து, அவற்றில் வங்கிகளின் முத்திரைகளை அடித்து, அவை உண்மையான ரசீதுகள் போலக் கொடுத்து வங்கிகளை ஏமாற்றிவந்தார். 

வங்கிகளில் இருந்த விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பெற்ற நிதி வழியே, பங்கு விலைகளைச் செயற்கையாக உயர வைத்து, உயர்ந்துவரும் காலத்தில், குறைவான விலைக்கு வாங்கப்பட்ட தன் பங்குகளை விற்றுச் செல்வம் கொழித்தார். 1991ம் ஆண்டுக்குப் பின்னர், கொண்டுவரப்பட்ட நவதாராளமயக் கொள்கைகள் உருவாக்கிய உற்சாகமும், ஹர்ஷத் மேத்தா போன்ற பங்குச் சந்தைக் காளைகளும் (Bull) இணைந்துகொள்ள, பங்குச் சந்தை மளமளவென்று வளர்ந்தது.

இந்த ஊழலைக் கவனித்துவந்த ‘சுசேதா தலால்’ எனும் நிதித் துறைப் பத்திரிக்கையாளர், இதைத் தன் கட்டுரைகளின் மூலம் வெளிப்படுத்தினார். அந்தக் கட்டுரைகள், பங்குச் சந்தையில் பெரும் புயலைக் கிளப்பின. பீதியில், பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 4500 புள்ளிகளைத் தொட்டிருந்த பங்குச் சந்தை, 2500 புள்ளிகள் வரைக் கீழிறங்கியது. 

ஹர்ஷத் மேத்தா கைதுசெய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். சுசேதா தலால், தொடர்ந்து நிதித் துறையில் நடந்த பல ஊழல்களை, தன் புலனாய்வுக் கட்டுரைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். பத்திரிகைத் துறையில், தனது பங்களிப்புக்காக, 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தேசியப் பங்குச் சந்தை உருவாக்கம்

மும்பைப் பங்குச் சந்தை ஊழல், பங்கு வர்த்தகம் மற்றும் வங்கிச் செயல்பாட்டு முறைகளில் இருந்த பலவீனங்களை வெளிக்கொணர்ந்தது. இதை ஆராய்ந்து, மேம்பட்ட பங்குச்சந்தை வணிக முறைகளை உருவாக்க ஃபெர்வானியின் தலைமையில், ஒரு குழுவை அன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நியமித்தார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், தேசியப் பங்குச் சந்தை என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாகம், பங்குச் சந்தை வணிகத்தை இணைய வழியே நடத்த முடிவுசெய்தது.

இந்தப் பங்குச் சந்தை, இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India – SEBI – செபி) கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும் ஒன்றாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பெருநகரங்களிலும் தொடக்கத்தில் இணையம் வழியே பங்குகளை வாங்கி விற்கும் வசதி கொண்டுவரப்பட்டது. இது மிக வேகமாக வளர்ந்து, இன்று இணைய வசதி உள்ள உலகின் எந்த மூலையில் இருந்தும், இந்திய தேசியப் பங்குச் சந்தையில் வணிகம் செய்யும் வசதிகள் கொண்டதாக பேருரூ கொண்டுள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் மூளையும்- முதுகெலும்பும் தகவல்தொழில்நுட்பம் ஆகும். தன் வணிக வேலை நேரங்களில் 30 ஆண்டுகளில் எப்போதுமே தவறாமல் செயல்பட்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திவருகிறது. இதன் ‘அப்-டைம்’ 99.99% என்பதே இதன் அடையாளம். அதேபோல், 1992-ம் ஆண்டு தொடங்கி அதிகரித்துவரும் விற்பனைச் செயல்பாடுகளுக்கு ஏற்ப, தன் செயல் திறனை மேம்படுத்திவந்துள்ளது தேசியப் பங்குச் சந்தை.

தன் செயல்பாடுகளை 1994ஆம் ஆண்டு தொடங்கியபோது, விநாடிக்கு 2 பங்குப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் செயல் திறன் கொண்டதாக தேசியப் பங்குச் சந்தை  இருந்தது. 2001இல் விநாடிக்கு இது 60 ஆக உயர்ந்தது. தற்போது, விநாடிக்கு 1,60,000 பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய செயல் திறன் கொண்ட உலகின் மாபெரும் பங்குச் சந்தைகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் தினசரி வணிகம் 2-3 லட்சம் கோடிகள்.

இதன் முதல் மேலாண் இயக்குநர் ரவி நாராயண், 1994 முதல் 2013 வரை பணிபுரிந்தார். 2013ஆம் ஆண்டு, அவர் பதவி விலகி, துணைச் தலைவராக, நிர்வாகப் பொறுப்புகளற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவர் கீழ் பணிபுரிந்த சித்ரா ராமகிருஷ்ணா மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சித்ராவின் பின்புலம்

சித்ரா ராமகிருஷ்ணா 1984ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றவர்.  தொடக்கத்தில் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியில் (Industrial Bank of India ஐடிபிஐ) பணிபுரிந்தார்.  தேசியப் பங்குச் சந்தையை உருவாக்க முடிவெடுத்த இந்திய அரசு, ஐடிபிஐ சேர்மன் நட்கர்னியிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அவர் தன் கீழ் பணிபுரிந்த அலுவலர்களான ரவி நாரயணையும், சித்ரா ராமகிருஷ்ணாவையும் தேர்ந்தெடுத்து, தேசியப் பங்குச் சந்தை நிறுவன உருவாக்கத்தில் ஈடுபடுத்தினார். 

ரவி நாராயணன் 2013ஆம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதானது, விதிமுறைகளுக்குப் புறம்பான ஒன்று. இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. இது செபியின் அனுமதியில்லாமல் உருவாக்கப்பட்டது. இது முதல் விதிமீறல்.

அதேபோல, ரவி நாரயண் இடத்தில், புதிய மேலாண் இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டதிலும், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது இரண்டாவது விதிமீறல். 

இந்த இரண்டு விதிமீறல்களை பங்குச் சந்தைக் காவலரான செபியும், கண்காணிக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகமும் ஏன் அனுமதித்தன என்பது பங்குச் சந்தை நிபுணர்கள், நிதிப் பத்திரிக்கையாளர்களின் சந்தேகம்.

தேசியப் பங்குச் சந்தையின் பங்களிப்பு 

தேசியப் பங்குச் சந்தை உருவாகும் முன்பு, மும்பை பங்குச் சந்தைதான், இந்தியப் பங்குச் சந்தைகளின் தலைமையிடத்தில் இருந்தது. மும்பையில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள், பங்குச் சந்தைத் தரகர்கள், நிழல் உலகத் தாதாக்கள் எனப் பலரும் உலவும் இடமாக இருந்தது.

பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாக இல்லாமல் இருந்தன. சில பெரும் பண முதலைகளின் பிடியில் மொத்த சந்தையும் இருந்தது. இதைத் தாண்டி, தில்லி, கல்கத்தா, சென்னை, கோவை, பெங்களூர், கொச்சி, எனப் பல ஊர்களில் பங்குச் சந்தைகள் இருந்தன. இவை பெரும்பாலும், உள்ளூர் செல்வந்தர்கள் மட்டுமே நுழையக்கூடிய ‘தனி மனித கிளப்’களாக இருந்தன.

ஆனால், இணைய வழிச் செயல்பாடுகளைத் தொடங்கிய தேசியப் பங்குச் சந்தை, பங்குப் பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கியது. எவர் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், வெளிப்படையாக பங்குகளை வாங்கி விற்க முடிந்தது. இடைத்தரகர்கள் சொல்வதுதான் இறுதி உண்மை என்னும் விதி தரைமட்டமாக்கப்பட்டது. சந்தைப் பரிவர்த்தனைகள் முதலீட்டாளரின் கண் முன்னே நிகழ்ந்தது. இதனால், இந்தியாவெங்கும் சிறு முதலீட்டாளர்கள் மிக உற்சாகமாகப் பங்கெடுக்க முன்வந்தார்கள். 

இணையப் பங்குப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என வீம்பு பிடித்த மும்பைப் பங்குச் சந்தையும் வேறு வழியின்றி இணைய வழிச் செயல்பாடுகளைத் தொடங்கியது. தொடங்க மறுத்த, முடியாத பல நகரப் பங்குச் சந்தைகள் மாண்டு போயின.

தேசியப் பங்குச் சந்தையானது, இணைய வழிப் பங்குப் பரிவர்த்தனைகள் மூலம், இந்த வணிகத்தைப் பெருமளவு விரிவாக்கி, இந்தியா முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களும் வெளிப்படையான வணிக முறையில் பங்கெடுக்கும் ஒரு புதிய தொழில் முறையை உருவாக்கியது. ஒன்றிய அரசு நிதித் துறையின் மிகச் சிறந்த கொள்கை முன்னெடுப்பு இந்த நிறுவனம் என்று சொல்லலாம்.

ஆனால், இந்த உருவாக்கத்தில் ஒரு சறுக்கல் என்னவெனில் இது ஒரு தனியார் துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டதே ஆகும். பங்குச் சந்தை வணிகத்தை நடத்தும் இந்த நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் இல்லை. இதன் முதலீட்டாளர்களான தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பாரத ஸ்டேட் வங்கி போன்றவர்கள் பல முறை வற்புறுத்தியும் இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்வதை தள்ளிப்போட்டு வந்தார் இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா.

ஆனந்த் சுப்ரமணியத்தின் வருகை

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேலாண் இயக்குநராகிய சித்ரா ராமகிருஷ்ணா, சில மாதங்களிலேயே, ஆனந்த் சுப்ரமணியத்தை ஆலோசகராக நியமித்தார்.

இந்த ஆனந்த் சுப்ரமணியம், அரசுப் பொதுத்துறை நிறுவனமான ‘பால்மர் லாரி’யின் துணை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். வருடம் ரூ.15 லட்சத்துக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வந்த இவரை, ரூ. 1.4 கோடி சம்பளம் கொடுத்து ஆலோசகராக நியமித்தார் சித்ரா. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இவர் ஊதியம், 6 முறை உயர்ந்து கிட்டத்தட்ட ரூ.4 கோடியாகி இருக்கிறது. 

வழக்கமாக, தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்படுபவர்களுக்கான தகுதிகள், அனுபவம் போன்ற விதிமுறைகள் உண்டு. அது தவிர, நிறுவனத்தில் பலரும் குறுகிய கால ஆலோசகர்களாக நியமிக்கப்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது. ஆனந்த் சுப்ரமணியம் ஆலோசகராக, நேரடியான பணி நியமனம் என்னும் வழியில் இல்லாமல், பின்வாசல் வழியே உள்ளே அழைத்துவரப்பட்டார். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இவர் தேசியப் பங்குச் சந்தையின் குழுமச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி என்பது, தேசியப் பங்குச் சந்தையின் மிக முக்கியமான நிர்வாகப் பதவி. இந்தப் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனில், அது, பங்குச் சந்தையின் காவலரான செபியிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே செய்யப்பட வேண்டும். ஆனால், இவரது பதவி உயர்வுபற்றிய முன் அனுமதியை தேசியப் பங்குச் சந்தை செபியிடமிருந்து பெறவில்லை. இது அப்பட்டமான விதிமீறல்.

பதவி உயர்வின் பின்னர், தேசியப் பங்குச் சந்தையின் இரண்டாவது உயர் நிர்வாக நிலையை அடைந்தார் ஆனந்த். தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் துறைத் தலைவர்களும் ஆனந்த் வழியேதான் சித்ராவைச் சந்திக்க முடியும் என்னும் நிலை உருவானது.

பங்குச் சந்தையைப் பற்றிய துறைசார் அனுபவம் கொஞ்சமும் இல்லாத ஒருவருக்கு, பணியும், ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வும் எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டன என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

ஒரே இட வணிக முறை 

பங்குச் சந்தையில் எந்தப் புதிய வணிக முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இந்தியப் பங்குச் சந்தை வாரியமான செபியினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால், 2010ஆம் ஆண்டு, செபியின் முறையான அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல், தேசியப் பங்குச் சந்தை நிறுவனமானது இந்தப் புதிய வணிக முறையைத் தொடங்கியது.

தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் சர்வர்கள் இருக்கும் அதே இடத்தில், அங்கே வர்த்தகம் புரியும் பங்குச் சந்தை வர்த்தகர்களின் சர்வர்களையும் வைத்து வணிகம் செய்யும் முறைதான் ‘கோ லொக்கேஷன் வணிக முறை’ (Colocation Trading facility) என அழைக்கப்படுகிறது. இந்த முறையில், மற்ற சில்லறை வணிகர்களைவிடச் சில நுண் விநாடிகளுக்கு முன்பே, வர்த்தகத் தகவல்கள் இந்தப் பெரும் வணிகர்களுக்குக் கிடைக்கும். இந்தச் சாதகம், பெரும்பாலும் கணிணி மென்பொருள் மூலம் இயக்கப்படும் பங்குப் பரிவர்த்தனைகளில், பெரும் லாபம் ஈட்டித் தரும் ஒன்றாகும்.

இந்த முறை தேசியப் பங்கு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிரானது. அதில் வணிகம் செய்யும் அனைவருக்கும் சமநிலை மறுக்கப்படுவதாகும் என நிதித் துறை நிபுணர்கள் பலரும் சொல்கிறார்கள்.

இதில் நிகழ்ந்துவந்த முறைகேடுகளைப் பற்றிய ஓர் அனாமதேயப் புகார் 2015-ம் ஆண்டு, இந்தியப் பங்குச் சந்தை வாரியத்துக்கு வந்தது. இந்தப் புகாரின் ஒரு நகல், ‘மணி லைஃப்’ என்னும் நிறுவனத்தை நடத்திவந்த பத்திரிக்கையாளர் சுசேதா தலாலுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் 2015 ஜனவரியில் வந்த அந்தப் புகாரை விசாரித்த இந்தியப் பங்குச் சந்தை வாரியம் செபி, இது தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தைக் கேட்டது. அதற்கு தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் ஒரு விட்டேத்தியான பதிலைக் கொடுக்க, அதையும் செபி வாங்கி வைத்துக்கொண்டது. 

தனக்கு வந்த அனாமதேய கடிதத்தை முன்வைத்து சுசேதா தலால், பங்குச் சந்தை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடம் ஆலோசித்தார். அவர்கள் இது போன்ற முறைகேடுகள் நடக்கும் சாத்தியங்கள் உண்டு என்பதை உறுதிசெய்தார்கள். எனவே, இந்தப் புகாரை தேசியப் பங்குச் சந்தைக்கு அனுப்பி, இதுபற்றிய விளக்கங்களைக் கோரினார் சுசேதா தலால். ஆனால், பல மாதங்களாகியும் பதில் வராததால், தனக்கு வந்த அனாமதேய கடிதத்தை, ‘மணி லைஃப்’ இதழில் பிரசுரித்து, இதுபற்றிய மேலதிகத் தகவல்களைத் திரட்டலானார்.  

உடனே விழித்துக்கொண்ட தேசியப் பங்குச் சந்தை நிறுவனமானது, சுசேதா தலால் மீதும், ‘மணி லைஃப்’ பத்திரிக்கை மீதும் 100 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டது. இதைத் தொடர்ந்து செபியும் தன் விசாரணையை முடுக்கிவிட நேர்ந்தது.

மான நஷ்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அதைத் தள்ளுபடிசெய்தது. ‘மணி லைஃப்’ பத்திரிகையில் எழுதிய சுசேதா தலால் மற்றும் தேபஷிஷ் பாசு இருவருக்கும் தலா ரூ. 1.5 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்குமாறும், பத்திரிகைகளை மதிக்காமல் நடந்துகொண்ட முறைக்காக, 50 லட்ச ரூபாய் பணத்தை, மும்பையின் இரண்டு மக்கள் நல மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்குமாறும் தீர்ப்பளித்தது நீதிமன்றம். மேலும் அது ‘மணி லைஃப்’ முன்வைத்த புகாரைத் தீர விசாரிக்குமாறு செபிக்கும் அறிவுறுத்தியது. தேசியப் பங்குச் சந்தையானது, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றது.  

செபி இது தொடர்பாக, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தது. அதன் தலைவராக, சென்னை ஐஐடியைச் சேர்ந்த அஷோக் ஜுஞ்ஜுன்வாலா என்னும் பேராசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பைக் கொடுக்காமல், தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் அந்தக் குழுவை அலைக்கழித்தது. ஆனாலும், பேராசிரியர் அஷோக் ஜுஞ்ஜுன்வாலா மிகத் திடமாக நின்று, தனது அறிக்கையைக் கொடுத்தார். அது ‘கோ லோக்கேஷன்’ வணிக முறையில் தவறுகள் நடக்கும் சாத்தியங்கள் இருந்ததை வலுவாக முன்வைத்து, மேலும் புலனாய்வுசெய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. 

புலனாய்வுத் தணிக்கையை மேற்கொள்ள, செபி ‘டெலாய்ட்’ என்னும் புகழ்பெற்ற தணிக்கை நிறுவனத்தை நியமித்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தணிக்கைச் செயல்பாடுகளைச் செய்து, ‘கோ லொக்கேஷன்’ வணிக முறையில், பல முறைகேடுகள் நடந்ததை ‘டெலாய்ட்’ தன் அறிக்கையில் உறுதிசெய்தது. இதைத் தொடர்ந்து, செபி தேசியப் பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவை மாற்றியமைத்தது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ரா ராமகிருஷ்ணா பதவி விலகினார்.

இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆனந்த் சுப்ரமணியத்தைக் குழுமச் செயல்தலைவராக நியமித்த முறைகேடு தொடர்பாக 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு அனாமதேய கடிதம் வர, அதையும் விசாரிக்குமாறு செபி உத்தரவிட்டது. தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் ஊழியர்களை நியமிக்க இருந்த ஒரு விதியும் இவர் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. விதிகளை மீறி, நிறுவனத்தில் இவர் ஓர் உயர் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதை செபியின் விசாரணை அறிக்கை உறுதிசெய்தது.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடிய தேசியப் பங்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு, ஆனந்த் சுப்ரமணியத்தை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது. ஒரே நாளில், ஆனந்த் சுப்ரமணியம் வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ‘கோ லொக்கேஷன்’ வணிக முறைச் முறைகேடுகள் தொடர்பாக செபி நடத்திய விசாரணைகளின் முடிவில், 2019-ம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்துக்கு, ரூ.625 கோடி அபராதமும், முறைகேடு நடந்த காலத்திலிருந்து 2019 வரையான காலத்துக்கு, வருடம் 12% வட்டியும் விதித்தது. இந்தக் காலத்தில், தேசியப் பங்குச் சந்தையில் பணிபுரிந்த ரவி நாரயண் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஊதியத்திலிருந்து 25% தொகையைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இது தவிரவும், சித்ரா ராமகிருஷ்ணா, தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்துகொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக்.காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவமில்லை’ என்றெல்லாம் அபத்தமான பதில்களைச் சொல்லியிருக்கிறார். இது ஏனையவர்களைப் பைத்தியமாக்கும் முயற்சிதானே தவிர, அவர் தேர்ந்த சித்தத்துடன்தான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையே நாம் நம்ப வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், அந்த ‘யோகி’யுடன் இந்தப் பரிவர்த்தனையோடு, சித்ரா ராமகிருஷ்ணாவின் சிகை அலங்காரம் தொடங்கி சீஷெல்ஸ் தீவுகளில் உல்லாசப் பயணம் போவது பற்றிய திட்டங்கள் வரையிலான மின்னஞ்சல்களும்கூட பரிமாறிக்கொள்ளப்பட்ட்டுள்ளன. உருவமில்லா யோகிக்கு எப்படி மின்னஞ்சல் ஐடி வந்தது? ஆனால், சீஷெல்ஸ் தீவுகளில் உல்லாசப் பயணம் போகும் திட்டமெல்லாம் யோகி செய்யும் காரியமா என செபி கேட்டதுபோலத் தெரியவில்லை. மிக முக்கியமாக, இந்தக் குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணையை செபி ஏன் எதோ ஒரு சாதாரண டிபார்ட்மெண்ட் என்கொயரி போல மென்மையாகவும் மெதுவாகவும் பல ஆண்டுகள் இழுத்தடித்து நடத்துகிறது என்பதும் சந்தேகம் எழுப்பும் செயல்பாடே ஆகும்.

இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை விளக்கும் சுசேதா தலால், இதை, ‘காவலனைச் சிறைபிடித்தல்’ (Regulatory Capture), என்னும் பதத்தை உபயோகித்து விளக்குகிறார்.

காவலனைச் சிறைபிடித்தல்

1992ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை முறைகேட்டிற்குத் தீர்வாக உருவான தேசியப் பங்குச் சந்தை, ஒரு தனியார் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.  

இது தன் செயல்திறனை உபயோகித்து, இந்தியாவின் முக்கியப் பங்குச் சந்தைகளை வளரவிடாமல் செய்து, தனிப்பெரும் ஏகபோக நிறுவனமாக (Monopoly) வளர்ந்தது. தனியார் நிறுவனம் என்பதால், ஊதியங்கள் அரசு நிறுவனங்களைவிடப் பல மடங்கு அதிகம்.

ஆனால், இதைக் கண்காணித்து நிர்வாகம் செய்ய வேண்டிய இந்தியப் பங்குச் சந்தை வாரியமும் நிதி அமைச்சகமும் அரசு நிறுவனங்கள். அங்கே ஊதியம் மிகக் குறைவு.

இந்த வேறுபாட்டை ரவி நாரயணும், சித்ரா ராமகிருஷ்ணாவும் மிகச் சாமர்த்தியமாக உபயோகித்துக்கொண்டார்கள். நிதி அமைச்சகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு, தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் ஆலோசகர் பதவிகளை அள்ளி வழங்கினார்கள். தனியார் நிறுவனம் என்பதால் இதை அவர்களால் எளிதாகச் செய்ய முடிந்தது. அதேபோல, செபியில் உள்ளவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. திரைமறைவில், அரசியலர்களின் ஆசியும் கிடைத்தது. 

உலகின் மிகப் பெரும் பங்குச் சந்தைகளுள் ஒன்றாக உருவெடுத்தவுடன், தேசியப் பங்குச் சந்தையும், அதன் நிர்வாக அதிகாரிகளும் மிக ஆணவத்துடன் நடந்துகொள்ளத் தொடங்கினார்கள். விதிமீறல்களைக் கேள்வி கேட்கும் செபியை அலட்சியப்படுத்தினார்கள். அவர்கள் அனுப்பும் தணிக்கை அதிகாரிகளை மோசமாக நடத்தினார்கள். 

நாட்டின் வணிக முறைகளைக் கண்காணித்து, நிர்வாகம்செய்து, முறைகேடுகளைக் களையும் நோக்கில் உருவாக்கப்பட்ட செபி மற்றும் ஒன்றிய நிதியமைச்சகம் போன்ற கண்காணிப்பு நிறுவனங்களை, தேசியப் பங்குச் சந்தையின் மேலாண் இயக்குநர்கள், தங்களிடம் இருந்த அதீத நிதிப் பலத்தால் முடக்கி, தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து முறைகேடுகளை நடத்தியிருக்கிறார்கள்.

படிப்பினைகள் என்ன?

  • 1992ஆம் ஆண்டுக்கு முன்பு, பங்குச் சந்தை என்பது, பெரும் செல்வந்தர்களின் கூடாரமாக இருந்தது.
  • பங்குச் சந்தை வணிகம் என்பது வெளிப்படையான ஒன்றாக இல்லாமல், பூடகமாக, மறைமுகமாகப் பெரும் பண முதலைகளால் ஆட்டுவிக்கப்படும் ஒன்றாக இருந்தது.
  • இந்தியாவின் சிறு முதலீட்டாளர்கள் இந்தச் சந்தையில் பங்கு பெறுவதில் தடைகள் இருந்தன. தங்கள் பங்குகள் வாங்குவதையும், விற்பதையும் அவர்கள் இடைத்தரகர்கள் மூலமே செய்து வந்தார்கள்.
  • தேசியப் பங்குச் சந்தை, இணைய வழி பங்குப் பரிவர்த்தனை முறையை உருவாக்கி, அடிப்படை இணையக் கல்வி பெற்ற சிறு முதலீட்டாளர்களும், கீழ் மத்திய வர்க்க மக்களும் இதில் நேரடியாகப் பங்கு பெறும் நிலையை உருவாக்கியது. இன்று இந்திய நிதிச் சந்தை பெருமளவு வெளிப்படையான, ஜனநாயகத் தன்மை கொண்டதாக உள்ளது.
  • தேசியப் பங்குச் சந்தை உருவாக்கத்தில் நிதி அமைச்சகத்தின் பங்களிப்பும், ஆதரவும் மிக முக்கியமான ஒன்று.
  • ஆனால், தேசியப் பங்குச் சந்தை என அழைக்கப்படும் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக இருப்பது, அதன் நோக்கத்துக்கும், ஜனநாயகத்தன்மைக்கும் எதிராக உள்ளது. அதன் செயல்பாடுகளில் அரசின் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது, வருங்காலத்திலும், இது போன்ற முறைகேடுகள் நிகழ வழி வகுக்கும்.
  • தேசியப் பங்குச் சந்தை இந்திய நிதி இறையாண்மையின் அடையாளம். இது தனியார் நிறுவனமாக நீடிப்பது நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு நல்லதல்ல.
  • எனவே, தேசியப் பங்குச் சந்தையின் பங்குகள் உடனடியாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.
  • சந்தை விலையில், அதன் பங்குகளில், 26% அரசு வாங்கி, தன் பிரதிநிதி ஒருவரை அதன் இயக்குநர் குழுவில் இடம் பெறச்செய்ய வேண்டும்.
  • தேசியப் பங்குச் சந்தை இயக்குநர் குழுவில், செபி, மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும்.
  • தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் ஆனந்த் சுப்ரமணியம் போன்ற ஆலோசகர்கள் உயர் பதவிகளில், நிர்வாகப் பதவிகளில் இடம் பெறும் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முறையான பங்குச் சந்தை நிர்வாக அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு நேர்மையான, வெளிப்படையான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தேசத்துக்கான சேதி என்ன?

முதலீட்டாளர் நலன்களை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தேசியப் பங்குச் சந்தை இந்தியாவில் பெரும் வெற்றி பெற்ற நிறுவனம். பொருளியல் தளத்தில் வெற்றி பெரும் எந்த நிறுவனமும் செல்வச் செழிப்பில் கொழிக்கும்.

தேசியப் பங்குச் சந்தையின் வெற்றி மூலம் கிடைத்த செல்வம், அதற்கு அளவு கடந்த அதிகாரத்தைக் கொடுத்தது. அதைக் கண்காணிக்க வேண்டிய நிதித் துறை மற்றும் செபி அதிகாரிகள், நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் குறைவான ஊதியமும், நிதி அதிகாரமும் பெற்றவர்கள்.

தேசியப் பங்குச் சந்தையின் அதிகாரிகள், தேசியப் பங்குச் சந்தை ஈட்டிய செல்வத்தை உபயோகித்து, தனியார் நிறுவனம் என்னும் வசதியைப் பயன்படுத்தி, தன்னைக் கண்காணிக்க வேண்டிய நிறுவனத்தின் அதிகாரத்தைச் செல்லாக்காசாக்கி, தனிநபர்களின் நலன்களுக்காக முறைகேடுகளைச் செய்துள்ளனர். தனக்கு வேண்டியவர்களுக்கு விதிமுறைகளை மீறி வேலை வாய்ப்புகளை அளித்தல், சில பெரும் இடைத்தரகர்களுக்கு நேர்மையற்ற வகையில் வணிகச் சாதகங்களை உருவாக்கித் தந்து அதில் ஊழல் செய்தல், பொதுமக்கள் பணத்தில் அதிகாரிகள் உல்லாச வாழ்க்கை வாழ்தல் போன்றவை இதன் வெளிப்பாடுகளே.

இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய செபி நிறுவனம், 6-7 ஆண்டுகள் நேரம் எடுத்துக்கொண்டிருப்பது, ரவி நாராயண், சித்ரா போன்ற நேர்மையற்ற புத்திசாலிகளுக்கே சாதகமாக அமைந்திருக்கிறது. இது நிர்வாக அமைப்பின், கண்காணிப்பு அமைப்புகளின் செயல்திறன் குறைபாடு.

இந்தச் செயல்திறன் குறைபாட்டுக்கு, தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் ஈட்டிய அளவற்ற செல்வம் உருவாக்கிய அதிகாரச் சமநிலையின்மையே முக்கியமான காரணம். செபி போன்ற அரசின் கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை தேசியப் பங்குச் சந்தையின் மீது சரியான வகையில் செலுத்த முடியாமல் போனது இதனால்தான். 

கடந்த சில பத்தாண்டுகளாக, இந்திய அரசு, அரசு வணிக நிறுவனங்களிலும், பொருளாதாரச் செயல்பாடுகளிலும் இருக்கக் கூடாது என்னும் ஒரு குறுகிய பார்வையில், பெரும் செல்வங்களை வைத்திருக்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் வசம் அளித்துவருகிறது. இதில் தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் துறையில் இயங்கும் பெட்ரோலிய நிறுவனங்கள், ரயில்வே துறை, விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்பு முதலிய துறைகள் முக்கியமானவை. இவையனைத்தும் தனியார் வசம் செல்வது, நாளை, இந்திய அரசு என்னும் இயந்திரத்தை, நிதி ஆதாரமற்ற ஒன்றாக மாற்றிவிடும். 

தனியார் வசம் செல்வது என்பது இன்று, இந்தத் துறைகள், ஒன்றிரண்டு ஒட்டுண்ணி முதலாளிகள் வசம் செல்வதாக உள்ளது. இந்தப் போக்கு இந்தியாவில் மிகப் பெரும் நிதி ஆதாரங்கள் கொண்ட, அசுர பலம் வாய்ந்த சில முதலாளிகளை உருவாக்கும். 

அரசு நிறுவனங்களில் முறைகேடுகள் நிகழ்ந்து, அதில் பொதுமக்களுக்கோ, நாட்டுக்கோ தீமைகள் ஏற்பட்டால், அரசு அதில் தலையிட முடியும். அப்படி முடியாவிட்டால்கூட, அந்த அதிகாரி ஓய்வு பெற வேண்டிய வயதில் ஒய்வு பெற்று வெளியில் சென்றே ஆக வேண்டும். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் துறைகள் தனியார் வசம் செல்வது என்பது, அவை சில குடும்பங்களின் தனிச் சொத்தாக மாறும் அபாயத்தை உள்ளடக்கியது. 

பல ட்ரில்லியன் டாலர் பலம் கொண்ட தனியார் நிறுவனங்களை, சில ஆயிரங்களை ஊதியமாகப் பெறும் அரசு நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து அடக்குவார்கள் என்னும் நிலை சமநிலையற்றது. நிதி பலம், விதிமீறல்களை எந்த நீதி மன்றத்திலும் சமாளிக்கும் திறன், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நிதி என்னும் உலகின் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி நிற்கும் அசுரத் தனியார் ஒட்டுண்ணி முதலாளிகளின் முன்பு, வெறும் லத்தியை வைத்துக்கொண்டு மிரட்டும் போலீஸ் கான்ஸ்டபிள்போல அரசின் நிர்வாக அமைப்பு பரிதாபமாக நிற்க வேண்டியிருக்கும். அவருக்கு ஊதியம் கொடுக்க மக்கள் மீது வரிகளை விதிக்கும் அதிகாரம் அரசிடம் இருக்கலாம். ஆனால், அந்த அரசுக்கு, அதைத் தாண்டிய செல்வ பலம், சொத்துகள் இல்லாமல் இல்லாமல் இருப்பது, அரசை, தனியார் துறையின் முன்பு மிகப் பலவீனமான ஒன்றாக மாற்றிவிடும். 

இந்தச் சமநிலையின்மையை, தனியார் ஒட்டுண்ணி முதலாளிகள், தங்கள் செல்வ நலன்களுக்குச் சாதகமாகத்தான் மாற்றிக்கொள்வார்கள். அது இயல்பானது. ஆனால், அந்தச் சமநிலையின்மை, சாதாரண மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும். ஒவ்வொரு சாதாரண மனிதரின் நலனும் முக்கியம் என்னும் கருத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, ‘குடியரசு’  என்னும் அரசியல் சமூக நோக்கம் சிதையும்.

எனவே, மக்களும், அரசுக் கொள்கை வடிவமைப்பாளர்களும், நேர்மையான அரசியலை விரும்புபவர்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது. தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் நிகழ்ந்த இந்த முறைகேடு, இந்தியா செல்லும் திசையில் உள்ள ஆபத்துகளை எச்சரிக்கும் மணியோசை!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

13

1

1




பின்னூட்டம் (14)

Login / Create an account to add a comment / reply.

Vivekanandan G   2 years ago

Why don't we have a system of grades (viz., 1 to 20 cadres) and fix the pay structure. All companies in India (Govt and PVT) has to appoint in that cadre only. So that uniformity can be established.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Natesh G   2 years ago

What has caste and class got to do with a scam?? Painting a sect with a taint brush is nothing short of Nazism. All these liberals raise a hue and cry when a religion is accused of a particular slant but do not think twice to accuse a particular sect or class enmasse. All scams happen only with the blessings of the political establishment. Nothing is written here about the remote puppeter from Delhi whose role is detailed in two explosive books released recently but then who wants to ferret the truth when the intention of who the target is already fixed.Take the gun and sharphoot from the hip.

Reply 4 3

SN   2 years ago

The people involved are all belong to "Upper castes", Isn't it? First of all, these posts filled with dubious casteist motives.. Thats the main point the author tried to explain, if you cant understand then it is your problem but truth prevails..

Reply 17 2

Ganeshram Palanisamy   2 years ago

Less than 10% upper caste peoples got 95%+ top posts. So you can't avoid these type of attacks even if they are wrong.

Reply 7 0

M. Balasubramaniam   2 years ago

What NSE has done is a phenomenal work. The contributions of Ravi Narayan and Chitra are commendable too. They turned rogues when there were no checks and balances which is a normal human tendency. The problem is strategic and not operational. The organisation architecture and improper controls which allowed intermediaries, employees and politicians to capture an institution which was primarily established to make investment into stock markets very easy, people friendly and equitable. This hegemony over NSE and manipulation of surveillance organisations like SEBI etc are against the basic structure of our constitution which says that the sovereignty of an ordinary citizen, non-negotiable . This is the issue to be resolved. Unfortunately, the media is running behind salivating stories of a Yogi and pleasure trips to seychelles.

Reply 0 7

Sumuka   2 years ago

Chitra has committed financial crimes illegally and ensued serious loss to India's economy. Media didn't yet expose her lewd episodes in detail. She is ashamed of her dishonesty and aborted the systems too :-)

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Senthilkumar   2 years ago

தேசிய பங்குச்சந்தை , ஒரு தனியார் நிறுவனம் என்பது எனக்கு புதிய தகவல். முதலாளித்துவம், தனக்கான சவக்குழியை தானே தேடிக் கொள்ளும் என்பது மார்க்ஸின் கூற்று. இதேபோல் பல்வேறு முக்கியமான அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவு என்பது இவ்வாறு தான் முடியும் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு , இந்த ஊழல்.           எல்லா முக்கிய நிறுவனங்களையும் தனியார்மயம் ஆக்கிவிட்டு அரசு நடுவர் (arbitrator) ஆக மட்டும் செயல்பட முயன்றால் இவ்வாறுதான் நிகழும் என்பதற்கும் இதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் என்பதை விலாவாரியாக இக்கட்டுரை விவரிக்கிறது.

Reply 12 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

மிக அருமையான கட்டுரை... நான் nse யில் trade செய்து அடிக்கடி நஷ்டம் அடைந்து வெளி யேறி விட்டேன்.. Nse என்பது தனியார் நிறுவனம் என்று இன்று தான் அறிந்தேன்.... Insider trading ல் எவ்வளவு பேர் நட்டம் அடைந்தனர் எண்பது இறைவனுக்கே வெளிச்சம்.... Nse இனி அரசு உடைமை ஆக்க படுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி... இந்திய பங்கு சந்தை அதன் நம்பகத்தன்மை இழந்த நிலையில் அதிக tax காரணத்தின் ஆல் FII தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர்.

Reply 7 0

Ganeshram Palanisamy   2 years ago

Trade செய்வதற்கு அறிவு, திறமை மற்றும் அதிர்ஷ்டம் தான் தேவை. அரசு நிறுவனமாக இருந்தாலும் ஒருவரின் நட்டம்தான் இன்னொருவரின் இலாபம். உங்களுக்கு்பிடித்த blue ship நிறுவனங்களின் பத்து வருட பங்கு வருமானத்தை கண்க்கிட்டு பாருங்கள். உண்மை புரியும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   2 years ago

எனவே இதில் பிரத்யோகமாக NSE நடந்திருக்கும் இந்த நீண்டகால முறைகேடு விதிமீறல்களுக்கு இதை தாண்டிய ஒரு பெரும் "கை"  இருக்கலாம்.  அதேபோல் சித்ரா-சாமிக்கு அனுப்பிய தகவல்கள் மட்டும்தான் வெளிவந்திருக்கிறது. அந்த சாமியாருக்கு யார் யாருடன் கனெக்ஷன் இருந்தது, அவர் யார் யாருக்கு அந்த தகவல்களை கொடுத்துக்கொண்டிருந்தாr  என்று தெரியா வந்தால்தான் இந்த பின் இயங்கிய ஒரு பெரிய வலைப்பின்னல் நமக்கு தெரியவரும். NSE யின் இந்த ஒட்டுமொத்த விதிமீறல்கள் மற்றும் அதனால் பயனடைந்த, அது கண்காணிப்புக்குள் வராமல் இவ்வளவுகாலம் காத்த அந்த கைகள் இந்தியா போன்ற ஒருநாட்டில் மக்களாகிய நமக்கு தெரியவராமலே போகலாம். செபி இன்றும் சாமியார் கனெக்ஷனுக்கு மேலே தனது விசாரணையை விரிவு படுத்தாமல் போவதிலேயே அதுதான் தெரிகிறது. ஆனந்த் எவ்வளவு செய்திகளை விசுவாசமாக அந்த சாமியாருக்கு தெரிவித்தான் என்பதும் இன்னும் தெரியவில்லை. Insider trading என்று சொல்லப்படும்  ஒரு தனியார் நிறுவன கிளாசிபைட் தகவல்களால் நடத்தப்படும் டிரேடிங்குக்கே மேற்குநாடுகளில் பெரும் தண்டனைகள் .... வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும்.  ஆனால் பங்கு சந்தை நிறுவன தலைமை அதிகாரியே  இதுபோல் தகவல்களை  வெளியே விடடதற்கு நாம் அவரை பதவியை விட்டு போக சொல்லி அடுத்த வேலையை பார்க்க போகிறோம்..... (ஒரு கமெபெனியில் இருக்கும் ஒருவன் செய்யும் இன்சைட்ர் டிரேடிங்க்கே கோடிகளில் நடக்கும் எனும்போது NSE இன்சைட்ர் டிரேடிங் என்பது நம் கணக்கில் காnaமுடியா அளவு இருக்கும்)  

Reply 14 0

அ.பி   2 years ago

மிக அருமை

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   2 years ago

//தனியார் நிறுவனம் என்பதால், ஊதியங்கள் அரசு நிறுவனங்களைவிடப் பல மடங்கு அதிகம். ஆனால், இதைக் கண்காணித்து நிர்வாகம் செய்ய வேண்டிய இந்தியப் பங்குச் சந்தை வாரியமும் நிதி அமைச்சகமும் அரசு நிறுவனங்கள். அங்கே ஊதியம் மிகக் குறைவு.// இது இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கும்-அதன் முறைகேடுகளை கண்காணிக்கும் அரசு ஊழியருக்கு பொருந்தும். எனவே இதை மீறித்தான் விதிமீறல்களை கண்காணிக்கும் அரசு அமைப்புக்குள் செயல்படுகிறது. /பல ட்ரில்லியன் டாலர் பலம் கொண்ட தனியார் நிறுவனங்களை, சில ஆயிரங்களை ஊதியமாகப் பெறும் அரசு நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து அடக்குவார்கள் என்னும் நிலை சமநிலையற்றது. / எனினும் அந்த சமநிலை தாண்டி மற்ற நிறுவனங்கள் கண்காணிப்புக்குள் கொண்டுவரும், மீறுபவை தண்டிக்கப்படும் சூழ்நிலையை, சிஸ்ட்டத்தைத்தான் அரசு கொண்டுவர வேண்டுமே தவிர, ஒவ்வொரு பெரும் கார்போரேட்டுகளின்  பங்குகளை இந்திய அரசு வாங்கிதான்  அதில் தனது கண்காணிப்பை செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது.NSE க்கும் அதுதான். 

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   2 years ago

நிறைய தகவல்களோடு ஒரு முழுமையான பார்வை கொடுக்கும் கட்டுரை. நன்றி. NSE செபியின்  கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும் ஒன்று எனிலும் இந்த கட்டுரை துணைத்தலைவர் பணி இடம் உருவாக்கத்தில் இருந்து  ரவி நாராயணன் , சித்ரா ராமகிருஷ்ணா என்று பலர் நியமிக்கப்பட்டது முதற்கொண்டு  விதிமீறல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு காலங்கள் இப்படியான தொடர்ச்சியான விதிமீறல்கள் எப்படி நடந்து கொண்டே இருந்தது? அதற்க்கு ஒரு காரணமாக NSE  தனியார் நிறுவனமாக  உருவாக்கப்படத்தை  கட்டுரையாளர் சுட்டி காட்டுகிறார் என்று புரிந்து கொள்கிறேன். இங்கு எனது கேள்வி, இந்தியாவில் ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்கள் இயங்கிக்  கொண்டுதானே இருக்கின்றன? அவை தனியார் நிறுவனங்களாக இருப்பதாலேயே  எல்லாவற்றிலும் இதே போன்ற விதி மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்ல முடியுமா? அப்படி எனில் அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள்  கொண்டுவரும் அரசின் வேலைதான் என்ன?  மற்ற தனியார் நிறுவனங்களில் இது போன்ற நீண்டநாளைய விதி மீறல்கள் செய்ய முடியாத செக்&பேலன்ஸ் இருக்கிறது எனில், அப்ப NSEயில் அது எப்படி இல்லாமல் போனது? இதை எப்படி செபி இவ்வளவு காலம்  தவறவிட்ட்து? NSE தனியார் நிறுவனமாக இருப்பது மட்டுமே இந்த முறைகேட்டுக்கான காரணம் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

Reply 3 0

Sumuka   2 years ago

Absolute power corrupts anyone, anywhere, anytime!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாரத் ஜோடோ நியாய யாத்திரைமொத்த உற்பத்தி மதிப்புமசாலாநிர்வாகிகள்ஹரித்ராநதிஅகில இந்திய ஒதுக்கீடுமயக்கம்அடித்துச் சொல்கிறேன்நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்தமிழ்ச் சூழல்கப்பற்படைராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா? யாருடைய ஆணை?தாய்மொழி மதிப்பெண்பாண்டியன்பல்சோனம் வாங்சுக் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்?ஷங்கர்ராமசுப்ரமணியன்அருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிகாந்தி - அம்பேத்கர்குடும்பத் தலைவிகள்பச்சோந்திமொழிப்பாடம்கீர்த்தனைபுள்ளிவிவரம்நாராயண மூர்த்திசித்தராமையாவசுந்தரா ராஜ சிந்தியாகூடுதுறைஅவை பாதுகாப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!