அரசியல் 8 நிமிட வாசிப்பு

சீக்கிரமே காத்திருக்கிறது தண்டனை

ப.சிதம்பரம்
24 Jan 2022, 5:00 am
0

வெவ்வேறு குரல்களில் ராக ஆலாபனைகளைக் கேட்பது சுகமாகத்தான் இருக்கிறது!

முன்னொரு காலத்தில் மோடி அரசுக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அர்விந்த் சுப்ரமணியன் இப்போது பிரௌன் பல்கலைக்கழகத்தில் வாட்சன் கல்விக் கழகத்தின் மூத்தப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகச் சிறந்த கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள அவர் அரசியல் – பொருளாதாரம் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். ‘ஃபாரீன் அஃபெர்ஸ்’ இதழின் டிசம்பர் வெளியீட்டில், ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை நம் கவனத்தை ஈர்க்கிறது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள தவறுகளை இதில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பலதரப்பட்ட கவலைகள்

டாக்டர் சுப்பிரமணியனின் மூன்று தலையாய கவலைகள் - அதிகரிக்கும் மானியங்கள், உள்நாட்டு தொழில்-வணிகங்களைக் காக்க நினைக்கும் அரசின் போக்கு, பிராந்திய அடிப்படையில் பிற நாடுகளுடன் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள மறுக்கும் பிடிவாதம் ஆகியவை ஆகும். அவருடைய பிற கவலைகள் - சந்தேகத்துக்குரிய அரசின் தரவுகள், கூட்டாட்சிக்கு விரோதமான அணுகுமுறை, பெரும்பான்மையினவாதம், சுதந்திரமான நிறுவனங்களின் அதிகாரங்களைக் குலைக்கும் போக்கு ஆகியவை.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆலோசகராகப் பணிபுரிந்துவிட்டு - அரசு அவருடைய ஆலோசனைகளால் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையிலும் - 2018-ல் ஏன் சுப்பிரமணியன் விலகினார் என்பதற்கான காரணங்களை அவரையும் அறியாமலேயே இக்கட்டுரையில் வெளிப்படுத்திவிட்டார். சுப்பிரமணியன் மகிழ்ச்சியற்றவராக இருந்திருக்கிறார், நாட்டின் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்றும் ஊகித்திருக்கிறார்.

நாட்டின் பொருளாதார நிலைமை உண்மையிலேயே மிகவும் மோசமாகிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சராசரி வரிவிகிதம் 12% ஆக இருந்தது இப்போது 18% ஆக உயர்ந்திருக்கிறது. உள்நாட்டுத் தொழில் - வர்த்தகங்களைப் பாதுகாப்பதற்கான காப்பு வரிகள், சரியான ஆலோசனையின்றி விதிக்கப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன, பொருள் குவிப்பைத் தடுப்பதற்கான இறக்குமதித் தீர்வைகளும், வரியல்லாத பிற அளவு – வகைமைக் கட்டுப்பாடுகளும் அவ்விதமே முன்யோசனைகளின்றி கையாளப்பட்டன.

நாட்டுக்கு மிகவும் பயன்பட்டிருக்கக் கூடிய பலதரப்பு வர்த்தக உடன்பாடுகளிலிருந்தும் கூட்டமைப்புகளிலிருந்தும் இந்தியா வெளியேறியது. வெவ்வேறு அரசியல்–ராணுவக் கூட்டுகளில் சேர பிரதமர் நரேந்திர மோடி ஆவலாக இருக்கும்போது, அவருடைய அரசு பல்வேறு வணிக-தொழில் வர்த்தக கூட்டுகளிலிருந்து (GSOMIA, COMCASA, QUAD, the Second QUAD, RELOS) விலகியது நகைமுரண்.

மோடி அரசுக்குப் பொருளாதார ஆலோசகராக முன்னொரு காலத்தில் செயல்பட்ட இன்னொருவரும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அதிருப்தியில் இருக்கிறார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவராகவே பணியாற்றினார். ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழில் எழுதியுள்ள சமீபத்திய கட்டுரையில் அரசின் புகழைப் பாடியிருந்தாலும் கட்டுரையின் ‘கொடுக்கில்’ (இறுதிப்பகுதியில்) விஷத்தை வைத்திருந்தார். “கட்டுப்பாடுகளற்ற வர்த்தக உடன்பாடுகளுக்குப் பொருளாதாரம் திறந்துவிடப்பட வேண்டும், அதிகமாக உள்ள வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும், 1956-ல் இயற்றப்பட்ட பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையச் சட்டத்தைக் கைவிட்டுவிட்டு நவீன சட்டமியற்ற வேண்டும், நேர்முக–மறைமுக வரிகளுக்கான அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்று அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார் பனகாரியா.

டாக்டர் அர்விந்த் சுப்ரமணியனும் டாக்டர் அர்விந்த் பனாகாரியாவும் மோடி அரசின் அங்கமாகவே சில ஆண்டுகளுக்கு முன் வரை  இருந்தவர்கள் என்பதுடன், இருவருமே சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பவர்கள், உலகப் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகப் பணிபுரிகிறவர்கள், தனியார் துறை தலைமை தாங்கும் பொருளாதார உற்பத்தி முறைக்கு முன்னுரிமை தருகிறவர்கள். அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத அவர்கள், அப்படிப்பட்ட குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கும் படுமோசமான விளைவுகளைப் பற்றி விவரிக்க தயக்கம் காட்டியுள்ளனர்.

மோசமான விளைவுகள்

அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகள் என்ன என்று வாசகர்களுக்குத் தெரியும்:

  • கோடிக்கணக்கான ஏழைகள் இருக்கும் நாட்டின் நபர்வாரி வருமானம் வெகுவாகக் கீழ் இறங்கிவிட்டது.
  • ஊட்டச்சத்துக் குறைவு, வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கேற்ற எடை இல்லாத வலிமையற்ற, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் பெருகிவிட்டது.
  • உலக அளவிலான பசிக்கொடுமைப் பட்டியலில் 116 நாடுகளுக்கிடையே, 94-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது மேலும் பின்தங்கி 104-வது இடத்துக்குச் சென்றுவிட்டது.
  • பணமதிப்பு நீக்கம், சிறு-குறு-நடுத்தரத் தொழில்பிரிவுகளைக் காக்க உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது, பெருந்தொற்றுக்காலத்தில் வேலையும் வருமானமும் இழந்த கோடிக்கணக்கான ஏழைகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதியுதவி அளிக்க மறுத்தது, பெருந்தொற்றுநோயை முறையாகக் கையாளாமல் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டது ஆகியவற்றால் மேலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுவிட்டனர்.
  • வேலை கிடைக்காமல் திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு (சிஎம்ஐஇ தரவுகளின்படி - நகர்ப்புறங்களில் 8.4%, கிராமப்புறங்களில் 6.4%).
  • விலைவாசி (பணவீக்கம்) உயர்வு, மொத்தவிலை நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையில் 5.6%.
  • அதிகபட்ச மறைமுக வரிவிகிதம், நேர்முக வரிகள், மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி.
  • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விற்பனையில் கொள்ளை லாபம் அடைய வேண்டும் என்ற அரசின் பேரவா.
  • மீண்டும் - லைசென்ஸ், பர்மிட் நிர்வாக முறை.
  • எல்லாத் துறைகளிலும் ஏகபோக நிறுவனங்களின் தலையெடுப்பு.
  • சலுகைசார் முதலாளித்துவத்துக்கு ஊக்குவிப்பு.
  • தொழில், பொறியியல், மருத்துவம், அறிவியல் துறைகளில் மிகச் சிறந்தவர்கள் உள்நாட்டில் முன்னேற சரியான வாய்ப்பு இல்லை என்று வெளிநாடுகளுக்குக் குடிபெயர்தல் அதிகரிப்பு.
  • ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகளுக்கான விலையை மக்கள் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டது. ஆனால் மோடி அரசு அத்தகைய செயல்களுக்காக அரசியலில் தர வேண்டிய விலையை (தோல்வியை), இன்னமும் தரும் நிலை ஏற்படவில்லை.
  • அதிக சுதந்திரமும் உரிமைகளும் உள்ள பிற ஜனநாயக நாடுகளில், பெருந்தொற்றுக்குப் பிறகு அரசே அறிவித்த பெரும் முடக்கம் காரணமாக உணவு, குடிநீர், மருந்து, கைச் செலவுக்குப் பணம், போக்குவரத்து வசதி என்று எதுவுமே இல்லாமல் கோடிக்கணக்கில் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தால் அடுத்தடுத்து தேர்தல்களில் அரசைத் தோற்கடித்திருப்பார்கள்.
  • பெருந்தொற்று ஏற்பட்டவுடன் மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சேர்க்க படுக்கைகள் இல்லை, உயிரிழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டவர்களைக் காப்பாற்ற போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை, மருந்துகள், ஆம்புலன்ஸ்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட போதிய ஆள்களும் அவகாசமும் இல்லாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்றால்தான் இறந்தார்கள் என்பதை முறையாகத் தெரிவிக்கும் சான்றிதழ்களும் இல்லை, இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்புகளும்கூட நடக்கவில்லை. கங்கை நதியில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தூக்கி வீசப்பட்டன அல்லது கரைகளிலேயே கிடத்தப்பட்டன.
  • நோய்ப் பரவல் அச்சத்தைக் காரணம் காட்டி அக்கறையின்றி அரசு செயல்பட்டதால், இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளிக்கூடங்களால் கோடிக்கணக்கான குழந்தைகள் - மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பையே இழந்தார்கள்.
  • படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேறு நாடுகளில் இருந்திருந்தால், அரசு ஆட்சியில் நீடித்திருக்கவே முடியாது. இந்த அரசாங்கமோ எதுவுமே நடக்காததைப் போலத் தொடர்கிறது, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெறாதபடிக்கு அதை முடக்குகிறது, வளர்ச்சிக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடிக்கிறது, அரசு செலவில் – ஆதரவில் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் பெருவிழாவாக நடத்தி, மக்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது!

பெருகும் அநீதி

மக்களுக்கிடையே அசமத்துவம், அநீதி ஆகியவற்றுக்கிடையே - பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. எல்.சான்சல், டி. பிக்கெட்டி தயாரித்த ‘உலக அசமத்துவ அறிக்கை 2022’ இதைத் தெரிவிக்கிறது.

இந்தியாவின் வயதுவந்தோரில் மேல்நிலையில் இருக்கும் 10% பேர், தேசிய வருவாயில் 57%-ஐக் கைப்பற்றிவிடுகின்றனர். வயதுவந்தோரில் கீழிருந்து 50% ஆக உள்ளோருக்கு 13% வருமானம்தான் மொத்தமாகவே கிடைக்கிறது. சமூகத்தின் மேல்தட்டில் உள்ள 1% பேர், தேசிய வருமானத்தில் 22%-ஐப் பெறுகின்றனர்.

சென்ற ஞாயிறன்று வெளியான ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கையும் இதை அப்படியே வழிமொழிகிறது. மேல்தட்டில் உள்ள 10% பேர், நாட்டின் செல்வத்தில் 77%-க்கு அதிபதிகளாக உள்ளனர் என்கிறது. 2021-ல் நாட்டின் குடும்பங்களில் 84% வருமான இழப்புக்கு ஆளான நிலையில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 102-லிருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. 2020 மார்ச்சில் பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 2021 நவம்பரில் 53.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதேசமயம் 4,60,00,0000-க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளப்பட்டுவிட்டனர்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை (2022-23 பட்ஜெட்) இன்னும் சில நாள்களில் வெளியாகவிருக்கிறது. நம்முடைய புகழுக்குக் களங்கம் வராத வகையில் நிரந்தரமான ‘கலாய்’ பூசப்பட்டிருக்கிறது என்று கருதி தன்னுடைய வழிமுறையை அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், அது பெரிய சோகத்தில்தான் முடியும். மக்களுடைய நலனைப் பற்றி அக்கறையே கொள்ளாத அரசு, அரசியல்ரீதியாக அதற்கான விலையைத் தந்தாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால்தான் தவறுகளைத் திருத்திக்கொண்டு செயல்படும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

1





உலக நண்பன்இந்தியா என்ன செய்ய வேண்டும்?விசாரணைஇந்தியப் பிரதமர்கள்ஆசியாசோழக் கதையாடல்இஸ்லாம்தெலுங்கு தேசம்மேற்கு வங்கத்தில் 50 நாள் வேலைமனுராஜ் சண்முகசுந்தரம் கட்டுரைசரண் பாதுகா யோஜனாமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்அரசியல் கட்சிமாநில கீதம் தேசியப் பூங்காக்களும்சட்டமன்றத் தேர்தல்பீமா கோரேகான் வழக்குதன்னாட்சி கல்லூரிகள்காவல் துறைஉ.வே.சாமிநாதையர்பாகிஸ்தான் அரசமைப்பை அறிவீர்களா?புகலிடமாகிய நுழைவுத் தேர்வுநிகில் மேனன் கட்டுரைசேமிப்புஅராபிகாபிரபாகரன் மரணம்பாதுகாப்புபெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிபுன்மை புத்தி மனுஷ்யபுத்திரன்வழக்கு நிலுவை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!