புத்தனிடமிருந்து திரும்பிக்கொள்கிறேன்
எவ்வளவு குளுமை
நிலவொளி.
᱘
இந்தக் குளுமை:
ஊசியிலை மரத்தில் மழைநேரத்தில்
ஏறிக்கொண்டிருக்கும் ஒரு நண்டு.
᱘
தொங்கு பாலத்துக்கு மேலே,
குழம்பிப்போய்,
ஜில்லென்ற மழை தாரைகள்.
᱘
மாபெரும் புத்தர் சிலை
அதன் இரக்கமற்ற
குளிர்!
᱘
குறுகிய இரவு
துறைமுகத்தில்
இன்னமும் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகள்.
᱘
கோடைத் தூறல்!
எத்தனை வேலைக்காரர்கள்
கதவைச் சாத்தியபடி!
᱘
கோடை காலத்தில் இந்த வெட்டவெளியில்
குட்டையான மரமொன்றில்
கட்டப்பட்டிருக்கிறது குதிரை.
- ஷிகி
᱘
எவ்வளவு குளிர்ச்சி!
மேகங்களிலும் இருக்கின்றன
உயர்ந்த சிகரங்களும் தாழ்ந்த சிகரங்களும்
᱘
என்னிடம் எதுவுமே இல்லை,
ஆனால் இந்த அமைதி!
இந்தக் குளிர்!
᱘
மாலை நிலவில்
கல்லறைக்குச் செல்கிறார்கள்
குளிரை அனுபவித்தபடி.
- இஸ்ஸா
᱘
நள்ளிரவில் நிலவு
குளிர்ச்சியால் ஆன
பந்தோ?
- தெய்ஷிட்சு
᱘
குளிர்ந்த காற்று
சொர்க்கத்தின் காலி பெட்டகத்தை நிரப்புகிறது
ஊசியிலை மரத்தின் குரலால்
- ஓனிட்சுரா
᱘
குளிர்
வரையப்பட்டிருக்கிறது ஒரு சித்திரமாக;
சாகாவின் மூங்கில்கள்.
᱘
மே மாத மழை
எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு
வேகமாகச் செல்லும் மொகமி நதி.
᱘
மறைவற்று இருப்பது ஒன்றே ஒன்றுதான்
இந்த மேமாத மழையில்
சேடாவின் நீண்ட பாலம்.
᱘
அந்தக் கொக்கின் கால்கள்
சிறியதாகி விட்டன
இந்தக் கோடை மழையில்.
- பாஷோ
᱘
கோயில் மணியின் குரல்
மணியை விட்டு நீங்கும்போது,
என்ன குளிர்!
᱘
மே மாத மழை
பெயரற்ற ஒரு ஓடைகூட
அச்சுறுத்தும் பொருளாகிறது.
᱘
வயல்களுக்கு நீரிறைத்துக்கொண்டிருப்பவர்களின்
குரல்கள்:
கோடை நிலவு.
- பூஸான்
᱘
கோடை நிலவு
நதியின் மறுகரையில்
யார் அது?
- சோரா
᱘
பட்டம் வாங்கியும்
பையனுக்குத் திருப்தியில்லை
விடாமல் பெய்யும் மழையில்
- ஷோஹா
᱘
கோடைத் தூறல்
தனியாக உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண்
வெளியில் பார்த்துக்கொண்டு.
᱘
கோடை மின்னல்
நேற்று கிழக்கில்
இன்று மேற்கில்.
- கிகாகு
᱘
நான் வீடு திரும்பினேன்
ஓங்கியுயர்ந்த மரமொன்றைப் பார்த்துவிட்டு:
கோடை காலத்தில் மலைகள்.
- ராங்கோ
᱘
மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்
ஆங்கில மூலம்: Haiku, in Four Volumes, R.H.Blyth
நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.
1
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Sudalaimani P 3 years ago
அருஞ்சொல்லின் இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.