கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 30 நிமிட வாசிப்பு

பாஜக வெற்றிக்கு என்ன காரணம்?

அரவிந்தன் கண்ணையன்
15 Sep 2022, 5:00 am
5

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ‘எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்?’  என்ற தலைப்பில், ‘அருஞ்சொல்’ இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். “சுதந்திரப் போராட்டக் காலத்தில் எல்லாம் அற உணர்வு கொண்டதாக இருந்த நடுத்தர வர்க்கம் இன்று சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை முதல் பலவற்றையும் கண்டும் காணாமல் இருக்கிறதே, சரியா?” என்பதே அவர் எழுப்பியிருந்த கேள்வி. அக்கட்டுரைக்கு எதிர்வினையாக ‘காலம் மாறிப் போச்சு காங்கிரஸாரே!’ என்ற தலைப்பில் எதிர்வினையாற்றி இருந்தார் எழுத்தாளர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி. “மக்களைக் குறை கூறுவதில் பயன் இல்லை; இன்றைய காங்கிரஸின் செயலின்மையே பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். சமகால இந்தியாவின் அரசியல் போக்கை உற்றுநோக்கினால், இந்த இரண்டு கட்டுரைகளிலும் உண்மைகள் உண்டு. ஆயினும், இரு கட்டுரையாளர்களும் தொடாத ஒரு கோணமும் உண்டு என்று எண்ணுகிறேன். அது வாக்காளர்களின் மதவாதம்!

எந்த அரசியலும் வாக்காளர்களின் பெருவாரியான ஏற்பில்லாமல் வெற்றி பெற முடியாது. ஆனால், வாக்காளர்களுடைய தேர்வின் நோக்கத்தைக்  கேள்விக்குள்ளாக்கவே கூடாது என்று ஒரு பொது மௌனம் இந்தியச் சூழலில் நிலவுகிறது. அதை உடைத்துப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2016 அமெரிக்க தேர்தல் அளித்தப் பாடம்

2016 அமெரிக்கத் தேர்தல் சூடு உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் ஹிலாரி கிளின்டன் பேசுகையில், டிரம்பின் வாக்காளர்களில் சிலர் இனவாதம், பெண் வெறுப்பால் உந்தப்பட்டவர்கள் என்று குறிக்கும் வண்ணம் இழிவானவர்கள் (basket of deplorable) என்று சீறினார். ஹிலாரிக்கு எதிராக கண்டனக் கனைகள் பறந்து வந்தன. வாக்காளர்களின் நோக்கம் எதுவாயினும் அவர்களை பழிச் சொல்லலாகாது அவர்களைத் தன் தரப்புக்கு ஈர்ப்பதே ஓர் அரசியலரின் கடமை என்று ஹிலாரியைக்  கண்டித்தார்கள். 

இந்தக் களேபரத்தில் கறுப்பினத்தவரை, பெண்களை, ஹிஸ்பானிக்குகளை எல்லாம் வெள்ளை பேரினவாதிகளின் டொனால்ட் டிரம்ப் மனம் குளிர ஆபாசமாகப் பேசியதெல்லாம் மறக்கப்பட்டது. தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மூன்று மாநிலங்களில்  ஹிலாரி தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் ஜனாதிபதியானார். 

தேர்தலுக்குப் பின் புள்ளிவிவரங்கள் கருத்துக் கணிப்புகள் ஹிலாரியின் அந்தப் பேச்சு உண்மை என்று நிரூபித்தன. பல வெள்ளைக்கார வாக்காளர்கள் இனவாதத்தாலும் பெண் வெறுப்பாலும் தூண்டப்பட்டே வாக்களித்தார்கள் என்பது தெளிவானது. டிரம்பைவிட ஹிலாரி பொது வாக்கெடுப்பில் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் வாங்கியிருந்தார்,. டிரம்பின் வெற்றியில் இனவாதத்தின் பங்களிப்புப் பற்றி தொடர்ச்சியாக புத்தகங்கள் வெளியாயின. 

இந்திய வாக்காளர்கள் சாதியத்தால் உந்தப்பட்டு வாக்களிப்பவர்கள் என்பதை ஆங்கிலத்தில் அழகான பகடியாகச் சொல்வது உண்டு (They don’t cast their vote they vote their caste). அந்த வாக்காளர்கள் இப்போது மதரீதியாகவும் ஆழமாக யோசித்து வாக்களிக்கிறார்கள் என்பதையே பாஜகவின் தொடர் வெற்றிகள் நமக்கு உணர்த்துகின்றன. பாஜகவின் வெற்றியை அலசும் வகையில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் புத்தகங்கள் அனைத்தும் இதைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. ஆனால், தமிழ்ச் சூழலில் அந்த ஆய்வுகள் பரவலாகப் பேசப்படுவதில்லை. தமிழ்க் கட்டுரைகள் பெரும்பாலும் பாஜக உயர்சாதியினர் கட்சி, சனாதன இந்து மதக் கட்சி என்ற எளிமையான கட்டமைப்புகளையே சொல்கின்றன. சிதம்பரமும் பாலசுப்ரமணியமும்கூட இந்த வட்டத்துக்குள்ளேயே தங்கள் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கின்றனர்.

காங்கிரஸ் செயலற்று கிடக்கிறதா?

காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவிழந்து கிட்டத்தட்ட வெறுங்கூடு என்கிற அளவுக்குச் சுருங்கியது இந்திய அரசியலுக்கு அரோக்கியமானது அல்ல. காங்கிரஸின் உட்கட்சிப் பூசல்கள் உலகப் பிரசித்தம். சோனியாவின் உடல் நலக்குறைவு, ராகுலின் இரட்டை நிலை, அடுத்தகட்ட தேசியத் தலைமை உருவெடுக்காமை என்று காங்கிரஸ் வலுவிழந்து வீழ்வததற்கு காங்கிரஸ் தரப்பிலான காரணங்களும் உண்டு. அதேசமயம், காங்கிரஸும் மற்ற கட்சிகளும் பாஜக ரூபத்தில் இன்று சந்திப்பது இந்திய ஜனநாயகமும் வரலாறும் காணாத ஒரு ராட்சத தேர்தல் இயந்திரத்தை என்பதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். 

சுருக்கமாக பாலசுப்ரமணியத்தின் சில விமர்சனங்களைக் காண்போம்.

மக்களிடமிருந்து காங்கிரஸ் விலகிவிட்டது என்றும், சமூக நீதி முன்னெடுப்புகளின் வழியேதான் இனி ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை காங்கிரஸ் நெருங்கி அரசியலில் வெற்றி பெற முடியும் என்றும் கூறுகிறார் பாலசுப்ரமணியம்.

காங்கிரஸ் முக்கியமான பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். உத்தர பிரதேசத்தில் ஹத்திராஸில் நடந்த படுகொலையைக் கண்டித்து களத்துக்கு ராகுலும் பிரியங்காவும் விரைந்தனர். போலீஸார் பிரியங்காவின் மேலாடையைப் பிடித்து இழுத்து தள்ளிய புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது. இத்தனைக்கும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அமைப்புரீதியாக கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. ராகுலே அமேதியில் தோற்றார். 

ஜிஎஸ்டியே தவறு என்கிறார் பாலசுப்ரமணியம். அது வேறு விவாதம். பொருளாதார வல்லுநர்களின் துணையோடுதான் அது உருவானது. காங்கிரஸ்தான் வழிச் செய்தது. இன்று காங்கிரஸ் அதன் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாக்கப்படுவதால் இடஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது; விளைவாக ஒடுக்கப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்று பாலசுப்ரமணியம் சொல்வது கணக்கில் கொள்ள வேண்டும். அதற்காக நஷ்டத்தில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை மட்டுமே தனியார்மயமாக்க வேண்டும்; லாபகரமானதையெல்லாம் அரசே நடத்த வேண்டும் என்று அவர் சொல்வதைப் பொருளாதார வல்லுனர்கள் ஏற்க மாட்டார்கள். தொலைப்பேசி, புகைப்படச் சுருள், விளக்குக் கம்பம், கார், யூரியா என்று இந்திய அரசு தயாரித்து விற்ற பொருட்கள் அநேகம். பலவும் நஷ்டத்திலோ தரமற்ற பொருள் தயாரிப்பிலோ தத்தளித்தவை.

சமூக நீதியை காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டும் என்கிறார் பாலசுப்ரமணியம். உயர் ஜாதியினரின் ஒட்டுகள் மொத்தமாக காங்கிரஸிடமிருந்து விலகி பாஜகவை நெருங்க முக்கியக் காரணம் என்றே பாஜக வளர்ச்சியைப் பற்றிப் பேசும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக, சமூக நீதி அரசியல் காங்கிரஸுக்குப் பாதகமாகவே இதுவரை அமைந்திருக்கிறது. இன்னொரு விஷயம், சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு என்று பலராலும் சுருக்கப்படுகிறது. சமூக நீதியென்பதி இட ஒதுக்கீட்டையும் தாண்டி பல முன்னெடுப்புகளை உள்ளடக்கியது, அவற்றுள் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றி இருக்கிறது. 

ஒரு கட்சி அல்லது சித்தாந்தம் வெற்றி அடையும்போது, குறிப்பாக ராட்சத வெற்றி அடையும்போது, எதிர் தரப்பின் போதாமைகளைத் தாண்டி வெற்றிபெற்றவர்கள் எந்த வகையில் வாக்காளர்களை ஈர்த்தனர் என்றும் ஆராய வேண்டும். வாஜ்பாயிக்கும், அத்வானிக்கும் கிடைக்காத பெரும்பான்மை மோடிக்கு ஏன் இரண்டு முறை, அதுவும் இரண்டாம் முறை இன்னும் அதிகமாக, கிடைத்தது என்று கேட்டுக்கொண்டால் இதற்கான விடையை நோக்கி நாம் நெருக்கமாகச் செல்ல முடியும்.

மாறிய நடுத்தர வர்க்கம்

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஆய்வாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலாட் ‘பிஸினஸ் ஸ்டாண்டர்டு’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் நடுத்தர வர்க்கத்தின் மீது சொல்லும் விமர்சனத்தை அப்போதே சொன்னார். “தாராளமயமாக்கலினால் புதிய வகை நடுத்தர வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவர்கள் முன்பைவிட அரசியல் ஈடுபாடுள்ளவர்களாகவும் ஊழலை எதிர்ப்பவர்களாகவும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்…. வளர்ச்சி எப்படியாவது நடந்தால் சரி என்று நினைக்கிறார்கள். சுற்றுச்சூழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு இவர்களுக்குப் பொருட்டல்ல… இவர்கள் பாஜகவை ஆதரிக்க இன்னொரு காரணம் தங்கள் பொருள்மயமான வாழ்க்கை நோக்கை அதீத மத நம்பிக்கை கொண்டு ஈடுசெய்ய நினைப்பதும் அதற்கு சம்ஸ்கிருதமயமாக்கல்லைச் சுவீகரித்து இந்து அடையாளத்தை வரித்துக்கொள்வதுமே ஆகும். மேலும், இந்த நடுத்தர வர்க்கமானது, ‘இடஒதுக்கீடு எதிர் தகுதி’ என்று எண்ணுகிறது. இந்த இரண்டிலும் இவர்கள் தேர்வு பாஜகவாக இருக்கிறது!”

பாஜகவின் அரசியல் ஏறுமுகத்துடன் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் இறங்குமுகமாகிறதென அப்போதே ஜாஃப்ரலாட் கணித்தார். இன்று பாஜகவுக்கு இருக்கும் 350+ நாடாளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. 

சேகர் குப்தா தன்னுடைய ஒரு கட்டுரையில் இன்னொரு விஷயத்தைச் சுட்டுகிறார். “ஒருகாலத்தில் காங்கிரஸுக்கு இஸ்லாமியர்கள் நம்பகமான வாக்குவங்கியாக இருந்ததுபோல் இன்றைய நடுத்தர வர்க்கத்தினர் இப்போது மோடிக்கு வாக்கு வங்கியாக இருக்கிறார்கள்!”

காங்கிரஸ் என்றாலே சோஷலிஸ அரசு; பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுக்கிறார்கள் என்று ஒரு பிம்பத்தையும் பாஜகவினர் உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் இன்று பாஜக ஏழைகளுக்கு அளிக்கும் பல திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மீது நேரடி மற்றும் மறைமுக வரிகளால் சாத்தியப்படுத்தப்படுகிறது என்கிறார் சேகர் குப்தா. பணமதிப்புநீக்கம் போன்ற இமாலய குழப்பத்துக்கு அப்புறமும் இந்த வாக்கு வங்கி அசராததற்கு முக்கியக் காரணம் இஸ்லாமியர் மீதான வெறுப்பு.

லீலா பெர்னாண்டஸின் புத்தகம் (India’s New Middle Class: Democratic Politics in an Era of Economic Reform) நடுத்தர வர்க்கத்தைப் பற்றி சில வாதங்களையும் புரிதல்களையும் முன்வைக்கிறது. அதாவது, நடுத்தர வர்க்கமானது, ‘ஜனநாயகம் ஊழல்மயமானது’ என்ற பார்வையைக் கொண்டு அதற்கு பதிலாக சர்வாதிகாரமே இந்தியாவுக்கு சரியென்று நம்புகிறது. மேலும்,  ஜனநாயகம் என்பது வாக்காளர்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் பார்வையில் தாழ்ந்த ஜாதியினர், சிறுபான்மையினருக்கும் மட்டுமே செவி சாய்க்கும் என்றும் தங்களுக்கான பிரதிநிதித்துவம் அதில் இல்லையென்றும் நம்புகிறது. மேலும், புதிய நடுத்தர வர்க்கமானது, ‘அரசு இயந்திரம் என்பது நுகர்பொருள்; தாம் அதனைப் பிரயோகிக்கும் பிரஜை’ என்று தன்னை ஒரு நுகர்வுக் குடிநபர் (consumer-citizen) ஆக, உருவகித்துக்கொள்கிறது என்கிறார் பெர்னாண்டஸ். 

இதனால்தான் இன்று பாஜக புகழ் பாடும் பல நடுத்தர வர்க்கத்தினர் பாஸ்போர்ட் எளிதில் கிடைக்கிறது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். 

நவதாராளமயமான பொருளாதாரம், ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவற்றை வைத்து நடுத்தர வர்க்கத்தின் அரசியலைத் தட்டையாகவும் புரிந்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பெர்னாண்டஸ். நடுத்தர வர்க்கம் என்பதே ஒரு ஒற்றைப் படையான கூட்டமும் அல்ல. இவ்விடத்தில் அவர் 2004இல் பாஜக முன்னெடுத்த ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்தின் தோல்வியையும் சுட்டிக்காட்டுகிறார். இதனை இன்றைய பாஜக நன்கு உணர்ந்திருப்பதால்தான் நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி மற்றவர்களை உள்ளிழுக்க பல தந்திரோபாயங்களைச் செய்கிறது. 

பாஜக பற்றி இரண்டு முக்கியமான பிம்பங்கள் ஓரளவு நியாயத்தோடு கட்டமைக்கப்பட்டன. அதாவது, ஒன்று, அக்கட்சி உயர் ஜாதிகளுக்கானது, இரண்டு, அக்கட்சி ஏழைகளுக்கு எதிரானது. இதே அளவுக்கு இன்னொரு நிஜம் இரண்டையுமே மோடி மாற்றியிருக்கிறார் என்பது ஆகும். அந்த மாற்றங்களுக்காக நடுத்தர வர்க்கம், குறிப்பாக உயர் ஜாதியினர், பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அது ஏன் என்று காண்பதற்கு முன் இந்த பிம்பங்களை அவர் எப்படி மாற்றினார் என்று பார்ப்போம்.

பயனாளர்களுக்கு நேரடி அரசு

நளின் மேத்தா எழுதிய நூலை (The New BJP: Modi and the making of the world’s largest political party) இங்கே எடுத்துக்கொள்வோம். அநேக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்ட ஒரு புத்தகம் இது. காங்கிரஸ் உருவாக்கி விட்டுச் சென்ற பயனாளர்களுக்கான நேரடி பணப் பட்டுவாடா செய்யும் கட்டமைப்பை மோடி எப்படி விரிவுப்படுத்தி ஏழைகளின் வாக்கு வங்கியைக் கவர்ந்தார் என்று சொல்கிறார் மேத்தா. 2013 ஜனவரி 1ஆம் தேதி “உங்கள் காசு உங்கள் கைகளில்” கோஷத்தோடு காங்கிரஸின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆதார் திட்டத்தை முன்னிறுத்திப் பணப் பட்டுவாடா திட்டத்தை அறிவித்தார். 43 நகரங்களில் 20 அரசுத் திட்டங்களுக்கு பரிசோதனை முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்துக்கான மென்பொருள் முதலான கட்டமைப்பு அத்தனையும் காங்கிரஸ் உடையது. 

2014இல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸின் இத்திட்டத்தை மோடி சுவீகாரம் செய்ததோடு அதனை முடுக்கியும்விட்டார். கவனிக்கவும் இதில் இடைத் தரகர்களோ, அரசு இயந்திரமோ இடையீடு செய்யாமல் ஏழைகளுக்குப் பணம் செல்கிறது. 2013-14இல் இம்மாதிரி 10.8 கோடி பேருக்கு ரூ. 7,367 கோடி அளிக்கப்பட்டது. 2018-19-இல் 76.3 கோடி பேருக்கு ரூ.2,14,092 கோடிகள் அளிக்கப்பட்டது. இது 29 மடங்கு வளர்ச்சி. இம்மதிரி திட்டங்களை நேரடியாக மோடியின் பிம்பத்தோடு தொடர்புபடுத்தி வாக்குகளை பாஜக அறுவடை செய்தது. 

பாஜக உயர் ஜாதி கட்சியா?

பாஜகவை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், கட்சி என்று பிம்பம் நிலவுகிறது. அதில் உண்மையுண்டு. ஆனால், அது மட்டுமே உண்மை இல்லை. உலகின் 50 ஜனநாயகங்களை ஆராய்ந்து அரசியல் பிளவுகள் பற்றி பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கட்டி முதலானோர் எழுதிய புத்தகத்தில் இந்தியா பற்றிய அத்தியாயத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் மத, சாதிய வாக்காளர் விகிதத்தை அளிக்கிறார்கள்.

இதன்படி, 1967 தேர்தலில் ஓவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: தோராயமாக, இஸ்லாமியர் 48%, பட்டியல் இனத்தவர் 52%, பிற்படுத்தப்பட்டவர் 45%, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் 35%, பிராமணர்கள் 41%. 

அப்போது பாஜகவுக்கு ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் வாக்களித்தோர்: (அப்போதைய ஜன சங்கமும் கூட்டணிக் கட்சியினரும்) இஸ்லாமியர் 9%, பட்டியலினத்தவர் 12%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 35%, பிராமணர்கள் 40%.

2014 தேர்தலில் காட்சி மாறுகிறது. 

ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: இஸ்லாமியர் 47% (20 வருடங்களாக இது மாறவேயில்லை), பட்டியலினத்தவர் 38%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 28%, பிராமணர்கள் 18%.

ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் பாஜகவுக்கு வாக்களித்தோர்: இஸ்லாமியர் 10% (20 வருடங்களாக இது மாறவே இல்லை), பட்டியல் இனத்தவர் 30% (1967-இல் இருந்து இரு மடங்கு), பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 50%, பிராமணர்கள் 60%.

கிட்டத்தட்ட 50 ஆண்டு தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது மூன்று விஷயங்கள் தெளிவாகின்றன. 1. காங்கிரஸ் 1962-2009 காலம் வரை பரந்துபட்ட ஆதரவுடனேயே, இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் உட்பட, வாக்குகளைப் பெற்று இருக்கிறது. 2. பாஜகவால் 1967-2014 வரை இஸ்லாமியர் வாக்கினைப் பெருவாரியாகக்கூட அல்ல; 10% தாண்டுவதே கடினமாக இருந்திருக்கிறது (2019-இலும் அப்படியே). 3. இஸ்லாமியர் தவிர, உயர் ஜாதியினர் பெருவாரியாகவும் மற்றவர்கள் கணிசமாகவும், பாஜக பக்கம் சென்றுவிட்டார்கள். 

2019 தேர்தலை அலசிய 'தி இந்து' – 'லோக் நீதி' கணிப்பு பாஜக இந்துக்கள் வாக்கினை 44% வென்றது என்கிறது. அதில் உயர் ஜாதியினர் 52%, தலித்துகள் 34%, பழங்குடியினர் 44%. இஸ்லாமியரின் ஓட்டு 8%, கிறிஸ்தவர்கள் 11%. மாநிலவாரியாகப் பிரித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமியர் அங்கிருக்கும் பிரதான பாஜக எதிர்ப்புக் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ஆக, பாஜக இன்று எல்லாச் சாதியினரையும் உள்ளடக்கிய இந்துக்களின் பெருவாரியான தேர்வாகவே இருக்கிறது. 

பாஜக மிகத் துல்லியமாக சாதிய அரசியலை கைகொள்கிறது என்று மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. சமீபத்திய உத்தர பிரதேச தேர்தலில்கூட மாயாவதியின் ஜாதவ் சாதி தவிர்த்த பட்டியலினத்தவர் பாஜகவுக்கு கணிசமாக வாக்களித்தனர். கவனிக்கவும்: அகிலேஷ் யாதவுக்கு இஸ்லாமியரும் யாதவ சாதியினருமே அதிகம் வாக்களித்தனர். 

பாஜக தலித்துகளின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அம்பேத்கரையும் சுவீகரிக்கிறது. இதனை நாம் அங்கீகரிக்கும்போதே இன்னொரு உண்மையையும் அங்கீகரிக்க வேண்டும். மற்ற கட்சிகளைப் போலத்தான் பாஜகவும் தலித்துகளின் வாக்கு வங்கியைக் குறிவைக்கிறது. இதுவரை தங்களை சமூக நீதிக் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டவர்களின் ஆட்சிகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களே இன்று தலித்துகளை பாஜக பக்கம் நகர்த்துகின்றன. ஆயினும், இதனால் எல்லாம் உயர் ஜாதியினர் கட்சி என்ற அடையாளத்திலிருந்து பாஜகவை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. 

மஹாராஷ்டிரா தலித்துகள் பீமா கோரேகான் கிளர்ச்சியில் வேட்டையாடப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுள் அம்பேத்கரின் பேரனும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்ப்டேவும் ஒருவர். தலித்துகள் பண்பாட்டுரீதியாக பௌத்த மீட்பு பேசினால் பாஜக உயர் ஜாதியினரிடமிருந்து வரும் எதிர்வினைகள் அக்கட்சியின் ஆன்மா யாரென்று சொல்லிவிடும். அம்பேத்கரை இந்துத்துவம் சுவிகரிப்பது போன்ற ஒரு பித்தலாட்டம் வேறொன்றில்லை. ஆனாலும், இந்தச் சுவிகாரத்தில் அது கணிசமான வெற்றியைப் பெற்றிருப்பதும் உண்மை.

பாஜக வெல்ல பிற காரணங்கள்

2019 படுதோல்விக்குப் பின் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி ஒன்றில் அவர் தோல்விக்கு பொறுப்பேற்கும் அதேசமயம் எத்தகையதொரு அரசியல் கட்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் சுட்டிக்காட்டினார். முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம், நீதிமன்றங்களின் அரசு சாய்வு, பல அரசு ஸ்தாபனங்களின் மறைமுக  பாஜக ஆதரவு என்றெல்லாம் பட்டியலிட்டார்.

தேர்தல் கமிஷன் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக 2019இல் செயல்பட்டதென ஜாஃப்ரலாட் எழுதியிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 84 இடங்களில் வருமான வரி ரெய்டுகள் நடந்தன. அனைத்தும் எதிர்கட்சியினரின் இடங்கள். மோடி மீதும் அமித் ஷா மீதும் அவர்கள் தேர்தல் பரப்புரைகள் பற்றி அளிக்கப்பட்ட 11 புகார்களையும் கமிஷன் தள்ளுபடிச் செய்தது. அதே கமிஷன் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் என்று மாயாவதியை 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தது. யோகி ஆதித்யாநாத் மீதும் அப்படி ஒரு தடை விதிக்கப்பட்டபோது அவர் “தேர்தல் பிரச்சார மேடையில் பஜனையா செய்ய முடியும்?” என்று கேட்டுவிட்டு எதிர்கட்சியினரை “பாபரின் வழித் தோன்றல்கள்” என்று ஏசினார்.

2018 முதல் கட்சிகள் தேர்தல் நிதியை சந்தை பத்திரம் (Electoral Bonds) மூலமாகத் திரட்டலாம் என்று சட்டம் அமலானது. அப்படி திரட்டப்பட்ட நிதியில் பாஜகவுக்கு 67.9% (ரூ 4,215 கோடி); காங்கிரஸுக்கு 11.3% (ரூ 706 கோடி) சென்றன. இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு இரு கட்சிகள் இடையே இருந்ததுபோக, யார் அல்லது எந்த நிறுவனங்கள் பணம் கொடையளித்தன என்றும் வெளியிடத் தேவையில்லை என்ற சூழலைப் புதிய சட்டம் உருவாக்கிக்கொடுத்தது. இச்சட்டத்தின்படி, அயல்நாடுகளிலிருந்தும்கூட கட்சிகள் பணம் சேகரிக்கலாம். 

உண்மையில் இப்படி ஒரு சட்டம் அமெரிக்காவில் சாத்தியமே இல்லை, அதுவும் அமெரிக்கக் குடிநபராக இல்லாத ஒருவர் அரசியல் கட்சிக்குப் பணம் கொடையளிக்க முடியாது. பொதுவாகவே எல்லா ஜனநாயகங்களிலும் ஆளும் கட்சிக்குத் தனியார் நிறுவனங்களும் மற்றவர்களும் அதிகமாகவும் பிரதான எதிர்கட்சிக்கு சற்று குறையவும் கொடையளிப்பார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் ஆளுங்கட்சி மிகப் பெரும் பங்கை அள்ளுகிறது. இந்த அசுர பண பலம் பாஜகவுக்கு பிரச்சாரங்களுக்கு, இணையதள விளம்பரங்களுக்கு உதவுகிறது. பெரும்பாலான இவ்வகை நிதிகள், 91% ஒரு கோடியைத் தாண்டும் என்கிறது ‘குவின்ட்’ பத்திரிகை, அப்படியானால் அவை பணக்காரர்களும் பெரும் நிறுவனங்களும் அளித்தவைதான். இது ஆரோக்கியமே அல்ல.

பாஜக வெற்றியில் பெரும் பங்கு வகிப்பது சமூக வலைதளங்களில் அக்கட்சி செலுத்தும் செல்வாக்கு. அதுவே அக்கட்சி மதவாத வாக்காளர்களை உருவாக்கவும் பின் தேர்தல் சமயத்தில் அவர்கள் வாக்குகளை அறுவடை செய்யவும் உதவும் முக்கியமான அஸ்திரம். மதவாதம் ஏன் பாஜகவுக்கு தேவைப்படுகிறது, ஒரு கட்சியின் மதவாதம் எப்படி வாக்காளர்களின் தேர்தல் நேரத் தேர்வுகளில் முக்கியமாகிறது என்று புரிந்துகொள்ள முதலில் பாஜக வெற்றியில் சமூக வலைதளங்களின் பங்கினைப் பார்ப்போம்.

சமுக வலைதளங்களும் வெறுப்பு பிரச்சாரமும்

சென்ற வருடம் ‘ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது?’ என்ற தலைப்பில் ‘அருஞ்சொல்’ தளத்தில் வெளியான என் கட்டுரையில் இருந்து மூன்று பத்திகளைத் தருகிறேன்.

“2019 தேர்தலுக்கு “ஐ.டி. படை வீரர்கள்” (I.T. Yoddhas) என்று ஒரு அணியையே அமித் ஷா தயார் செய்தார். அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாக சொல்கிறார். இவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக “நானும் சௌகிதார்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர்.

2019இல் பாஜக 200,000 - 300,000 வாட்ஸப் குழுமங்களை நடத்தியதாகவும் காங்கிரஸ் 80,000 - 100,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறாது. ஃபேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலி அக்கவுன்ட்டுகளை முடக்கியதில் முக்கியமானது பாஜக சார்பான ‘இண்டியன் ஐ’ ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியலர்கள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பது போலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்தும் கொண்டுசேர்க்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். 

“பேஸ்புக்கில் இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பா.ஜ.க இருப்பதை பற்றி ஆகஸ்டு 2020இல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை முதலில் விரிவான கட்டுரை வெளியிட்டது. பாஜக எம்பி அனந்த குமார் ஹெக்டே, ‘இந்திய முஸ்லிம்கள் கொரோனா தொற்றினை பரவச் செய்கின்றனர்’ என்று சமூக வலைதளங்களில் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது, ஆனால் ஃபேஸ்புக் நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று ஃபேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கின் சிறப்பு மென்பொருள் ஒன்றின் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்தப் பதிவுக்கு முன் ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைதளப் பரிமாற்றமாக இருந்த அவர் பதிவுகள் இதற்குப் பின் 2.5 மில்லியனாக எகிறியதாம். அதாவது, வெறுப்புத் தீயாகப் பரவும் வகைக் கொண்டது!”

இந்தச் சமூக வலைதள முன்னெடுப்புகள் பெருமளவில் வாசிக்கப்பட்டு, சுவீகரிக்கப்பட்டு மறு பகிர்தல் செய்யப்படுகிறது என்பதாலேயே தான் பாஜக இதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இத்தனையையும் ஊக்குவித்து பங்காற்றும் வாக்காளர்களை நாம் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல் மொத்தப் பழியையும் ஒரு கட்சியின் செயல்பாட்டாளர்கள் மீது மட்டுமே போடுவது நியாயமும் இல்லை; ஜனநாயகத்துக்கும் ஆபத்து. கட்சிகளால் வாக்காளர்கள் வழி நடத்தப்படுவது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு வாக்காளர்களால் கட்சிகள் வழிநடத்தப்படுவதும் உண்மை. முதல் படியைத் தலைமைகள் எடுத்து வைக்கிறார்கள். அதன் பின் வாக்காளர்களின் ஊக்குவிப்பும் பங்களிப்பும் தீர்மானிக்கிறது.

2014இல் தேசிய அரசியலில் பாஜகவின் முகமாக முன்வைக்கப்பட்டபோது ஊதிப் பெருக்கப்பட்ட ‘குஜராத் மாதிரி’ பிம்பம் எந்தளவு முக்கியமோ அதே அளவுக்கு 2002 குஜராத் கலவரமும் அதனைப் பின்தொடர்ந்த மோடியின் செயல்பாடும் முக்கியமானது. 2002 கலவரத்தின் காரணமாகவே மோடியை வெறுத்தவர்கள் உள்ளதைப் போல், அக்கலவரத்தின் பொருட்டு எவ்வித மன்னிப்புக் கோரலையும் மோடி முன்வைக்காததற்காகவே நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். 

ஜனநாயகங்களில் தீவிர வலதுசாரியோ இடதுசாரியோ பெருவெற்றி அடைய முடியாது, மாறாக ஓரளவு மையத்துடன் நெருங்குகிறவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது நியதி. இந்திய வரலாற்றிலும் மோடி வரை இதுவே உண்மை. வாஜ்பாய், அத்வானியுமேகூட எந்த மதவாதத்தைக் கொண்டு வெற்றிபெற்றார்களோ ஆட்சியில் இருந்தபோது அவற்றை ஓரளவேனும் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். 

மோடியின் இரும்பு மனிதன் பிம்பத்துக்குப் பின் அவர் ஆட்சியில் நடந்த, இஸ்லாமியரைக் குறிவைத்த, என்கவுன்டர்களை நீதிமன்றமும் சிபிஐயும் போலி என்று நிரூபித்த எந்தத் தருணத்திலும் மோடி அவற்றுக்காக வருத்தம் தெரிவிக்காதது அவர் ஆதரவாளர்களிடையே ஒரு பிம்பத்தை வளர்த்தது என்கிறார் ஜாஃப்ரலாட். இன்று யோகி ஆதித்யநாத் ‘புல்டோசர் பாபா’ என்று புகழப்படுவதோடு இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

பாஜகவின் மதவாதமும் இஸ்லாமிய புறக்கணிப்பும்

சென்ற ஜூலை மாதம் முதல் இந்தியாவின் இரண்டு பாராளுமன்ற அவைகளிலும் இந்தியாவின் ஆளும் கட்சிக்கு, அதுவும் அறுதிப்  பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு, ஒரு உறுப்பினர்கூட இஸ்லாமியர் அல்ல. மேலும் 28 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லை. இந்தியாவில் இஸ்லாமியர் 15%. உண்மையில் மக்கள்தொகையில் மொத்த எண்ணாகப் பார்த்தால் அவர்கள் மிகப் பெரிய ஜனத் திரள். இப்படி இந்தியாவின் ஒரு பகுதியினருக்கு பாஜகவில் இடமே இல்லை என்பது தற்செயல் அல்ல.

பாஜக மிகச் சொற்பமான முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்தியது. “2019இல் 6 முஸ்லிம் வேட்பாளர்கள், அதுவும் மூவர் ஜம்மு-காஷ்மீரில், இருவர் வங்கத்தில், ஒருவர் லட்சத்தீவுகளில்.” பிரஷாந்த் ஜாவும் நளின் மேத்தாவும் இது பாஜகவின் தேர்தல் வியூகம் என்கிறார்கள். இஸ்லாமியர் 20% இருக்கும் உத்தர பிரதேசத்தில் 1991-2019 வரை ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களைத்தான் நிறுத்தி இருக்கிறது. 2019இல் பூஜ்யம். 

20-30% முஸ்லிம்கள் இருக்கும் தொகுதிகளில் பாஜக மற்ற கட்சிகளைப் போலல்லாது இந்து வேட்பாளரையே நிறுத்தும். அதனால் 70% இந்துக்களின் வாக்கு சிதறாமல் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒரு கட்சி தனக்கு ஆதரவான வாக்காளர்களைக் குறி வைப்பதில் தவறில்லை. ஆனால், இங்கே கவனிக்கப்பட வேண்டியது முஸ்லிம்கள் தேவையே இல்லை என்று ஒரு பிரதான கட்சி நினைப்பதும் இந்து வாக்குகள் சிதறாமல் இருக்க தேர்தல் பிரச்சாரங்களில், இந்தத் தொகுதிகளில் என்று இல்லை பொதுவாகவே, மதவாதம் மறைமுகமாகவோ அப்பட்டமாகவோப் பேசப்படுவதும்! 

வாக்காளர்களுக்கு மதம் எந்த அளவு முக்கியமாக இருக்கிறது? இவ்வருடம் நடந்த உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பொதுவாக எந்தப் பிரச்சினை வாக்கை நிர்ணயிக்கிறது என்று கேட்டால் பெரும்பாலோர் வளர்ச்சி என்றும் மிகச் சிலரே மதம் சார்ந்த காரணம் என்கிறார்கள். ஆனால், அதுவே காரணங்களை பட்டியலிட்டு இதில் எது முக்கியம் என்றால் மீண்டும் வளர்ச்சி, பண வீக்கம், வேலையின்மை என்று சொன்னாலும் கணிசமானோர், பத்தில் நான்கு, ராமர் கோயில், மத அடையாளம் என்று சொன்னார்கள். 

உத்தர பிரதேசத் தேர்தலை ஆராய்ந்த கருத்து கணிப்பு வாக்காளர்களிடையே மதரீதியான பிளவை படம் பிடித்துக் காட்டியது. இந்துக்கள் வாக்கு: பாஜகவுக்கு 54%, சமாஜ்வாடி கட்சிக்கு 26%, பகுஜன் சமாஜுக்கு 14%; இஸ்லாமியர் வாக்கு: பாஜகவுக்கு 8%, சமாஜ்வாதி கட்சிக்கு 79%. இது தேசிய அளவிலும் இஸ்லாமியர் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு சதவீதத்துடன் ஒத்துப்போகிறது. அதாவது, தேசம் மதரீதியாக தெளிவாகப் பிளவுக் கண்டுள்ளது. 

தேசப் பிதா மஹாத்மா காந்தியின் கொலையை ஹிந்து மகாசபா உறுப்பினர் பூஜா பாண்டே மீட்டுருவாக்கம் செய்தார் என்ற செய்தி அதிர்ச்சி அலைகளை தேசமெங்கும் கிளப்பியது. கோட்ஸேவை தேச பக்தன் என்று சொன்ன பிரக்யா தாகூர் இன்று பாஜக எம்.பி. கோட்ஸே காலம் தாழ்த்தி காந்தியை கொன்றான் என்று பேட்டியளித்த உமா ஆனந்த் தமிழகத்தில் பாஜக சார்பில் பிராமணர்கள் கணிசமாக வாழும் மயிலாப்பூரில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளராக நின்று ஜெயித்தார். கோட்ஸேவை இவர்கள் புகழ்வதற்கு காரணம் காந்தி இஸ்லாமியருக்கு துணை நின்றார் என்று கோட்ஸே சொன்னதை இவர்களும் ஏற்பதே ஆகும்.

ராகுல் காந்தி வயநாட்டில் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது பேரணியாக காங்கிரஸும் அவர்கள் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்கும் அவரவர் கட்சிக் கொடியுடன் சென்றனர். உடனே பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ராகுலின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியுடன் சென்றனர் என்று அவதூறு செய்தனர். அது காட்டுத் தீயெனப் பரவவும் செய்தது. 

நடுத்தர வர்க்கத்தின் முக்கியமான அடையாளம் அவர்கள் கல்விக் கற்றவர்கள். “படித்தவன் இப்படிச் செய்யலாமா”, “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், ஐயோவென்று போவான்” என்கிற பழமொழிகள் நாம் கல்விக் கற்றவர்கள் அறம் அறிந்தவர்கள் என்று வைக்கும் நம்பிக்கையைச் சொல்கிறது. அறிவுத் தளத்தோடு பாஜகவுக்கு இருக்கும் உறவும் உயர் கல்வி நிலையங்களில் இன்று நிலவும் இந்துத்துவமும் பேசப்பட வேண்டியது.

ஜேஎன்யுவும் பாஜகவும்

இந்துத்துவத்தை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்களை ‘வேசிகள்’ (presstitute) என்பது, முற்போக்காளர்களை பாகிஸ்தானியக் கைக்கூலிகள், தேச விரோதிகள், தேசத்தை உடைப்பவர்கள் என்று தொடர்ந்து ஏசுவது, மாற்றுக் கருத்தோ தங்கள் வரலாற்று திரிபுகளுக்கோ துணைப் போகாத கல்வியாளர்களை சமூக வலைதளங்களில் அச்சுறுத்துவது என்று பாஜக அறிவுத் தரப்பின் மீது ஒரு பெரும் போரே தொடுத்திருக்கிறது எனலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் டில்லி பல்கலைக் கழகமும் (DU) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் (JNU).

ஜேஎன்யுவை இந்தியாவின் இந்துத்துவ எதிர்ப்பின் பிரதான குறியீடாக பாஜக கருதுகிறது. ஆகவே அதனைக் கைப்பற்றுவதை ஒரு வேலையாகவே முன்னெடுத்தார்கள். ஜாஃப்ரலாட் ஜேஎன்யுவின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட மமிடாலா ஜகதீஷ் குமார் அதற்கு முன் ஐஐடியில் பேராசிரியராக இருந்தபோது சங் பரிவாரத்துடன் தொடர்பு கொண்ட ‘விஞ்ஞான பாரதி’ அமைப்பில் செயல்பட்டதாகச் சொல்கிறார். குமார் அக்குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். வேறொரு செய்தி கட்டுரையில், 2018 பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது, ‘சட்டத்தை மீறி இந்தியாவில் குடியேறுபவர்களால் உண்டாகும் ஆபத்து தொடர்பாக இவர் பேசினார். இன்று அவர் பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர்.

ஜகதீஷ் குமார் துணைவேந்தராக இருந்தபோதுதான் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இப்போதும் பல பல்கலைக் கழகங்களில் வலுப் பெற்றிருக்கும் பாஜக சார்ந்த ‘அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ மாணவர் அணியும் மோதிக்கொண்டன.  

ஜேஎன்யு மீதான இந்தத் தொடர் தாக்குதல்களால் இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களை மற்ற பல்கலைக்கழகங்கள் ஒதுக்க ஆரம்பித்தன. அப்படியென்றால் மற்ற பல்கலைக்கழகங்கள் தங்களை தேச பக்தி நிலையங்களாக காண்பித்துக்கொள்ள தலைப்பட்டன என்பதே பொருள். இந்த நிலையில்தான் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. 2016, 2020 ஆண்டுகளில் JNUவில் பெரும் கலவரங்கள் நடந்தன. 2020 கலவரம் திட்டமிட்ட வன்முறை என்றே சொல்லலாம். 

கடந்த 20 வருடங்களுள் பெருகிவிட்ட சங் பரிவார் நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய வெறுப்பு, இந்து மதம் பற்றிய அதீதப் பிரச்சாரங்கள், பாடப்புத்தகங்களில் வரலாற்று திரிபுகள் பற்றியெல்லாமும் கவலையுடனும் அச்சத்துடனும் ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் மிகப் பரவலாக இருக்கும் இந்துத்துவம் நடுத்தர வர்க்கத்தின் மீது ப.சிதம்பரம் வைக்கும் விமர்சனத்தை நிரூபிக்கிறது.

காங்கிரஸ் மீதும் இந்திரா, ராஜீவ் மீதும் அநேகக் குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அவர்கள் குறைந்தபட்சம் மதவாதிகள் என்று சொல்ல இயலாது. மேலும் தவறுகளுக்காக அவர்கள் வருத்தம் தெரிவித்ததும் குறைந்தப் பட்ச ஜனநாயக மாண்புகளுக்காவது செவி சாய்த்ததும் உண்டு. மிகச் சிறந்த உதாரணம், நெருக்கடிநிலை முடிந்த பின் ஜேஎன்யூ மாணவர் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி இந்திராவின் வீட்டருகே நடந்த ஒரு கூட்டத்திற்கு அவரை அழைத்து மாணவர்களின் கோரிக்கைகளைப் படித்தார். இந்திரா நின்றுகொண்டே மவுனமாகக் கேட்டுக்கொண்டார். 

மாறிவிட்ட இந்தியாவும் மாறி வரும் தமிழகமும்

செக்யூலரிஸம் என்பதை மதச்சார்பின்மை என்று மொழி மாற்றம் செய்வது எனக்கு உடன்பாடில்லை. ‘தான் அல்லாத பிற வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஏற்பதும் பொதுத்தன்மையுடைய எவ்விடத்திலும் சமய / மத நம்பிக்கைகளை தவிர்ப்பதுமே செக்யூலரிஸம். தலித்துகளை மற்றவர்கள் ஒடுக்குவதும் செக்யூலரிஸத்துக்கு எதிரானதே என்ற கருத்தியலின் அடிப்படையில் இங்கே நான் ‘செக்யூலரிஸம்’ என்றே எழுதுகிறேன். 

பாஜக அடைந்த அரசியல் வெற்றிகளைவிட மிக அச்சுறுத்துவது அதன் கலாசார வெற்றிதான். எல்லா அரசியல் கட்சிகளும் இன்று ‘செக்யூலரிஸம்’ பேசினாலும் அவர்கள் ‘இந்து விரோதக் கட்சி’ என்று அவர்கள் மீது பாஜக குத்த விழையும் முத்திரைக்கு இன்று அஞ்சுகிறார்கள். அதனாலேயே அர்விந்த் கெஜ்ரிவாலும் மம்தா பாணர்ஜியும் தங்களால் ஹனுமான் சாலிஸா ஒப்பிக்க முடியும் என்று சவால்விட்டனர். ராகுல் காந்தியும் கோயில்களுக்குப் போவதை விளம்பரம் செய்தார். இவர்கள் எல்லோரும், பாஜகவின் அப்பட்டமான மதவாதத்தை எதிர்க்கும் நேரம் தவிர, முஸ்லிம்கள் நலன் பற்றியோ முஸ்லிம்களின் வாழ்வாதரங்கள் குறித்தோ, பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள்.  இப்போது அது மேலும் தீவிரமடைந்திருக்கிறதோடு தாங்கள் ‘இந்துக்களுக்கு நண்பர்கள்’ என்று ஆணித்தரமாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்.

நாட்டிலேயே பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் தமிழ்நாட்டிலேயேகூட சூழல் மாறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ‘இது பெரியார் மண்’ என்ற ஒரு தோற்றம் நிலவுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை? 50 வயதுக்கு மேற்பட்ட தமிழர்களுக்குத்தான் ஒரு காலத்தில், 1991க்கு முன், விநாயக சதுர்த்தியை வட மாநிலங்கள்போல் கொண்டாடாத தமிழகத்தைத் தெரியும். இன்று தமிழகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு மூன்று உதாரணங்கள். 

ஒன்று, திருமாவளவனை கண்டித்துப் பேசிய காயத்ரி ரகுராம் ஓங்கார குரலில் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூச்சலிடுகிறார். தமிழ்நாட்டில் என்றைக்கு ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூவியிருக்கிறோம்? இது சாதாரண மாற்றமா? 

இரண்டு, சென்னைக் குடியிருப்புகளில் இப்போது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அக்கொண்டாட்டங்கள் ஆரோக்கியமான தேச உணர்வா அல்லது அச்சுறுத்தும் தேசியமா? யாருக்கான தேசியம் அங்கே முன்னிறுத்தப்படுகிறது? இது தமிழ்நாட்டு வழக்கமா? 

மூன்று, தஞ்சையில் மிகப் பாரம்பர்யமிக்க தேவாலயம் சிவகங்கை தோட்டத்தின் அருகில் இருக்கும் கோட்டைக் கோயில் என்பது. அதன் அருகில் சமீபத்தில் அனுமார் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதியிருக்கிறது, அதுவும் தஞ்சையில். மேலும் அந்த முக்கோணக் கொடி தஞ்சை அல்லது தமிழக மரபா? அனுமாரேகூட கொஞ்சம் வட இந்திய சாயலோடுதான் இருந்தார். 

தங்களைச் சிறுபான்மையினரின் நலன் காப்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரைப் பற்றி ஒரு சிறு பத்திதான் இருக்கிறது; அதுவும் முன்னாள் மத்திய அரசுகளின் இரண்டு அறிக்கைகளையும், சச்சார் கமிட்டி அறிக்கையும் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டி அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்ற அழுத்தம் தருவோம் என்றே சொன்னது. அதே தேர்தல் அறிக்கையில் மிக விரிவாக இந்து அறநிலையத் துறை மூலம் முன்னெடுக்கப்போகும் கோயில் பராமரிப்புகள், பூசாரிகள் நலன் ஆகியவை பட்டியலிடப்பட்டன. சிறுபான்மையினர் என்றால் இடஒதுக்கீடு, மத நல்லிணக்கம் தாண்டி எதுவும் யாரும் பேசுவதில்லை. நாடாளுமன்றத்திலும் தமிழக சட்டசபையிலும் சிறுபான்மையினர் பற்றி தீர்மானங்களையோ விவாதங்களையோ தமிழக உறுப்பினர்கள் நடத்தியதாகத் தெரியவில்லை. எல்லாவற்றிலும் உச்சம், தங்களை ‘பகுத்தறிவு அரசு’ என்று சொல்லிக்கொண்டவர்களின் அமைச்சர் ‘இது ஆன்மிக அரசு’ என்று அறிவித்தது ஆகும். 

காங்கிரஸோ, வேறு மாநிலக் கட்சிகளோ இன்று இஸ்லாமியர் மொத்த வாக்குகளை அள்ளுவதற்குக் காரணம், இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பாஜகவைப் பற்றிக்கொண்டிருக்கும் மரண பயமே. இன்று பாஜக இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தி இருக்கும் நிலை ஏதோ திடீரென்று நடந்ததோ அவர்கள் மட்டுமே முயன்று செய்ததோ அல்ல. இன்றைய பாஜக மதவாதத்தின் வேர்கள் நெடிது.

2019 தேர்தலில் வேலைவாய்ப்பின்மையைவிட பாகிஸ்தான் மீது, புல்வாமாவுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தங்களை பாஜகவுக்கு வாக்களிக்க ஈர்த்தது என்று 50% இளைஞர்கள் சொன்னதாக ‘தி இந்து’ கருத்துக் கணிப்பு சொல்கிறது. அதுவே, பாகிஸ்தான் மீதான தாக்குதல் பற்றி கேள்விப்படாத இளைஞர்கள் 30%தான் பாஜகவுக்கு வாக்களித்தனர். இது சொல்லும் செய்தி மிக முக்கியம். எதிர்கட்சியினர் இன்று எத்தகைய தேர்தல் எதிரியை எதிர்கொள்கின்றனர் என்பதே அது! 

இன்னும் விரிவாக ஆராய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பேச இவ்வளவு இருக்க ‘பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸின் செயலின்மையே காரணம்’ என்று மொத்த பழியையும் ஒரு கட்சியின் மீது இறக்குவது நியாயமும் இல்லை; பாஜகவை ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதற்கான வழியும் இல்லை!

உசாத்துணைகள்:

  1. Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy - Christophe Jaffrelot
  2. How the BJP Wins: Inside India’s Greatest Election Machine - Prashant Jha
  3. The New BJP: Modi and the Making of the World’s Largest Political Party — Nalin Mehta
  4. Hindutva: Exploring the Idea of Hindu Nationalism — Jyotirmaya Sharma
  5. Letters for a Nation: From Jawaharlal Nehru to His Chief Ministers 1947-1963 — Edited by Madhav Khosla
  6. Recent Essays and Writings on the Future of India, Communalism and Other Subjects — Jawaharlal Nehru
  7. https://www.arunchol.com/p-chidambaram-on-middle-class  
  8. https://www.arunchol.com/balasubramaniam-muthusamy-on-pc-comment  
  9. https://thefederal.com/news/fir-filed-against-rahul-priyanka-after-highway-drama-en-route-to-hathras/  
  10. https://indianexpress.com/article/india/india-others/sunday-story-mandal-commission-report-25-years-later/  
  11. Arjun Singh and Mandal and IIT https://frontline.thehindu.com/cover-story/article30209328.ece 
  12. https://www.thehindu.com/news/national/karnataka/congress-plans-protests-against-increase-in-gst-on-food-items/article65662129.ece 
  13. https://www.ndtv.com/india-news/it-is-cruel-to-raise-taxes-congress-leader-jairam-ramesh-slams-centre-on-new-gst-hike-3175678 
  14. https://en.wikipedia.org/wiki/2019_Indian_general_election  
  15. https://theprint.in/national-interest/why-indias-middle-classes-are-modis-muslims/259523/
  16. https://www.business-standard.com/article/opinion/new-middle-class-supports-the-bjp-more-than-cong-christophe-jaffrelot-114041900883_1.html 
  17. https://www.thehindubusinessline.com/blink/read/why-the-indian-middle-class-gravitates-towards-modi/article33269351.ece
  18. BJP’s 2019 Campaign - Christophe Jaffrelot https://doi.org/10.1080/09584935.2020.1765985
  19. https://theprint.in/opinion/muslims-in-india-are-semi-citizens-now-political-and-civil-rights-have-been-bulldozed/994854/ 
  20. https://theprint.in/features/savarkar-broke-monopoly-of-nehru-gandhi-history-books-now-theres-new-appetite-wishlist/1045572/ 
  21. https://carnegieendowment.org/2018/07/23/most-advantageous-thing-bjp-could-do-is-real-political-finance-reform...-it-would-still-out-fundraise-opponents-pub-76907 
  22. https://theprint.in/opinion/now-we-know-who-is-behind-the-massive-funding-gap-between-bjp-and-congress-the-corporates/231086/ 
  23. https://www.thehindu.com/news/national/call-for-pm-modi-to-break-silence-on-haridwar-hate-speech-event/article38032474.ece 
  24. https://thewire.in/communalism/narendra-modi-citizenship-amendment-act-protests-clothes 
  25. https://www.bbc.com/news/world-asia-india-61090363 
  26. https://twitter.com/dramsinghvi/status/833272469096128512 
  27. https://www.thequint.com/news/india/only-19-parties-received-money-from-electoral-bonds-bjp-got-68-investigation-bjp-reporters-collective-supreme-court-105-parties#read-more 
  28. https://thecognate.com/6-muslim-candidates-win-elections-in-tamil-nadu-aimim-sdpi-iuml-do-not-secure-single-seat/ 
  29. https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/development-close-to-voters-hearts/article65215834.ece?homepage=true 
  30. https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/religious-polarisation-and-electoral-choices/article65215835.ece 
  31. https://thewire.in/government/in-one-months-time-bjp-will-have-no-muslim-representatives-in-parliament-assemblies 
  32. https://www.business-standard.com/article/elections/voters-send-36-muslim-candidates-to-18th-up-assembly-2-more-than-earlier-122031100174_1.html 
  33. https://www.bbc.com/news/world-asia-india-47141098 
  34. https://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-pragya-thakur-refers-to-godse-as-patriot/article33568997.ece 
  35. https://www.indiatoday.in/fact-check/story/fact-check-did-wayanad-cheer-up-for-rahul-gandhi-waving-pakistan-flags-1492508-2019-04-02 
  36. https://en.wikipedia.org/wiki/2020_Jawaharlal_Nehru_University_attack 
  37. https://indianexpress.com/article/india/mamidala-jagadesh-kumar-jawaharlal-nehru-university-vice-chancellor-6211988/
  38. https://theprint.in/india/smriti-irani-didnt-want-jagadesh-kumar-as-jnu-v-c-but-pranab-mukherjee-picked-him-anyway/345549/ 
  39. https://thewire.in/education/shantishree-dhulipudi-pandit-jnu-vc 
  40. https://twitter.com/mamidala90/status/1440541258640814100 Partition Horrors Day
  41. https://indianexpress.com/article/india/iit-delhi-gets-50-research-proposals-to-study-benefits-of-cow-urine-under-svarop-programme-4780110/ 
  42. https://www.facebook.com/arvindkannaiyan/posts/pfbid0jrj1AnoZ9uFUxhTKCnicuyA6FLmCqn4LrdRtvFmYxEm4bhSTu6VtudYNAMndAqiel
  43. https://www.dmk.in/dmk-manifesto-english-2021. 
  44. https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/the-labharthi-factor/article65215837.ece 
  45. Modi Campaign in UP ‘Mahamilavati’ https://www.youtube.com/watch?v=Hh5F8hVfoz0 
  46. IIT Kharagpur http://www.iitkgpsandhi.org/publication.html 
  47. https://www.ndtv.com/education/iit-kharagpur-to-showcase-indias-cultural-history-through-scientific-perspective-in-book-fair-1807771 
  48. https://theprint.in/india/iit-kgp-is-now-attempting-to-prove-that-ancient-india-inspired-pythagoras-theorem-msmes/824138/ 
  49. https://www.thehindu.com/specials/the-hindu-csds-lokniti-post-poll-survey/article61455949.ece 
  50. BJP Preferred by Youth https://www.thehindu.com/elections/lok-sabha-2019/the-most-preferred-party-of-young-india/article27277454.ece 
  51. https://www.thehindu.com/elections/lok-sabha-2019/43-newly-elected-lok-sabha-mps-have-criminal-record-adr/article27253649.ece 
  52. https://www.indiatoday.in/fact-check/story/indira-gandhi-enter-jnu-police-sitaram-yechury-apologise-jnu-emergency-1635860-2020-01-11
எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.


5






பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

100% சரி. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் அரவணைப்பதல்ல. அனைத்து மதங்களையும் ஒதுக்கி வைப்பது. ஒரு சாதாரண வாக்காளருக்கு தன்னுடைய கூட்டம் செல்வாக்கு செலுத்துவதைவிட , தான் சார்ந்திராத கூட்டம் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது என்பதுதான் முக்கிய நோக்கமாக எப்பொழுதும் உள்ளது. பி.கு. வலதுசாரி பாசகவுக்கு மாற்று இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணிதான். காங்கிரஸ் அல்ல. பி.கு 2 . அர்விந்த் கெஜ்ரிவால் போன்றவர்களை இடதுசாரிகள் என்றே நான் நம்புகிறேன், உண்மை எப்படி இருந்தாலும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

*இட ஒதுக்கீடு வேண்டும் - ஆனால் நாட்டில் சாதி இருக்கக்கூடாது! *எல்லாம் இலவசமாக வேண்டும் - அரசியல்வாதிகள் ஊழல் செய்யக்கூடாது! *சமூக நீதி வேண்டும் - ஆனால் சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது! *இந்துத்துவம் வேண்டாம் - ஆனால் வஹாபிஸம் வேண்டும், ஆம் சிறுபான்மையினர் மனம் புண்படக்கூடாது! *அனைவரும் தமிழர்கள்; 10 விழுக்காடு கொண்ட பறையர் சமூகத்துக்கு 1 அமைச்சர் பதவி *திராவிட மாடல்; தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு 6 அமைச்சர் பதவி *பார்ப்பனியத்தை ஒழிப்போம் - பிரதமர் வேட்பாளர் - தத்தாத்ரேய கவுல் பிராமின்! குடியரசுத்தலைவர் வேட்பாளர் - யஷ்வந்த் சின்ஹா! இவ்வளவு பிளவுகள் உள்ள சமூகத்தில் பாஜக ஒன்றும் புதிதாக உருவாக்கவில்லை!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

பாஜக வின் வெற்றிக்கு காரணம் என்னவென்பதை பல நாள்களாக சிந்தித்து சிந்தித்து அயர்ந்து இருந்தேன்... ஆனால் இந்த கட்டுரை அருமையாக, அத்தனையையும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது... மிகச் சிறந்த கட்டுரை.... சிறுபான்மையினரின் நலன்கள் எதிர்கால இந்தியாவில் என்னவாக மாறுமோ என்று வெளிப்படையாக பயம் கொள்ளத் தோன்றுகிறது...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

மீண்டும் மீண்டும் படித்து சிந்திக்க வேண்டிய கட்டுரை இது. வாக்காளர்களின் மதவாதம் அதிகரித்திருக்கிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. அடிப்படை வசதிகளில் பல பேருக்கு நிறைவு கிடைத்து விட்டதால் வேற்றுமை, வெறுப்பு, ஆதிக்க உணர்வுகளை வளர்த்துக் கொண்டு திரிகின்றனர். நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் கையில் இருந்தே ஆகவேண்டிய அலைபேசி வழியாக மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் வந்து சேர்கின்றன. ஒரு பண்பட்ட மனநிலையில் இருப்பது சாத்தியப்படாததாக ஆகிக் கொண்டிருக்கிறது.உண்மையான பக்தி இருந்தால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் முன்னேறுவது, கார் வைத்திருப்பது பலருக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரம் அடைந்ததில் இருந்து மதரீதியாக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராத அரசாங்கத்தால் விளைந்த நன்மைகளைப் பேசுவதற்கு ஆட்கள் இல்லை, புரிய வைக்கும் கல்வி இல்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Raja.N   2 years ago

மிக அருமை... திமுகவின் நிலைப்பாடு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை முதலில் தவிர்த்தது, bjp யின் வெற்றி. ஆளுமை குறைவு வெளிப்படையாக தெரிகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராகுல் பஜாஜ் கதைகேஜிஎஃப் 2திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்துருவ் ரத்திகுடல்வால் அழற்சிசுதந்திரம்முன்னோக்கி செல்லும் கட்சிதேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா!மராத்தாக்கள்வருமான வரித் துறைஜிஎஸ்எல்விபூம்புகார்பைஜூஸ் ஊழியர்கள்மெய்நிகர்க் காதல்இறக்குமதிமதுரைகாஷ்மீர்அராபிகாசுதந்திரா கட்சிதசைநாண்கள்நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கஇந்தத் தாய்க்கு என்ன பதில்?கோடைப் பருவம்இன்டியாநகரங்களுக்காகக் கிராமங்கள் வேண்டும்இந்தியப் பிரதமர்கள்காலை உணவுபேருந்துகரிகாலனோடு பொங்கல் கொண்டாட்டம்சுதந்திரத்தின் குறியீடு மயிர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!